இந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் நோயாளிகளின் விரைவான பெருக்கத்தின் காரணமாக, இந்தியாவின் வணிக தலைநகரமும், இரண்டாவது பெரிய நகரமுமான மும்பையில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை சீர்குலைந்து வருகிறது. சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியான மும்பை, 31,000 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுடன், அல்லது நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட நோயாளிகளுடன், மேலும் 4,300 க்கு மேற்பட்ட நாட்டின் மொத்த கோவிட்-19 இறப்புக்களில் கிட்டத்தட்ட கால் பகுதியுடன் கூட, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாக உருவெடுத்துள்ளது.

மே 25 அன்று India Today பத்திரிகையில் வெளிவந்த ஒரு பகுப்பாய்வின் படி, இந்நகரத்தின் மக்கள்தொகையில் குறைந்தது 0.22 சதவிகிதம் பேர் தற்போது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், “மே 22 அன்று மட்டும், மும்பையில் 1,751 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர், மாஸ்கோவை (ரஷ்யா) தவிர்த்து உலகின் எந்த நகரத்தை காட்டிலும் மிக அதிக நோயாளிகளை இது கொண்டிருந்தது. கடந்த வாரத்தில், மும்பையில் கோவிட்-19 நோயாளிகளின் வளர்ச்சி விகிதம், பிரேசிலின் சாவோ பாவ்லோ மற்றும் மாஸ்கோ போன்ற நகரங்களை காட்டிலும் கணிசமாக அதிகரித்துவிட்டிருந்தது,” என்று India Today குறிப்பிட்டது.

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்ற நிலையில், மருத்துவமனையில் படுக்கை வசதியுடன் சிகிச்சை பெற நோயாளிகளை காத்திருப்பு பட்டியிலில் வைக்கும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். Hindustan Times பத்திரிகை, மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் சிகச்சை பெறுவதற்கு பல நாட்கள் முயன்று தோல்வியடைந்ததன் பின்னர் இறந்துபோன கோவிட்-19 நோயாளிகளின் கொடூரமான கதைகளுடன் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஒரு நோயாளியைப் பற்றி, ஒருவர் தனது 38 வயது சகோதரருக்காக மருத்துவமனையில் படுக்கை வசதியுடன் சிகிச்சை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாக முயன்று கிடைக்கப்பெறாத நிலையில், அவர் நோயால் அவதியுறுவதை மட்டுமே காண முடிந்தது என்று குறிப்பிட்டிருந்தது.

மும்பையின் தாராவி சேரிப் பகுதி

“நேற்று இரவு வெறும் ஆறு மணி நேரத்திற்குள் 15 முதல் 18 வரையிலான இறப்புக்கள் நிகழ்ந்ததை நான் கண்டேன், அனைவருமே கோவிட்-19 பாதிப்பினால் இறந்தனர்,” என்று மும்பையின் KEM மருத்துவமனை மருத்துவர் ஒருவர் BBC க்கு தெரிவித்தார். மேலும் அவர், “ஒரே வேலை நேரத்தில் பலர் இறப்பதை இதற்கு முன்பு எப்போதாவது நான் பார்த்திருக்கிறேனா? இது ஒரு போர்க்களம் போலவே உள்ளது. ஒரே படுக்கையில் இரண்டு முதல் மூன்று நோயாளிகள், சிலர் தரையில், சிலர் தாழ்வாரங்களில் கிடந்து சிகிச்சை பெறும் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். எங்களிடம் போதுமான பிராணவாயு செலுத்து கருவிகள் இல்லை. இந்நிலையில் சில நோயாளிகளுக்கு பிராணவாயு இணைப்பு தேவைப்பட்டாலும், எங்களால் அவர்களுக்கு பிராணவாயுவை வழங்க முடியவில்லை,” என்றும் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் மும்பை மருத்துவமனைகளின் கொடூரமான நிலைமைகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகின்றன. பல வாரங்களுக்கு முன்னர், சியோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு அருகே கருப்பு பிளாஸ்டிக் தாள்களால் போர்த்தப்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று தோன்றியது. இதேபோல திங்களன்று NDTV பகிர்ந்து கொண்ட ஒரு காணொளி, மும்பை நகராட்சி அரசாங்க அதிகாரத்துவமான பிரிஹன்மும்பை மாநகராட்சியின் (Brihanmumbai Municipal Corporation-BMC) கீழ் இயங்கும் ராஜவாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிக்கு அருகே ஒரு சடலம் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டியது. இந்த காணொளியில் பெண் நோயாளி ஒருவர் அந்த மருத்துவ பிரிவில் நோயினால் இரண்டாவதாக இறந்த பெண்ணின் சடலம் இருந்ததாகத் தெரிவித்தார். மேலும், இந்த “பெண் தண்ணீர் கேட்டார், ஆனால் அவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கு அங்கு எவரும் இல்லை” அதாவது “ஊழியர்கள் எவரும் இல்லை” என்று நோயாளி கூறினார்.

