ஜேர்மன் அரசாங்கம் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதானது, நூறாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட கொரொனா வைரஸ் கட்டுப்பாடுகளை படிப்படியாக திரும்பப் பெறுவதற்கு கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் முடிவெடுத்து மூன்று வாரங்களுக்குப் பின்னர், ஜேர்மனியில் முடக்கம் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது. இது, புதன்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-CDU), பவேரிய பிரதமர் மார்க்கூஸ் சோடர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம்-CSU) மற்றும் ஹம்பேர்க் மேயர் Peter Tschentscher (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.

“தற்போதைய சூழ்நிலை மேலதிக திறப்புக்களுக்கான சாத்தியத்தை உருவாக்குகின்றது,” என்று மேர்க்கெல் தனது கருத்துக்களை வெளிப்படுத்தத் தொடங்கினார். மேலும், “தொற்றுநோயின் முதல்கட்ட தாக்கத்தை நாம் கடந்துவிட்டோம்” என்றார். அதனையடுத்து, ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, வணிகங்களை திறப்பது மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்ற உண்மையான களியாட்டத்தை தொடங்க அவர் அறிவித்தார், இது கோவிட்-19 நோய்தொற்றின் மிகப்பெரிய பரவலைத் தூண்டும் என்பதுடன், நூறாயிரக்கணக்கானோரின் ஆரோக்கியத்தையும் உயிர் வாழ்வையும் ஆபத்தில் ஆழ்த்தும்.

முதலாவதாக, தற்போது வரை நடைமுறையிலுள்ள சமூக தொடர்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இனிமேல், இரண்டு வீடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீண்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள், எடுத்துக்காட்டாக, இரண்டு தம்பதிகள், இரண்டு குடும்பங்கள், அல்லது இரண்டு பகிரப்பட்ட குடியிருப்புகளின் உறுப்பினர்கள் சந்திக்கலாம் என்பதாகும். மேலும், ஊனமுற்றோருக்கான மருத்துவமனைகள், மருத்துவகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும். இதன்படி, ஒவ்வொரு நோயாளியும் அல்லது குடியிருப்பாளரும் ஒரு குறிப்பிட்ட நபரால் தொடர்ச்சியான அடிப்படையில் சந்தித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மே 6 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மேர்க்கெலும் சோடரும் (AP Photo / Michael Sohn, Pool)

மேலும், “எந்தவித தடைகளும் இல்லாமல் இப்போது கடைகளைத் திறக்கலாம்,” என்று மேர்க்கெல் அறிவித்தார். விற்பனை பகுதிகளை 800 சதுர மீட்டருக்குள் கட்டுப்படுத்துவது போன்ற முந்தைய கட்டுப்பாடுகள் இவ்வாறாக கைவிடப்படும். Bundesliga கால்பந்தாட்டமும் “மே மாதம் பிற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என்பதுடன், திறந்த வெளியில் நடத்தப்படும் பிரபல மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளன.

ஏராளமான பிற துறைகளிலும் தளர்வுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டாட்சி மாநிலங்கள் ஏற்கனவே “அதிகரித்தளவில் இதற்கு சாத்தியமுள்ள கருத்துக்களை தயாராக வைத்துள்ளன,” என்று மேர்க்கெல் கூறினார். குறிப்பாக “குழந்தைகளுக்கான அவசர பராமரிப்புக்கான விரிவாக்கம்,” பற்றி அவர் குறிப்பிட்டார், அதாவது, குழந்தைகளின் பராமரிப்பு மையங்களை படிப்படியாக திறப்பதாகும், மற்றும் “திரையரங்குகள், கச்சேரி அரங்குகள் மற்றும் திரைப்படங்கள்” ஆகியவற்றையும் திறப்பதற்கான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. மொத்தத்தில், கூட்டாட்சி மாநிலங்களின் பிரதமர்களுடன் “மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்” நடந்துள்ளது என்பதாக அவர் கூறினார்.

