இலங்கை தமிழ் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் கூடி வேலை செய்யத் தயாராகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

கடந்த மாத முற்பகுதியில், இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் மீதான விவாதத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (த.தே.கூ.) தலைவர்களான ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்தரன் ஆகியோர், எதிர்காலத்தில் அவருடன் கூடி வேலை செய்வதற்கான தமது தயார்நிலையை வெளிப்படுத்தினார்கள்.

ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்குப் பிரதியுபகாரமாக, “இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வை” வழங்குமாறு, தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள், அவரிடம் பரிதாபகரமான விண்ணப்பத்தினை வைத்தார்கள். “இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு” என்னும் சொற்றொடரானது, இலங்கையில் தமிழ்ர்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக தமிழ் முதலாளித்துவ தட்டு பயன்படுத்தும் ஒன்றாகும்.

அமெரிக்க சார்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளட்) ஆகிய முதலாளித்துவக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலின்போது, “சர்வாதிகாரப் போக்கு கொண்ட” ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை விட, ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.), அதன் வேட்பாளரான சஜித் பிரேமதாசவும் “கூடுதல் ஜனநாயகத்” தன்மை கொண்டவர்கள் என தமிழ் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பு தமிழர்களைக் கேட்டுக்கொண்டது.

இந்த பரிந்துரைக்கான பிரதிபலிப்பாக, ஒரு அரசியல் பதிலீடு அற்ற நிலையில், தமிழ் வெகுஜனங்களின் வெறுப்புக்கு ஆளான ராஜபக்ஸவுக்கு எதிராக, பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாக்களித்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தில் ஆற்றிய பாத்திரத்தினால், அவர் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களினால் வெறுக்கப்படுபவராக உள்ளார்.

ஐநா அறிக்கையின்படி, யுத்தத்தின் இறுதிவாரங்களில் இடம்பெற்ற கொடூரமான மோதல்களின்போது, நடத்தப்பட்ட பரந்த தாக்குதல்களினால் ஆயிரக்கண்க்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரண்டைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஏறக்குறைய 300,000 வரையான பொதுமக்கள் இராணுவ முகாம்களால் சுற்றிவளைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். 11,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் புனர்வாழ்வு என்னும் பெயரிலான தடுப்பு முகாம்களுக்கு இழுத்துச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

ஐ.தே.க. மற்றும் பிரேமதாசவும் அதிக “ஜனநாயகமானது” என்ற கூட்டமைப்பின் கூற்றானது வெளிப்படையான பொய்யாகும்.

ஐ.தே.க. 1948 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுதந்திரம் கிடைத்தது முதலே, தமிழர் விரோத பாகுபாட்டினை ஊக்குவித்து வந்துள்ளதுடன், தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் ஒடுக்குவதற்கும் இனவாத்தினைப் பயன்படுத்தி வந்துள்ளது. அதுவே 1983 இல் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தினையும் தொடக்கி வைத்தது.

சஜித் பிரேமதாசவின் தகப்பனாரான முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச, வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் யுத்தத்தினை மீளவும் ஆரம்பிக்கவில்லை. மாறாக, 1988 – 1990 களில், கிராமப்புறக் கிளர்ச்சியின்போது, 60,000 சிங்கள இளைஞர்களின் படுகொலைக்கு அரசியல் பொறுப்பாளியாவார். ஐ.தே.க. வின் தலைவரும் சிறிசேன – விக்ரசிங்க அரசாங்கத்தில் ஒரு அமைச்சருமான சஜித் பிரேமதாச, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பொருளாதார மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு முழுப் பொறுப்பாளியாவார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு “சர்வாதிகார போக்குடையவர்” என்று முன்னர் கூறியிருந்த தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் தற்போது தமது இராகத்தினை மாற்றியுள்ளார்கள்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரை மீதான விவாதம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நடந்தபோது, தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கோட்டாபாய ராஜபக்ஷவைப் பாராட்டினார். அப்போது அவர், நாட்டின் முதலாவது “அரசியல்வாதியற்ற” ஜனாதிபதி மற்றும் “உண்மையைப் பேசுவதற்கும் மற்றும் சரியான வகையில் சிந்தித்து, செயற்படுவதற்கு தயாராக இருக்கும்” ஒருவர், என்று விவரித்தார்.

இந்த பாராட்டு தொடர்ந்தது. “அவர் ஏதாவது தவறு செய்தால்”, “நாங்கள் அவருக்கு அறிவுரை கூறி, திருத்துவோம். அவருடன் இணைந்து வேலை செய்வதற்குக தாயாராக உள்ளோம்,” என சம்பந்தன் கூறினார்.

இலங்கை “கழுத்தளவுக்கு கடனில் மூழ்கியுள்ளது,” இதில் பெரும் பகுதி கொழம்பின் யுத்தத்தினால் ஏற்பட்டதாகும், மற்றும் நாட்டின் வருமானம் கடனை செலுத்துவதற்கு போதுமானதாக இல்லை, என சம்பந்தன் கூறினார்.

"நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு, முதலீடும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியின் அபிவிருத்தியும் தேவை ... [ஆனால்] தமிழ் உயரடுக்கு அரசாங்கத்திற்கு உதவத் தவறினால் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையின் கீழ் இலங்கையில் நிகழக்கூடிய பொருளாதார அதிசயம் மறைந்து போகக்கூடும்" என்று அவர் எச்சரித்தார்.

புலிகளின் இராணுவ தோல்விக்குப் பின்னர், முந்தைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் இந்தியாவிற்கும் “சர்வதேச சமூகத்துக்கும்” அளித்த வாக்குறுதிளை இந்த அரசாங்கம் நிறைவேற்றினால், இந்த ஆதரவு தொடரும் என சம்பந்தன் கூறினார்.

மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கப்போவதாக, அதேபோல், தன்னுடைய அரசாங்கம் “நல்லிணக்கத்தினை” ஏற்படுத்தவும், தமிழ் கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிரவும் தயார், என மகிந்தராஜபக்ஷ இந்தியத் தலைவர்களுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் உத்தரவாதமளித்திருந்தார்.

சுருக்கமாக, சர்வதேச மூலதனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ராஜபக்ஷவின் பொருளாதார சிக்கனத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, எமது ஆதரவு தேவை, நாங்கள் அந்த ஆதரவை வழங்குவதற்கு தயாராக உள்ளோம், ஆனால் எங்களுக்கு சில சலுகைகள் வேண்டும், என்பதே கூட்டமைப்பின் தற்போதை கோரிக்கையாகும்.

2009 மே மாதத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மீதான சர்வதேச அழுத்தத்தினை இல்லாமல் செய்யும் ஒரு முயற்சியாகவும் ஏமாற்றும் நடவடிக்கையாகவும், இந்தியா மற்றும் “சர்வதேச சமூகம்” என்று அழைக்கப்படும் நாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக காட்டிக்கொள்வதே முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வின் முயற்சியாக இருந்தது. தமிழ் நாட்டில் வாழும் இனரீதியில் தொடர்புடையவர்கள் மத்தியில், இலங்கைத் தமிழர்கள் மீதான ஒரு அனுதாபம் அபிவிருத்தியடைவதை தடுப்பதே புதுடில்லியின் தேவையாகும். இவ்வாறான நிலமை, இந்தியா பூராவும் அரசியல் ஸ்த்திரமின்மையை உருவாக்கி விடும்.

சீனாவுடனான உறவைத் தூர வைத்துக்கொள்ளுமாறு, அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொழும்பு மீது ஒரு அழுத்த்தினைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

வாஷிங்டன், மஹந்த ராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சி மற்றும் புலிகளுக்கு எதிரான அவரது அரசாங்கம் நடத்திய கொடூர யுத்தம் என்பவற்றினை ஆதரித்தது. ஆனால், பீஜிங்குடனான கொழும்பின் நெருக்கமான உறவினையே அது எதிர்க்கின்றது. ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தில், கொழும்புக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தினைக் கொண்டு வருவதற்காக, யுத்த காலத்தின் போது ராஜபக்ஷவின் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா பாசாங்குத்தனமாக பயன்படுத்திக்கொள்கின்றது.

இறுதியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் விக்ரமசிங்கவின் உதவியுடன் அமெரிக்கா ஆட்சிமாற்றத்தைச் திட்டமிட்டு செய்து ராஜபக்ஷவை அகற்றியது. சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கைவை அதிகாரத்துக்கு கொண்டுவந்த, அரசியல் நடவடிக்கையையும் சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிட்ட அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கையையும் தமிழ் கூட்டமைப்பு ஆதரித்தது.

இலங்கையின் மலிவான உழைப்பை கூட்டாக சுரண்டுவதற்கும், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் ஒத்துழைப்பதற்கு புதிய அரசாங்கத்துடன் ஒரு அரசியல் ஏற்பாட்டிற்கு அழைப்பு விடுக்கும் போது, அதற்குப் பிரதியுபகாரமாக வடக்கு மற்றும் கிழக்கின் மீது தமிழ் முதலாளித்துவத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றே சம்பந்தன் வேண்டுகோள் விடுக்கின்றார்.

கூட்டமைப்பின் வாதத்தினை வலுப்படுத்தும் முகமாக, சுமந்திரன் பாராளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்ததாவது: சில அரசாங்கத் தலைவர்கள் சிங்கப்பூரின் வெற்றிபற்றி பேசினாலும் கூட, “சிங்கப்பூர், அதன் பிரஜைகள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பதில் வெற்றியடைந்திருந்தது. சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணமாகும்...”

சுமந்திரனின் செய்தி தெளிவானது. இலங்கை அரசாங்கம் “சிங்கப்பூரின் சிறந்த உதாரணத்தை” பின்பற்றினால், தமிழ் கூட்டமைப்பு தனது உதவியை வழங்குவதற்கு தயாராகவும் மற்றும் விருப்பமாகவும் உள்ளது.

