இலங்கை ஜனாதிபதி தொற்றுநோயையும் மீறி “பொருளாதாரத்தை மீண்டும் திறக்கிறார்”

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, திங்களன்று, மோசமான கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆபத்து இருந்த போதிலும், சுகாதார அதிகாரிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தியுள்ள கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்கள் உட்பட பிரதேசங்களில் அரசாங்கம் "பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதாக" அறிவித்தார்.

அரச நிறுவனங்கள் மற்றும் பெரும் வணிகங்கள் திறக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெரிய ஏற்றுமதி வணிகங்களை மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்திருந்தது.

தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரயில்களிலும், நிலையங்களிலும், பேரூந்து நிலையங்களிலும் கனமாக ஆயுதம் ஏந்திய இராணுவ சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹானா, மேல் மாகாணத்தில் 10,000 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். அரச உளவுத்துறை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் சிவில் உடையிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஒரு தொழிலாளி ரயிலில் ஏறுவதற்கு முன்னர் படையினர் பரிசோதிக்கின்றனர்

ஏப்ரல் 20 அன்று, ஜனாதிபதி ராஜபக்ஷ நிருபர்களிடம் பேசும் போது, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொழும்பில் "போர்க்கால" நடவடிக்கைகளைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார். ஏப்ரல் 27, அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான படையினரை கொழும்புக்கு அழைத்து, அவர்கள் 16 பாடசாலைகளில் அமர்த்தியுள்ளது.

மக்கள் “சமூக இடைவெளியையும்” பிற சுகாதார வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துவது இந்த ஒழுக்கப்படுத்தலுக்கான சாக்குப்போக்காக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், கொவிட்-19 தொடர்ந்து பரவி வரும் நிலையில் வேலைக்கு திரும்புவதை எதிர்க்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அடக்குவதே உண்மையான காரணம் ஆகும்.

பரவலான எதிர்ப்பின் அறிகுறியாக, பல ஊழியர்கள் திங்களன்று கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களிலும் வேலைக்கு வரவில்லை. 47 ரயில்களை ஏற்பாடு செய்திருந்தாலும் 10 மட்டுமே இயக்கப்படுவதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டது. சுமார் 2,800 பேர் முன்கூட்டியே ஆசணங்களை முன்பதிவு செய்திருந்தாலும், 997 பேர் மட்டுமே பயணம் செய்திருந்தனர். கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் 5,200 பேருந்துகள் தயாராக இருந்தபோதும், 3,200 மட்டுமே இயக்கப்பட்டன. சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலைக்கு திரும்பி இருக்காத அதே வேளை, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை நியாயப்படுத்தும் நோக்கில், திங்களன்று விடுத்த ஒரு அறிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, "கொவிட் -19 இப்போது திருப்திகரமான அளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று பொய்யாகக் கூறினார்.

அதே அறிக்கையில், பிரதமர் "ஒருபுறம் நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும், மறுபுறம் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிக்க வேண்டும்" என்று கூறினார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறிய மற்றும் தொழிலாளர்களின் உயிரை ஆபத்தில் வைத்து வணிகங்களை மீண்டும் திறந்து வரும் ஏகாதிபத்திய நாடுகளின் வழியை இலங்கை பின்பற்றுகிறது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். "பல்லாயிரக்கணக்கான கொரோனா வைரஸ் மரணங்களை கண்ட இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இப்போது சாதாரண வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுப்பதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளன," என்று அவர் கூறினார்.

சமீபத்திய வாரங்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி, மே 1 அன்று 690 இல் தொடங்கி நேற்று 889 வரை தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். சோதனை நடவடிக்கைகள் வேண்டுமென்றே குறைந்த மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே உண்மையான புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாக இருக்க கூடும்.

மார்ச் 18 முதல் மே 10 வரை 52 நாட்களில் அவர்கள் வெறும் 36,000 சோதனைகளை மட்டுமே மேற்கொண்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், முன்னர் பெப்ரவரி 18 முதல் மே 5 வரை 32,000 சோதனைகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் நம்பமுடியாதவை.

பொருளாதாரங்களை முன்கூட்டியே மீண்டும் திறப்பது மனித உயிர்களை பெரிதும் ஆபத்தில் ஆழ்த்தும் என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) எச்சரிக்கையை ராஜபக்ஷ ஆட்சி புறக்கணித்து வருகிறது. திங்களன்று, உலக சுகாதார அமைப்பின் ஆணையாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ், அரசாங்கங்கள் வணிகங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பு, “தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளதா, தேசிய சுகாதார உள்கட்டமைப்பால் புதிய பரவலை சமாளிக்க முடியுமா, மற்றும் தற்போதைய பொது சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஒரு சமூக மட்டத்திலான பரவலைக் கண்காணிக்க, கண்டுபிடிக்க, தனிமைப்படுத்த மற்றும் சிகிச்சையளிக்க போதுமானவு வலுவானதாக உள்ளதா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

பி.சி.ஆர். (பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) சோதனைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2,000 முதல் 5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வைரஸைக் கட்டுப்படுத்தாமல் சாதாரண வேலையை மீண்டும் தொடங்குவது ஒரு பெரிய வெடிப்பின் அபாயத்தை உருவாக்குகிறது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தொழிலாளர்களின் உடல்நலம், வாழ்க்கைத் தரம் மற்றும் உயிர் ஆகியவற்றின் இழப்பில் பொருளாதாரத்தை புதுப்பிக்க ராஜபக்ஷ ஆட்சி உறுதியாக உள்ளது.

