மக்ரோனின் வேலைக்கு திரும்பும் கொள்கைக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் உடந்தையாக உள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 ம் தேதி CGT தொழிற்சங்க தலைவரான பிலிப் மார்டினேஸ் பிரான்ஸ் இன்டருக்கு அளித்த நேர்காணலானது, பிரான்சில் மே 11 அன்று தனிமைப்படுத்தல் முடிவுக்கு வருவதுடன், பிரெஞ்சு பள்ளிகளும் வணிக நிறுவனங்களும் மே 11 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களால் பொறுப்பற்ற முறையில் பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட பிரெஞ்சு தொழிற்சங்க எந்திரம் எதுவும் செய்யாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான புதிய COVID-19 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் பிரான்சில் ஒவ்வொரு நாளும் பல நூறு அல்லது ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியம் ஆயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு பாய்ச்சியுள்ளது, அதே நேரத்தில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் உள்ளனர். தொழிற்சங்க எந்திரங்கள் மக்ரோனுடன் பின்கதவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதால் தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் தடுக்க செயல்படுகின்றன.

ஏற்கனவே, ஏப்ரல் மாதம் Sud தொழிற்சங்க வானொலிக்கு பேட்டி கொடுத்த மார்டினேஸ், கோவிட்-19 இன் இரண்டாவது அலை மற்றும் ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தும் வேலையை மீண்டும் தொடங்குவதை எதிர்க்கும் எந்த நோக்கத்தையும் மறுத்தார்: "இல்லை, இல்லை, நான் ஏற்கனவே உங்களுக்கு நன்றாக தெளிவுபடுத்தியுள்ளேன் என நம்புகிறேன்; பாதுகாப்பிற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுமானால் நாங்கள் வேலையை தொடங்க அழைப்பு விடுக்கிறோம். "இந்த பாதுகாப்பு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், மில்லியன் கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேலைக்குத் திரும்புவதற்கான முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிர்ப்பினை உருவாக்க போவதில்லை என்பதையும் மார்டினேஸ் மீண்டும் பிரான்ஸ் இன்டர் க்கு சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 இன் இரண்டாவது அலைகளிலிருந்து தப்பிப்பதற்காக, வீட்டிலேயே தங்கி, வேலைப் புறக்கணிப்பு செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்துமாறு CGT, அத்தியாவசியமற்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஒரு தேசிய வேண்டுகோளை விடுக்குமா? என பிரான்ஸ் இன்டர் சுருக்கமாக கேட்டபோது, மார்டினேஸ் பதிலளித்தார்: "அனைத்து தேசிய கல்வி அமைப்பின் ஊழியர்களின், ஆசிரியர்களின் உடல்நலம், அதேபோல் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் உறுதி செய்யப்படாவிட்டால், நாங்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. நீங்கள் மட்டுமல்ல, [சில] மேயர்களும் பள்ளிகளை மீண்டும் திறக்க மறுக்கிறார்கள், வகுப்புகள் மீண்டும் தொடங்குவதற்கு முற்றிலும் உடன்படாது ஒரு எதிர்ப்பு இருப்பது நல்லதுதான்”.

இதை அப்பட்டமாகக் கூறினால், மே 11 மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் ஆளும் வர்க்கம் தொழிலாளர்களுக்கும் சிறு தொழில்களுக்கும் சிறிதளவு அல்லது ஒன்றுமே வழங்காது என்பதை அறிந்து, தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களது முடிவை தாங்களே எடுக்க CGT பெருமளவில் அனுமதிக்கிறது. கடன் மற்றும் வறுமையின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் வேலைக்குத் தள்ள அரசாங்கம் விரும்புகிறது. தொழிலாளர்களுக்கு முன்னால் தமது கைகளைக் கட்டிக்கொண்டு, தொழிற்சங்க எந்திரங்கள் மக்ரோன் அரசாங்கத்துடனும் பெருநிறுவன நிர்வாகத்துடனும் நெருக்கமாக ஒத்துழைத்து அவர்களை மீண்டும் வேலைக்கு செல்ல வைக்கின்றன.

அதை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், பிரான்ஸ் இன்டர் நிருபர்கள் அவரிடம் "இனிவரும் காலத்தில் தொழிற்சங்கவாதம், அரசாங்கத்திற்கு எதிர்ப்பைக் காட்டிலும், அதனுடன் நெருக்கமான உரையாடல் மற்றும் இணை நிர்வாகத்தில்தான் இருக்குமா" என கேட்டனர். மார்டினேஸ் முதலில் "நாம் பிரச்சினையை வித்தியாசமாக முன்வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். ஆனால் உண்மையில் CGT ஏற்கனவே மற்ற தொழிற்சங்க எந்திரங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் அனைத்து இணை நிர்வாக கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளது.

