ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மினியாபொலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவரை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிரான அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது ஒற்றுமையைக் காட்டும் விதமாக, சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். 46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஃபுளோய்ட், அவரது தொண்டையில் ஒரு பொலிஸ்காரர் முழங்காலை வைத்து ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால் இறந்துபோனார்.

இது தொடர்பாக ஜேர்மனியில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பவேரியாவின் தலைநகரமான முனீச் நகரத்தில், சனிக்கிழமை மாலை 400 பேர் ஒன்றுதிரண்டு நகரின் அமெரிக்க இணைத்தூதரகம் நோக்கி அணிவகுப்பு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வார இறுதிக்குள்ளாக பேர்லினில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை, குரூஸ்பேர்க் மாவட்டம் வழியாக நடந்த ஒரு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு சுமார் 1,500 இளைஞர்களை ஈர்த்தது. “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” என்ற பதாகையுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், “என்னால் சுவாசிக்க முடியவில்லை,” “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” மற்றும் “கருப்பாக இருப்பது குற்றமல்ல” போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். அதற்கு சற்று முன்பாக “அமெரிக்காவில் இனவெறி மிக்க பொலிஸ் வன்முறைக்கு எதிரான நினைவு அணிவகுப்பு” பிராண்டன்பேர்க் நுழைவாயிலை நோக்கி நடந்திருந்தது.

இலண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்று கோஷமிட்டபடி செல்கின்றனர்

பேர்லினில் அமெரிக்க தூதரகம் முன்பாக சனியன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமான பொலிஸ் வன்முறைக்கு எதிரான தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்களது கைகளில் “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்!” மற்றும் “இனவெறி மிக்க பொலிஸ் வன்முறைக்கு எதிராக” என்ற சுலோகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஃபுளோய்ட்டின் மரணத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை, மாறாக ஜேர்மனியின் நிலைமைகள், மற்றும் நாட்டிற்குள் நிகழ்ந்து வரும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிராகவும் போராடினர். பொலிஸ் படையிலுள்ள நவ-நாஜி கட்டமைப்புக்கள் பற்றி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று பேச்சாளர்களில் ஒருவர் கூறினார். மேலும், ஒரு பங்கேற்பாளர் பின்வருமாறு விளக்கினார்: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்ததாகக் கூறப்படும் அனைத்து துறைகளிலும் எஞ்சியிருந்த நாஜி தொடர்புடைவர்களை அகற்றுவது உண்மையில் நடக்கவில்லை. எங்களின் இன்னும் பல்வேறு கட்டமைப்பு பகுதிகளில் நாஜிக்கள் உள்ளனர். மற்றொருவர் ஜேர்மனியில் நடந்த பொலிஸ் வன்முறை பற்றி நேரடியாக இவ்வாறு குறிப்பிடுகிறார்: அது எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. இது ஜேர்மனியில் கிட்டத்தட்ட தினமும் நடக்கிறது என்று விளக்கமளித்து பின்னர், 2005 ஆம் ஆண்டில் சிறைச்சாலையில் எரித்துக் கொல்லப்பட்ட ஓரி ஜல்லோவின் வழக்கு பற்றி அவர் நினைவுகூர்ந்தார்.

சனிக்கிழமையன்று, டேனிஷ் தலைநகர் கோபன்ஹேகனில் 5,000 பேர் வரை ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை ஆஸ்டர்பிரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொடங்கி கிறிஸ்டியன்போர்க் அரண்மனை முன்பு முடித்தனர்.

கடந்த வியாழக்கிழமை, இத்தாலியில், மிலான் நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று பகலில், ஃபுளோய்ட்டின் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற கடைசி வார்த்தைகளை குறிப்பிடும் விதமாக நகரில் சுவர் சித்திரம் ஒன்று வரையப்பட்டது.

கனடாவில், டொரொன்டோவின் கிறிஸ்டி பிட்ஸ் பூங்காவில் சனிக்கிழமையன்று ஃபுளோய்ட் மற்றும் ரெஜிஸ் கோர்ச்சின்ஸ்கி-பாக்கே ஆகியோரின் மரணங்கள் குறித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோர்ச்சின்ஸ்கி-பாக்கே என்ற 29 வயதான கறுப்பின பெண்மணி கடந்த புதன்கிழமை, பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு தொடர்புகொண்டபோது அவர் வசித்து வந்த 24வது மாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். கோர்ச்சின்ஸ்கி-பாக்கேயின் குடும்பத்தினர் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய உண்மையை நிரூபிக்கவும், பொலிஸ் வந்த போது நடந்த நிகழ்வுகள் பற்றி விவாதம் செய்யவும் முயன்று வருகின்றனர்.

ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் ஒற்றுமையை காட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன, அங்கு இஸ்ரேலிய எல்லை பொலிசார் ஐயாத் ஹலாக் என்பவரை கொலை செய்ததை எதிர்த்து நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் சனிக்கிழமையன்று அணிவகுத்துச் சென்றனர். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பாலஸ்தீனியரான ஹலாக் ஜெருசலேமின் பழைய நகரத்தில் வைத்து சுடப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் “பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை பிரச்சினை” மற்றும் “ஐயாத், மற்றும் ஜோர்ஜூக்கு நீதி வேண்டும்” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராடினர்.

இலண்டனில், டவுனிங் வீதி மற்றும் பாராளுமன்ற சபைகளுக்கு முன்பாக அணிவகுத்துச் செல்வதற்கு முன்னர், ஞாயிறன்று மாலை Trafalgar சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டனர். Battersea பகுதியில் உள்ள நைன் எல்ம்ஸ் பகுதியில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே அணிவகுப்பதற்காக அவர்கள் தேம்ஸ் நதியைக் கடந்து சென்றனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் “நீதி இல்லை, அமைதி இல்லை”, “கறுப்பினத்தவரின் வாழ்க்கை பிரச்சினை” மற்றும் “ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்று எனது பெயரைச் சொல்லுங்கள்” என்று கோஷமிட்டனர். மேலும் அவர்கள், “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்,” “இனவெறிக்கு இடமில்லை” மற்றும் “என்னால் சுவாசிக்க முடியவில்லை” போன்ற சுலோகங்களுடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

பல நாடுகளிலும் மற்றும் அமெரிக்கா எங்கிலும் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தில் பொலிஸ் அதிகாரிகளால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய, மே 31, 2020 ஞாயிறன்று மத்திய இலண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் இருந்து மக்கள் அணிவகுத்துச் செல்கின்றனர் (AP Photo/Matt Dunham)

ஆஸ்திரேலியாவின் “Nine News,” ஊடகத்திற்கான ஐரோப்பிய நிரூபர் சோஃபி வால்ஸிடம் ஒரு ஆர்ப்பாட்டக்காரர், இங்கு இன்னும் பெரியளவிலான ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்தோம், நாங்கள் போதுமானதை அடைந்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

மேலும், மதியம் 1 மணியளவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஃபுளோய்ட்டை நினைவுகூரும் வகையில் முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டம் லாம்பெத் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி, அமெரிக்க தூதரகத்திற்கு செல்லும் பாதையைத் தடுத்தது. பல ஓட்டுநர்கள் கடந்து செல்கையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களது வாகன ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்தனர் என்பதுடன், அங்கிருந்த பார்வையாளர்கள் இது குறித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஃபுளோய்ட்டின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ள அடிப்படை மற்றும் சர்வதேச வர்க்க சிக்கல்களை அங்கீகரிப்பதைக் காட்டும் விதமாக, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கு இலண்டனில் உள்ள வடக்கு கென்சிங்டனில் உள்ள கிரென்ஃபெல் கோபுரத்திற்குச் சென்றனர், ஏனென்றால், அங்குதான் பல தசாப்தங்களாக கட்டுப்பாடு, புறக்கணிப்பு மற்றும் பொறுப்பற்ற வகையில் இலாபமீட்டுதல் ஆகியவற்றின் பேரில் 2017 இல் 72 பேர் கொடூரமாக தீ விபத்தில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் செய்பவர்களை எதிர்கொள்ள பெருநகர பொலிசார் அதிக எண்ணிக்கையில் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். வொயிட்ஹால் பகுதியை பொலிசார் சீர்செய்த போது அவர்கள் தமது பலத்தைக் காட்டியதை குறிக்கும் ஒரு காணொளியை வால்ஷ் ட்வீட் செய்தார். அமெரிக்க தூதரகத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தவிதத்திலும் மேலும் முன்னேறுவதைத் தடுக்க பொலிசார் வரிசையாக நின்றனர். அப்போது அவர்கள் பலரை கைது செய்தனர்.

