முன்னோக்கு

ட்ரம்ப் நிர்வாகத்தின் விஞ்ஞான எதிர்ப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனது சொந்த கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபௌஸியை (Dr. Anthony Fauci) பகிரங்கமாக விமர்சிப்பது விஞ்ஞானத்தை மறுக்கும் மற்றும் அமெரிக்காவின் மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான சமூகக் கூறுகளை ஈர்க்கும் பரந்த கொள்கையின் ஒரு பகுதியாகும். உழைக்கும் மக்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இழப்பை பொருட்படுத்தாமல், அமெரிக்க பொருளாதாரத்தை "மீண்டும் திறக்க" பெருவணிகத்தின் கோரிக்கைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு பாசிச இயக்கத்தைத் தூண்டிவிட வெள்ளை மாளிகை முயல்கிறது.

President Donald Trump watches as Dr. Anthony Fauci, director of the National Institute of Allergy and Infectious Diseases, speaks about the coronavirus in the James Brady Press Briefing Room of the White House in Washington. (AP Photo/Alex Brandon,File)

செவ்வாயன்று செனட் குழு விசாரணையில் ஃபௌஸி இன் எச்சரிக்கையுடன் கூறப்பட்ட கருத்துக்கள் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பிற பொது சுகாதார நிபுணர்களின் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின. கடந்த மூன்று வாரங்களாக வணிக நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை பெருமளவில் கைவிட்டுள்ள மாநில அரசாங்கங்கள், COVID-19 இன் பேரழிவு தரும் எழுச்சிக்கும், “தேவையற்ற துன்பம் மற்றும் இறப்புக்கும்” வழிவகுக்கின்றன என்று அவர் எச்சரித்தார்.

இந்த விசாரணையில், தொற்றுநோய் "கட்டுப்பாட்டில் இல்லை" என்று ஃபௌஸி தெளிவுபடுத்தினார். COVID-19 இனால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 80,000 என்ற உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. Remdesivir வைரஸ் தடுப்பு சிகிச்சையின் செயல்திறன் "மிதமானதாக” இருப்பதுடன், COVID-19 இலிருந்து மீள்வது நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதமும் அளிக்காது.

இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று ஒரு காங்கிரஸ் குழு முன் பொது சுகாதார அதிகாரி ரிக் பிரைட் (Rick Bright) பேரழிவு தரும் சாட்சியத்தை வழங்கினார். அவர் வரவிருக்கும் COVID-19 தொற்றுநோயை பற்றி நிர்வாகத்தை எச்சரித்ததையும், பரிசோதனைகள், பாதுகாப்பு உபகரணங்கள் தேவையானளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் மற்றும் சிகிச்சைகள் பற்றியும் அவரது பதிவிடப்பட்டதும் தோல்வியடைந்துமான முயற்சிகளை நன்கு ஆவணப்படுத்தியிருந்தார். நிர்வாகத்தின் முடிவுகள் எண்ணற்ற மரணங்களுக்கு வழிவகுக்கும் என்பதை பிரைட் தெளிவுபடுத்தினார்.

அவரது எச்சரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, அமெரிக்க சுகாதார அதிகாரிகள், தொற்றுநோயைக் குறைத்துமதிப்பிடும் ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு இணங்க செயல்பட்டு, அவரை உயிரியல் மருத்துவ மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை கைவிட்டுவிட்ட இரண்டு ஆளுநர்களைச் சந்தித்திக்கும் போது அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அவர்களில் ஒருவர் ஜனநாயகக் கட்சிக்காரர், மற்றவர் குடியரசுக் கட்சிக்கார ஆளுனராகும். மாநிலங்களின் மறு திறப்புகளைப் பற்றி பௌஸி இன் விமர்சனம் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் அல்ல” என்று ட்ரம்ப் அறிவித்தார்.

பள்ளிகளும் கல்லூரிகளும் பொதுவாக மீண்டும் தொடங்கும்போது COVID-19 க்கான தடுப்பூசி அல்லது பிற மருத்துவ சிகிச்சைகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் தயாராக இருக்காது என்ற பௌசி இன் அறிக்கையை சுட்டிக்காட்டி, “கவனியுங்கள், அவர் சமன்பாட்டின் அனைத்து பக்கங்களிலும் விளையாட விரும்புகிறார்” என ட்ரம்ப் கூறினார். "பள்ளிகள் மூடப்பட்டிருந்தால் எங்கள் நாடு திரும்பி வராது என தான் கருதுவதாக" ட்ரம்ப் கூறினார்.

COVID-19 இல் இருந்து தப்பிய குழந்தைகளை பாதிக்கும் புதிய மற்றும் ஆபத்தான நோய்க்குறி பற்றிய அறிக்கைகளை ட்ரம்ப் நிராகரித்தார், “இப்போது உங்களுக்கு ஒரு விபத்து நடக்கும்போது, ஒரு மில்லியனில் ஒன்று, 500,000 பேரில் ஒருவர் என ஏதாவது நடக்கலாம்? ஒருவேளை… ஆனால் நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது, சில மோசமான விஷயங்களும் நடக்கலாம்.” COVID-19 இன் ஆபத்து, வயதானவர்களுக்கும், முன்பே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் மட்டுமே என்று நிரூபிக்கப்படாத கூற்றுக்களை அவர் மீண்டும் கூறினார்.