அதே காணொளியில் பேசிய, தங்கி பணிபுரியும் மருத்துவர்களின் மகாராஷ்ட்ர சங்கத்தின் (Maharashtra Association of Resident Doctors) தலைவரான தீபக் முண்டே, “தற்போது நிலைமை மோசமாக உள்ளது, இன்னும் மோசமாகிவிடும். ஏனென்றால் இங்கு சடலங்களை அகற்றுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது… மேலும் எழுத்து வேலைகளுக்கு நேரம் அதிகம் தேவைப்படுகின்ற நிலையில், எங்களுக்கு வேலைப்பளுவும் அதிகமாக உள்ளது” என்று தெரிவிக்கிறார். மேலும், NDTV நிரூபர், “நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இங்கு குறைவாகவே உள்ளன… இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் கூட உள்ளூர் மக்களின் உதவியுடன் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தான் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்படுகிறார்கள்,” என்று கூறினார்.

“இந்த நெருக்கடியை சமாளிக்க இம்மாநிலத்தின் அரசு மருத்துவமனைகள், பிற மாநிலங்களின், அதாவது எல்லைகளை கடந்து தென் இந்தியாவில் கேரளா போன்ற பிற மாநில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் உதவியை நாடுகின்றன,” என்ற உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதுடன் இந்த காணொளி நிறைவு பெறுகின்றது. கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவிற்கு மே 4 அன்று மகாராஷ்ட்ர அரசு – மும்பையை தலைநகரமாகக் கொண்ட மாநிலம் - எழுதிய ஒரு கடிதத்தில், மும்பையின் மஹாலக்ஷ்மி ரேஸ் கோர்ஸில் நிறுவப்பட்டுள்ள 600 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையத்தை நிர்வகிக்க 50 சிறப்பு மருத்துவர்களும் மற்றும் 100 செவிலியர்களும் தேவைப்படுவதாகக் கேட்டுக்கொண்டது. இது, 150,000 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களைக் கொண்ட, அதிலும் இந்தியாவின் அனைத்து மருத்துவர்களில் 30 சதவிகிதத்தினரைக் கொண்ட, மகாராஷ்ட்ர மாநிலத்தின் நிலைமை எவ்வளவு பேரழிவுகரமாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Hindustan Times இன் மற்றொரு கட்டுரை, பெயர் அறியப்படாத நிலையில் உள்ள ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி, சுகாதார வசதிகள் “போதுமானதாக இல்லை” என்று விளக்கியது பற்றி மேற்கோள் காட்டியது. அரசாங்கத்தின் கணக்கீடுகளின் படி, மும்பையின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 0.5 சதவிகிதத்தினர், அல்லது குறைந்தது 100,000 பேர், ஜூன் இறுதிக்குள் நோய்தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இதில் 5 சதவிகித நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படும் என்று கருதப்படும் நிலையில், இந்த நகரத்தில் 5,000 தீவிர சிகிச்சை படுக்கைகள் தேவைப்படும் என்று Times பத்திரிகை குறிப்பிட்டது. என்றாலும், சுகாதார அவசரத்தை மேற்கோள் காட்டி, சமீபத்தில் அரசாங்க ஆணைக்குட்பட்டு 80 சதவிகிதத்திற்கும் மேலாக தனியார் மருத்துவமனை படுக்கைகளின் பயன்பாட்டை உள்ளடக்கினாலும், BMC தன் வசம் வெறும் 1,165 தீவிர சிகிச்சை படுக்கைகளையே கொண்டிருக்கும். இது, தேவைப்படும் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கை காட்டிலும் சற்று கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொற்றுநோயால் விளைந்த நெருக்கடியின் காரணமாக, பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத காரணத்தால், இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது.

அச்சுறுத்தும் வகையில், வறுமையின் காரணமாக ஏற்கனவே பெரும்பாலான மக்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மற்றும், நெருக்கடியான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சரியான சுகாதாரமின்மை காரணமாக கோவிட்-19 க்கு எதிரான அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட சாத்தியமில்லாத மும்பையின் சேரிப் பகுதிகளில் கோவிட்-19 நோய்தொற்று வேரூன்றியுள்ளது.