யார் எந்த துறையை முதலில் திறக்கிறார்கள் மற்றும் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள் என்பது குறித்து தற்போது கூட்டாட்சி மாநிலங்களிடையே ஒரு உண்மையான போட்டி நிலவுகிறது. செவ்வாயன்று, பவேரியா, மெக்லென்பேர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா மற்றும் ஹெஸ்ஸ ஆகிய மாநிலங்கள், பள்ளிகளும் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் அவற்றின் “இயல்பான செயல்பாட்டிற்கு திரும்புவதற்கான” விரிவான திட்டங்களை ஏற்கனவே அறிவித்தன. பவேரிய பீர் தோட்டங்கள் விரைவில் திறக்கப்படும் என்று நேற்று சோடர் அறிவித்தார். பேர்லினில், SPD-இடது பசுமைக் கட்சி மேல் சட்டசபை (சிவப்பு-சிவப்பு-பச்சை), உணவகங்களும், காப்பி அருந்தகங்களும் அடுத்த வாரம் ஆரம்பத்தில் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. மேலும், ஹெஸ்ஸவிலும், CDU/பசுமைக் கட்சி மாநில அரசாங்கம் இந்த மாதம் உணவகங்கள், விடுதிகள் மற்றும் முகாம்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், பொருளாதாரத்தைப் பெருக்குவதும் மற்றும் தொழில்துறைக்கு புத்துயிரூட்டுவதும் ஆகும். “பொருளாதாரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு நாங்கள் எந்தவித தடைகளையும் விதிக்கவில்லை,” என்று மேர்க்கெல் வலியுறுத்திக் கூறினார். பிற நாடுகளில், பெரும்பகுதி உற்பத்திகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜேர்மனியோ “மிகவும் வெளிப்படையான மற்றும் தைரியமிக்க பாதையை” பின்பற்றுவதாகக் கூறுகிறார். என்றாலும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கு இந்த “தைரியமான பாதை” என்ன விளைவிக்கப் போகிறது என்பது பற்றி மேர்க்கெல் விளக்கமளிக்கவில்லை. கடந்த சில வாரங்களாகவே, நூற்றுக்கணக்கானவர்கள் தனிப்பட்ட தொழிற்சாலைகளில் கோவிட்-19 நோய்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய வாரங்களைப் போலவே, மேர்க்கெல், மக்கள் தொடர்ந்து “எச்சரிக்கையுடன்” செயல்பட வேண்டும், மேலும் “வெற்றிகளுக்கு” ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மக்களிடம் விடுக்கும் முறையீடுகளுடன் சேர்த்து தனது அறிவிப்புகளையும் விடுத்தார். “நோய்தொற்றுக்கள் விரைந்து பரவுவதை தடுக்கவே நாங்கள் விரும்புகின்றோம்,” என்று சான்சிலர் செய்தியாளர்களின் கூட்டத்தில் விவரித்தார். கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கையின் படி பார்த்தால், இது இழிந்தது மற்றும் குற்றவியல் தன்மை கொண்டது என்று மட்டுமே விவரிக்க முடியும். பின்பற்றப்பட்டு வரும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவதானது வைரஸ் மீண்டும் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பது ஏற்கனவே தெளிவாக தெரிய வந்துள்ளது.

ராபர்ட் கோச் நிறுவனத்தின் (Robert Koch Institute) அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மே 4 ஆம் திகதி மட்டும் அங்கு 679 புதிய நோய்தொற்று பாதிப்புக்கள் பதிவாகின; தொடர்ந்து மே 5 அன்று 685; மே 6 அன்று 947; மற்றும் மே 7 அன்று 1,284 என்று ஏறுமுகமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இதேபோல, இறப்பு எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மே 4 அன்று மட்டும் 43 பேர் நோய்தொற்றுக்கு பலியாகினர்; தொடர்ந்து மே 5 அன்று 139 பேரும் மற்றும் மே 6 அன்று 165 பேரும் பலியாகினர். அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) கூற்றுப்படி, புதன்கிழமை மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக அதிகரித்து மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 7,275 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168,162 ஆக உயர்ந்து, அதில் 23,191 பேருக்கு தொடர்ந்து நோய்தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இத்தகைய உத்தியோகபூர்வ பிரச்சாரங்கள் ஒருபுறம் இருந்தாலும், மருந்தகங்களின் நிலைமை தொடர்ந்து கொடூரமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,937 கோவிட்-19 நோயாளிகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுடன், அவர்களில் 69 சதவிகிதம் பேருக்கு செயற்கை பிராணவாயு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நோய்தொற்று சர்வதேச அளவில் பரவி வருகிறது. புதன்கிழமை மட்டும் அமெரிக்காவில் 25,000 க்கும் மேலாக நோய்தொற்று பாதிப்புகள் அதிகரித்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1.26 மில்லியனுக்கு மேலாக அதிகரித்துள்ளது, இதில் 975,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்னமும் நோய்தொற்று பாதிப்பில் உள்ளனர். ஐரோப்பாவை பொறுத்தவரை, அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டிருந்த 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட நோயாளிகளில், 794,000 பேர் தற்போதுவரை நோய் பாதிப்புடன் உள்ளனர். புதன்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 31,000 புதிய நோய் பாதிப்புகள் பதிவாகின, அவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவில் 10,599 பேர், இங்கிலாந்தில் 6,111 பேர் மற்றும் பிரான்சில் 3,640 பேர் என்ற எண்ணிக்கைகளில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பா முழுவதுமாக, 2,500 க்கும் மேற்பட்டோர் மீண்டும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்ற நிலையில், மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 146,631 ஆக அதிகரித்தது.

