மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று கவனமாக வடிவமைக்கப்பட்ட காணொளி ஊடான செய்தியாளர் மாநாட்டில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், “கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீட்சிக்காக” 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு கூட்டு திட்டத்தைப் பற்றி அறிவித்தனர்.

இந்த தொகை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் நீண்டகால பிணை பத்திரங்களின் வடிவில் கடனாகப் பெறப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்தில் அங்கத்துவ நாடுகள் கொண்டுள்ள பங்கிற்கு ஏற்ப 20 ஆண்டுகளில் அத்தொகை அவற்றால் திருப்பிச் செலுத்தப்படும். ஏப்ரலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட 540 பில்லியன் யூரோ தொகுப்புத் தொகைக்கு மாறாக, கடன்களின் வடிவத்தில் இல்லாது, சமீபத்திய நிதி திருப்பிச் செலுத்த தேவையில்லாத மானியங்களாக வழங்கப்படும்.

இந்த திட்டம் ஐரோப்பிய ஒற்றுமையை காட்டும் நடவடிக்கை என மேர்க்கெலும் மக்ரோனும் பாராட்டினர். பிரான்சும் ஜேர்மனியும் “அசாதாரணமான மற்றும் தனித்துவமான முயற்சியுடன்” “ஐரோப்பிய யோசனைக்கு” ஒத்திசைவாக நிற்கின்றன என்று மேர்க்கெல் தெரிவித்தார். பிரெஞ்சு நிதியமைச்சரான புரூனோ லு மேர் (Bruno Le Maire), இது பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு “வரலாற்று நடவடிக்கை” என்று விவரித்தார்.

இமானுவல் மக்ரோன் மற்றும் அங்கேலா மேர்க்கெல் (AP Photo/Francois Mori)

பைனான்சியல் டைம்ஸ் மற்றும் லு மொண்ட் நாளிதழ்கள் இந்த முயற்சியை பாராட்டின. பிரிட்டிஷ் நிதி நாளேடு, இது “ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான ஒற்றுமைக்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என்று விவரித்தது. பிரெஞ்சு நாளேடு இதை “ஐரோப்பாவிற்கான ஒரு சிறிய புரட்சி” என்று பாராட்டியது.

இத்தாலிய பிரதமர் யூசெப்ப கொன்ர (Giuseppe Conte) இந்த திட்டத்தை ஒரு “நல்ல ஆரம்பம்” என்று கூறி வரவேற்று, இன்னும் நிதி ரீதியாக இது “விரிவாக்கப்படலாம்” என்றார். இந்த முன்மொழிவு குறித்த ஆலோசனைகளில் தெளிவாக ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயனும் இதை ஆதரித்தார்.

“சிக்கன நாடுகள் நான்கு” என்றழைக்கப்படும் ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் மட்டுமே இதை எதிர்க்கின்றன. இது தொடர்பாக, ஆஸ்திரிய சான்சிலர் செபஸ்தியான் குரூஸ் (Sebastian Kurz), நெருக்கடியால் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் தான் ஒற்றுமையைக் காட்ட விரும்புகிறேன் என்று கூறினார். “என்றாலும், கடன்கள் தான் சரியான அணுகுமுறையாக இருக்குமே தவிர, மானியங்கள் அல்ல,” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

ஜேர்மனியில், ஆளும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் (SPD), அத்துடன் எதிர்க்கட்சிகளான பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியும் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேலும், இடது கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவரான டீற்மார் பார்ட்ஷ்ச் (Dietmar Bartsch) இந்த திட்டம் “கொள்கையளவில் சரியானதே” என்று விவரித்தார், என்றாலும் ஒருமித்த உடன்பாட்டை எட்டுவது சாத்தியமில்லை என்பது நிரூபிக்கப்படுமானால், அதை உணர்ந்து “முன்னேறி செல்லும் நாடுகளால், அவற்றிற்காக மட்டுமே” இது செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உண்மை என்னவென்றால், இந்த திட்டத்திற்கு “ஒற்றுமையுடன்” எந்தவித தொடர்பும் இல்லை, மேலும், கொரோனா வைரஸால் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடனோ, அல்லது வருமானம், வாழ்வாதாரம், மற்றும் தங்களின் வாழ்க்கையை கூட இழந்துவிட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் இது பொருந்தாது. இந்த திட்டத்திற்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது பற்றிய பல வாரங்கள் நீடித்த விவாதங்களுக்குப் பின்னர், மேர்க்கெல் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியது போல, மேர்க்கெலும் மக்ரோனும் “இறுதியாக செயலை இணைந்து மேற்கொண்டார்கள்”, ஏனென்றால் அவர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை உலக சந்தையில் தங்களது நாடுகளின் நிலையை வலுப்படுத்துவதற்கான, மற்றும், பெருநிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தொழிலாள வர்க்கத்தை விலைகொடுத்து ஐரோப்பிய பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான சந்தர்ப்பமாகவே கருதுகின்றனர்.

