முன்னோக்கு

ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸ் படுகொலை உலகெங்கிலும் பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததை எதிர்த்து இந்த வார இறுதியில், அமெரிக்காவில் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், ஹங்கேரி, பிரேசில், தென் கொரியா மற்றும் பல நாடுகளிலும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.

இந்த வாரம் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களிலும், உலகின் மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கண்டத்தில் உள்ள நாடுகளிலுமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில், பிரேசிலில் உள்ள பரானா கூட்டாட்சி பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மற்றவர்கள் Rio de Janeiro நகரில் மாநில அரசாங்க கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். மெக்சிக்கோவிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதுடன், பேர்முடா மற்றும் ஆர்ஜென்டினாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின், சிட்னியில் 3,000 க்கும் மேற்பட்டோர், பெர்த்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் செய்த ஆர்ப்பாட்டங்கள் உட்பட, டசின் கணக்கான ஆர்ப்பாட்டங்கள் ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்டுள்ளன மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது ஏந்தியிருந்த பதாகைகள், “அரசாங்கம் கவலைப்படவில்லை! எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்!” என்றும் “ஆஸ்திரேலியா குற்றமற்றது அல்ல” என்றும் அறிவித்தன.

ஆசியா மற்றும் மத்திய கிழக்கைப் பொறுத்தவரை, இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், துருக்கி, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆபிரிக்காவில், கானா, கென்யா, லைபீரியா, நைஜீரியா, மற்றும் தென்னாபிரிக்காவில் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடாவில், ஒன்டாரியோவில் 20,000 பேர் மற்றும் டொரோன்டோவில் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தது உட்பட, குறைந்தது பத்தொன்பது நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

ஐரோப்பா எங்கிலும் என்ற வகையில், பேர்லினில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியேயும் மற்றும் ஹம்பேர்க்கில் உள்ள துணைத் தூதரகத்திற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானவர்கள் ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களது கோஷங்களில் “உங்களது வலி எனது வலி, உங்களது போராட்டம் எனது போராட்டம்” ஆகியவை அடங்கும். நெதர்லாந்தின், ஆம்ஸ்டர்டாம் மற்றும் ரோட்டர்டாமில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்: கிரேக்கத்தில் ஏதென்ஸிலும்; டென்மார்க்கில் கோபன்ஹெகனிலும்; சுவீடனில் ஸ்டாக்ஹோமிலும்; பின்லாந்தில் ஹெல்சிங்கியிலும்; நோர்வேயில் ஒஸ்லோவிலும் மற்றும் ஐஸ்லாந்தில் ரெய்க்ஜாவிக்கிலும் என பல நாடுகளின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மேலும், இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின், அயர்லாந்து, போலந்து, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா, மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் பிற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய இராஜ்ஜியம் குறைந்தது 25 தனித்தனியான ஆர்ப்பாட்டங்களைச் சந்தித்தது. புதன்கிழமையன்று Hyde பூங்காவில் 15,000 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர், அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளில், “அநீதியான சூழ்நிலைகளில் நீங்கள் நடுநிலை வகிப்பீர்களானால், நீங்கள் அடக்குமுறையாளர்களின் பக்கத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” என்ற சுலோகமும், ஆஸ்திரேலிய ஆர்ப்பாட்டத்தைப் போல “இங்கிலாந்து குற்றமற்றது அல்ல” என்ற சுலோகமும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்சில், மொன்ட்பெலியேயில் 5,000 பேர் அணிவகுத்ததுடன், பாரிஸில் 25,000 பேர் ஆர்ப்பாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியில் ஒரு பேச்சாளர், “அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பது இன்று பிரான்சில் நடந்து கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது” என்று தெரிவித்தார்.

தனிச்சிறப்புடன் முக்கியத்துவம் வாய்ந்ததாக, ஆஸ்திரியாவில், வியன்னாவில் வியாழக்கிழமை அன்று ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொத்த சதவிகிதத்தில் நியூயோர்க்கில் உள்ள நகர்ப்புற மக்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், இது 200,000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட பேரணிக்கு சமமானதாக இருந்திருக்கும்.

