முன்னோக்கு

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நியூயோர்க் பங்குச் சந்தையின் வர்த்தக தளம் மார்ச் 23 க்குப் பின்னர் முதல்முறையாக செவ்வாயன்று காலை மீண்டும் திறந்தது. படுமோசமான விதத்தில் அமைந்திருந்த கொரொனா வைரஸ் புள்ளிவிபரங்கள் மீதான அவரின் அன்றாட வெளியீடுகளை நிறுத்தி விட்டு, வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களுக்குக் கட்டை விரலை உயர்த்திக் காட்டிய நியூ யோர்க் ஆளுநர் Andrew Cuomo உம் சந்தை திறப்பு மணி ஒலிக்கும் கொண்டாட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்களில் ஒருவராக இருந்தார். அடுத்த ஆறரை மணி நேரம், நிதியியல் சமூகம் இந்த தொற்றுநோயின் விலையேறும் பங்குச் சந்தை மீதான அதன் கொண்டாட்டத்தை தொடர்ந்தது.

மார்ச் மாதம் வர்த்தக தளம் மூடப்பட்ட போது, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 18,000 க்கு கீழிறங்கி இருந்தது. அதற்குப் பின்னர் இருந்து அது அண்மித்து 40 சதவீதம் உயர்ந்துள்ளது. CARES சட்டத்தால் வழங்கப்பட்ட ட்ரில்லியன் கணக்கிலான டாலர் பிணையெடுப்பு பணம் பாய்ச்சப்பட்டு, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி கூடுதலாக 530 புள்ளிகள் உயர்ந்தன. இது வெள்ளிக்கிழமை கடைசியாக அது மூடப்படுகையில் இருந்ததை விட 2.2 சதவீத உயர்வாகும்.

திறப்பு மணி ஒலித்து 15 நிமிடங்களுக்குள், ஜனாதிபதி ட்ரம்ப் உற்சாகமான ஒரு சேதியை ட்வீட் செய்தார், “பங்குச் சந்தை பெரியளவில் அதிகரிப்பு, டோவ் 25,000 ஐ கடக்கிறது. எஸ்&பி 500 சந்தை 3000 ஐ கடந்தது. மாநிலங்கள் எவ்வளவிற்கு விரைவாக திறக்கமுடியுமோ அவ்வளவிற்கு விரைவாக திறக்கப்பட வேண்டும். முன்னேற்றத்தை நோக்கிய பரிமாற்றங்கள் திட்டமிட்டதற்கு முன்னரே தொடங்கி உள்ளன. ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், ஆனால் அடுத்தாண்டு முன்பில்லாதளவில் மிகச் சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும்.”

நியூ யோர்க்கில் செவ்வாய்கிழமை, மே 26, 2020 இல் NYSE வர்த்தக தளத்தை மீண்டும் திறந்து விடுவதைக் குறிக்கும் விதத்தில் நியூ யோர்க்க மாநில ஆளுநர் Andrew Cuomo திறப்பு மணியை ஒலிக்கிறார். (படம்: அசோசியேடெட் பிரஸ் மூலமாக நியூ யோர்க் பங்குச் சந்தை)

மக்களின் மிகப்பெரும்பான்மையானோரின் வாழ்க்கையில், நினைவு தின வாரயிறுதி முடிந்து அரைகுறையாக அங்கீகரிக்கப்பட்ட கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், இது மரணம் மற்றும் அதீத பாதுகாப்பின்மை, நிச்சயமின்மை மற்றும் நிஜமான அபாயத்தின் புதிய ஒரு காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையில், அங்கே "அதிகரிப்புகள்" மட்டுமே இருக்கும். 2020 கோடைக்காலம் முடிவடைவதற்குள், கோவிட்-19 இல் பலியானவர்களின் எண்ணிக்கை 200,000 க்கும் அதிகமாக இருக்கும்.