பெல்லிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளைக் கொண்டு வந்தனர். இரயில்வே தொழிலாளியான பெல்லி முஜிங்கா கடந்த மாதம் கொரொனா வைரஸ் நோய்தொற்று அவருக்கு இருப்பதாகக் கூறி ஒருவர் அவருடன் சண்டையிட்டார். அந்த நபரை தண்டிக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிசார் முடிவு செய்துள்ளதால், அதிகாரிகளால் எதுவும் செய்யப்படவில்லை.

இலண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்கள், சனிக்கிழமை அன்று தலைநகரின் தெற்கில் உள்ள பெக்ஹாமில் நூற்றுக்கணக்கான பேர் அணிவகுத்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்டன. அப்போது “ஒற்றுமை” என்ற ஒரே சுலோகத்துடன் கூடிய பதாகைகளை பலரும் எடுத்துச் சென்றனர்.

பிரிட்டனில் நடந்த மற்ற போராட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று மான்செஸ்டர் மற்றும் கார்டிஃப் நகரங்களில் நடந்தன. கார்டிஃப் நகரின் கோட்டையின் சுவர்கள் போன்று நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பதாகையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “அநீதியின் சூழ்நிலைகளில் நீங்கள் நடுநிலை வகிப்பீர்களானால், நீங்கள் அடக்குமுறையாளர்களின் பக்கத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதாகும்.”

மான்செஸ்டரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தை வீதி, St Ann’s சதுக்கம் மற்றும் பீட்டர் தெரு உள்ளிட்ட நகரத்தின் சில முக்கிய பொதுவழிகள் வழியாக அணிவகுத்துச் சென்றனர். அணிவகுப்பு St Peters சதுக்கத்தில் முடிவடைந்தது, அங்கு எதிர்ப்பாளர்கள் ஃபுளோய்ட்டுக்கு அஞ்சலி செலுத்தினர். இது 1819 பீட்டர்லூ படுகொலை நடந்த இடத்திலிருந்து சில கெஜ தொலைவில் இருந்தது, இங்குதான் சிறு நில உரிமையாளர்களும், வழமையான குதிரைப்படைகளும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிக் கொன்றனர். அவர்களது கோஷங்கள் “ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு நீதி வேண்டும்” மற்றும் “இங்கிலாந்து குற்றமற்றது அல்ல” என்ற வகையில் பொலிஸ் காவலின் போது நிகழ்ந்த இறப்புக்களை குறிப்பிடுகின்றன.

இந்த கடைசி விடயத்தை நிரூபிக்கும் வகையில், வெளியுறவு செயலாளரான டொமினிக் ராப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பாசிசவாத பதிலிறுப்பை வழங்கியது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ட்ரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை “கொள்ளைக்காரர்கள்” என்று கண்டித்தார், மேலும் ஆர்ப்பாட்டங்களை இரத்து செய்ய இராணுவத்தை அனுப்பவிருப்பதாக அச்சுறுத்தினார். மேலும், வெள்ளியன்று, “எந்தவொரு சிரமத்திலும் நாங்கள் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வோம், என்றாலும் கொள்ளை ஆரம்பிக்கப்படும் போது, தாக்குதலும் ஆரம்பிக்கப்படும்” என்று ட்வீட் செய்தார்.

இலண்டனில் டிராஃபல்கர் சதுக்கத்திலிருந்து வொயிட்ஹால் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்

ஞாயிற்றுக்கிழமை Sky News ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில், Raab இவ்வாறு கூறினார்: “பிற உலக தலைவர்கள், அல்லது உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள விளக்கவுரை அல்லது செய்தியாளர் அறிக்கைகள் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை.”

பொலிஸ் வன்முறை குறித்து பிரிட்டிஷ் அரசு தனக்கென சொந்த கொடூரமான பதிவைக் கொண்டுள்ளது. இலண்டன் பெருநகர காவல்துறை மட்டும் 2018 இல் ஐந்து மாத காலத்தில் 41,477 முறைகள் வன்முறைகளை பயன்படுத்தியது. அந்த காலகட்டத்தில், பொலிசார் சந்தேகத்தின் பேரில் டேசர்களை 2,663 முறை சுட்டனர் அல்லது குறிவைத்தனர், மற்றும் இலண்டனில் சந்தேகத்தின் பேரில் உண்மையான துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை 591 முறை மேற்கொண்டனர் – சராசரியாக நாளொன்றுக்கு நான்கு முறை வீதமாக இதை நடத்தினர்.