இந்த திட்டம் முன்வைக்கப்பட்ட போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த வணிகங்கள் “உலக சந்தையில் பலப்படுத்தப்பட வேண்டும்” என்று மேர்க்கெல் வெளிப்படையாக வாதிட்டார். கணணி சில்லுகள் (computer chips) மற்றும் மின்கலங்களின் உற்பத்தி போன்ற “மூலோபாய திட்டங்களுக்கு” ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே நிதியளித்து வருகின்றது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கென முதலீடுகளின் அதிகரிப்புடன் இந்த முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், மற்ற நாடுகளைப் போலவே, “உலகளாவிய திறமைசாலிகளை” உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த கூட்டு திட்டத்தின் உரை இதை வெளிப்படையாக தெளிவுபடுத்துகிறது. 500 பில்லியன் யூரோ திட்டம் என்பது அதனுள் அடங்கிய பல்வேறு திட்டங்களில் ஒன்றாகும். முதல் விடயமாக “மூலோபாய சுகாதார இறையாண்மை” குறித்து பாடுபடுவது உள்ளது. மேலும், “மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்ட ஐரோப்பிய சுகாதாரப் பாதுகாப்பு தொழில்துறைக்காக நாங்கள் பாடுபடுகிறோம்,” என்றும் “இது சுகாதாரப் பாதுகாப்பு குறித்த ஐரோப்பிய பரிமாணத்தை மேம்படுத்தும் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய சார்பு நிலையைக் குறைக்கும்” என்றும் இந்த ஆவணம் தெரிவிக்கின்றது.

“ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார மற்றும் தொழில்துறை மீட்டெழுச்சி மற்றும் இறையாண்மையை மேம்படுத்தும் வகையில், ஒற்றை சந்தைக்கு ஒரு புதிய உந்துதலைக் கொடுக்கும்,” என்ற 4வது புள்ளி, பொருளாதார போட்டியாளர்களுக்கு எதிராக, அனைத்திற்கும் மேலாக சீனாவுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட வர்த்தக போர் நடவடிக்கைகளுடன் கைகோர்த்துச் செல்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

“ஐரோப்பிய பொருளாதாரத்தின் மறுதொடக்கத்திற்கும் மற்றும் எதிர்கால சவால்களுக்கு ஏற்ப அதை மாற்றுவதற்கும், நெகிழ்திறன் மற்றும் இறையாண்மை மிக்க பொருளாதாரம், மற்றும் தொழில்துறை அடித்தளம், அத்துடன் வலுவான ஒற்றை சந்தை போன்றவை தேவைப்படுகின்றது,” என்று இது தெரிவிக்கிறது. இது “மூலோபாயத் துறைகளில் (சுகாதாரம் – மருந்துகள், உயிரி தொழிநுட்பம் மற்றும் இன்ன பிற) ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத முதலீட்டாளர்கள் சார்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசிய முதலீடு தொடர்பான ஆய்வை வலுப்படுத்துவதாக உறுதியளிக்கிறது, அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் (மீள) உருவாக்கப்பட்டுள்ள முதலீடுகளை ஊக்குவிக்கிறது” என்று சூளுரைக்கிறது. ஒற்றை சந்தையை வலுப்படுத்துவதற்கு “பொதுவான வெளிப்புற எல்லைகளை வலுப்படுத்துவதன் (மூலம்) ஷெங்கன் (Schengen) பகுதியின் முழு செயல்பாடும்…” தேவைப்படுகின்றது.

ஐரோப்பாவின் போட்டி விதிமுறைகளும் “நவீனமயமாக்கப்பட வேண்டும்,” அதாவது, கடந்த ஆண்டு சீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோமின் இரயில் துணை நிறுவனங்களின் இணைப்பு தோல்வியுற்றது என்ற நிலையில், ஐரோப்பிய “திறமைசாலிகளை” உருவாக்குவது குறித்து முக்கிய நிறுவனங்கள் இணைவது என்பது ஐரோப்பிய ஒன்றிய போட்டி விதிகளின் அடிப்படையில் இனிமேல் தடுக்கப்படாது என்பதை எளிய மொழியில் தெரிவிக்கிறது. “இலத்திரணியல், எரிசக்தி, மூலதனச் சந்தைகள்” போன்ற “முக்கிய துறைகளில்” துரிதப்படுத்தப்பட்ட சட்டமன்ற செயல்முறைகள் “உள் சந்தை முழுமையாக செயல்படுவதை” உறுதிப்படுத்த வேண்டும்.

“ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெகிழ்திறனை வலுப்படுத்துவது” என்பது ஊதியங்கள், வேலைகள் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றின் மீதான மிருகத்தனமான தாக்குதல்களுடன் பிணைந்துள்ளது. இந்த கூட்டு திட்டம், “ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டங்களின் அடிப்படையிலும் மற்றும் ஐரோப்பிய முன்னுரிமைகளுக்கு ஒத்திசைவாகவும்” ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறுகிறது. மேலும், “ஐரோப்பிய பொருளாதாரங்களின் நெகிழ்திறன், ஒருங்கிணைப்பு மற்றும் போட்டித்தன்மையை இது மேம்படுத்தும்” என்று ஆவணம் தொடர்கிறது.