அமைதியான பல்வேறு இனம் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான டொனால்ட் ட்ரம்பின் மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்ப்பதன் ஊடாக சர்வதேச அளவிலான ஒற்றுமை வெளிப்படுகிறது. ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் உந்துதலால் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் உலகம் முழுவதிலுமான பில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் முன்வைக்கப்படும் ஆபத்துகளுக்கான ஆரம்பகட்ட அங்கீகாரத்தையும் இவற்றின் அளவு குறிக்கிறது. மேலும், அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டு வரும் காட்சிகளில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கமும், உலகெங்கிலும் பாசிசவாத ஆட்சி வடிவங்களுக்கு ஆணையிடும் தீவிரமான மற்றும் வளர்ந்து வரும் சமத்துவமின்மை மட்டங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட தமது சொந்த சமூக நிலைமைகளின் எதிரொலிப்பைக் காண்கிறது.

அமெரிக்காவில் நிகழ்ந்ததான அரசு வன்முறையுடன் சேர்த்து, பாரிஸில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம், பிரெஞ்சு இளைஞரான Adama Traore (அடாமா டறவுரே) இன் மரணத்தையும் எதிர்த்தது, இவர் 2016 இல் பொலிசாரின் தாக்குதலால் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை கலகப் பிரிவு பொலிஸை கொண்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மிருகத்தனமாக ஒடுக்கியதன் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கிறது, இவர் நாஜி ஒத்துழைப்பாளரான மார்ஷல் பெத்தானை மீண்டும் பழைய பதிவியில் அமர்த்துவதற்கு முனைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிசவாத ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோவின் மேற்பார்வையில் Rio de Janeiro இன் favella சேரிப் பகுதியில் பொலிசார் நிகழ்த்திய தொடர் கொலைகளுக்கு எதிராக பிரேசிலில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஜேர்மன் தொழிலாளர்களும் இளைஞர்களும், பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) முன்னிலைக்கு கொண்டு வந்து கட்டுப்பாடற்ற ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு மீண்டும் திரும்ப தயாராகும் வகையில் மூன்றாம் ரைஹ்கிற்கு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசாங்கம் மற்றும் கல்வியாளர்களுக்குள் தீட்டப்படும் ஒரு சதித்திட்டம் கட்டவிழ்வதை கண்காணிப்பதில் கடந்த ஆறு ஆண்டுகளை செலவழித்தனர். எதிர்ப்பாளர்களை “பயங்கரவாதிகள்” என நியமிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்துவதானது, இந்த பாசிசவாத மறுமலர்ச்சிக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துவதற்கான “குற்றத்திற்காக” Sozialistische Gleichheitspartei கட்சியை ஜேர்மன் அரசு பாதுகாப்பு சேவை தனது தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் வைத்திருப்பதையடுத்து தொடர்கிறது.

ஆளும் வர்க்கம் வேண்டுமென்றே மேற்கொள்ளும் குற்றவியல் நடவடிக்கைகளின் காரணமாக, ஃபுளோய்ட்டின் கொலையால் தூண்டப்பட்ட உலகளவிலான ஆர்ப்பாட்டங்களும் அண்ணளவாக மூன்று மாத காலமாக பரவி வரும் நோய்தொற்றைப் போல வெடித்து, பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தொடர்ந்து பேரழிவுகர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டனர் என்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர், அதேவேளை நிதிய தன்னலக்குழுவின் அரசாங்கங்களால் பெருநிறுவனங்களின் கருவூலங்களுக்குள் டிரில்லியன்களில் தொகை பாய்ச்சப்பட்டுள்ளது. இந்நிலையில், வறுமை மற்றும் பட்டினியின் வலியால் வாடும் பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் மீண்டும் வேலைக்கு திரும்பும் நிலைக்கு தற்போது தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் கொலை செய்ததும், கறுப்பு, வெள்ளை மற்றும் ஹிஸ்பானிக் இளைஞர்களுக்கு எதிரான கட்டுப்பாடற்ற அரசு வன்முறையினால் உருவாகும் தினசரி நிகழ்வுகளும், வர்க்க பதட்டங்களை மேலும் கொதிப்படையச் செய்வதற்கான தூண்டுதல் நிகழ்வுகளாகச் செயல்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, சமூக சமத்துவமின்மை மோசமடைந்து வரும் நிலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான மில்லியன் கணக்கானவர்களின் எதிர்ப்புடன் உலகளவில் வர்க்கப் போராட்டம் பெரியளவில் வெடித்ததைக் காண முடிந்தது.