சுமார் 700,000 மக்களுக்கு வசிப்பிடமாக உள்ள மும்பையின் தாராவி சேரிப் பகுதி, சதுர கிலோமீட்டருக்கு 275,000 க்கு மேலான மக்கள் அடர்த்தியுடன் பூகோள அளவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. தாராவியின் குடியிருப்பாளர்களில் எழுபத்தெட்டு சதவிகிதத்தினர் வழமையான தண்ணீர் விநியோகத்தை கூட பெற முடிவதில்லை. சராசரியாக, 50 பேர் ஒரு குளியலறையை பகிர்ந்து கொள்கிறார்கள், மேலும் பொதுவாக 8 முதல் 12 பேர் ஒற்றை அறை குடியிருப்புக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

தாராவியில் மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 1,621 ஆக உள்ளது. மேலும் இங்கு இந்த நோயினால் 59 பேர் இறந்துள்ளனர்.

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கென மும்பையிலும் மகாராஷ்ட்ராவிலும் தைரியமாக போராடி வரும் மருத்துவ ஊழியர்கள் தற்போது கொடூரமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திங்கள்கிழமை நிலவரப்படி, 250 மருத்துவர்கள் மற்றும் 310 செவிலியர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,000 முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 நோய்தொற்றுக்கு இதுவரை குறைந்தது மூன்று மும்பை மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்.

ஞாயிறன்று, 45 வயதான KEM மருத்துவமனை சுகாதாரப் பணியாளர் ஒருவர் தனக்கு கோவிட்-19 நோயறிகுறி இருப்பதை அவர் தெரியபடுத்திய பின்னரும், மேலும் நான்கு நாட்கள் வேலை செய்யும்படி நிர்வாகம் அவரை நிர்ப்பந்தித்த நிலையில் அவர் இறந்துபோனதால், சீற்றமடைந்த நூற்றுக்கணக்கான அவரது சக பணியாளர்கள் செவ்வாயன்று ஐந்தரை மணிநேரத்திற்கு வெளிநடப்பு செய்தனர். “நாங்கள் மோசமான நிலைமைகளின் கீழும், அதிகப்படியான மணி நேரங்களுக்கும் வேலை செய்கிறோம். குறிப்பாக, எங்களுக்கு நோயறிகுறிகள் இருந்தால் எங்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட வேண்டும், ஆனால் அவ்வாறு நடப்பதில்லை,” என்று மாநகராட்சி ஊழியர் சங்க உறுப்பினரான பிரதீப் நர்கர் தெரிவித்தார்.

மருத்துவ ஊழியர்களும் ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகள், பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் அவரது அதிவலது பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கமும் மார்ச் மாத இறுதியில் கோவிட்-19 க்கு எதிராக பிரகடனப்படுத்திய “போரில்” முழு தோல்வியடைந்திருப்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக இரண்டு மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் பின்னர், நான்கு மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்திற்கு முன்பாக அறிவித்து, மார்ச் 25 அன்று முன்னேற்பாடுகள் எதுவுமில்லாத தேசியளவிலான 21 நாள் முழு அடைப்பை மோடி திணித்தார்.

உலகில் திணிக்கப்பட்ட கடுமையான அடைப்புக்களில் ஒன்றாகவுள்ள இந்த முழு அடைப்பு, முதலில் 19 நாட்களுக்கும், அடுத்து 14 நாட்களுக்கும், மேலும் தற்போது மே 31 ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் வகையில் மேலும் இரண்டு வாரங்களுக்கும் என அடுத்தடுத்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இருந்தாலும், மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட அடைப்புக்களின் போது பெருவணிகத்தின் கோரிக்கையின் பேரில் செயல்படும் இந்த அரசாங்கம், பொருளாதாரத்தை “மீண்டும் திறப்பதற்கு” அதிலும் குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமான வேலைகளை தொடங்குவதற்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்துள்ளது.

முழு அடைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது, இந்தியாவில் வெறும் 657 கோவிட்-19 நோயாளிகளே இருந்தனர் என்பதுடன், சுமார் ஒரு டசின் பேர் மட்டுமே அதற்கு பலியாகியிருந்தனர். ஆனால் நேற்றைய நிலவரப்படி, இந்நாட்டில் 151,767 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் இருப்பதுடன், நாளொன்றுக்கு 6,000 க்கு மேற்பட்டதாக புதிய பாதிப்புக்களின் விகிதம் உள்ளது என்ற நிலையில், இந்த எண்ணிக்கை சனிக்கிழமை அன்று அநேகமாக 169,000 ஆக உயர்ந்துவிடக்கூடும், அல்லது கோவிட்-19 நோய்தொற்று பரவ ஆரம்பித்த சீனாவிலுள்ள மொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கை எட்டியிருக்கும். தற்போது மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 4,337 ஆக உள்ளது.

