தொற்றுநோய் பரவி வருகையில், அண்மித்து 40 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கையில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரொனா வைரஸ் தொற்றுநோய் தொடர்ந்து அமெரிக்க மக்கள் மீது நாசகரமான எண்ணிக்கையை அமைத்து வருகிறது. நேற்று பதிவு செய்யப்பட்ட அண்மித்து 1,300 புதிய உயிரிழப்புகளுடன் சேர்ந்து, இந்த வாரயிறுதிக்குள் உயிரிழப்பு எண்ணிக்கை 100,000 ஐ தாண்டிவிடக்கூடும். அதே நேரத்தில், மார்ச் மாதத்திற்குப் பின்னர் இருந்து வேலைவாய்ப்பின்மை நலன்களுக்காக 40 மில்லியன் பேர் பதிவு செய்துள்ள நிலையில், பாரிய வேலைவாய்ப்பின்மை பெருமந்தநிலைமைக்குப் பின்னர் கண்டிராத மட்டங்களில் உள்ளது.

இருப்பினும் அமெரிக்க பில்லியனர்கள் செல்வத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கை ஆய்வுகள் மற்றும் நேர்மையாக வரிசெலுத்தும் அமெரிக்கர்களுக்கான பயிலகம் வியாழக்கிழமை அறிவிக்கையில், மார்ச் மாத மத்தியில் இருந்து, அமெரிக்காவில் பில்லியனர்கள் அவர்களின் மொத்த செல்வ வள மதிப்பில் 434 பில்லியன் டாலரை சேர்த்துக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, செல்வந்த 630 அமெரிக்கர்கள் இப்போது 3.4 ட்ரில்லியன் டாலர் செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், இது இரண்டு மாதங்களில் 15 சதவீத அதிகரிப்பாகும் என்று அறிவித்தது.

“ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பேர்க், வாரென் பஃபெட் மற்றும் லாரி எலிசன் என முதல் ஐந்து உயர்மட்ட அமெரிக்க பில்லியனர்கள் மொத்தம் 75.5 பில்லியன் டாலர் அல்லது 19% உயர்வைக் கண்டனர்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 600 க்கும் கூடுதலான பில்லியனர்களின் மொத்த செல்வவள அதிகரிப்பில் இவர்கள் ஒருமித்து 21% ஐ கைப்பற்றினர். [அமசன் தலைமை செயலதிகாரி] பெஸோஸ் மற்றும் [பேஸ்புக் தலைமை செயலதிகாரி] சக்கர்பேர்க்கின் சொத்துக்கள் ஒருசேர அண்மித்து 60 பில்லியன் டாலர், அல்லது மொத்தம் 434 பில்லியன் டாலரில் 14% அதிகரித்தது.”

பங்குச் சந்தைக்குள் நாளொன்றுக்கு 80 பில்லியன் டாலரையும், காங்கிரஸில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான CARES சட்ட பிணையெடுப்பையும் பாய்ச்சி வருகின்ற பெடரல் ரிசர்வால் வரம்பின்றி "பணத்தைப் புழக்கத்தில்விடும்" கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்த அதிகரிப்பு எரியூட்டப்பட்டுள்ளது. பெடரல் இப்போது அதன் இருப்புநிலைக் கணக்கில் 7 ட்ரில்லியன் டாலர் சொத்துக்களை வைத்துள்ளது, பங்குச் சந்தை ஏறத்தாழ இந்த தொற்றுநோய்க்கு முன்பிருந்த மட்டங்களுக்குத் திரும்பி உள்ளது.

