கொரோனா வைரஸ் நெருக்கடியை ஜேர்மன் இராணுவவாதத்திற்கான “சந்தர்ப்பமாக” சிந்தனைக் குழாம் கருதுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் நோய்தொற்றால் தூண்டப்பட்டுள்ள தற்போதைய உலக பொருளாதார நெருக்கடியானது, ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர கட்டாயப்படுத்தவும், மேலும் உலக ஆதிக்கத்தை மீண்டும் கைப்பற்றவும் அது வகுக்கும் திட்டங்களுக்கான ஒரு வினையூக்கியாக மாறியுள்ளது.

இது, செல்வாக்கு பெற்ற ஜேர்மன் சிந்தனைக் குழாமான ஜேர்மன் வெளிநாட்டு உறவுகள் குழு (German Council on Foreign Relations-DGAP) வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையில் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வறிக்கை, “கோவிட்-19 நோய்தொற்று காலத்திற்கான தடுப்பு மற்றும் பாதுகாப்பு”, என்ற தலைப்பிலான கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கிறது: “இந்த நெருக்கடியால் உருவான முன்நிகழ்ந்திராத பொருளாதார வீழ்ச்சி வெளிப்படையாக தோன்ற ஆரம்பித்துள்ளமையானது பாதுகாப்பு செலவினங்களை குறைப்பதற்கான தூண்டுதலாக இருக்கலாம். இருப்பினும், ஆய்வின் ஆசிரியர்களின் கூற்றுப்படி, “உலகின் தற்போதைய ஸ்திரமற்றநிலை” இவ்வாறான குறைப்பை “பொறுப்பற்ற.” நடவடிக்கையாகும்.

இதன் முக்கிய ஆசிரியரும், வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களுடன் நன்கு பிணைக்கப்பட்டChristian Molling, பாதுகாப்பு குறித்து DGAP இன் ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராக மாறுவதற்கு முன்னர், அமெரிக்காவின் ஜேர்மன் மார்ஷல் நிதி கொள்கைக்கான சிந்தனைக் குழாமிலும்(German Marshall Fund of the United States), மற்றும் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் நிறுவனத்திலும் (German Institute for International and Security Affairs- SWP) அவர் பணியாற்றினார், இவ்வமைப்புகள் இணைந்து 2013 இல் “புதிய சக்தி, புதிய பொறுப்பு” (“New Power, New Responsibility”) என்ற திட்ட நிரலாக்க ஆய்வறிக்கையை கூட்டாக வெளியிட்டன.

“ஐரோப்பா” என்றால் அனைத்திற்கும் மேலாக ஜேர்மன் என்றே அர்த்தமாகும். இது “அதன் சொந்த விதியை இன்னமும் வடிவமைக்க முடியும்,” என்று Molling குறிப்பிடுகிறார். “ஜேர்மனியின் வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைமை” நெருக்கடியிலிருந்து “சேதமின்றி” மேலும் “கூடுமாயின் இன்னும் வலுவாகவும்” எழுச்சி பெறுவதற்கான “ஒரு உண்மையான வாய்ப்பை” வழங்குகிறது. இந்த இலக்கை அடைவதற்கு, ஜேர்மன் அரசாங்கத்தின் ஆலோசகர்கள், ஐரோப்பிய எல்லைகளுக்குட்பட்ட மற்றும் உலக அளவிலான போட்டி சக்திகளுடன் மோதுவதற்கான “விரிவான மோதல் மூலோபாயத்தை” வகுப்பதற்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

ஜூலையில் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைமையை எடுக்கவிருப்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்: “இப்போது வரை இதுவொரு வழமையான வேலையாக தோன்றியிருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரமும், மிகப்பெரிய பாதுகாப்புச் செலவாளியுமான மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய இராணுவப் படையை கொண்டதுமான ஜேர்மன், நெருக்கடிக்கு மத்தியில் பொறுப்பேற்று, பாதுகாப்பு ஆட்சி எல்லைக்குள் விளைவுகளை வடிவமைக்க பேர்லினுக்கு ஊக்கமளிக்கிறது என்பதே உண்மை.” ஜேர்மனி தனது தலைமைத்துவத்தை, “முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் தொழில்துறை திறன்களைக் காப்பாற்றவும்” மற்றும் “ஐரோப்பிய பாதுகாப்புத்துறை நிதி மற்றும் நிரந்தர கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு [Permanent Structured Cooperation - PESCO] போன்ற அமைப்புகளின் நடைமுறை மறுவடிவமைப்பை முன்மொழியவும்” பயன்படுத்த வேண்டும்.

