ஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் (Office of National Statistics - ONS) புதிய தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகளின் படி, பிரிட்டனில் கோவிட்-19 நோய்தொற்றினால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை 60,000 க்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது ஜோன்சன் அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது.

நேற்று, அரசாங்கம் அதன் தினசரி சுருக்க அறிக்கையில் தெரிவித்ததன் படி, மற்றொரு 627 இறப்புக்களும் சேர்ந்து உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்தது. இந்த புள்ளிவிபரங்கள் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் (Department of Health and Social Care) மூலமாக தொகுக்கப்பட்டவை என்பதுடன், இதில் கோவிட்-19 பரிசோதனை முடிவின் படி நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களின் இறப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 3,403 புதிய கொரொனா வைரஸ் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், மொத்த கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 226,463 ஆக உயர்ந்துள்ளது.

டோரிக்களால் மொத்தமாக கணக்கிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் ஐரோப்பாவிலேயே இன்னும் மிக உயர்ந்ததாக உள்ளன என்பதுடன், உலகளவில் அமெரிக்காவையடுத்து இரண்டாவது நிலையில் உள்ளன. ஆனால், மே 1 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 17,953 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக ONS நேற்று செய்தி வெளியிட்டுள்ளது, இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே வாரத்தில் நிகழ்ந்த இறப்புக்களின் சராசரியை காட்டிலும் 8,012 கூடுதலானது. நோய்தொற்று பரவ ஆரம்பித்து ஆறு வார காலத்தில், இரு நாடுகளிலும் 108,345 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக ONS ஆல் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது இதே காலத்திய ஐந்து ஆண்டு சராசரியை காட்டிலும் 46,494 கூடுதலாக உள்ளது. இதில், 35,044 இறப்புக்கள் கொரொனா வைரஸ் இறப்புக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அதாவது அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிபரங்களை காட்டிலும் பல ஆயிரங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.

தனது சொந்த “பழமைவாத மதிப்பீட்டை” உருவாக்க “அதிகப்படியான மரணங்களை” கண்டறிந்து சேர்த்துக் கொண்ட ஃபினான்சியல் டைம்ஸ், நேற்றைய ONS தரவு “இறப்புக்கள் இயல்பான எண்ணிக்கையை கடந்த தொடர்ச்சியான ஏழாவது வாரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டும், மற்றும் ஒருநேரத்தில் நிகழ்ந்த ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சமமான புள்ளிவிபரங்களை உட்படுத்தியும், நோய்தொற்று காலத்தில் நிகழ்ந்த இங்கிலாந்து முழுவதுமான மொத்த இறப்புக்கள் 50,979 என்று கணக்கிட்டுள்ளது” என்று தெரிவிக்கிறது.

“நோய்தொற்று பரவ ஆரம்பித்து மே 11 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், இன்றுவரை நிகழ்ந்துள்ள அதிகப்படியான இறப்புக்கள் மற்றும் மருத்துவமனை இறப்புக்களின் சமீபத்திய தினசரி புள்ளிவிபரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இயல்பை விட 60,000 க்கும் சற்று கூடுதலாக மக்கள் இறந்திருப்பார்கள் என்று FT மாதிரி தற்போது மதிப்பிடுகிறது” என்று இது நிறைவு செய்கிறது.

ONS புள்ளிவிபரங்கள், வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் கொடூரமான எண்ணிக்கைகளில் இறப்புக்கள் நிகழ்வதற்கான ஆதாரங்களை நிரூபிக்கின்றன. மே 1 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், வயோதிபர் பராமரிப்பு இல்லங்களில் இருந்து 6,409 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, முந்தைய ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்த இறப்புக்களின் சாதாரண விகிதமான 2,019 ஐ காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

நோய்தொற்று பரவ ஆரம்பித்தது முதல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆண்டின் இதே காலகட்டத்தில் இயல்பாக நிகழும் இறப்புக்களை காட்டிலும் தற்போது பராமரிப்பு இல்லங்களில் 19,900 க்கும் கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக ONS பதிவு செய்துள்ளது. “மருத்துவமனைகளின் திறனை அப்போது கட்டமைக்க தேவைப்படாத விதமாக, கோவிட்-19 நோய்தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளாமலேயே கவனிப்பிற்குட்படுத்தப்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைகள் வெளியேற்றிய பின்னர் அவர்களால் சமூக பராமரிப்பிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் பலவீனமான மற்றும் வயோதிகர்களிடையே வைரஸ் விதைக்கப்பட்டதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன” என்று FT தெரிவிக்கிறது.

“கொரொனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 61,000 ஆக இருக்கலாம்… அதாவது உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை காட்டிலும் 50 சதவிகிதம் கூடுதலாக இருக்கலாம்” என்று Times பத்திரிகை முடிக்கிறது. இதன் மாதிரி ஆய்வும், “நேரடியான கொரொனா வைரஸ் இறப்புக்கள் மற்றும் பிற நோய் பாதிப்பு காரணங்களுக்காக சிகிச்சை பெறாதவர்கள் உட்பட தொடர்புடைய காரணங்களால் இறந்தவர்கள் ஆகிய இரண்டு வகையிலான இறப்புக்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக” தெரிவிக்கப்பட்ட அதிகப்படியான இறப்புக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில், அதிகப்படியான இறப்பு குறித்த புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட மாதிரி ஆய்வு மிகவும் துல்லியமானது என்பதுடன், “நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நோய்தொற்றால் அசாதாரணமாக அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து கொண்டிருப்பதை எங்களுக்குக் காட்டுகிறது” என்பதாக இது நிறைவு செய்கிறது.

நோய்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து மே 1 வரையிலான காலகட்டத்தில், “இங்கிலாந்து முழுவதும் 50,976 அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன: அதாவது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 46,556 இறப்புக்களும், ஸ்காட்லாந்தில் 3,716 இறப்புக்களும் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 704 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன” என்று Times பத்திரிகை கணக்கிடுகிறது. ஏனென்றால் இறப்பை பதிவு செய்ய கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும் என்பதால், “இந்த இறப்புக்களில் பெரும்பாலானவை ஏப்ரல் 27 க்குள் நிகழ்ந்திருக்கும்.”

மருத்துவமனைகளுக்கு வெளியே நிகழ்ந்த கோவிட்-19 இறப்புக்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு, “மருத்துவமனைகளில் நிகழ்ந்த அனைத்து கோவிட்-19 இறப்புக்களில் 40 மற்றும் 60 சதவிகிதத்திற்கு இடையேயான,” மதிப்பீட்டின் அடிப்படையில் Times பத்திரிகையின் பகுப்பாய்வு “அதிகப்படியான இறப்புக்களின் எண்ணிக்கை சமீபத்திய புள்ளிவிபரங்களுடன் மிகவும் பொருந்தியதால், மருத்துவமனையின் தரவுகளையே மதிப்பீடு செய்தது.”

“கடந்த நான்கு நாட்களாக [இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை] ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்த இறப்பு எண்ணிக்கையில் சுமார் 60 சதவிகிதமாக இருப்பதாக கருதி நாம் பழமைவாத மதிப்பீடு செய்துள்ளோம். இந்த செயல்முறை, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளிலும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது, இது இங்கிலாந்தில் மொத்தம் 61,000 அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக நமக்கு தெரிவிக்கிறது” என்று செய்தியிதழ்கள் தெரிவிக்கின்றன.

“எங்கள் மாதிரியும் வழமையான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது: உண்மையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,000 ஆக இருக்கையில், இன்றைய ONS வெளியீடு மற்றொரு 7,000 அதிகப்படியான இறப்புக்களை காண்பிக்கும் என்று நேற்று [திங்கள்கிழமை] நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்” என்று Times செய்தியிதழ் குறிப்பிட்டது.

Daily Mail செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் குறைந்தது 45,550 பேர் கொரொனா வைரஸ் நோய்தொற்றின் நேரடி பாதிப்பினால் இறந்துவிட்டனர், இது, நோய்தொற்றினால் இறந்தவர்கள் குறித்து மதிப்பிடப்பட்ட இறப்பு விகிதத்தின் அடிப்படையில் 1.73 சதவிகிதம் வரை இருக்கக்கூடும். கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ஹண்டர், கோவிட்-19 நோய்தொற்றால் இங்கிலாந்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்களானால், அதற்கு 560,000 பேர் வரை பலியாகக்கூடும் என்று நம்புகிறார்.

இங்கிலாந்தின் விடுப்பு அளிப்பு திட்டம் அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று சான்சிலர் ரிஷி சுனாக் (Rishi Sunak) அறிவித்த நிலையில், ONS புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன. பெருநிறுவனங்களுக்கு தொடர்ந்து கிடைக்கக்கூடிய வரமாக, குறைந்தது 7 மில்லியன் தொழிலாளர்களின் (ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கினர்) ஊதியத்தில் 80 சதவிகிதத்தை, அதாவது மாதத்திற்கு 2,500 பவுண்டுகள் வரை அரசாங்கம் தொடர்ந்து செலுத்தும்.

இந்த திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நீடித்து, நவம்பர் மாதம் வரையிலுமாக “பிரிட்டிஷ் மக்களுக்கும் வணிகங்களுக்கும் எட்டு மாத காலத்திற்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம்” என்று சுனாக் அறிவித்தார். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு குறைந்தது 14 பில்லியன் பவுண்ட் செலவாகும் வேலை தக்கவைப்பு திட்டம் (Job Retention Scheme-JRS) என்பது பெருவணிகத்திற்கான மற்றொரு நிதியுதவியாகவுள்ளது. “1 மில்லியனுக்கும் மேற்பட்ட வணிகங்களுக்கு பில்லியன் கணக்கான பவுண்டுகளில் ரொக்க மானியங்கள், வரி குறைப்புக்கள் மற்றும் கடன்களையும், மற்றும் பல பில்லியன் பவுண்டுகள் தள்ளிப்போடப்பட்ட வரிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்…” என்று சுனாக் குறிப்பிட்டார். ஆனால், 250 FTSE நிறுவனங்களில் கால் பங்கிற்கும் அதிகமான நிறுவனங்கள் உட்பட, பல பெரிய நிறுவனங்கள் இந்த அரசாங்கத்தின் தாராளவாத நன்கொடை எனும் சேற்றில் புரண்டு கொண்டிருப்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.

