மக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 11 இல் அடைப்பை முடிவுக்குக் கொண்டு வரவும் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடவும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வியாழக்கிழமை மதியம் ஒரு தொலைக்காட்சி உரையில் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பும் ஏனைய ஐந்து அமைச்சர்களும் உறுதிப்படுத்தினர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் நடந்து வரும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்திசைந்த விதத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற முடிவு, எண்ணற்ற உயிர்களை அபாயத்திற்குட்படுத்துகிறது.

அமெரிக்காவில் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது நாளொன்றுக்கு அந்நாட்டில் 3,000 உயிரிழப்புகளுக்கு அமெரிக்கர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.

பிரான்சில் மார்ச் 17 இல் தொடங்கிய சமூக முடக்கம் இப்போதும் புதிய நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்ற நிலையில், பிரான்சிலோ அல்லது ஐரோப்பாவிலோ இந்த தொற்றுநோயின் "முதல் அலை" முடிந்துவிடவில்லை. புதன்கிழமை, பிரான்சில் 3,640 நோயாளிகள் அறிவிக்கப்பட்டனர். பிலிப் உரையாற்றிய அந்நாளிலேயே, வெளியே ரஷ்யாவில் 17,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட ஐரோப்பா எங்கிலும் 28,490 புதிய நோயாளிகள் இருந்தனர். இன்னும் நிறைய புதிய நோயாளிகள் உருவாகலாம் என்றும், சமூக முடக்கத்தை நீக்குவதால் என்ன விளைவுகள் ஏற்படுமென தெரியவில்லை என்றும் பிலிப் ஒப்புக் கொண்ட போதினும், முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அவர் அறிவித்தார்.

ஏப்ரல் 28, 2020, பாரீஸின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரெஞ்சு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் (இடதிலிருந்து இரண்டாவது) முடக்கத்தை நீக்குவதற்கான அவர் திட்டங்களை முன்வைக்கிறார். [படம்: David Niviere, Pool via AP]

“மூன்று வாரங்களில், மே மாத இறுதியில் தான், நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பது துல்லியமாக நமக்குத் தெரியும்,” என்றார். “இந்த தொற்றுநோயை நம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளதா இல்லையா என்பது நமக்கு தெரிந்துவிடும். தொற்றுவிகிதம், மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் பற்றி நமக்கு தெரிந்துவிடும்… இந்த எண்ணிக்கைகளும் விபரங்களும் குறைவாக இருந்தால், இதற்காக நம்மைநாமே வாழ்த்திக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகரலாம், குறிப்பாக வரவிருக்கும் கோடைகாலத்திற்கு மிக முக்கியமான பல பகுதிகளில் நமது சுதந்திரத்தை விரிவாக்கலாம். இல்லையென்றால், நாம் விளைவுகளைக் கணக்கிட்டு ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார்.

முடக்கத்தை நீக்குவது தலைவிதியால் திணிக்கப்பட்டது என்பதால் அரசாங்கம் அதை கண்மூடிக் கொண்டு செய்யும் என்ற பிலிப்பின் எரிச்சலூட்டும் வாதம், மனித உயிர்கள் மீதான அப்பட்டமான அலட்சியத்தை மட்டும் காட்டவில்லை, அது பிழையானதும் கூட. துல்லியமாக இது, முடிவுகளை அறிவிக்க தொற்றுநோயை முன்மாதிரியாக பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையாகும். இருப்பினும், சமூக முடக்கத்தை நீக்குவது பல விடயங்களில் இந்த தொற்றுநோய் பாரியளவில் மீண்டும் அதிகரிக்க இட்டுச் செல்லும் என்றே பல ஆய்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.

