குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலின் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தினாலும், உலகெங்கிலும் அரசாங்கங்கள் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அவற்றின் பொருளாதாரங்களையும் மறுதொடக்கம் செய்து வருகின்றன. வைரஸ் பரவி வரும் நிலையில் கூட, பெருநிறுவன இலாபங்களை மீண்டும் பெருக்குவதற்காக, மில்லியன் கணக்கான தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். இந்நிலையில், பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது வேலைக்கு திரும்பச் செய்யும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது.

பள்ளிகளை மீண்டும் திறப்பது, நோய்தொற்று காலத்திற்கு முந்தைய நிலைமைகளுக்கு திரும்புவதற்கான அடையாளமாக மட்டுமல்லாமல், மிக முக்கியமாக தங்களது குழந்தைகளைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்பட தேவையில்லாத தொழிலாளர்கள் தான் மீண்டும் தங்களது பணியிடங்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதால் இது அவசியம் என்று அரசாங்கங்கள் கருதுகின்றன.

பிரான்சில், “பணக்காரர்களின் ஜனாதிபதி”யான இமானுவல் மக்ரோன் சமூக இடைவெளி அறிவுறுத்தல்களை பின்பற்றக் கூட முடியாத இளைய பள்ளிப்பருவ குழந்தைகளின் பள்ளிகளில் தொடங்கி அனைத்து பள்ளிகளையும் இன்று திறந்திருக்கிறார், ஏனென்றால் பெற்றோர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டுமானால், குழந்தைகள் கவனிக்கப்படுவது மிகவும் அவசியமாகிறது. செப்டம்பர் மாதம் வரை பள்ளிகளைத் திறப்பதை ஒத்திவைக்கும்படி பிரான்சின் விஞ்ஞான ஆலோசனை சபை (France’s Scientific Council) பரிந்துரைத்ததை நேரடியாக மீறும் வகையில் அவர் இவ்வாறு செய்கிறார். ஜேர்மனி, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிற நாடுகளிலும் பள்ளிகள் விரைவில் மீண்டும் திறக்கப்படவுள்ளன அல்லது ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன.

காலியாகவுள்ள வகுப்பறை

இந்த கொள்கையானது ஒரு பிரச்சாரத்துடன் சேர்ந்துள்ளது (1) கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தாது, மற்றும் (2) அறிகுறியற்ற நோய் கடத்திகளாக இருந்தாலும், குழந்தைகள் வைரஸ்ஸால் பீடிக்கப்படவோ அல்லது பரப்பவோ முடியாது. இந்த பிரச்சாரம் பள்ளிகளை மீண்டும் திறப்பது வைரஸ் பரவுவதற்கான ஒரு முக்கிய கூடுதல் வழிமுறையாகும் என்பதை மறுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த கூற்றுக்களுக்கு விஞ்ஞானரீதியாக செல்லுபடியாகும் தன்மை எதுவுமில்லை. அரசாங்கங்கள் தங்களின் பொருளாதாரக் கொள்கையை நியாயப்படுத்த, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முழுமையற்ற ஆய்வுகளை தேர்ந்தெடுத்துள்ளது, அவை பெரும்பாலும் தங்கள் சொந்த விஞ்ஞானபூர்வ ஆலோசகர்களுக்கு முரணாக உள்ளது. வைரஸ்ஸால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து மற்றும் மக்கள் தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு வைரஸை பரப்புவதில் குழந்தைகள் வகிக்கும் பங்கு பற்றிய பல ஆதாரங்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

“தொடர்பு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் சீனாவில் கோவிட்-19 நோய் வெடித்து பரவுவதன் வேகத்தை வடிவமைக்கின்றன,” என்ற தலைப்பில் Science என்ற புகழ்வாய்ந்த பத்திரிகையில் வூஹானில் நோய் பரவியது குறித்து கடந்த வாரம் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு, வைரஸ் நோய்தொற்று பரவுவது குறித்து மருந்துகள் பயன்படுத்தப்படாத நேரத்தில் அதன் தாக்கத்தை மதிப்பிட, அதிலும் குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நேரத்தில் வூஹான் மற்றும் ஷங்காயில் குடிமக்களின் தொடர்பு நடத்தைகள் தொடர்பான கணக்கெடுப்புக்களைப் பயன்படுத்தி நோய்தொற்று காலத்திற்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை, நோயாளிகளில் வெவ்வேறு வயதிற்குட்பட்ட பிரிவினர்களின் அடிப்படையில் பிரிவு வாரியாக எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க அவர்கள் குறிப்பாக முயன்றனர்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களைக் காட்டிலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்தவொரு தொடர்பு நடவடிக்கையினாலும் நோயால் பீடிக்கப்படுவதோ அல்லது பரப்புவதோ குறைவு என்று அவர்கள் முடிவு செய்தனர். இருப்பினும், பள்ளியில் உள்ள குழந்தைகள் அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற உண்மைக்கு இது முரண்படுகிறது. இதன் விளைவாக, வைரஸின் ஒட்டுமொத்த பரவலில் “பள்ளி தொடர்புகள் இல்லாத இடங்களில், 42 சதவிகிதம் குறைவதாக மதிப்பிடுகிறோம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பள்ளி மூடல்கள், “தொற்று பரவும் வீதம் மற்றும் உச்சபட்ச நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க குறைவை ஏற்படுத்தவும், மற்றும் நோய்தொற்று பரவுவதை தாமதப்படுத்தவும் முடியும்” என்று அவர்கள் முடிக்கிறார்கள்.

