வறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு திரும்ப அழைக்கும்படி இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளை வளைகுடா நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன

By Shuvu Batta
27 May 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அரேபிய தீபகற்பத்தின் வளைகுடா நாடுகளை ஆளும் ஷேக் மற்றும் தன்னலக்கழுக்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு அடிபணிந்து, இந்த நாடுகளில் பணிபுரிந்து வரும் மில்லியன் கணக்கான வறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு இனிமேல் தேவைப்படாத நிலையில் அவர்களை இந்தியாவும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளும் தமது நாடுகளுக்கு திரும்ப அழைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றன.

பஹ்ரைன், குவைத், ஓமன், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்கள் ஆகிய அனைத்து ஆறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council-GCC) அங்கத்துவ நாடுகளும், சவுதியால் ஆரம்பித்துவைக்கப்பட்ட எண்ணெய் விலை போர் உட்பட, உலகளாவிய பொருளாதார துயரத்தை கோவிட்-19 நோய்தொற்று தூண்டிவிட்டதன் பின்னர் அதிகரித்தளவில் செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எண்ணெய் விலையில் நிகழ்ந்த தொடர்ச்சியான வீழ்ச்சி, அவர்களது அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் பற்றாக்குறைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் சுற்றுலா மற்றும் பிற வருவாய் ஆதாரங்கள் கூட முற்றிலும் வறண்டு போயுள்ளன.

இதன் விளைவாக மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, வேலையை இழக்க நேரிடாத அதிர்ஷ்டசாலி தொழிலாளர்களோ பெரும்பாலும் பெரும் ஊதிய வெட்டுக்களை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நாட்டின் பல இளவரசர்களில் ஒருவருக்கு சமையல்காரராக பணிபுரிந்து வரும் சவூதி அரேபியாவில் குடியேறிய தொழிலாளி ஒருவர் கோவிட்-19 நெருக்கடி வெடிப்புற்றதன் பின்னர் தனது ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டதாக WSWS இடம் தெரிவித்தார்.

நோய்தொற்று வெடிப்பதற்கு முன்னர், தெற்காசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து 23 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் இருந்தனர். வளைகுடா நாடுகளில் மொத்த தொழிலாளர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களாக இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டுமான வேலை மற்றும் எண்ணிலடங்கா வீட்டு ஊழியங்கள் மற்றும் குறைவூதிய வேலைகளையே நீண்டகாலமாக செய்து வந்தனர். மேலும், மில்லியன் கணக்கான பெண்கள் வீட்டு பணியாளர்களாகவும், சுகாதாரப் பணியாளர்களாகவும் வேலை செய்கின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் Kafala திட்டத்தில் சிக்கியுள்ளனர். இத்திட்டமானது ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நாட்டில் இருப்பதற்கான உரிமையுடன் இணைக்கிறது. இது முழுமையாக மன்னர்களால் ஆளப்படும் நாடுகளில் குடியுரிமை இல்லாத நபர்களைக் கொண்ட மிகுந்த சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் தொழிலாளர் குழுவை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டால் அல்லது அவர்களது ஒப்பந்தம் காலாவதியாகும் போது அவர்கள் வீட்டிற்கு திருப்பியனுப்ப உத்தரவிடப்படுவார்கள் என்ற வகையில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள்.

என்றாலும், கோவிட்-19 நோய்தொற்று, சர்வதேச பயணத் தடைகள் விதிப்பு மற்றும் அரசு பூட்டுதல் நடவடிக்கை மற்றும் அவர்களது திடீர் வேலையிழப்பு ஆகியவை, வெளியேற்றத்தை எதிர்கொள்ளும் புதிதாக வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான வழிமுறைகளோ அல்லது உரிமையோ இல்லை என்ற நிலையை உருவாக்குகின்றன.