"குடியரசுத் தலைவர் தொழிற்சங்கங்களின் அத்தியாவசிய பங்கை உணர்ந்துள்ளார், மேலும் நான், அனைத்து தொழிற்சங்க போராளிகளையும் நினைத்துப்பார்க்கிறேன்" என கூறியதோடு, இணை நிர்வாகத்தை ஒழுங்கமைக்க விரும்புவதாக மார்டினேஸ் உறுதிப்படுத்தியதுடன், அதையிட்டு எதிர்பார்ப்புடன் இருக்கிறார். பின்னர் மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டங்களை அவர் குறிப்பிட்டார். முற்றிலும் நம்பத்தகாத வகையில், அவர் "மருத்துவ மனைகளின் படுக்கைகளை அழிப்பதற்கு எதிராகவும், மருத்துவமனைகளை மூடுவதற்கு எதிராகவும், மருத்துவமனைகளில் அதிக வேலைவாய்ப்பிற்காகவும், தகுதிகளை சிறப்பாக அங்கீகரிப்பதற்கும்" மக்ரோனிடமிருந்து ஒரு உறுதிப்பாட்டினைக் கோரினார்.

தொழிலாளர்களின் போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு தொழிற்சங்கங்களை நம்பியுள்ள அனைத்து அமைப்புகளின் திவால்தன்மையையும் இந்த பெரும் தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. அரசும் முதலாளிகளும் இணை நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது சட்டவிரோதமாக இலஞ்சம் கொடுப்பதன் மூலமாகவோ பிரான்சில் தொழிற்சங்கங்களுக்கு நிதியளித்தனர், தொழிற்சங்கங்கள் தொழிலாளர் சட்டத்தை அழிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டுடன் இணைந்து செயல்பட்டதுடன், SNCF என்ற அரச புகையிரத துறையினை தனியார்மயமாக்கல் செய்யவும் மற்றும் மக்ரோனுடன் இணைந்து ஓய்வூதிய முறையை அழிப்பதற்கும் இணைந்து செயல்பட்டனர். இப்போது, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும், தொழிற்சங்கங்கள் நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய வேலைக்குத் திரும்புவதை நிர்ப்பந்திக்க திட்டமிட்டுள்ளன.

தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிராகவும், முன்கூட்டிய மற்றும் ஆபத்தான வேலைக்குத் திரும்புவதற்கான வங்கிகளின் முயற்சிகளுக்கு எதிராகவும் ஒரு சர்வதேச தொழிலாளர்களின் கிளர்ச்சிகர எழுச்சியை தயார் செய்வது இப்போது உடனடி அவசியமான பணியாக இருக்கிறது. ஏற்கனவே, ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டதன் மூலம் மட்டுமே ஐரோப்பாவில் உள்ள அரசாங்கங்கள் தனிமைப்படுத்தல் கொள்கையை நடமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், குறிப்பாக நோயின் முதல் ஐரோப்பிய மையமான இத்தாலியில், மார்ச் மாதத்தில் தொழிற்துறை எங்கும் கட்டுக்கடங்கா வேலைநிறுத்த அலைகளைக் கண்டன.

ஆனால் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிரான போராட்டமானது, தொழிலாளர்கள் வேலை வெளிநடப்புச் செய்வதற்கான உரிமையை பெருமளவில் பயன்படுத்துவது உட்பட, தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்ய முடியாது. தொழிலாளர்கள் தங்களை ஒழுங்கமைக்கவும் வேலைக்குத் திரும்புவதற்கான நிபந்தனைகள் சரியாக பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை முதலாளியின் அழுத்தத்திற்கு அப்பால் இருந்து ஒழுங்கமைக்க தொழிலாளர்களுக்கு தங்களது சொந்த அமைப்புகள், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்கள் அவசியமானதாகும்.

தனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சுகாதார நலன்களுக்கு எதிராக முதலாளிகளுடன் நெருக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

CGT மற்றும் முதலாளிகளின் அமைப்பான Medef ஒரு சுருக்கமான அறிவிப்பில் கையெழுத்திட்டன, "தொழிற்சங்க கூட்டமைப்புகள் (CFDT, CGT, FO, CFE-CGC, CFTC) மற்றும் முதலாளிகளின் அமைப்புகள் (MEDEF, CPME, U2P) மார்ச் 19 அன்று கூடியது." குறிப்பிட்ட இந்த அமைப்புகள், "சமூக உரையாடல் மற்றும் கூட்டு பேரம் பேசலின் முக்கிய பங்கு" இனை வெளிப்படுத்தியதுடன், "தேவையான அளவுக்கு தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன" என்றும் கூறினர்.

அப்போதிருந்து, CGT உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீடியோ இணையவழிக் கூட்டத்தின் மூலம் பிரதமர் எட்வார்ட் பிலிப்பை சந்திக்கின்றன. "சமூக உரையாடல் முன்னெப்போதையும் விட தொடர்கிறது", என தொழிற்சங்கவாதிகளையும் சமூக கூட்டுறவு நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு அரசுசாரா அமைப்பின் இயக்குனரான Maud Stéphan, லுமொண்ட்பத்திரிகைக்கு தெரிவித்தார். அந்த பத்திரிக்கை முதலாளிகளின் திருப்திகரமான கருத்துக்களை மேற்கோள் காட்டியது: "எல்லோரும் தமக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தினை செய்துகொண்டுள்ளார்கள், சமூக உரையாடல் கிட்டத்தட்ட முன்பைப் போலவே தொடர்கிறது" (Bouygues Télécom நிறுவனத்தின் Jérôme Fréri என்பவர் குறிப்பிட்டது), "சமூக உரையாடலின் தீவிரத்தைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை” (CFE-CGC, la CFDT, ஆகியவற்றின் ஒருமித்த வாக்குகளையும், CFTC மற்றும் CGT இன் அதற்கான உடன்பாட்டினையும் வரவேற்றார் Thales நிறுவனத்தின் Pierre Groisy).

தொழிலாளர்கள், ஒருபுறம், அவர்களுக்கு எதிரான சமூக தாக்குதல்களுக்கும், மறுபுறம் இப்போது அவர்களின் உடல் நலத்திற்கு மேலான தாக்குதல்கள் அல்லது அவர்களின் உயிர்வாழ்வின் அச்சுறுத்தல்களுக்கும் கூட விலை செலுத்துகிறார்கள். முதலாளிகள் அமைப்பான Medef இன் தலைவர் Geoffroy Roux de Bézieux சம்பளத்துடனான விடுமுறை உரிமைகள் இல்லாமல் செய்யவேண்டும் மற்றும் கூடுதல் நேரத்துக்கான பணிக்கு சம்பளம் கொடுப்பதை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கோருகையில், Renault மற்றம் PSA தொழிலாளர்கள் தமது (congés) விடுமுறைகள் மற்றும் RTT அதாவது வேலைநேர குறைப்பு உரிமைகள் ஆகியவை நீக்கப்பட்டதையும், வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள் பணிபுரிந்தால்தான் 100 சதவீதம் சம்பளம் கொடுக்கப்படும் என்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட்டதையும் கண்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.

மக்ரோன் அரசாங்கத்தை தங்கள் முதுகுக்குப் பின்னால் சந்திக்கும் அரசு மற்றும் முதலாளிகளால் பணத்துக்கு வாங்கப்பட்ட இத்தகைய அமைப்புகளின் மீது தொழிலாளர்கள் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.

2018 இல் வெடித்த “மஞ்சள் சீருடை” இயக்கமும், தொற்றுநோய் வெடித்ததிலிருந்து இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நடந்த திடீர் வேலைநிறுத்தங்களும், தொழிற்சங்கங்களின் மூச்சுத் திணறலை உண்டாக்கும் கட்டமைப்பிற்கு வெளியே தொழிலாள வர்க்கம் சக்திவாய்ந்த இயக்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. தொழிலாளர்கள் தங்களின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்க, சமூக ஊடகங்கள், தொலைபேசி இணைப்பு கட்டமைப்புகள் உட்பட தங்கள் சொந்த தகவல்தொடர்பு வழிமுறைகளை பயன்படுத்தமுடியும். இத்தகைய குழுக்களால்தான் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிரான போராட்டத்தினையும் மேலும் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் கைகளிலிருந்து பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்குள் அதிகாரத்தை கொண்டு வருவதற்கான ஒரு அரசியல் போராட்டத்தினையும் முன்னெடுக்க முடியும்.

Loading