ட்ரம்ப் ஒரு மோசமான பொய்யரும் அரசியல் குற்றவாளியும் ஆவார். முழுமையாக முதிர்ச்சியடைந்த ஹிட்லராக இருப்பதற்கு கூட இயலாத மிகவும் முட்டாளாக விளங்கும் அவருக்கு, ஓர் உண்மையான பாசிசவாத இயக்கத்திற்கான பாரிய அடித்தளம் எதுவும் இல்லை. அவரது அரசியல், எவ்விதத்திலும் பிரபல்யமானதல்ல எதுவுமே நிஜமான மக்கள் செல்வாக்கைப் பெறவில்லை. சமூகரீதியில் ஒட்டுண்ணித்தனமான பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கு தான் ட்ரம்பின் நிஜமான ஆதரவுக்கான அடித்தளமாக இருக்கிறது. அதன் ஆழ்ந்த உணர்வுகளை, அவர், எந்தவித சங்கடமோ அல்லது கூச்சமோ இல்லாமல், வெளிப்படுத்துகிறார்: அதாவது, கொரோனா வைரஸின் 100,000 உயிரிழப்புகளை விட டோவ் இன் 25,000 அதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

வோல் ஸ்ட்ரீட் நலன்களை விலையாக கொடுத்து இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அமைப்புரீதியிலான மற்றும் தேசியளவில்-ஒருங்கிணைந்த முயற்சிகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டன என்ற நம்பிக்கைதான் வோல் ஸ்ட்ரீட்டின் பரவச நிலையை எரியூட்டி வரும் பிரதான காரணிகளில் ஒன்றாக உள்ளது. டாக்டர் ஆண்டனி பௌஸி நேற்றைய மனிதராக ஆகிவிட்டார். பொதுமக்களுக்குக் கல்வியூட்டுவது, ஒரு தேசிய பரிசோதனையை நடைமுறைப்படுத்துவது, நோய்தொற்றின் தொடர்பைப் பின்தொடர்வது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற செய்வது என விஞ்ஞான மற்றும் பொது சுகாதார கவனிப்பு சமூகத்தின் முயற்சிகளானது, நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஒட்டுமொத்தமாக விஞ்ஞானத்துறை சமூகத்தை மதிப்பிழக்க செய்வதற்காக ட்ரம்ப் நிர்வாகமும் கணிசமான ஊடக பிரிவுகளும் நடத்திய தொடர்ச்சியான மற்றும் வஞ்சகமான பிரச்சாரத்தால் கடுமையாக பலவீனப்பட்டு போயுள்ளன.

தொற்றுநோயின் மோசமான காலம் முடிந்து விட்டது என்ற பிரமையை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக, உலக சுகாதார அமைப்பின் ஒரு செயல் இயக்குனர் டாக்டர் மைக் ரெயன் திங்கட்கிழமை குறிப்பிடுகையில், “இப்போது நாம் இரண்டாவது அலையில் இல்லை. நாம் உலகளவில் முதல் அலையின் மத்தியில் உள்ளோம்,” என்றார்.

மக்கள்தொகையின் ஒரு கணிசமான பெரும்பான்மையினர் விரைவாக "பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு" உடன்படவில்லை என்பதை பொதுக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இந்த வாரயிறுதி நினைவு தினத்தில் திரண்ட கூட்டத்தின் காட்சிகளில் இருந்து மக்களிடையே இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவுவதை அனுமதிக்கும் "சமூக எதிர்ப்புசக்தி அதிகரிப்பு" கொள்கைக்கு, அதாவது மக்களிடையே இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவுவதை அனுமதிப்பதற்கு, பரந்த ஆதரவிருப்பதாக புறமதிப்பீடு செய்வது தவறாக போய்விடும். இத்தகைய கூட்டங்களில் பலவும் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றாலும் கூட, நீண்டகாலமாகவும், முன்னொருபோதும் இல்லாத கால சமூக தனிமைப்படலில் இருந்து சிறிய இடைவெளியை எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கையாக அவை ஒரு புரிந்து கொள்ளத்தக்க விருப்பத்தால் ஊக்குவிக்கப்பட்டிருந்தன.

ஆனால் அமெரிக்காவின் வரலாற்று கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய சில குறிப்பிட்ட போக்குகளும் அங்கே செயல்பட்டு வருகின்றன. "என்னை உதைக்க வேண்டாம்" (Don’t tread on me) என்ற கோஷம் நிலவிய நிஜமான புரட்சிகர சகாப்த காலந்தொட்டு அரசு அதிகாரத்தின் மீதான அவநம்பிக்கை மற்றும் விரோதத்தின் ஒரு நீண்ட பாரம்பரியமும் அங்கே உள்ளது. அங்கே தனியுரிமை கோட்பாட்டின் (individualism) பலமான அம்சமும் உள்ளது. தனிநபர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று கட்டளையிடுவது பலரை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி இருக்கின்றது.