2017-2018 இல், இங்கிலாந்து பொலிசாரின் தொடர்புக்கு வந்த பின்னர் 283 பேர் தங்களது உயிரை இழந்தனர். அதில், 23 பேரது இறப்பு பொலிஸ் காவலின் போது அல்லது அதற்கு பின்னர் நிகழ்ந்தன, 57 பேர் பொலிஸ் காவலில் இருந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் 29 இறப்புக்கள் சாலை போக்குவரத்து சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என்றும் கூறப்படுகிறது. மேலும், நான்கு பொலிஸ் துப்பாக்கிச் சூடுகள் (அவற்றில் மூன்று பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை) மற்றும் 170 காரணம் குறிப்பிடப்படாத “பிற” மரணங்கள் காவல்துறையினரின் வசம் இருந்தன.

அமெரிக்காவைப் போலவே, இந்த வன்முறையும் கறுப்பின மக்கள் மீது, அதிலும் குறிப்பாக கறுப்பின இளைஞர்கள் மீது அளவுக்கதிகமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது, எவ்வாறாயினும் முதலாளித்துவ அரசினால் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் அடக்கி ஒடுக்கப்படுவதன் அடிப்படையிலேயே இது வேரூன்றியுள்ளது.

எதிர்வரும் வாரத்தில், இலண்டனில் ஜூன் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளிலும், மான்செஸ்டரில் ஜூன் 6 ஆம் திகதியிலும், மற்றும் பிர்மிங்ஹாமில் ஜூன் 4 ஆம் திகதியிலும் என இங்கிலாந்தில் மேலும் பல போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இதேபோன்ற நிகழ்வுகளுக்கு ஐரோப்பா முழுவதிலும் திட்டமிடப்பட்டு வருகின்றன.

பேரணிகள் ஆசிய-பசிபிக் பகுதிகளிலும் விரிவடைந்து வருகின்றன.

அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க சனிக்கிழமையன்று ஜப்பானின் டோக்கியோவில் பல நூறு பேர் ஒன்றுகூடினர். டோக்கியோ பொலிசார் குர்தீஷ் வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதான தொழிலாளி மீது சமீபத்தில் தன்னிச்சையான தாக்குதல் நடத்தியது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர். தாக்குதல் குறித்த பதிவு காட்சிகள், அந்த நபர் தரையில் கிடத்தப்பட்டு இரண்டு அதிகாரிகள் அவரைக் கொடுமைப்படுத்தியதைக் காட்டியது, இது வைரலாகி, மக்களிடையே பரவலான கோபத்தைத் தூண்டியது.

டோக்கியோவில் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதி Credit: @ Gregor_Wakounig (Twitter)

ஆர்ப்பாட்டக்காரர்கள், நன்கு அறியப்பட்ட அணிவகுப்பு இடமான ஷிபுயா சதுக்கத்தில் இருந்து ஷிபுயா காவல் நிலையத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அவர்கள், குர்திஷ் தொழிலாளியை தாக்கிய “குற்றவியல் பொலிஸ்காரர்களை அதிகாரிகள் தண்டிக்க வேண்டும்” என்று கோரியதுடன், “வெளிநாட்டவருக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள்!” போன்ற பிற சுலோகங்களையும் முழக்கமிட்டனர். பெருமளவிலான பொலிசார் போராட்டத்தை கலைக்க முயன்றதுடன், குறைந்தது ஒரு ஆர்வலரையாவது கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவில், சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் உள்ளிட்ட தலைநகரங்களில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவிருப்பதாக ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது ஒற்றுமையைக் காட்டுவதுடன் கூடுதலாக, ஆஸ்திரேலியாவில், பழங்குடியின மக்களை குறிவைத்தவை உட்பட, அங்கு நடந்த பல பொலிஸ் கொலைகளுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

இன்று காலை, பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க ஆர்ப்பாட்டங்கள் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஒத்ததிர்வை ஏற்படுத்துவது தொடர்பான தனது பயத்தை வெளிப்படுத்தினார். “பிற நாடுகளில் நடக்கும் விவகாரங்களை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை,” என்றும், “ஆஸ்திரேலியா அமெரிக்கா அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.

நியூசிலாந்தில், இன்று பிற்பகல் தொடங்கி ஆக்லாந்து, வெல்லிங்டன், கிற்ஸ்ட்சர்ச் மற்றும் டுனெடின் ஆகிய நகரங்களில் பேரணிகள் நடைபெறவுள்ளன.

Loading