இவையே சமூக உரிமைகளும் மற்றும் சமூக நலன்களும் பரவலாக அழிக்கப்படுவதற்கான குறீயீட்டு சொற்களாகும். ஏற்கனவே யூரோ கடன் நெருக்கடியின் போது, “‘சீர்திருத்த ஒப்பந்தகள்’ மூலம் வெட்டுக்களைச் செய்ய நெருக்கடி நாடுகளை கட்டாயப்படுத்த மேர்க்கெல் விரும்பினார் - தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடியின் பக்கம் திரும்புகிறார்,” என்று பழமைவாத பத்திரிகை Cicero குறிப்பிட்டது. நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட நிபந்தனைகளை அமல்படுத்துவதற்கும் பொறுப்பாளியாக வேண்டிய புரூசெல்ஸ்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், “தனது தாராளமய பொருளாதார பரிந்துரைகளை திணிப்பதற்கான வாய்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது.”

இந்த புதிய தாராளவாத “சீர்திருத்தங்களுக்காக,” ஆதரவைத் திரட்டுவதற்கு, அவை “பசுமை ஒப்பந்தங்கள்” வடிவில் விற்கப்பட்டு வருகின்றன. “ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் அதன் வணிக மாதிரிகள் நவீனமயமாக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கான நேரம் இதுவேயாகும். இதே ஊக்கத்துடன், ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வளர்ச்சி உத்தி என்று நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம்,” என்று ஆவணம் இழிந்த முறையில் அறிவிக்கின்றது.

யூரோ பிணை பத்திரங்களுக்கு ஆதரவாக வாதிடுவோர்கள் முதல்முறையாக, பொதுவான ஐரோப்பிய கடனை ஏற்க மறுக்கும் தனது கொள்கையிலிருந்து ஜேர்மன் அரசாங்கம் மாறிவிட்டது என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதற்காக இது ஒரு சாதாரண விலையை செலுத்துகிறது. முதலாவதாக, ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்தின் மூலமாக திருப்பிச் செலுத்தப்படும் மொத்தம் 500 பில்லியன் யூரோ தொகையில் கால் பகுதிக்கு மட்டுமே இது பொறுப்பாகும். தற்போதைய மட்டங்களில் கூட, உயர்மட்ட அளவிலான மற்றும் ஜேர்மனியின் தற்போதைய வரவு-செலவுத் திட்ட பங்களிப்பு ஆண்டுக்கு வெறும் 7 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கும். எவ்வறாயினும், ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டம், சமூக அல்லது கலாச்சார விவகாரங்களுக்கான செலவினங்கள் எதிலேனும் வெட்டுக்களை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

ஜேர்மனியின் முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கஜானாக்களுக்குள் செலுத்தப்பட்டுள்ள பெரும் தொகைகளுக்கு மாறாக, இது ஒரு சாதாரண தொகையாக உள்ளது. ஐரோப்பாவின் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் உதவி நடவடிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜேர்மனியிலிருந்து கிடைக்கப் பெற்றவை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கணக்கிட்டுள்ளது. பிரெஞ்சு பிணையெடுப்பு நடவடிக்கைகள் 17 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது இத்தாலிக்கு 15.5 சதவிகிதமும், போலந்துக்கு 2.5 சதவிகிதமும் ஆகும்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக ஐரோப்பாவில் தனது மேலாதிக்க நிலையை முடிந்தவரை வலுப்படுத்த ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு முழுமையாக எதிர்பார்க்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சியை தடுப்பதற்காக ஆண்டுக்கு சில பில்லியன் யூரோக்களை அது செலவழிப்பது ஒரு சிறிய விலையாகும்.

ஜேர்மன்-பிரெஞ்சு திட்டம் ஐரோப்பாவிற்குள் தேசிய மற்றும் சமூக பதட்டங்களை ஆழப்படுத்தும். தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த தாக்குதலால் மட்டுமே தேசியவாதம், காட்டுமிராண்டித்தனம், மற்றும் போரை நோக்கி கண்டம் மீண்டும் திரும்புவதைத் தடுக்க முடியும். அதன் குறிக்கோள் ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச நாடுகளை ஸ்தாபிப்பதாக இருக்க வேண்டும். இது, முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் நிதியை பறிமுதல் செய்வதற்கும், பின்னர் அவை ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட பொது பயன்பாடுகளாக மாற்றப்படுவதற்கும் போராட வேண்டும். அதாவது, வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் கணக்குகளில் தற்போது பாய்ச்சப்பட்டு வரும் பில்லியன்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமுதாயத்திற்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று ஏற்படுத்தியுள்ள விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கென பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

Loading