நிதியுதவியுடன் “வெளியேற்றப்பட வேண்டிய” புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவ்வாறு அனுப்புவதற்கு வளைகுடா நாடுகளின் தன்னலக்குழுக்கள் மறுத்துவிட்ட நிலையில், அதிகரித்தளவில் அவர்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். இதனால் சமூக எதிர்ப்பு எழுமோ என்று எப்போதும் பயந்து கொண்டிருக்கும் ஆளும் உயரடுக்கு, அவர்களை வெளியேற்றுவதில் அனைத்து வகைகளிலும் உறுதியுடன் இருக்கின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பலிகடாவாக்குவது கூட வளைகுடா நாடுகளின் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட “பூர்வீக” மக்களிடையே பெருகிவரும் அதிருப்தியைத் திசைதிருப்புவதற்கான ஒரு வழியாகவுள்ளது எனலாம்.

பெருமளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், வாடகை அல்லது அடிப்படை வாழ்க்கைச் செலவினங்களை செலுத்துவதற்கு இயலாது இருக்கின்ற நிலையில், பலர் வீடற்ற நிலைக்கு ஆளாகினர். பிரதீப் குமாரும், மற்றும் சர்க்கரை வியாதியால் பீடிக்கப்பட்ட மற்றும் கர்ப்பிணியுமான அவரது மனைவியான பிரேமலதாவும் அத்தகைய தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். ஒரு உணவுவிடுதி தொழிலாளியாக தனது வேலையை இழந்து நிற்கும் திரு குமார், தனது குடும்பத்தை ஆதரிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறார் என்பதுடன், வாகனங்கள் நிறுத்தப்படக்கூடிய கீழ் தளத்தில் சில இரவுகளை கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் BBC இடம், “எனது மனைவியின் பிரசவத்திற்கு செலவு செய்வதற்கோ, விமான பயணச்சீட்டு வாங்குவதற்கோ கூட என்னிடம் பணம் இல்லை… எனது மனைவிக்கு கர்ப்பகாலத்தின் 33வது வாரம் ஆரம்பித்துவிட்டால் அதன் பின்னர் அவர் பயணம் செய்தால் அது அவரது மற்றும் குழந்தையின் உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் எனது குழந்தையை காப்பாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

தொழிலாளர்களை கைது செய்தும், நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களுக்கு அவர்களை அனுப்பியும் தொழிலாளர்களின் வீடற்ற நிலை அதிகரித்து வருவதற்கு வளைகுடா நாடுகள் பதிலிறுத்துள்ளன. இந்நிலையில், தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யவிருப்பதாக கட்டார் பொய் கூறி, அவர்களை சுற்றிவளைத்து பிடித்து சிறைகளில் தள்ளக்கூடும் என்று சர்வதேச மன்னிப்பு சபை உண்மை நிலையை அம்பலப்படுத்துகின்றது. ஒரு நேபாளி தொழிலாளி அங்குள்ள நிலைமை பற்றி பின்வருமாறு தெரிவித்தார்: “சிறை மக்களால் நிரம்பி வழிந்திருந்தது. எங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு துண்டு ரொட்டி மட்டுமே வழங்கப்பட்டது, அது எங்களுக்கு போதாமல் இருக்கின்றது. அனைத்து மக்களையும் குழுவாக சேர்த்து உணவு வழங்கப்பட்டது, அதாவது தரையில் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் உணவு பொதுவில் வைக்கப்பட்டு விடும். கூட்டத்தின் காரணமாக சிலரால் உணவை எடுக்கக்கூட முடியவில்லை.”

பெரும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில், தொழிலாளர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். மே 3 அன்று, எகிப்திய தொழிலாளர்கள், தளவாடங்களை ஆயுதங்களாகப் பிரயோகித்து குவைத் தடுப்புக்காவல் மையம் ஒன்றில் கலவரம் செய்தனர்.