PESCO என்பது ஜேர்மனியால் ஊக்குவிக்கப்பட்டு வரும் கண்ட அளவிலான ஐரோப்பிய இராணுவ கூட்டணியின் ஆரம்பகட்ட நிலையாகும். டென்மார்க் மற்றும் மால்டாவைத் தவிர, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதைச் சார்ந்திருக்கின்றன. நவம்பர் 2017 இல் இது ஸ்தாபிக்கப்பட்டது, இந்த கூட்டுறவு “பிரிட்டிஷ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்திற்கான வாக்கெடுப்பின் நேரடி பிரதிபலிப்பாக கருதப்பட வேண்டும்,” என்று SWP இன் Ronja Kempin 2019 இல் Frankfurter Allgemeine Zeitung செய்தியிதழுக்கு தெரிவித்தார்.

நடவடிக்கைக்கான ஜேர்மனிக்குள்ள தெரிவுகளின் அடிப்படையில், DGAP ஆசிரியர்கள் ஐரோப்பிய கண்டத்தின் அரசியல் முன்னேற்றங்களின் பல்வேறு சாத்தியமான நிலவரங்களை உருவாக்குகின்றனர்.

இந்த நிலவரங்களின் பொதுவான ஆரம்ப புள்ளியாக பின்வரும் நிலைமை உள்ளது: “2020 முதல், ஐரோப்பிய நாடுகள் இரட்டை சிரமங்களுக்குள் தாம் சிக்கியிருப்பதை கண்டறிய முயன்று கொண்டிருந்தன: பொது நிதிகள் அழுத்தத்திற்கு உள்ளாகையில், பாதுகாப்புச் சூழல் மோசமடைவதால் தொடர்ச்சியான அல்லது இன்னும் அதிகரித்தளவிலான பாதுகாப்பு முதலீடு தேவைப்படும்.”

DGAP அறிக்கை, நெருக்கடியிலிருந்து எழும் அரசியல் கிளர்ச்சிகளை நிர்வகிக்கவும், அதே நேரத்தில் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய புவிசார் மூலோபாய நலன்களை உறுதிப்படுத்தவும் இராணுவமும் ஆயுதங்களும் இன்றியமையாதவை என்று விவாதிக்கிறது: “ஐரோப்பாவால், கிழக்கில் ரஷ்யா குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவும், தெற்கை புறக்கணிக்கவும் முடியாது. வெறுமனே ஒரு தூணின் மீது மட்டும் ஐரோப்பாவால் கவனம் செலுத்த முடியாது. அதாவது, தடுத்தல், பாதுகாத்தல் மற்றும் நெருக்கடியை நிர்வகித்தல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் இது கவனித்தாக வேண்டும் என்பதாகும்.”

அத்தகைய கொள்கைகளின் விளைவுகள் பற்றி இந்த அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது: “சில அரசாங்கங்கள் திவால்நிலையை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்படுவதால், எஞ்சியுள்ள படைகள் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு தேவைப்படுகின்றன.” இது, தேசிய ஆயுதப்படைகளுக்கான முதலீடு குறைவதற்கு இட்டுச் செல்லும். மேலும், “பாரம்பரிய திறமைகள் இழக்கப்படுவதால், அணுசக்தி வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஆய்வாளர்கள் கருதும் நிலையில் பாதுகாப்பு நிலைமைகள் பதட்டத்திற்குள்ளாகும்.”