ட்ரம்ப் வியாழக்கிழமை பிரைட்டை கண்டித்து, அவரை "அதிருப்தியடைந்தவர்" என்று அழைத்தார், அதே நேரத்தில் பிரைட் அழைப்புவிட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அசார் பொய்யாகக் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி வியாழக்கிழமை காலை தனது தாக்குதலைத் தொடர்ந்தார். Fox Business Network க்கு பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டங்கள் குறித்த பௌசி இன் பின்னடிப்புகளுடன் தான் "முற்றிலும்" உடன்படவில்லை என்று கூறினார். அவர் தனது நேர்காணலாளரான வோல் ஸ்ட்ரீட்டின் உற்சாகமான ஆதரவாளர் மரியா பார்ட்டிரோமோவிடம், “நாங்கள் எங்கள் நாட்டை திறக்க வேண்டும்… கூடிய விரைவில். எங்களால் இதுபோன்று தொடர முடியாது” என்றார்.

டாக்டர் பௌசி பல மாதங்களாக தீவிர வலதுசாரிகளின் தாக்குதலின் இலக்காகியுள்ளார். #firefauci hashtag என்பது அவ்வூடகங்களில் பிரபல்யமாக பரப்பபடுகின்றது. கொரோனா வைரஸிற்கான மருத்துவர்கள் பரிந்துரைக்காத மருந்திற்கான ட்ரம்ப்பின் ஆலோசனைக்கு ஆதரவுக்கு அளிக்க அவர் மறுத்துவிட்டதாலும், தொற்றுநோய்க்கு விரைவான அமெரிக்க அரசாங்கத்தின் பதில் உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று கூறியதாலும் வலதுசாரி சமூக ஊடகங்கள், Breitbart.com, Fox News மற்றும் அவ்வாறான ஏனைய செய்தி ஊடகங்களின் வித்தகர்கள் அவரை ட்ரம்பின் அரசியல் எதிர்ப்பாளர் என்று கண்டித்துள்ளனர்.

மருத்துவப் பொருட்களை விநியோகிக்கும் பென்சில்வேனியா நிறுவனத்தில் வியாழக்கிழமை தோன்றிய ஒரு நிகழ்ச்சியில், தொற்றுநோய் பற்றிய தகவல்களை வேண்டுமென்றே அடக்கும் கொள்கையை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். "நீங்கள் பரிசோதிக்கும்போது, உங்களுக்கு ஒரு பாதிக்கப்பட்டவர் உள்ளார்" என்று அவர் கூறினார். “நீங்கள் பரிசோதிக்கும்போது, மக்களிடம் ஏதோ பாதிப்பு இருப்பதாக நீங்கள் காணலாம். நாங்கள் எந்த பரிசோதனையும் செய்யாவிட்டால், எங்களுக்கு மிகக் குறைவான பாதிக்கப்பட்டவர்களே இருப்பர்”. பின்னர் அவர் மேலும் கூறினார், அநேகமாக கூறப்பட்டபடி “அந்த பரிசோதனை கட்டாயமாக மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஒருவேளை அது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.” ட்ரம்ப் பென்சில்வேனியாவின் Lehigh Valley இற்கு விஜயம் செய்த நாளில், அவர் மீண்டும் முககவசம் அணிய மறுத்துவிட்டார். அதற்கு அருகிலுள்ள பிலடெல்பியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது.

விஞ்ஞானம் மற்றும் மருத்துவ அறிவைத் தாக்கும்போது, கொரோனா வைரஸ் அடைப்புகளுக்கு எதிராக பென்சில்வேனியா மற்றும் மிச்சிகனில் நடந்த போராட்டங்களுக்கு ட்ரம்ப் ஆதரவளித்தார். மேலும் விஸ்கான்சினில் மாநிலத்தின் பூட்டுதல் உத்தரவை புதன்கிழமை இரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பை புகழ்ந்தார்.

கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் உள்ளடங்கலாக ஆயுதக்குழுக்கள் மற்றும் anti-vaxxers உட்பட மிகவும் பின்தங்கிய மற்றும் குழப்பமான வலதுசாரி கூறுகளுக்கு ட்ரம்ப் அழைப்புவிடுகின்றார். இந்த குழுக்களுக்கு குறைவான மக்கள் ஆதரவே உள்ளது. உதாரணமாக, மிச்சிகனில் உள்ள லான்சிங்கில் வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் 200 பேரை மட்டுமே வெளியே கொண்டு வந்தது. ஆனால் அவர்களுக்கு பெருநிறுவன ஊடகங்கள் பெரும் விளம்பரம் அளித்து, பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறி இப்போதைய தொற்றுநோய்க்கான அணுகுமுறைக்கு பாரிய விரோதம் இருப்பதாக முன்வைக்கின்றன.