Assistance Publique-Hôpitaux de Paris (AP-HP) இன் ஓர் ஆய்வு, முகக்கவசங்கள், நோயாளிகளைப் பரிசோதித்தல், சமூக இடைவெளி என இத்தகைய மக்ரோன் கருத்தில் கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கூட, மக்களிடையே வைரஸ் பரவும் மாதிரிப்படத்தைக் காட்டியது. பிரான்சில் கோவிட்-19 ஆல் அண்ணளவாக 25,000 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், மே மாதத்திலிருந்து டிசம்பர் 2020 வரையில் பிரான்சில் 33,500 இல் இருந்து 87,100 வரையிலான புதிய உயிரிழப்புகள் ஏற்படுமென அந்த ஆய்வு கணிக்கிறது.

சமூக இடைவெளி நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் ஒரு நம்பிக்கையான சூழலிலும் கூட, ஏறக்குறைய ஜூலை மாதத்திற்கு முன்னதாக அவசர சிகிச்சை பிரிவில் தீவிர நோயாளிகள் அதிகரிப்பார்கள் என்றளவுக்கு புதிய நோயாளிகளின் வரவு மிகவும் பலமாக இருக்கும் என்று அந்த ஆய்வு நிறைவு செய்தது. “இந்த சூழ்நிலையில், மேற்கொண்டு பரவாமல் தடுப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும்,” என்று AP-HP இன் ஓர் உளவியல் நிபுணரும் அந்த ஆய்வின் துணை ஆசிரியருமான Nicolas Hoertel தெரிவித்தார்.

எல்லா மாணவர்களுக்கும் வகுப்புகளை மீண்டும் திறப்பது என்பது தொற்றுநோய் அலையைத் தூண்டிவிடும், அது மருத்துவமனை கொள்ளளவில் 138 சதவீதத்தை நிரப்பி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் மிக அதிகளவில் நோயாளிகளை நிரப்பிவிடும். மாணவர்களில் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே வகுப்புகள் திறக்கப்பட்டாலும், இந்த அலை கொள்ளளவில் 72 சதவீதம் வரையிலாவது அதிகரிக்கும். தொழிலாளர்களின் குழந்தைகளில் மூன்று கால்வாசி பேர் வீடுகளில் இருந்தால் தொழிலாளர்கள் எவ்வாறு வேலைக்குத் திரும்ப முடியும் என்பது தெளிவாக இல்லை என்று INSERM மற்றும் சோர்போனின் மற்றொரு ஆய்வு அனுமானிக்கிறது.

“ஜூன் மாத இறுதியில் தொடங்கும் இரண்டாவது அலையை நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கலாம், மருத்துவமனைகள் புனரமைப்பு ஆதாரவளங்கள் ஆகஸ்ட் வரையில் நிரம்பி வழியும் விதத்தில், அது முதலாவதை விட இன்னும் தீவிரமாக இருக்கும்,” என்று அந்த ஆய்வின் வல்லுனர்களில் ஒருவர் Vittoria Colizza அபாயத்தை சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களின் உயிர்கள் குறித்து அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அவமதிப்பு வெளிப்படையாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஆளும் வர்க்கம் அதன் சொந்த குற்றகரத்தன்மை குறித்து நன்கறிந்துள்ளது. இதனால் தான் இந்த தொற்றுநோயின் போது நடத்தப்படும் எந்தவொரு மருத்துவத்துறை குற்றத்திற்கும் முன்னெச்சரிக்கையாக பொது மன்னிப்பு வழங்குவதற்கு செனட் வாக்களித்தது.

அரசு எந்திரத்திற்குள்ளேயே கூட விமர்சனத்தைத் தூண்டிவிடும் அளவுக்கு இந்த அலட்சியம் மிகவும் அப்பட்டமாக உள்ளது. “வைரஸ் கடுமையாக பரவி உள்ள சிவப்பு மண்டலத்தின் துறைகளிலும் அது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக வியாழக்கிழமை மதியம் அரசாங்கம் அறிவித்தது. இது படுமோசமான மடத்தனம்,” என்று இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியமான அல்சாஸில் Bas-Rhin பிராந்திய கவுன்சில் தலைவர் Frédérick Bierry தெரிவித்தார். “இன்னும் கூடுதல் மரணங்களுடன் மற்றொரு சுகாதார பேரழிவால் பாதிக்கப்படும் அபாயத்தை காட்டும்" ஒரு தொற்றுநோயியல் ஆய்வை அவர் மேற்கோளிட்டார்.