ஜேர்மனியில் பேர்லினில் Charite மருத்துவமனையில் நுண்ணுயிரியியல் நிபுணரான Christian Drosten தலைமையிலான ஆராய்ச்சியாளர்களின் குழுவால் இரண்டாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, அதற்குள் ஏறக்குறைய 60,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அக்குழு நடத்தி முடித்திருந்தது. Drosten தனது ஆய்வின் முடிவுகளை சக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்வதற்கு முன்னரே தனது ஆய்வகத்தின் சொந்த வலைத் தளத்தில் அதனை பிரசுரித்தார், ஏனென்றால் ஜேர்மன் அரசாங்கத்தின் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கொள்கைக்கு முரணாக இருக்கும் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் அவசரம் குறித்த அவரது நம்பிக்கைதான் அதற்கு காரணமாக இருந்தது.

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிப்புள்ள 3,712 நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து ஒவ்வொரு மாதிரியின் “வைரஸ் அளவை” காண்பதற்கு, அதாவது, ஒவ்வொரு நோயாளியின் மாதிரியிலும் உள்ள மொத்த வைரஸின் அளவை இந்த குழு பகுப்பாய்வு செய்தது. வைரஸ் அளவு அதிகமாக இருக்கும் நோயாளி பொதுவாக அதிகளவு நோயை பரப்புவார் என்று கருதப்படுகிறது. அவர்களது ஆய்வு முடிவுகள், வைரஸின் அளவு வயதான நோயாளிகளிடம் இருப்பதை காட்டிலும் இளைய நோயாளிகளிடம் குறைந்துவிட இல்லை என்பதை காண்பித்தன.

“வெவ்வெறு வயது பிரிவைச் சேர்ந்த நோயாளிகளின் வைரஸ் அளவு மாறுபாட்டின் பகுப்பாய்வு, குழந்தைகள் உட்பட வயது பிரிவுகளின் எந்தவொரு ஜோடிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காண முடியவில்லை,” என்று அவர்கள் முடிவு செய்தனர். “குறிப்பாக, நோயாளிகளில் வயோதிகர்களுக்கும் மிக இளையவர்களுக்கும் இடையில் வைரஸ் அளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்பதை இந்த தரவுகள் குறிக்கின்றன. இந்த முடிவுகளின் அடிப்படையில், தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் மற்றும் தினப்பராமரிப்பு நிலையங்களை வரம்பற்ற முறையில் திறப்பதற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், வயோதிபர்களைப் போலவே குழந்தைகளும் நோய்தொற்று பரவக் கூடியவர்களாக இருக்கக்கூடும்.”

கூடுதலாக, நோயறிகுறி காணப்படாத குழந்தைகளின் மாதிரிகளையும் இந்த ஆய்வுக் குழு பரிசோதனை செய்தது. அவர்களது மாதிரிகளில் கூட, வைரஸ் அளவு குறைவாக இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. “இந்த குழந்தைகளின் தொகுப்பில், ஒரு சில குழந்தைகளின் வைரஸ் அளவு வானளவிற்கு உச்சபட்சமாக அதிகரித்திருந்தது” என்று நியூ யோர்க் டைம்ஸ் செய்தியிதழுக்கு Drosten தெரிவித்தார்.

பிரான்சில் உள்ள Pasteur நிறுவன ஆராய்ச்சியாளர்களும் ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா வைரஸ் நோய்தொற்று மிகுந்த பகுதியான Oise பிராந்தியத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த பள்ளியில் 326 மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பரிசோதித்ததில் 40.9 சதவிகிதம் பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. மேலும், பாதிப்பளவில் 25.9 சதவிகிதமாக அனைத்து மாணவர்களும் இதில் அடங்கினர்.