மற்ற இடங்களில் இது இவ்வாறு கூறுகிறது: “கோவிட்-19 நெருக்கடிக்கான உலகளாவிய பதிலிறுப்பில் அமெரிக்க தலைமையின் பங்கு இல்லாமையால், மென்மையான சக்தி கொண்ட மாற்று வழங்குநராக பெய்ஜிங் தற்போது தன்னை நிலைநிறுத்துகிறது. பெய்ஜிங், ஐரோப்பாவிற்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகளை வழங்குவதன் மூலம் கட்டுப்பாடுள்ள மற்றும் நற்பண்பு கொண்ட ஒரு நாடாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறது, அதேவேளை அமெரிக்காவால் வெளிப்படையாகவே உள்நாட்டிற்குள் இந்த நெருக்கடியை கையாள முடியவில்லை.”

உண்மையில், ஜேர்மன் பார்வையில் பாரிய “நிச்சயமற்ற ஆதாரமாகவே” அமெரிக்கா இருந்தது. இந்நிலையில், “அமெரிக்க சமுதாயத்தில் நிலவும் ஆழ்ந்த பிளவு” மற்றும் “தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் அமெரிக்க பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் மிகப்பெரிய தாக்கம்” ஆகியவை ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவின் அரசியல் விலகலுக்கு வழிவகுக்கும் என்று DGAP அறிக்கை தெரிவிக்கிறது.

“அமெரிக்கர் வீட்டிற்கு செல்கிறார்” [Yanks go home] போன்ற நிலைவரங்களின் விளைவு “அணுசக்தி தடுப்பு பற்றிய உள் ஐரோப்பிய விவாதமாக இருக்கும். அணுசக்தித் தடை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த நாடுகளையும் ஐரோப்பியா உள்ளடக்கியதால், உள் ஒத்திசைவு நெருக்கடிக்குள்ளாகின்றது. வரவு செலவுத் திட்டம் மற்றும் அணுசக்தி விவாதங்கள் இரண்டும் தனிப்பட்ட நாடுகளில் அரசியல் எதிர்ப்பை சந்திக்கின்றன. வரவு செலவுத் திட்டங்கள் நெருக்கடியாக இருக்கும்போது, அதிக செலவு செய்ய வேண்டிய இந்த முரண்பாடான நிலைமை ஐரோப்பியர்களின் மத்தியிலான அரசியல் பிளவுகளை அதிகரிக்கச் செய்கிறது. கடந்த நெருக்கடி காலத்தைப் போலவே, ஐரோப்பியர்கள் பல்வேறு செலவின முன்னுரிமைகளைக் கொண்டுள்ளனர். இத்தகைய வேறுபட்ட செலவின முறைகள் ஐரோப்பா முழுவதிலுமான பாதுகாப்புத் தொழிற்துறையை வித்தியாசமாக பாதிக்கின்றன.”

ஜேர்மன் பார்வையில், இதற்கிடையில் பின்தங்கியுள்ள நாடுகளை அரசியல் ரீதியாக “ஒருங்கிணைப்பது” என்பதே இந்த சூழ்நிலைக்கான இலக்காக இருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக, நேட்டோவின் தேசிய கட்டமைப்பின் கருத்துக்கு ஏற்புடைய ஒரு அரசியல் கருவி உருவாக்கப்பட வேண்டும்.

கணிசமான சவால்கள் இருந்தாலும், உலகளாவிய நெருக்கடி என்பது, அனைத்திற்கும் மேலாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கான ஒரு வாய்ப்பாக தன்னை முன்வைக்கிறது என்ற கருத்து DGAP ஆய்வின் மூலம் தெரியவரும் ஒரு ஆபத்தாக உள்ளது.