ஆனால் முகக்கவசங்கள் அணிவதும், முதியவர்கள் அல்லது அபாயத்திற்கு உட்படக்கூடியவர்களின் பாதுகாப்பும், அவரவரின் முழங்கையால் மூடி இருமுவதும் போன்ற அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்த தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளாக முன்மொழிந்து தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்ட Bierry, முடக்கத்தை நீக்குவதைக் கூட்டாக எதிர்ப்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை.

மக்ரோனின் கொள்கைக்கு ஒரே நிலையான மற்றும் நம்பகமான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்தே வருகிறது. ஏற்கனவே இந்த தொற்றுநோய்க்கு முன்னரே பணக்காரர்களின் ஜனாதிபதியாக பரவலாக வெறுக்கப்பட்ட மக்ரோன், தொழிலாளர்கள் மீது மரணகதியிலான கொள்கையைத் திணித்து வருகிறார். சமூக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக தொடர்ந்து சரமாரியான ஊடக பிரச்சாரத்திற்கு உள்ளாகி இருந்தாலும், தொழிலாளர்கள் இக்கொள்கையின் மீது பெரிதும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

வகுப்புகளை மீண்டும் திறப்பதும் மாணவர்களை உள்கலந்து வைப்பதும் வைரஸ் அதிகரிக்க செய்யாது என்றும், அல்லது நெரிசலான பொது போக்குவரத்தில் சமூக இடைவெளி சாத்தியமே என்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தல்கள் நம்புவதற்குரியதாக இல்லை. YouGov கருத்துக்கணிப்பின்படி, பிரெஞ்சு மக்களில் 76 சதவீதத்தினர் செப்டம்பருக்கு முன்னதாக வகுப்புகள் திறக்கக்கூடாது என்று கருதுகின்றனர். மற்றொரு 59 சதவீதத்தினர் இந்த மே 11 இல் முடக்கத்தை நீக்கும் காலக்கெடு குறித்து அவர்கள் "கவலை" கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

பிரான்சில் பத்தாயிரக் கணக்கான உயிர்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான உயிர்களையும் ஆபத்திற்குட்படுத்துவது பொருளாதார மற்றும் சமூக அவசியப்பாடு கிடையாது, மாறாக நிதியியல் பிரபுத்துவத்தின் சுயநலமான கவலைகளால் கட்டளையிடப்பட்ட ஓர் அரசியல் முடிவெடுப்பாகும். அமெரிக்கா மற்றும் யூரோ மண்டலத்தின் மத்திய வங்கிகள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் யூரோக்களைப் பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் வாரியிறைத்து வருகின்றன. ஆனால் இந்த பணத்தில் சிறிய தொகை வேலைவாய்ப்பு நிதியுதவிகளுக்கு ஒதுக்கப்பட்டதற்கு அப்பாற்பட்டு, ஏறக்குறைய மொத்த பணமும் தொழிலாளர்களுக்கோ அல்லது சிறு வணிகங்களுக்கோ சென்று சேரவில்லை.

இந்த கடுமையான பொருளாதார அடைப்பால் தொழிலாளர்களும் சிறு வணிகங்களும் பட்டினி நிலைமைக்கோ அல்லது திவால்நிலைமைக்கோ நகர்த்தப்பட்டு வருகின்றனர், அதேவேளையில் வங்கிகளும் செல்வந்தர்களும் அவர்களின் பைகளை நிரப்பி வருவதுடன் தொழிலாளர்களுக்கு உதவவோ அல்லது சிறு வணிகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ மறுத்து வருகின்றனர்.