எடுத்துக்காட்டாக, விஸ்கான்சின் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி ஊடகங்களின் தகவல்கள், மதுபானசாலைகள், உணவகங்களை மீண்டும் திறப்பதிலும் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை பற்றியுமே கவனம் செலுத்தியது. அதே நேரத்தில் மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் அடைத்தலை ஆதரிக்கின்றனர், அதை மனசாட்சியுடன் கவனித்து வருகின்றனர். விஸ்கான்சினில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 11,000 பாதிப்புற்றவர்களுடனும் மற்றும் 421 இறப்புகளுடனும் உள்ளது.

இந்த செயல்களின் விளைவுகள் கொடியதாக இருக்கும். அமெரிக்காவில் COVID-19 இன் ஆரம்ப வெடிப்புகள் நகர்ப்புறங்களில் குவிந்திருந்தாலும், நோயிலிருந்து அதிக இறப்பு விகிதங்களைக் கொண்ட பத்து மாவட்டங்களில் நான்கு இப்போது கிராமப்புற தெற்கில் உள்ளன. இதில் ஜோர்ஜியாவில் மூன்று மாவட்டங்கள் மற்றும் லூசியானாவின் செயின்ட் ஜான், பாப்டிஸ்ட் பாரிஷ் ஆகியவையும் அடங்கும்.

விஞ்ஞான மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மீதான பெருகிய முறையில் மூர்க்கமான தாக்குதலில், ட்ரம்ப் நிர்வாகம் நிதிய தன்னலக்குழுவிற்காக பேசுகிறது. முன்கூட்டியே பணிக்குத் திரும்புவதற்கான மிகவும் குரல் கொடுக்கும் மற்றும் நிலையான ஆதரவாளராக ட்ரம்ப் இருந்தபோதிலும், இந்தக் கொள்கையை ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆளுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

லெனின் ஒருமுறை கணிதத்தின் தத்துவங்கள் வர்க்க நலன்களுடன் மோதலுக்குள்ளாகுமானால், அவை கடுமையான எதிர்ப்பை சந்திக்கும் என குறிப்பிட்டார், இங்கே இது கணிதத்தின் அஸ்திவாரங்கள் பற்றிய கேள்வி அல்ல, மாறாக கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் எண்ணற்ற ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான மிக அடிப்படையான விஞ்ஞான, பொது சுகாதார நடவடிக்கைகள் பற்றியதாகும்.

பில்லியனர்களும் மற்றும் அவர்களின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் அரசியல் பிரதிநிதிகளும் காங்கிரஸிலும் மற்றும் பெடரல் ரிசர்வ் இலிருந்தும் பாரிய நிதிய பிணை எடுப்பைப் பெற்றிருந்தாலும், தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து உபரி மதிப்பை பிரித்தெடுப்பதை மீண்டும் தொடங்குவதற்காக, இப்போது மீண்டும் வேலைக்குத் தள்ள முற்படும் தொழிலாளர்களின் தலைவிதியை பற்றி அவர்கள் எவ்விதத்திலும் கவலைப்படவில்லை.

இந்த பிரச்சாரத்தில் வேலையின்மை இழப்பீடு வெட்டு மற்றும் பிற சலுகைகளை துண்டிக்கும் அச்சுறுத்தலை மட்டும் உள்ளடக்கி இருக்காது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்ப நிர்ப்பந்திப்பதற்கு அவை போதுமானதாக இருக்கலாம். ஆனால் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை மேல்நோக்கி ஏறத் தொடங்கையில் அவர்களை பணியிடங்களில் தடுத்து வைத்திருப்பதற்கு போதாது.

மிச்சிகனில் உள்ள லான்சிங்கில் உள்ள அரச தலைநகரிலும் மற்றும் ஏனைய அடைத்தலுக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தானியங்கி ஆயுதங்களை தூக்கிக்காட்டுவது, வேலைக்கு திரும்புவதை எதிர்க்கும் மற்றும் பாதுகாப்பற்ற, ஆபத்தான நிலையில் கூட வேலை செய்வதை எதிர்க்கும் தொழிலாளர்களுக்கு என்ன தயாரிக்கப்படுகிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்.

பெருவணிகங்கள் மற்றும் இரு கட்சிகளிலும் உள்ள அதன் அரசியல் பிரதிநிதிகளால் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது. நிறுவனங்களின் பிணையெடுப்புக்கு ஒருமனதாக வாக்களித்த காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் வரை, ஜனாதிபதி ட்ரம்ப் முதல் அவரது ஜனநாயக கட்சி “எதிர்ப்பாளர்” ஜோ பைடன் மற்றும் இப்போது தளர்த்தும் அல்லது அடைப்பை இரத்துசெய்யும் இரு கட்சிகளின் ஆளுநர்கள் வரை இந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட அனைவரும் தமது கைகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அல்லது அதற்கும் கூடுதலானவர்களின் இரத்தக்கறையை கொண்டிருப்பர்.

Loading