உதாரணமாக, ஃபிராங்கோ-ஜேர்மன் போர் தாங்கி (MGCS) மற்றும் கூட்டு ஐரோப்பிய விமான போர் தாங்கிஅமைப்பு (FCAS) போன்ற முக்கிய ஐரோப்பிய ஆயுதத் கூட்டுத்திட்டங்களுக்கான நோக்கத்துடன், ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று இந்த கட்டுரை பரிந்துரைக்கிறது. இந்த நெருக்கடி “அமைப்பு ரீதியாகவும் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பிலும் தேசிய உணர்வை கடப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.” அரசியல் எதிர்ப்பை எதிர்பார்க்க வேண்டியிருந்தாலும் இது கைப்பற்றப்பட வேண்டும். எனவே, ஜேர்மனி “அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்.”

ஆனால் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிடிவாதமான தேசியவாதம், இப்போது இறுதியாக “கடக்கப்படக்கூடிய” ஜேர்மன் அபிலாஷைகளை முறித்துக் கொள்வது மட்டுமல்ல. அகற்றப்பட வேண்டிய மற்றொரு “தடையாக” “ஐரோப்பாவின் பொது மற்றும் இராணுவ ஆராய்ச்சியையும் அபிவிருத்தியையும் பாரம்பரியமாக பிரிக்கும் தடுப்புச் சுவர்” உள்ளது. அதற்கு மாறாக, இராணுவ மற்றும் மூலோபாய இலக்குகளை எட்டுவதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் “ஆக்கப்பூர்வமாக” பயன்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும். இதுவும் கூட விரும்பிய முடிவுகளைத் தரவில்லை என்றால், “மாற்று வழிமுறைகள்” பயன்படுத்தப்பட வேண்டும்.

உண்மையில் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “வழமையான இராணுவ களத்தில் நடக்கும் மோதல் ஏற்கனவே முடிந்துவிட்டது. இராணுவம் என்பது மாற்று வழி ஒன்றை காட்டிலும் அதிக செலவு செய்ய வேண்டியது அல்லது குறைந்த செயல்திறன் கொண்டது என்று நிரூபணமானால், மோதல்களில் ஈடுபடுவதற்கும், எதிரிகளை தடுப்பதற்கும் மிகப் பரந்த வழி எதையாவது பரிசீலனை செய்வது விவேகமானது. இத்தகைய விரிவான மோதல் மூலோபாயத்தை, கலப்பின போர் மற்றும் ஐரோப்பாவிற்கு எதிரான வெளிநாட்டு செல்வாக்கு மிக்க நடவடிக்கைகளின் மூலமாக கற்றுக் கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் உருவாக்க முடியும் (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).

இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்துள்ள போதிலும், ஜேர்மன் முதலாளித்துவம் மக்களின் முதுகுக்குப் பின்னால் புதிய வரலாற்றுக் குற்றங்களை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இத்தகைய விடயங்கள் இடமளிக்கவில்லை. 2005 இல், அமெரிக்க இராணுவ மூலோபாயவாதியான Frank G. Hoffman, “கலப்பின போர்” என்பது “பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் நடத்தை தொடர்பான வழமையான மற்றும் ஒழுங்கற்ற மோதல் வழிகளின் கலவையாகும்” என்று விவரிக்கிறார்.

இந்த சூழலில் ஜேர்மன் இராணுவ ஆலோசகர்கள் “மாற்று வழிமுறைகள்” பற்றி பேசுகின்ற நிலையில், இது ஒரு தீவிர எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். வரையறையின்படி, இத்தகைய கலப்பின போரின் “கூறுகளான” “அணுசக்தி, உயிரியல், இரசாயன மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களின்” பயன்பாடு கொண்ட பிற பொருட்களுக்கு மத்தியில், இணையவழி தாக்குதலுடன் கூடிய “தவறான தகவல்களை அளிப்பது மற்றும் பகிரங்க பிரச்சாரங்களை” செய்வது, அத்துடன் “வெளிநாட்டு பிராந்தியத்தில் இயங்கும், இரகசியமாக சண்டையிடும் துருப்புக்கள் அல்லது படைகள் மற்றும் தேசிய சின்னங்கள் பொறிக்கப்படாத இராணுவ உபகரணங்களை நிலைநிறுத்துவது” ஆகியவற்றை அமுல்படுத்துவதாகும்.

Loading