அதற்குள், சமூக பதட்டங்கள் அதிகரித்து வருவது பற்றி நன்கு அறிந்திருந்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, சரியான வீட்டுவசதி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய விரும்பாத வளைகுடா நாடுகளின் அரசாங்கங்கள், தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகள் தங்களது குடிமக்களை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஆரம்பத்தில், இந்தியா கோவிட்-19 நோய்தொற்றுக்கு எதிரான தனது உள்நாட்டு முடக்கம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகியவை குறித்து மேற்கோள் காட்டி தனது மக்களை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை எதிர்த்தது.

என்றாலும், UAE உடன் பகிரங்கமாகவும், பிற நாடுகள் சந்தேகத்திற்கு இடமின்றி தனிப்பட்ட முறையிலும், தங்களது இருதரப்பு உறவுகளில் நீண்டகால சேதத்தை இது விளைவிக்கும் என்று அச்சுறுத்துவதால், நூறாயிரக்கணக்கான, மற்றும் ஒருவேளை மில்லியன் கணக்கான தனது மக்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு விரைந்து ஏற்பாடுகளைச் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டது.

வளைகுடா நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் எண்ணெய் இறக்குமதியை இந்தியா பெருமளவில் சார்ந்துள்ளது. அதிலும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சட்டவிரோதமான, தண்டிக்கும் தடைகளுக்கு கட்டுப்படவேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கையை புது தில்லி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்த சார்பு தன்மை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்னும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் தீவிர வலதுசாரி பிஜேபி அரசாங்கமும் வளைகுடா நாடுகளின் முதலீட்டை ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன், இந்தியாவின் வளர்ந்து வரும் ஆயுத உற்பத்தித் துறைக்கு இலாபகரமான ஒப்பந்தகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாத்தியமான ஆதாரமாக அவை இருப்பதாகவும் கருதுகின்றது.

மே 4 ஆம் திகதி, பெரியளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நாடு திரும்பும் திட்டத்தை இந்தியா அறிவித்தது, இதேபோல பிற தெற்காசிய நாடுகளும் வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளன என்ற நிலையில், அவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், மேலும் அவர்களை பரிசோதனை செய்வதற்கான மற்றும் தனிமைப்படுத்துவதற்கான மையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் இப்போது விரைவாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உலகெங்கிலும் இருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்துவருவதற்கு இந்தியா ஏற்கனவே தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை பயன்படுத்தியுள்ளது, மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் 200,000 பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. நேபாளி அதிகாரிகள், 400,000 தொழிலாளர்கள் திரும்ப அழைத்துவரப்படுவார்கள் என்றும், அவர்களில் 100,000 பேர் ஜூன் 2 ஆம் திகதி நாட்டின் அடைத்தல் காலாவதியான உடனேயே திரும்ப அழைத்துவரப்படுவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதாக கூறினர். பாகிஸ்தான் தூதரகத்தின் படி, 60,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு பதிவு செய்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதானது தெற்காசிய நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகளில் உள்ள 160,000 கோவிட்-19 தொற்று நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள், மற்றும் கிட்டத்தட்ட கூடுதல் பெரும்பான்மையானவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர். இந்த தொழிலாளர்கள் “சாதாரண காலங்களில்” கூட நெருக்கடியான மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பல தொழிலாளர்கள் வீட்டு வாடகை அவர்களது வேலையுடன் பிணைந்திருந்தது என்பதாலோ, அல்லது இனிமேல் வாடகையை செலுத்த முடியாத நிலையிலோ தங்களது வீட்டை இழந்துவிட்டனர். மேலும் இந்நிலையில் வளைகுடா நாடுகளின் அரசாங்கங்களோ வீடற்ற தொழிலாளர்களை இன்னும் நெருக்கடியான சிறைச்சாலைகளிலும் தடுப்புக்காவல் மையங்களிலும் அடைத்து வைத்து பதிலிறுத்துள்ளன.

பெரியளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பும் திட்டங்களானது, ஏற்கனவே கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்கள் சீர்குலைந்து போயுள்ள, அதிலும் கிராமங்களில் பெரும்பாலும் சுகாதாரப் பாதுகாப்பு வசதியில்லாத நாடுகளில் புதிய நோயாளிகளின் பெருக்கத்திற்கும் இறப்புக்களுக்கும் அச்சுறுத்துகின்றது.