இந்த திட்டம் ஜூலை இறுதி வரை மட்டுமே இருக்கும் என்றாலும், “மீண்டும் வேலைக்குத் திரும்பும் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க” ஆகஸ்ட் முதல் அக்டோபர் இறுதி வரையிலான காலத்திற்கு என இந்த திட்டம் திருத்தியமைக்கப்படும் என்று சுனாக் தெளிவுபடுத்தினார். அப்போதிருந்து, “மக்களுக்கான ஊதிய செலவை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு முதலாளிகளைக் கேட்போம்.”

விடுப்பு கால ஊதியத்திற்கான அரசாங்கத்தின் பங்களிப்பை 60 சதவிகிதமாக சுனாக் குறைப்பார், அதே நேரத்தில் முதலாளிகள் தங்களது சொந்தப் பைகளிலிருந்து 20 சதவிகிதத்தை செலவிடுமாறு கேட்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.

பாராளுமன்றத்தில் சுனாக்கிற்கு “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” தெரிவித்ததன் பின்னர், சுனாக்கின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி நிழல் சான்சிலர் அலிசன் தெவ்லிஸ் (Alison Thewliss), “ஜூலை மாதத்திற்குப் பின்னர், JRS இன் கீழ் கிடைக்கும் ஆதரவாக இது 60 சதவிகிதமாக குறைக்கப்படும் என்ற நிலையில், வணிகங்கள் 20 சதவிகித செலவை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது. பிழைப்பதற்கும் கடன்களை பெறுவதற்கும் போராடி வரும் வணிகங்களுக்கு இது சிக்கலாக இருக்கும்” என்று ட்வீட் செய்தார்.

இந்த 20 சதவிகித பற்றாக்குறையை சமாளிக்க வணிகங்கள் மறுக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

எதிர்வரும் நாட்களில் “பகுதிநேர வேலைகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப விபரங்களை” அரசாங்கம் உருவாக்கும் என்று சுனாக் தெரிவித்தார். எவ்வாறு “பெரும்பகுதி தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப” வலியுறுத்துவது என்பது குறித்து தொழிற் கட்சியும் மற்றும் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்துடன் மேற்கொண்ட தங்களது பேச்சுவார்த்தைகளின் போது நீண்டகாலமாக இதை வலியுறுத்தி வந்துள்ளன.

தொழிற் கட்சியின் நிழல் சான்சிலர் Anneliese Dodds தனது பதிலில், “குறிப்பிடப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மையை நான் வரவேற்கிறேன். அதற்கு நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளோம்; இது வேறு பல நாடுகளுக்கும் பொருந்தும்” என்று கூறியதுடன், இந்த திட்டம் குறித்து “என்னுடனும், தொழிற்சங்கங்கள், வணிகங்கள், மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடனும் சான்சிலர் இணைந்து பணியாற்றுவாரா?” என்று மன்றாடினார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சார்பாக, டோரிக்களை ஆதரிக்கும் ஐக்கியப்பட்ட தொழிற்சங்கத்தின் செய்தியை Len McCluskey மறு ட்வீட் செய்ததுடன், பெருவணிகத்துடனான கூட்டணியில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்க ஜோன்சனின் தாட்சர் வழிபாட்டு அரசாங்கத்தை நம்பலாம் என்று கூறினார். “விபரங்கள் வெளியிடப்படும் போது அவற்றை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், ஆனால் இன்றைய அறிவிப்பு முதலாளிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட ஒரு செய்தியாகும், அதாவது முதலாளிகள் அவர்களது தொழிலாளர்களுக்கு பின்னால் நின்றால், அரசாங்கம் அவர்களுக்கு பின்னால் நிற்கும். பணிநீக்கங்களை செய்ய அவசரப்படக் கூடாது” என்று இது தெரிவித்தது.

“முக்கியமாக, இந்த திட்டத்தில் அதிக நெகிழ்வுத்தன்மை தேவை என்ற TUC இன் அழைப்புகளுக்கு, நிறுவனங்கள் ஆகஸ்ட் முதல் தங்கள் தொழில்களை மறுதொடக்கம் செய்ய பகுதிநேர ஊழியர்களை ஈடுபடுத்தலாம் என்று அறிவித்து சான்சிலர் பதிலிறுத்தார்” என்று சுனாக்கின் நடவடிக்கைகள் பற்றி தொழிற்சங்க காங்கிரஸ் (Trades Union Congress) தெரிவித்தது.

Loading