இந்த முழு அடைப்பு நடவடிக்கையோடு முறையான பாரிய பரிசோதனை நடவடிக்கைகளோ மற்றும் நாட்டின் சீர்குலைந்து நிற்கின்ற பொது சுகாதார அமைப்பிற்கு தேவையான வசதிகளை பெருமளவில் ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. மேலும், ஒரே இரவில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் முறைசாரா துறையில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான மில்லியன் வறிய தொழிலாளர்களுக்கு கணிசமான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தவறியதுடன், தன்னை தற்காத்துக் கொள்ள இரக்கமின்றி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் கைவிடுகின்றது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான விரக்தியடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களை நோக்கித் திரும்பியும், வெறுங்கால்களுடன் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தும் அடைக்கலம் தேடினர், மேலும் இதனால் கிராமப்புற இந்தியா முழுவதிலும் கவனக்குறைவாக வைரஸ் பரவும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பும் படி இந்திய ஆளும் உயரடுக்கு கொடுத்து வரும் நாசகரமான அழுத்தம், கோவிட்-19 நோய்தொற்று விரைந்து பரவி வரும் மற்றும் இறப்புக்கள் அதிகரித்து வரும் நிலைக்கு ஒத்திசைவாக உள்ளது.

மும்பை, புது தில்லி, சென்னை, அஹமதாபாத் மற்றும் பிற நகர்ப்புற மையங்கள் கோவிட்-19 நோயாளிகளின் பெருமளவிலான அதிகரிப்பிற்கு காரணமாகவுள்ள அதேவேளை, சமீபத்திய நாட்களில் பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கிராமப்புறங்களிலும் கூட நோய்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

மோடியும் இந்திய உயரடுக்கினரும், தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான எந்தவொரு முறையான முயற்சியையும் கைவிடச் செய்வதற்கும் மற்றும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அபாயகரமான முழு அடைப்பினால் விளைந்த துயரங்களையும் விரக்தியையும் இழிந்த முறையில் சுரண்டிக்கொள்கின்றனர், இதனால் பெருவணிகங்கள் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து இலாபத்தை உறிஞ்சும் வேலையை மீண்டும் தொடங்கலாம் என்ற நிலையில், நோய் பரவலாக பரவும் நிலை உருவாகிறது.

இது மில்லியன் கணக்கான மக்களின் இறப்பிற்கு காரணமாக அமையும் என்பதை அரசாங்கத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் (National Institute of Epidemiology) தலைவரான ஜெயபிரகாஷ் முலியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதையே காட்டுகிறது. மேலும், இந்தியா அதன் பொருளாதாரத்தை “மீண்டும் திறப்பதையும்” மற்றும் கூட்டு எதிர்ப்பு சக்தி கொள்கையை பின்பற்றுவதையும் வெளிப்படையாக ஆதரிப்பவராக முலியில் உள்ளார்.

Outlook பத்திரிகைக்கு தான் அளித்த ஒரு பேட்டியில், முலியில், “அடைப்புக்கள் கணிசமான அளவிற்கு திறக்கப்படும் நிலையில், இந்தியா குறைந்தது இரண்டு மில்லியன் இறப்புக்களை எதிர்கொள்ளும்…. இறப்பு எண்ணிக்கை குறைவானது தான் என்பதால், இளைஞர்கள் வெளியே சென்று வேலை செய்யலாம்” என்றார்.

இதற்கிடையில், மோடியின் இந்து மேலாதிக்க பிஜேபி, மகாராஷ்ட்ராவில், “ஜனாதிபதி ஆட்சியை” பயன்படுத்துவது உட்பட, மாநில அரசாங்கத்தை வெளியேற்றும் வகையில் அம்மாநிலத்தின் தற்போதைய பேரழிவுகர நிலைமையை அரசியல் ரீதியாக சுரண்ட முயற்சிக்கின்றது. இவ்வாறாக இங்குள்ள ஜனநாயக விரோத அரசியலமைப்பு ஏற்பாடு இந்தியாவின் மத்திய அரசாங்கமானது “அவசரகாலத்தில்” ஒரு மாநில நிர்வாகத்தை அதன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அனுமதிக்கின்றது. இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்ட்ரா தற்போது தீவிர வலதுசாரி கட்சியான சிவசேனாவால் நிர்வகிக்கப்படுகின்றது, இக்கட்சி பெயரளவில் மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, சமீபகாலம் வரை பிஜேபி க்கு நெருங்கியதொரு கூட்டணி கட்சியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Loading