ஆனால் இத்தகைய சமூக மற்றும் கலாச்சார பண்புகள், நன்கு அபிவிருத்தி அடைந்த வர்க்க நனவும் சோசலிச அரசியல் நோக்குநிலையில் இல்லாத நிலையில், பெரும்பாலும் பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக ஆளும் உயரடுக்கால் —குறிப்பாக கம்யூனிச-விரோத வடிவத்தில்— சாதகமாக்கிக் கொள்ளப்பட்டு மோசடியாக கையாளப்படுகின்றன.

மக்களின் கருத்தைத் திரித்து விடுவதற்காகவும் மற்றும் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைக் குழிபறிக்கவும் ஊடகங்களது முயற்சிகளை ஆவணப்படுத்தும் பல மதிப்புடைய ஆய்வுகளை சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் வெளியிட்டுள்ளது. பேராசிரியர்கள் Leonardo Burszteyn (சிகாகோ பல்கலைக்கழகம்), ஆகாஷ் ராவ் (ஹார்வார்டு பல்கலைக்கழகம்), கிறிஸ்தோபர் ரோத் (வார்விக் பல்கலைக்கழகம்) மற்றும் David Yanagizawa-Drott (ஜூரிச் பல்கலைக்கழகம்) ஆகியோரது "ஒரு தொற்றுநோயின் போது தவறான செய்தி அளித்தல்" என்று தலைப்பிட்ட ஓர் ஆவணம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

ஒரு தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மிக முக்கியமாக குடிமக்களிடையே நிலவும் திடமான நம்பிக்கைகளைச் சார்ந்துள்ளன. ஆனால் 2020 இல் இந்த புதிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலுடன் இந்த அச்சுறுத்தலின் அளவைக் குறைத்துக் காட்டும் செய்திகளின் பரவலும் சேர்ந்து கொண்டது, அத்துடன் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவமும் கைவிடப்பட்டு வந்தது. குறிப்பாக, அதிகமாக பார்க்கப்படும் கேபிள் வலையமைப்பான Fox News இந்த தொற்றுநோய் குறித்து தவறான செய்திகளைப் பரப்பியதற்காக பரந்தளவில் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

இந்த அறிக்கை Fox வலையமைப்பின் நெறியாளர் சீன் ஹன்னட்டியின் அறிக்கைகளைப் பிரத்யேகமாக சுட்டிக்காட்டி, அவரின் பார்வையாளர்களுக்கும் மற்றும் வீட்டில் இருக்கக் கூறும் கொள்கைகளுக்கான விரோதங்களுக்கும் இடையிலான அனுபவரீதியிலான தொடர்பை ஸ்தாபித்து காட்டுகிறது. ஹன்னட்டியின் பிரச்சாரமும் மற்றும் சம்பந்தப்பட்ட வலதுசாரி பிரச்சாரமும் வேலையிழப்புகள் மற்றும் வருவாய் இழப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரிவுகளுடன் ஒத்திருக்கின்றன என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் பெக்கர் பிரெட்மன் அமைப்பின் ஆராய்ச்சியினது அனுபவரீதியிலான கண்டுபிடிப்புகளில் ஆர்வமூட்டுவது என்னவென்றால், பிற்போக்குத்தனமான மற்றும் விஞ்ஞானத்திற்குப் புறம்பான பிரச்சாரம் பரப்பப்படுவதற்கு உதவி செய்யும் ஆழ்ந்த சமூக, அரசியல், கலாச்சார மற்றும் புத்திஜீவித சூழலுக்குள் மிகச் சிறிதளவே ஆய்வை வழங்குகிறது. அது Fox News இக்கு சேவையாற்றி உள்ள சமூக-பொருளாதார மற்றும் வர்க்க நலன்களைக் குறித்த ஓர் ஆய்வைக் கைவிடுகிறது. Fox மற்றும் ஹன்னட்டியின் பாத்திரம் ஓரளவுக்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள போதினும், அந்த அறிக்கை பொறுப்பின்றி வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஸ்தாபக ஊடகங்களின் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரதிநிதிகள் வகித்த கேடுகெட்ட பாத்திரத்தையும் புறக்கணிக்கிறது.