இந்த நிலைமைகளின் கீழ், ஜேர்மனியில், நோய்தொற்றுக்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும், மேலும் “பிராந்திய நோய்தொற்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டால்” (மேர்க்கெல்) இதில் தலையிடலாம் என்ற அரசாங்கத்தின் வலியுறுத்தல் அபத்தமானது. தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் கொடிய தர்க்கத்தின் மீதான கவனத்தை திருப்புவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. தளர்த்துவதற்கான ஜேர்மனியின் கொள்கையினால், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை விரைந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அமைப்புக்கள் சீர்குலைந்து கொண்டிருக்கும், மற்றும் கொடூரமான நிலைமைகளினால் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிப்போன நிலைமைகளை எதிர்கொள்ளும் இத்தாலி மற்றும் அமெரிக்காவின் சூழ்நிலையையொத்த ஆபத்தை இதுவும் தூண்டுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை போலவே, ஜேர்மன் ஆளும் வர்க்கமும் சமூகத்திற்கு எதிராக ஒரு இரக்கமற்ற போரை நடத்தி வருவதுடன், தேவைப்பட்டால், அதன் நலன்களுக்காக நூறாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுக்கவும் தயாராகவுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, கொரொனா வைரஸ் நெருக்கடியை தனது வர்க்கப் போர் திட்டநிரலை தீவிரப்படுத்துவதற்கான, மற்றும் மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்களின் பைகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை மாற்றுவதற்கான வாய்ப்பாகவே இந்த நாடு பார்க்கிறது. இதற்கிடையில், சமூக மற்றும் மருத்துவ பராமரிப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு என கிட்டத்தட்ட எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

ஜேர்மனியில், கொரொனா வைரஸ் அவசரகால நிதி தொகுப்பிலிருந்து முக்கியமாக நிதிய உயரடுக்கிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை தற்போது மீண்டும் தொழிலாள வர்க்கத்திலிருந்து பிழிந்தெடுக்கப்படவுள்ளது. எனவே ஜேர்மன் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் தீவிரமான “வேலைக்கு திரும்புதல்” தாக்குதலுக்கு ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மற்றொரு காரணியாக, சர்வதேச போட்டியாளர்களை விஞ்சுவதற்கு முயற்சிக்கும், மற்றும் பெருமளவில் தன்னை ஆயுதபாணியாக்கி வரும், மற்றும் புதிய சந்தைகளையும், மலிவான உழைப்பையும் தேடும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் உள்ளன.

“நூற்றுக்கணக்கான ஆலோசகர்களால் ஆதரிக்கப்படும் பொருளாதார அமைச்சகத்தின் பல ஊழியர்கள் நெருக்கடிக்கு பிந்தைய காலகட்டத்திற்கு தம்மை அர்பணித்து வருகின்றனர்: “உலகளாவிய ஓட்டப் பந்தயத்தில் இடத்தை கைப்பற்ற ஜேர்மனி எவ்வாறு வழிநடத்தப்பட முடியும் என்பதற்கான ஆரம்பகட்ட சூழ்நிலை காட்சிகள் உருவாக்கப்படுகின்றன,” என்று ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் Der Spiegel பத்திரிகை ஏற்கனவே தெரிவித்தது. “பொதுவில்,” அரசாங்க அதிகாரிகள் “இதைப் பற்றி இன்னும் எதையும் பேச விரும்பவில்லை… ஆனால் உள்நாட்டில் முடக்கத்திற்கான அனைத்து காரணிகளிலிருந்தும் இறுதியாக விடுபடுவதற்கான வாய்ப்பை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.” இதற்கான பொருள் இப்போது முழுமையாக தெரிகிறது: “முடக்கத்திற்கான காரணி” என்பது தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மட்டுமல்ல, மாறாக அவர்களின் இருப்பும் அதிலடங்கும்.

நோய்தொற்றும் மற்றும் ஆளும் வர்க்க கொள்கைகளும் முன்வைக்கும் அதன் இருப்பிற்கான அச்சுறுத்தலை தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தின் மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். பெரும் செல்வந்தர்களிடமிருந்து சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், முடக்கத்தினால் உருவான சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை சமாளிப்பதற்கும் அது பயன்படுத்தப்பட வேண்டும். பெரு நிறுவனங்களும் மற்றும் வங்கிகளும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். முதலாளித்துவம் என்பது, பெரும்பான்மையான மக்களுக்கு சமூக வறுமை மற்றும் மரணம் என்பதே பொருளாகும், அது சோசலிச சமுதாயத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

Loading