திங்கட்கிழமை பிலிப் செனட்டில் உரையாற்றுகையில், முடக்கத்தை நீக்குவது பிரான்ஸைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தின் நிர்பந்தமாகும் என்று வாதிட்டார்: “இந்நிலைமையைத் தொடர முடியாது. விமான உற்பத்தித்துறை, வாகன உற்பத்தி துறை மற்றும் மின்னணு துறைகளான நமது முன்னணி தொழில்துறைகள் அச்சுறுத்தலில் உள்ளன. சிறு வணிகங்களும், நடுத்தர வணிகங்களும் மற்றும் ஆரம்ப நிறுவனங்களும் மூச்சுத் திணறும் விளிம்பில் உள்ளன. சுற்றுலா, கலை, சமையல் கலை என பிரான்சின் மதிப்பிற்குப் பங்களிப்பு செய்யும் ஒவ்வொன்றும் ஸ்தம்பித்து போயுள்ளது,” என்றார்.

பரந்த பிரிவு தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை பேரழிவுகரமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் மக்ரோன் அரசாங்கம், ஐரோப்பாவில் உள்ள அதன் எதிர்பலங்களைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை மேம்படுத்த நடைமுறையளவில் ஒன்றுமே செய்யவில்லை.

பிலிப்புடன் இணைந்து உரையாற்றிய ஏனைய அமைச்சர்களின் அறிக்கைகளைப் பொறுத்த வரையில், அவர்கள் வெறுமனே அரசாங்கக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பாரிய முரண்பாடுகளை மட்டுமே அடிக்கோடிட்டனர். முகக்கவசங்களைப் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை —அதேவேளையில் அங்கே முகக்கவசங்களின் கையிருப்பும் முற்றிலும் பற்றாக்குறையில் உள்ளது—என்பதை அரசாங்கமே முன்னர் பேணி வந்தது என்ற போதினும் கூட, அவர்கள் முகக்கவசங்களைப் பாரியளவில் பயன்படுத்துவதற்கு முன்மொழிந்தனர். தொழிலாளர்கள் எவ்வாறு அவர்களின் வேலைக்கோ அல்லது கடைகளுக்கோ செல்வார்கள் என்பதை விவரிக்காமல், பொது போக்குவரத்தை அதன் வழமையான மட்டங்களில் இருந்து 15 சதவீதமாக குறைத்து பயன்படுத்துவதால் வைரஸ் பரவலை மட்டுப்படுத்த அவர்கள் முன்மொழிந்தனர்.

தொழிற்சங்க இயக்கத்துடன் அரசு மற்றும் முதலாளிமார்களின் ஒத்துழைப்பைப் பாராட்டிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் Muriel Pénicaud வெளியிட்ட கருத்தே அனேகமாக மிகப்பெரிய எரிச்சலூட்டலாக இருந்தது. “இத்தகைய முறைகளை நடைமுறைப்படுத்த சமூக பேச்சுவார்த்தை (social dialogue) இன்றியமையாததாக [இருந்தது]” என்பதை சேர்த்துக் கொள்வதற்கு முன்னதாக, அவர் குறிப்பிடுகையில், “தொழிலாளர்களின் உடல்நலம் ஒருபோதும் மாற்றத்தகுந்த பேரம்பேசுவதற்கான அம்சமாக இருந்ததில்லை, இருக்கவும் இருக்காது,” என்றார்.

முடக்கத்தை நீக்கி பாதுகாப்பாக வேலைக்குத் திரும்புவதற்கான நிலைமைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. வேலைக்குத் திரும்புவதையும், அரசாங்க கொள்கையில் குறுக்கிடுவதற்கும் மற்றும் தங்களின் உயிர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் அப்பட்டமான அவமதிப்பையும் மறுப்பதற்கு தொழிலாளர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. இதற்கு, தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக போராட்டங்களை ஒழுங்கமைப்பதும், ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றுவதற்குமான ஒரு சோசலிச போராட்டத்திற்கான முன்னோக்கும் அவசியமாகும்.

Loading