இலங்கையின் அரசியல் உயரடுக்கின் ஏனைய பிரிவினரைப் போலவே, தமிழ் கூட்டமைப்பும் சிங்கப்பூரைப் புகழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். எவ்வாறாயினும், அந்த நாடு “தேசிய நல்லிணக்கத்துக்கான” உதாரணம் அல்ல. மாறாக, நாட்டை ஒரு வர்த்தக மையமாகவும் சர்வதேச மூலதனத்தின் நிலையமாகவும் பேணுவதற்காக நாட்டின் சாதாரண மக்களை கொடூர ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்துகின்ற ஒரு பொலிஸ்-அரச வழிமுறையே அங்கு பின்பற்றப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய அரசியல் உயரடுக்கினைப்போலவே, தாங்கள் ஒரு சமூக வெடிகுண்டின் மீது அமர்ந்திருப்பதை பற்றி தமிழ் கூட்டமைப்பும் விழிப்பாக இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக, ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், ரயில் ஊழியர்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர் உட்பட தொழிலாளர்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக எழ்ச்சிகரமான வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டங்கள், நாடுபூராவும் உள்ள சிங்கள, தமிழ்மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டங்கள் சிறிசேன – விக்ரமசிங்க நிர்வாகத்தனை ஆட்டங்காண வைத்ததுடன், கடந்த வருட ஜனாதிபதி தேர்தலில் அதன் தோல்விக்கு வழிவகுத்தது.

ராஜபக்ஷவும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வும், வெகுஜன சமூகப் வெறுப்பினைச் சுரண்டிக்கொண்டதுடன் தமிழ் மற்றும் முஸ்லீம் பொதுமக்களுக்கு எதிராக இனவாதப் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்திய அதேநேரம், வாழ்க்கைத் தரங்களை உயர்த்துதல், போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர்.

ராஜபக்ஷ தான் ஒரு “வலுவான அரசாங்கத்தை” அமைக்கப்போவதாக பெரும் வணிகர்களுக்கு கூறிய அதேவேளை, சரவாதிகார வடிவிலான ஆட்சியைத் தயாரிப்பதற்கு இராணவத்துக்கு அழைப்பு விடுத்தார். அவர், பதவிக்கு வந்தபின்னர், அரசாங்கத்தின் பிரதான பதவிகளுக்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை நியமித்தார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா கொழும்பின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததற்கும், முன்னைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றவியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கும், மற்றும் புலிகளின் இரத்தக்களறியான அழிவுக்கு தமிழ் கூட்டமைப்பு கொடுத்த ஆதரவுக்கும் ஒரு அரசியல் முகமூடியை வழங்குவதும் புதிய அரசாங்கத்துக்கான சம்பந்தனின் வேண்டுகோளில் உள்ளடங்கியுள்ளது.

“ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு புலிகள் இயக்கம் ஒரு தடையாக இருந்ததாக, இலங்கையும் இந்தியாவும் கருதின”, என சம்பந்தன் கூறினார். “புலிகளின் இராணுவத் தோல்வியானது, ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான முன்னோடியாகப் பார்க்கப்பட்டது,” என அவர் மேலும் கூறினார்.

ஒரு தனிநாட்டுக்கான புலிகள் இயக்கத்தின் பிரச்சாரமானது, தென்னாசியாவில் தமது பூகோள – மூலோபாய நலனுக்கு ஒரு தடையாக உள்ளது என வாஷிங்டன் மற்று புதுடில்லியும் கருதின. இது, மூலோபாய அமைவிடத்தில் இருக்கும் தீவினை நிலைகுலையச் செய்யும் என அவை நம்பின. தமிழ் பிரிவினைவாத இயக்கத்துக்கு எதிரான நீண்ட தசாப்த கால யுத்தமானது, அதன் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கினை மட்டும் இலக்கு வைத்து அல்ல, மாறாக இனவாத்தினை ஊக்குவிப்பதன் மூலம், தொழிலாளர் வர்க்கத்தை பிரித்து ஒடுக்குமுறையை மேற்கொள்வதன் மூலம், முழு இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும்.

ஆழ்ந்த உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிக்கு பிரதிபலிக்கும் வகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்கள், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள “தேசிய முதலாளித்துவத்தின்” வலதுசாரி மாற்றத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, தொடர்ச்சியாக யுத்தத்தினை எதிர்த்த ஒரே அரசியல் கட்சியாகும். அது, வடக்கு கிழக்கில் இருந்த இலங்கை இராணுவத்தினை நிபந்தனையின்றி திருப்பி அழைக்குமாறு அழைப்பு விடுத்து வந்துள்ளது. சிங்கள இனவாதம் மற்றும் தமிழ் தேசியவாதத்தினை எதிர்த்ததோடு, இன பாகுபாடுகளுக்கு அப்பால் சகல தொழிலாளர் வர்க்கத்தினையும் ஐக்கியப்படுத்தப் போராடியது. இந்த புரட்சிகர முன்னோக்கு, தென்னாசியா மற்றும் சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா – ஈழம் சோசலிசக் குடியரசுக்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டதாகும்.