இலங்கை ஜனாதிபதியின் கொரோனா வைரஸ் அவசரகால அதிகாரங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு "ஜனநாயக" போர்வையை வழங்குகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னணி அலுவலரான எம். ஏ. சுமந்திரன் கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையர்கள் "பொதுத் தேர்தல் ஒன்றை விரைவில் நடத்துவது பற்றிய யோசனையை கைவிட வேண்டும்" என்பதையே அர்த்தப்படுத்துகிறது எனக் கூறினார்.

ஏப்ரல் 6 அன்று இந்த ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலின் போது, முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தினார். சுமந்திரனின் அழைப்பானது அரசாங்கத்தை சவால் செய்வதை நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக, ஜனாதிபதியால் அண்மையில் சுமத்தப்பட்டுள்ள எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு ரப்பர் முத்திரையை குத்துவதாகும்.

கொவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கின்ற போரவையின் கீழ், ராஜபக்ஷ இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளதுடன், "ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள்" என்று பல்லாயிரக் கணக்கானவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 2, பாராளுமன்றம் அதிகாரப்பூர்வமாக முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அதைக் கலைத்த ஜனாதிபதி, தொற்று நோய் பரவுகின்ற நிலைமையின் மத்தியிலும், பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். ராஜபக்ஷ தனது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கட்சிக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை வெல்வதற்கு எதிர்பார்ப்பு கொண்டுள்ளார். இதன் மூலம் எதேச்சதிகார ஆட்சி முறைகளுக்கு செல்வதற்கு உள்ள சட்ட தடைகளை அகற்றும் வகையில் அரசியலமைப்பை திருத்துவதற்கு அவர் எதிர்பார்க்கின்றார்.

நெருக்கடி தேர்தலை ஒத்திவைக்க கட்டாயப்படுத்தியுள்ள அதே வேளை, தற்போதுள்ள சட்டங்களை மீறி, ஒருதொகை எதேச்சதிகார நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்குவதை மேலும் விரிவுபடுத்தவும் ராஜபக்ஷ தொடர்ந்து அவரது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார்.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டத் தயாராக இல்லை என்பதை ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளதுடன் அவரது நிர்வாகம் அடுத்த மாதம் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றது. தேர்தலுக்கு முன்னர், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, கொவிட்-19 வைரசில் இருந்து சரியான பாதுகாப்பு இல்லாமல் மக்களை மீண்டும் வேலைக்குத் தள்ளும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மார்ச் 18 முதல், இலங்கை தேசிய ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளது. சில மாவட்டங்களில் மட்டும் குறுகிய காலம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்துள்ளது. பூட்டுதல் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கானதாக இருந்த அதே வேளை, இப்போது கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் முறையான திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொரு நாளும் இலங்கை பொலிஸ் ஆயிரக்கணக்கான ஊரடங்கு உத்தரவு மீறியவர்களை அதன் அதிகாரிகள் கைது செய்வது பற்றி பெருமை பேசுகிறது. புதன்கிழமை, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,000 இற்கும் அதிகமாகும்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது ஒரு எதேச்சதிகாரமான தண்டனையாக இருப்பதோடு, அதன் பின்னர் அவர்கள் மீது பொலிசார் வழக்குகள் பதிவு செய்வார்கள்.

சுமந்திரனின் வாதத்தின் வழிப்படி, ஊரடங்கு உத்தரவு மற்றும் இராணுவத்தை அழைப்பது தொடர்பான சட்டங்களை அரசாங்கம் வர்த்தமாணியில் அறிவித்து அதை மீண்டும் கூட்டப்பட்ட பாராளுமன்றத்தில் முன்வைத்தால், இந்த வெகுஜன கைதுகள் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத கொள்கைகள் அனுமதிக்கப்படலாம்.

ஏப்ரல் 8 அன்று, வீரகேசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ராஜபக்ஷ இராணுவத்தை அணிதிரட்டுவதைப் பற்றி பேசிய சுமந்திரன், “நிறைவேற்று அதிகாரம் தன்னிச்சையாக செயல்படக்கூடாது” என்று எச்சரித்தார். "நிலைமையை இராணுவம் கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று கூறிய சுமந்திரன் "இன்றைய சூழலில்" இதை முற்றிலும் தவிர்க்கவும் கூடாது என்றும் சேர்த்துக் கூறினார்.

உண்மையில், முந்தைய ஜனாதிபதியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் ராஜபக்ஷ, ஒவ்வொரு மாதமும் நாடு பூராவும் அதன் கடல் பிராந்தியம் முழுவதும் "பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக" ஆயுதப்படைகளின் உறுப்பினர்களை அணிதிரட்டுகிறார். இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பிடி ஆணை இல்லாமல் மக்களை கைது செய்வதற்கு பொலிஸ் அதிகாரங்கள் உள்ளன.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடலாம் அல்லது தேவைப்பட்டால் சட்டங்களை இயற்றக்கூடிய மற்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு மாற்றங்களை செய்யக்கூடிய 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தொலைத்தொடர்பில் இணைக்கலாம் என்று சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக சமிக்ஞைகள் குறித்து சிறிதும் அக்கறை காட்டததோடு, ஓய்வுபெற்ற சிரேஷ்ட ஆயுதப்படை அதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்துவதை தொடர்கின்றார். கொரோனா வைரஸைத் தடுக்கும் தேசிய மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை "கண்டுபிடிப்பதற்கு" இராணுவ புலனாய்வு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்க நிவாரண விநியோகம், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில், பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்படுகிறது.

தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் போதிய பிரதிபலிப்பின்மையை சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் எவருக்கும் எதிரான ஒடுக்குமுறையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில், 16 பேர் தங்கள் முகநூல் பதிவுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு எந்த இலங்கை எதிர்க்கட்சியோ சவால் செய்யவில்லை, மாறாக, அவை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ராஜபக்ஷவின் விரைவான நகர்வுகளுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்குகின்றன.

சுமந்திரன் தனது டெய்லி மிரர் நேர்காணலில், பூட்டுதல் "உயிர்வாழ போராடும்" மக்கள் மீது கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் "வடக்கு மற்றும் கிழக்கின் நிலைமை ஆபத்தானது ... சிலர் பட்டினியை நெருங்குகிறார்கள்" என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், அதே மூச்சில், "அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமாக இருந்தன" என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுவதில் உள்ள ஒரே பிரச்சனை, அவை "சமநிலையற்றவை" என்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரினாலும், தற்போதைய இராணுவ ஆக்கிரமிப்பினாலும் பேரழிவிற்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் ஒரு சமூக பேரழிவை எதிர்கொள்கின்றனர். நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவை போலவே, இரு மாகாணங்களிலும் உள்ள கிராமங்களுக்கும் அரசாங்கத்தின் "நிவாரணப் பொதிகள்" கிடைக்கவில்லை என்று சமீபத்திய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சமைப்பதற்காக உணவு அல்லது விறகுகளைத் தேடுவதற்குச் செல்லும் மக்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள ஏனைய முதலாளித்துவ கட்சிகளைப் போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் அதிருப்தி அதிகரிப்பதையிட்டு பீதியடைந்து உள்ளது. பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; முன்நிலை சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு கருவிகளின் பற்றாக்குறையை கண்டித்துள்ளனர், மேலும் தொற்றுநோயினால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பெருகிய முறையில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக இலங்கைத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் வெகுஜன இயக்கம் அரசியல் ஸ்தாபனத்திற்குள் பிளவுகளை உருவாக்கியதுடன் மைத்ரிபால சிறிசேன-ரனில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அரசியல் சரிவை உருவாக்கியது. கடந்த ஆண்டு பிற்பகுதியில், அந்த வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதன் மூலமும், உழைக்கும் மக்களுக்கு பல்வேறு போலி சமூக வாக்குறுதிகளை அளிப்பதன் மூலமும் ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த அதே வேளை, ஆளும் உயரடுக்கிற்கு தான் ஒரு "வலுவான அரசாங்கத்தை" ஸ்தாபிப்பதாக உறுதியளித்தார்.

தொற்று நெருக்கடி மோசமடைந்து வருவதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய ஒவ்வொரு பாராளுமன்றக் கட்சியும் ஜனாதிபதியின் மூத்த சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தன.

சுமந்திரனின் சமீபத்திய நேர்காணல்கள், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புகளை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் வலதுசாரி மாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடு ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றவும், மைத்ரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்தவும் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற சூழ்ச்சிக்கு 2015 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிவளித்தது. அது ஏறத்தாழ சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தின் ஒரு பங்காளியாகவே செயல்பட்டு, இலங்கை இராணுவத்தை அமெரிக்க பசிபிக் கட்டளையகத்துடன் ஒருங்கிணைக்க அங்கீகரித்தது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கொள்கைகளை திணிக்கவும் மற்றும் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிரான இராணுவத்தின் போர்க்குற்றங்கள் பற்றிய எந்தவொரு விசாரணையையும் நசுக்குவதற்கும் ஒத்துழைத்தது.

கடந்த ஆண்டு ஒரு இஸ்லாமிய பயங்கரவாதக் குழு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் கடுமையான அவசரகால சட்டங்களை அறிமுகப்படுத்தியதையும், நாடு தழுவிய அளவில் "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கையில் இராணுவத்தை நிறுத்துவதையும் ஆதரிக்க தமிழ் கூட்டமைப்பு விரைந்தது.

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ் உயரடுக்கினருடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கு ஈடாக அவருடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உறுதியளித்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பிற தமிழ் தேசியவாதக் கட்சிகளின் பிரதிபலிப்பானது இந்த அமைப்புகள் தமிழ் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

தமிழ் தொழிலாளர்கள் இந்த வலதுசாரி ஏகாதிபத்திய சார்பு கட்சிகளை நிராகரித்து, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களுடன் இன பேதங்களைக் கடந்து ஐக்கியப்பட வேண்டும்.

இந்த வேலைத் திட்டத்துக்காக சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அங்கம் வகிக்கும் அதன் சகோதர கட்சிகளும் போராடுகின்றன. சோ.ச.க. கொள்கைகளைப் படிக்குமாறும் உலக சோசலிச வலைத்தளத்தைவாசிக்குமாறும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களும் அழைப்பு விடுக்கின்றோம்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

இலங்கையில் கொரோனா வைரஸ் நெருக்கடி: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்டம்

[4 ஏப்பிரல் 2020]