உண்மையில், வாஷிங்டன் போஸ்டும் சரி நியூ யோர்க் டைம்ஸூம் சரி, இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு அரசியல் சட்டபூர்வத்தன்மையை வழங்கி உள்ளன. ஏறத்தாழ மார்ச் மாதத்தில் இருந்தே, டைம்ஸ் பத்திரிகையின் மிகவும் பிரபலமான கட்டுரையாளர் தோமஸ் பிரெட்மன் ஸ்வீடனின் "சமூக எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்" கொள்கையை ஏற்றுக் கொள்ளத்தக்க முன்மாதிரியாக பாராட்டத் தொடங்கினார். அதே தொனி போஸ்டின் தலையங்கத்திலும் கருத்துரைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிச்சிகனின் லான்சிங் மற்றும் ஏனைய நகரங்களில் சமூக இடைவெளிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வணிக நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒழுங்கமைக்கப்பட்ட சிறிய ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் பரந்தளவில் பரப்பப்பட்டன. ஆனால் அதுபோன்ற போராட்டங்கள் ஒரு பாரிய இயக்கத்தின் பரிமாணங்களைப் பெறவில்லை.

ஒரு வெளிப்படையான முதலாளித்துவ-எதிர்ப்பு, சோசலிச சர்வதேசியவாத அடித்தளத்தில் மட்டுமே அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு வேலைத்திட்டமோ முன்னோக்கோ தொழிலாள வர்க்கத்திடம் இல்லை என்கின்ற நிலையில், "வேலைக்குத் திரும்புவதற்கான" பிரச்சாரம் அதிகரித்து வரும் விரக்திக்கு முறையிடுகிறது. ஆனால் இந்த விரக்தி, இல்லாமல்போக செய்யக்கூடியதொன்றே.

தொழிலாள வர்க்கத்திற்குள் முன்னோக்கிய பாதையைக் காட்டும் ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை முன்னெடுப்பதே புரட்சிகர சோசலிச இயக்கத்தின் பணியாகும்.

இந்த தொற்றுநோயின் வெடிப்பு, ஆளும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே நிலவும் இணைக்கவியலாத இடைவெளியை அம்பலப்படுத்தி உள்ளது. ஆளும் உயரடுக்கைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பு அதன் பொருளாதார நலன்களுக்கு வழி கொடுக்க அனுமதிப்பதாக இருக்க வேண்டும் என்கிறது. மனித உயிர்களின் விலையைப் பொருட்படுத்தாமல் அது வேலைக்குத் திரும்புமாறு கோருகிறது, அவ்விதத்தில் தான் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு சக்தியிலிருந்து இலாபத்தை உறிஞ்சி சுரண்டல் நிகழ்வுபோக்கை நடத்த முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு மனித உயிர்களின் பாதுகாப்புக்கு கேள்விக்கிடமற்ற முன்னுரிமையை பிரதானமாக நிறுத்துகிறது. வைரஸ் பரவல் உயிர்களை ஆபத்திற்குட்படுத்தும் வேலையிடங்களையும் ஆலைகளையும் திறப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்குள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட இறைச்சி பதனிடும் ஆலைகள் மற்றும் வாகனத்துறை ஆலைகளின் யதார்த்தம், பாதுகாப்பற்ற வேலையிடங்களை மூடுவதற்கு கூட்டு நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை உயர்த்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி அதுபோன்ற முயற்சிகளை ஆதரிப்பதுடன், இலாபங்களுக்காக உயிர்களை கீழ்ப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களுக்கு உதவ அதனால் இயலுமான அத்தனையும் செய்யும். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பைப் பெருநிறுவன நிர்வாகத்தின் கரங்களில் வெளியில் எடுக்க அவசியமான விதத்தில், சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுக்களைக் கட்டமைக்குமாறு நாங்கள் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.

இறுதி ஆய்வுகளில், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாகும். இதற்கு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், இந்த இலாப நோக்கு அமைப்புமுறையை இல்லாதொழிப்பதற்கான ஒரு புரட்சிகர இயக்கத்தின் அடித்தளமாக, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சக்தி வாய்ந்த சோசலிச நனவும் அரசியல் கலாச்சாரமும் மறுமலர்ச்சி அடைய செய்வது அவசியமாகும்.

Loading