செல்வந்த தட்டுக்கள் வரம்பின்றி கையளிப்புகளைப் பெற்று வருகின்ற அதேவேளையில், பரந்த பெருந்திரளான மக்களோ சமூக சீரழிவுச் சுனாமியைத் தூண்டிவிட்டுள்ள ஒரு பூகம்பத்தை எதிர்கொண்டுள்ளது. 40 மில்லியன் என்ற உத்தியோகப்பூர்வ வேலைவாய்ப்பின்மை புள்ளிவிபரங்கள் வேலைவாய்ப்பின்மை மட்டங்களைப் பரந்தளவில் குறைமதிப்பிட்டுள்ளன. மில்லியன் கணக்கானவர்கள் வேலைவாய்ப்பின்மை சலுகைகளைப் பெற தகுதியற்றவர்களாக உள்ளனர் அல்லது நிரம்பி வழியும் அரசு அமைப்புமுறை மூலமாக அதை இன்னமும் பெற முடியாமல் உள்ளனர்.

இத்தகைய வேலைகளில் பலவும் ஒருபோதும் திரும்ப போவதில்லை. ஏப்ரல் 25 இல் இருந்து இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் நிரந்தரமாகிவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் மதிப்பிடுகிறது. இதன் அர்த்தம், 11.6 மில்லியன் பேர் வேலைக்குத் திரும்ப செல்ல முடியாது என்பதாகும்.

“தற்போதைய இந்த நெருக்கடி மிகவும் கடுமையாக இருக்கும்,” என்று அந்த அறிக்கையின் துணை ஆசிரியர் ஜோஸ் மரியா பரேரோ எழுதினார், “நிரந்தமாக ஆகிவிடும் தற்காலிக பணிநீக்கங்களில் ஒரு பகுதி வரலாற்று ஆதாரங்கள் எடுத்துக்காட்டக் கூடியதை விடவும் மிகவும் அதிகமாக இருப்பதில் போய் முடியும்,” என்றார்.

ஏற்கனவே 2008 பொறிவால் நாசமாக்கப்பட்டுள்ள, உயர்நிலைப் பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் இருந்து பட்டம் படித்து வரும் ஒட்டமொத்த இளைய தலைமுறையும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதி குறைந்த வேலைவாய்ப்பின் படுபயங்கரமான ஆண்டுகளை முகங்கொடுக்கிறது, இதனால் ஒரு குடும்பத்தையோ அல்லது ஒரு சொந்த வீட்டையோ நடத்த முடியாது.

மில்லியன் கணக்கான உணவு விடுதிகளும், கடைகளும், ஏனைய சிறு வணிகங்களும் திவாலாகி போகலாம் மற்றும் ஒருபோதும் மீண்டும் திறக்கப்படாமலேயே போகலாம், இது அந்த சிறுவணிக உரிமையாளர்கள் மற்றும் அவர்களிடம் வேலைக்கு இருந்தவர்களை ஒன்றுமில்லாமல் விட்டு வைக்கும். அதே நேரத்தில், வரி வருவாய் இழப்புகளில் இருந்து எழும் நகர மற்றும் மாநில வரவு-செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறை கல்வித்துறையிலும் ஏனைய சமூக திட்டங்களிலும் இன்னும் கூடுதலாக பாரியளவில் வெட்டுக்களைச் செய்வதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும்.

தற்காலிக கடன் இடைநிறுத்தம் முடிந்த பின்னர், மாநிலங்கள் வாடகை பணம் செலுத்தாதவர்களை வெளியேற்ற நகர்ந்து வருகின்றன. ஆக்லஹாமா மே 26 இல் இருந்து வெளியேற்றுவதைத் தொடங்க உள்ளது. லோவா மற்றும் விஸ்கான்சினில், வெளியேற்றங்கள் மே 27 இல் இருந்து தொடங்கக்கூடும். டெக்சாஸில், வெளியேற்றுவது மீதான மாநிலந்தழுவிய தடை கடந்த செவ்வாய் கிழமை முடிவடைந்தது, வரவிருக்கும் நாட்களில் புதிய விவகாரங்களில் அதிகரிப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியியல் செல்வந்த தட்டின் கொள்கையை பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்: மரணம் மற்றும் சமூக சீரழிவு. செல்வந்தர்கள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை தங்களுக்கு தாங்களே கையளித்துக் கொள்ள இந்த தொற்றுநோயைப் பயன்படுத்தி உள்ளனர், அதேவேளையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒன்றுமே செய்யப்படவில்லை. பாரியளவில் கடன் குவிந்திருப்பது தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மூலமாக செலுத்தப்பட உள்ளது.

கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், இந்த பிரச்சாரத்தின் ஆட்களைக் கொல்லும் தன்மை முன்பினும் அதிகமாக வெளிப்படையாக ஆகி வருகிறது. வெள்ளிக்கிழமை ட்ரம்ப் அறிவிக்கையில், தேவாலயங்களும் ஏனைய வழிபாட்டு தலங்களும் "இன்றியமையாதவை" என்று அறிவித்ததுடன், அவற்றை மீண்டும் "இப்போதே" திறந்து விட வேண்டும் என்று கோரினார். இதற்கு இணங்காத எந்தவொரு ஆளுநரையும் அவர் நீக்கிவிடவும் எச்சரித்தார்.

பெருமளவில் ஒன்றுகூடும் இடங்கள் அனைத்தையும் மீண்டும் திறப்பதற்கு எதிராகவும், அது சமூகம் எங்கிலும் அந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கு நுண்கடத்திகளாக சேவையாற்றி விடும் என்றும் தொற்றுநோய் நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர். வாகனத்துறை ஆலைகளிலும் ஏனைய வேலையிடங்களிலும் சமீபத்திய வாரங்களில் உற்பத்தியை மீண்டும் திறந்து விட்டதைப் போல தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்கள், மசூதிகளின் வழிபாடுகளில் நபர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் விதத்தில் மீண்டும் திறந்துவிடுவது இந்த உயிராபத்தான வைரஸ் பரவுவதைச் சுலபமாக்கிவிடும், அது ஏற்கனவே அமெரிக்காவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளதுடன், அண்மித்து 100,000 உயிர்களைப் பலி கொண்டுள்ளது.

இந்த அடுக்கின் சிந்தனையை சில செல்வந்த தட்டுக்களின் கருத்துக்களில் காண முடிகிறது. இந்த வைரஸ் பரவுவதை மட்டுப்படுத்துவதற்கான சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கு எதிராக வாதிட்டு, கோல்ட்மன் சாக்ஸின் முன்னாள் தலைமை செயலதிகாரியும் தலைவரும் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பொருளாளருமான லோய்ட் பிளாங்ஃபைன் (Lloyd Blankfein) வியாழக்கிழமை ட்வீட் செய்கையில், “மருத்துவமனையில் கூட்டம் இல்லை; தடுப்பூசி [மூலப்பிரதியில் உள்ளவாறு] கண்டுபிடிக்கும் வரையில் நாம் வரையறைக்குள் இருக்க முடியாது என்பதால் நம்மில் பலருக்கும் அது ஏற்படலாம்; மேலும் மிக மோசமான விளைவுகளில் இருந்து எந்த குழுக்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்பது நமக்கு தெரியும். இந்த தருணத்தில் பரந்த அடைப்புகளால் பொது சுகாதாரத்திற்கு நன்மை என்பது, உயிர் வாழ்வாதாங்களுக்கு அதுபோன்ற அதீத சேதத்தை விட மதிப்புடையதா?” என்றார்.

பிளாங்ஃபைனின் பிரதான கவலை, நிச்சயமாக, தொழிலாளர்களின் உயிர் சம்பந்தப்பட்டதில்லை மாறாக தொழிலாளர்கள் மீண்டும் இலாபங்களை உருவாக்க தொடங்கவில்லை என்றால் அவரின் பங்கு வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுமே என்பது தான் அவரின் கவலை.