ஜனாதிபதியின் ஊடக அறிக்கை, அரச மற்றும் தனியார் துறை தலைவர்களுக்கு எத்தனை ஊழியர்களைத் திரும்ப அழைப்பது என்பதை தீர்மானிக்க அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டது. பெரும் வணிகங்கள் ஏற்கனவே வேலைகள் மற்றும் ஊதியங்களைக் குறைத்து, நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்திற்கு அப்பால் வேலை நேரத்தை அதிகரித்துள்ளதுடன் ஓய்வூதிய நிதிகளுக்கான பங்களிப்புகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவிட்டன.

உடனடியாக வேலைக்கு திரும்ப அழைக்கப்படாத தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தில் பாதியை அல்லது 14,500 ரூபாயை (75 அமெரிக்க டாலர்) மட்டுமே செலுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டதாக தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தொழிலாளர்களின் கோபமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. திங்களன்று தெற்கு நகரமான வீரகெட்டியவில் உள்ள சுமித்ரா கார்மென்ட்ஸில் (ஆடைத் தொழிற்சாலை) சுமார் 1,000 தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை பாதியாகக் குறைப்பதற்கான நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பில் மருதானை ரயில் மையத்தின் லொகொமோட்டிவ் பிரிவில், திங்களன்று 15 தொழிலாளர்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டனர். 180 தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியை ஒரு வாரத்திற்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ஒரு தொழிலாளி உலகசோசலிசவலைத்தளத்திடம் கூறினார். தொழிலாளர்கள் தங்களே உணவைத் தயாரித்துக்கொள் வேண்டும். தொழிலாளர்கள் தங்களது மிகக் குறைந்த மாத ஊதியத்துக்கு மேலாக நம்பியிருக்கும் மேலதிக நேர வேலைகள் வெட்டப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புயும் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை ஆதரிக்கின்றன.

கடந்த வாரம், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, "நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம், ஏனெனில் இது விரோத அரசியலை விளையாடுவதற்கான நேரம் அல்ல," என்றார்.

கடந்த வாரம் திங்களன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும் ராஜபக்ஷவைச் சந்தித்து இதேபோன்ற வாக்குறுதியைக் கொடுத்தனர்.

முழு கூட்டுத்தாபன ஊடகங்களும் வேலைக்குத் திரும்புவதை ஆதரிக்கின்றன. உதாரணமாக, திவயின பத்திரிகை, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு எந்த சிகிச்சையும் கண்டுபிடிக்க முடியாதுள்ள நிலையில், மக்கள் “கண்ணுக்கு தெரியாத எதிரியுடன்” வாழ கற்றுக்கொள்ள வேண்டும், என நேற்று எழுதியுள்ளது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கம் (சி.எம்.யு.) உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள், தங்களை சந்திக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளன. "தேசத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் பொருளாதாரத்தை ஆதரிக்க தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்," என்று அவர்கள் அறிவித்தனர்.

கடந்த வாரம் இந்த தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் மற்றும் முதலாளிகளுடனான சந்திப்பில் ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள ஏனையவற்றுடன் சேர்ந்து பங்குபற்றின. அங்கு வேலை நீக்கங்களை தாமதப்படுத்துவதற்கு பிரதியுபகாரமாக கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பளத்தை வெட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன. இருப்பினும், கம்பனிகள் ஏற்கனவே தொழில்களை குறைக்கத் தொடங்கியுள்ளன.

அரசாங்கத்தினதும் பெரும் வணிகங்களதும் முகவர்களாக செயல்படும் எந்தவொரு தொழிற்சங்கமும், வேலைக்கு முன்கூட்டியே திரும்புவதால் ஏற்படும் கடுமையான சுகாதார அபாயங்களை பற்றி பேசவில்லை.

ஆனால், பெரும் வர்த்தகர்களின் இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள தொழிலாளர்கள் ஏன் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்பந்திக்கப்பட வேண்டும்?

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை தொழிலாளர்கள் வேலை செய்ய மறுக்குமாறு அழைப்பு விடுக்கின்றது. ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அனைத்து தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு வருமானம் வழங்கப்பட வேண்டும். வருவாய் சரிந்து போயுள்ள சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

பாரிய வெளிநாட்டுக் கடன்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்தப்படுவதற்குப் பதிலாக நிராகரிக்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தை யதார்த்தமாக்க, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலாப முறையை ஒழித்து ராஜபக்ஷ அரசாங்கத்தை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தால் பதிலீடு செய்ய வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க. மட்டுமே இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராடுகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வர்க்க உணர்வுள்ள புத்திஜீவிகள் சோ.ச.க.வில் சேர்ந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறு நாங்கள் அழைக்கிறோம்.

Loading