கடந்த வாரம் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தனது நாட்டிற்கு திரும்பி வந்தவர்களில் பாதி பேர் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று புகார் செய்தது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், “நாங்கள் இது பற்றி இராஜதந்திர ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளோம்,” இந்த விவகாரம் “தீர்க்கப்பட்டு வருவது” “கடவுளின் விருப்பம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்படும் பல பில்லியன் டாலர்கள் இழப்பு கூட, தெற்காசிய நாடுகளின், அதிலும் குறிப்பாக நேபாளம் மற்றும் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரங்களுக்கு விழுந்த கடுமையான அடியாகும், அதிலும் அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் தொகையை நம்பி வாழ்ந்து வரும் மில்லியன் கணக்கான அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ இது இன்னும் பெரிய அடியாகும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களில் பலர் நிலமற்ற விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கவும் மற்றும் உள்நாட்டிற்கு திரும்புகையில் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்பைப் பெறவும் சூறையாடும் கடன்களைப் பெற்று ஆபத்தான வேலைகளை செய்து வந்தனர்.

தற்போது குறைந்தபட்ச மிகவும் நிச்சயமற்ற எதிர்காலத்தையே அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் அவர்களின் சொந்த நாடுகள் அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு நிலைமையில் தான் அவர்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்படுகிறார்கள். இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட தினக்கூலித் தொழிலாளர்கள், அவர்களில் பலர் உள்நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்கள், மார்ச் மத்தியிலிருந்து வேலைகளையும் வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

பல தசாப்தங்களாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், முன்னாள் எகிப்திய மன்னர்களுக்கு இணையான ஆடம்பரமான வாழ்வை வளைகுடா நாட்டின் தன்னலக்குழுவினர் வாழும் வகையிலும், மற்றும் அதி நவீன வானளாவிய கட்டிடங்களையும் வசதிகளையும் பெருமைப்படுத்தும் “சோலைகளுடன்” தங்கள் பாலைவன நாடுகளை உலகளாவிய நிதி ரீதியான, வணிக ரீதியான மற்றும் சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கான அவர்களின் “நோக்கத்தை” தொடரும் வகையிலும் முதுகொடிந்து போகும் அளவிற்கு வேலை செய்துள்ளனர். கார்டியன் பத்திரிகை விசாரணையின் படி, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டாரில் வெப்பத்தால் ஏற்படும் சோர்வினால் இறக்கின்றனர்.

வளைகுடா நாடுகளின் தன்னலக்குழுக்களும் மற்றும் அவர்களது தொங்குதசைகளும், கோவிட்-19 பரவுவதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி, அவர்களது அவல நிலை குறித்து விஷமத்தனமான வார்த்தைகளாலும், மற்றும் அரக்கத்தனமாகவும் பதிலிறுத்துள்ளனர். குவைத் நடிகை ஹயாத் அல்-ஃபஹத் ஒரு ஒளிபரப்பாளரிடம், “நெருக்கடிகளின் போது அவர்கள் வெளியேற வேண்டாமா? நான் கடவுள் சாட்சியாக சத்தியம் செய்கிறேன், அவர்களை நான் பாலைவனத்தில் தான் தள்ளுவேன். நான் மனிதாபிமான செயல்முறைக்கு எதிரானவள் அல்ல, ஆனால் நாங்கள் ஏற்கனவே சோர்வடையும் நிலையை அடைந்துவிட்டோம்” என்று தெரிவித்தார். மேலும், நாட்டை “சுத்திகரிக்க” புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கு அழைப்பு விடுத்த குவைத் பாராளுமன்ற உறுப்பினரான சஃபா அல்-ஹஷேம் கூட இதேபோன்ற உணர்வுடன் தான் மீண்டும் கருத்து தெரிவித்து வந்தார்.