இதற்கடுத்து தனியார் சொத்து முதலீட்டு நிறுவனத்தின் மேலாளரும், Eminence Capital இன் தலைமை செயலதிகாரியுமான ரிக்கி சாண்ட்லர், அமெரிக்க அரசாங்கம் "பெருந்திரளாக எதிர்ப்புசக்தி அதிகரிப்பதை" பின்பற்றி வருகிறது என்பதை —அதாவது அந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் செல்வதை அனுமதிப்பதை— பகிரங்கமாக அது அறிவிக்க வேண்டும் என்று கோருவதற்காக ichooseherdimmunity.com என்ற வலைத் தளத்தை உருவாக்கி உள்ளார். கொரொனா வைரஸில் இருந்து "நலன்பெறும்" இசை நிகழ்ச்சிகளுக்கு சாண்டலர் அழைப்புவிடுத்துள்ளார், அங்கே இளைஞர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்படும், அவ்விதத்தில் ஒரு சிகிச்சையை போல அவர்களின் இரத்தத்தில் எதிர்-நுண்ணுயிரிகளை விதைக்கலாம் என்கிறார்.

“இவர்களில் சிலர் அவர்களின் எதிர்ப்பு சக்தியில் சற்று இழந்திருக்கலாம் என்பதை புதிதாக தெரிந்து கொள்ளும் விதத்தில், அவர்கள் ஆதாயம் அடையக்கூடும்,” என்று சாண்ட்லர் சர்வசாதாரணமாக குறிப்பிட்டார்.

ஆளும் வர்க்கம் "பாதுகாப்பதற்கு" அக்கறை கொண்டுள்ள இந்த பொருளாதாரத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் அல்லது மேம்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு பதிலாக, அது பத்து மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக நெருக்கடியை கூலிகளைக் குறைப்பதற்கும் மற்றும் சலுகைகளை வெட்டுவதற்கும் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, வர்க்க உறவுகளைப் பாரியளவில் மறுகட்டமைப்பு செய்வதையே அது உத்தேசித்துள்ளது.

இந்த தொற்றுநோய் பணக்காரர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே வர்க்க பிளவைப் பாரியளவில் தீவிரப்படுத்தி உள்ளது. ஆளும் வர்க்கம் பகிரங்கமாக இந்த சமூகத்தைக் கொள்ளையடிப்பதும் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விடுவதற்காக அவர்களின் ஆட்கொலை முனைவும் பாரியளவில் சமூக கிளர்ச்சியையும் புரட்சிகர எழுச்சிகளையும் தோற்றுவிக்கும்.

இத்தகைய போராட்டங்களில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். சோசலிச சமத்துவக் கட்சி மே 21 பிரசுரித்த அதன் அறிக்கையில், தொழிலாள வர்க்கம் அதன் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் இந்த வைரஸில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் வீடுகளில் உள்ள அவர்களின் குடும்ப்பங்களுக்கு இதை பரப்பி விடாமல் இருக்கவும் தங்களின் ஆலைகளிலும் வேலையிடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்களைக் கட்டமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதானது, “ஆளும் வர்க்கத்திற்கு எதிரான —பெருநிறுவனம் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு எதிரான— மற்றும் பொருளாதார அரசியல் வாழ்வு மீதான அதன் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு போராட்டத்துடன் பிரிக்க முடியாதவாறு தொடர்புபட்டுள்ளது. ஆகவே இது முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்கான போராட்டமாகும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் சமூகத்தை மீளக்கட்டமைப்பதற்கான போராட்டமாகும்,” என்று SEP குறிப்பிட்டது.

இந்த தொற்றுநோய் எதையாவது எடுத்துக்காட்டி உள்ளது என்றால், அது மக்கள்தொகையில் பரந்த பெரும்பான்மையான தொழிலாள வர்க்க நலன்கள் செல்வந்த தட்டுக்களின் நலன்களுடனும் மற்றும் அவர்களின் செல்வ வளமும் அதிகாரமும் எதை சார்ந்துள்ளதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறையுடனும் அடிப்படையிலேயே சமரசப்படுத்த முடியாத விதத்தில் மோதலில் நிற்கிறது என்பதைத் தான் எடுத்துகாட்டி உள்ளது.

Loading