குழந்தைகள் மற்றும் சிசுக்கள் மத்தியில், கவாசாகி (Kawasaki) நோய் என்ற அரியவகை நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள சந்தேகத்திற்குரிய தொடர்பு பற்றி கண்டறிவதன் மூலமாக நோயால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவதில்லை என்பதும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஐந்து வயதான மற்றும் ஏழு வயதான இரண்டு குழந்தைகள், மற்றும் இங்கிலாந்தில் 14 வயதான ஒரு குழந்தை உட்பட இந்த நோய் அறிகுறி கொண்ட குறைந்தது மூன்று குழந்தைகள் இறந்துவிட்டனர், இந்நோய் தமனிகளை பெரிதாக்குவது உள்ளிட்ட கடுமையான இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும். நோய் அறிகுறி அரிதாகவே தோன்றினாலும், இதன் அவசரம், குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை என்ற உண்மையை மட்டுமே எடுத்துக் காட்டுகிறது.

பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்கும் நிலையில், இந்த விஞ்ஞான எச்சரிக்கைகளை மீறும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள். மாறாக, தங்களது கொள்கையுடன் முரண்படும் விஞ்ஞான முடிவுகளை புறக்கணிக்கும்போது, அரசாங்கங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அரசியல் திட்ட நிரலின் படி தான் “விஞ்ஞான” ஆதாரங்களை குறிப்பாக தேர்ந்தெடுக்கின்றன, அதாவது குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புக்களைக் காட்டும் முடிவுகளை அல்லது குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு தான் என்று பரிந்துரைக்கும் ஆய்வுகளை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன.

ஆஸ்திரேலியாவில், பிரதமர் ஸ்காட் மோரிசனின் அரசாங்கம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த சக மதிப்பாய்வு ஒருபுறம் இருந்தாலும், இன்னும் பூர்த்தி செய்யப்படாத ஒரு ஆய்வின் முழுமையற்ற முடிவுகளை பெரிதும் விளம்பரப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆய்வு மாநிலத்தில் பள்ளிகள் ஓரளவிற்கு அல்லது முழுமையாக மூடப்பட்டிருந்த காலத்திலும், மூன்றில் ஒரு பகுதியினர் பள்ளியில் இல்லாத காலத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் கனடா உட்பட சர்வதேச அளவிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய நோயின் தன்மையை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், இந்த கொள்கை அதிகரித்தளவில் நோயை பரவச் செய்யும் என்ற வலுவான விஞ்ஞானபூர்வ எச்சரிக்கைகளுக்கு எதிரானது. உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களை நோய்தொற்றுக்கு எதிரான ஒரு பகுத்தறிவு மிக்க மற்றும் விஞ்ஞானபூர்வ போராட்டம் இயக்கவில்லை, மாறாக தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப வலியுறுத்தி வரும் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் உந்துதலில் தான் அவை செயல்படுகின்றன. அதாவது, பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொள்கையால் பாதிக்கப்படவுள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கையை அவமதிக்கும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.

பிரெஞ்சு சுகாதார அமைச்சரான ஒலிவியே வெரோன், கடந்த வாரம் ஒரு நேர்காணலில் பிரான்ஸ் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்: "குழந்தைகள் தொற்றுநோய் காவிகளா அல்லது இல்லையா என்ற கேள்வி உள்ளது". இதற்கு "ஆதரவாகவும் எதிராகவும்" வாதங்கள் இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார். என்றாலும் பள்ளிகள் “மீண்டும் திறக்கப்பட வேண்டும்” என்று வெறுமனே வலியுறுத்தினார். இந்த வாரம் பிரெஞ்சு செனட் சபையும் பாராளுமன்றமும், முதலாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தன. இது கூடுதல் இறப்புக்களுக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிகள் மற்றும் வணிகங்களைத் திறப்பதற்கான அவர்களின் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

பள்ளி மூடுதல்களை முடிவுக்குக் கொண்டுவரும்வேளையில், சட்டரீதியான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை ஆளும் உயரடுக்கு உணர்ந்திருப்பதால், இது அவர்களின் சொந்தக் கொள்கைகள் குற்றமானது என்பதை அவர்கள் முன்கூட்டியே நன்கு அறிந்திருப்பதைக் காட்டுகிறது.

Loading