உலக சோசலிச வலைத் தளம், கடந்த மாதம் தனது மே தின பேரணியில், முன்னணி ஏகாதிபத்திய சிந்தனைக் குழாமான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (Centre for Strategic and International Studies – CSIS) சம்பந்தப்பட்ட அறிக்கை மீதான கவனத்தை ஈர்த்தது. இது இவ்வாறு எச்சரித்தது:

“வரலாற்று ரீதியாக முன்நிகழ்ந்திராத வகையிலான தொடர் நிகழ்வு, நோக்கம் மற்றும் அளவு ஆகியவை தொடர்புபட்ட உலகளாவிய பெரும் போராட்டங்களை கொண்ட யுகத்தில் நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம்… நகர்ப்புறத்திலுள்ள அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் பெரிய பொதுக் கூட்டங்களில் பங்கேற்க மக்கள் தாமே காட்டும் சொந்த தயக்கம் ஆகியவற்றின் காரணமாக கொரோனா வைரஸ் குறுகிய காலத்தில் எதிர்ப்புக்களை நசுக்கலாம். எவ்வாறாயினும் இத்தகைய தொற்றுநோயின் போக்கைப் பொறுத்து, அரசாங்கத்தின் பதிலிறுப்புக்களே கூட பரந்த அரசியல் எதிர்ப்பிற்கான மற்றொரு தூண்டுதலாக உருவெடுக்கலாம்.”

உலக சோசலிச வலைத் தளமும், அனைத்துலகக் குழுவும், வர்க்கப் போராட்டத்தின் இதுபோன்ற மறு வெடிப்பை துல்லியமாக எதிர்பார்த்தும், மேலும் ஒரு புரட்சிகர முன்னோக்கு மற்றும் நோக்குநிலையை வழங்கவும், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக எச்சரிக்க முயன்றது.

அடைப்புக்கள் முடிவுக்கு வந்த நேரம், அமெரிக்காவில் கொலைகார பொலிஸ் வன்முறையின் முதல் செயல் தற்போது ஒரு சமூக வெடிப்பைத் தூண்டியுள்ளது. கொரொனா வைரஸ் மேலும் வெடித்துப் பரவும் என்று மில்லியன் கணக்கானவர்கள் அஞ்சும் நிலைமைகளில் கூட, முதலாளித்துவ அரசின் மிருகத்தனத்திற்கு எதிரான ஐக்கியப்பட்ட எதிர்ப்பில் “உலகளாவிய பெரும் ஆர்ப்பாட்டங்கள்” திரும்ப எழுகின்றன.

அமெரிக்க ஊடகங்கள் இந்த நிகழ்வுகள் பற்றி சிறிதளவேனும் அல்லது எதையும் குறிப்பிடவில்லை, இது, வர்க்க உறவுகளின் உண்மையான நிலை குறித்தும் மற்றும் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள சக்திகளின் உண்மையான சமநிலை குறித்தும் சாட்சியமளிக்கிறது. ட்ரம்பை நீக்கக் கோரும் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ள அமெரிக்க தொழிலாள வர்க்கம், மிகப்பெரிய சக்திவாய்ந்த கூட்டாளிகளின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்கிறது. தன்னலக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஆட்சியின் மோசமான ஆளுமையாக கருதி உலகம் முழுவதும் வெறுக்கப்படும் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம், ஒவ்வொரு நாட்டிலுள்ள தொழிலாள வர்க்கமும் மற்றும் இளைஞர்களும் தங்களது சொந்த ஆட்சியாளர்களுடனான மோதலுக்குள் பெரும் ஆதரவைக் காண்பார்கள்.

ட்ரம்ப், மைக் பென்ஸ் மற்றும் அவர்களது இணை சதிகாரர்களையும் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஒரு சர்வதேச போராட்டத்திற்கான திட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவே தொழிலாளர்களும் இளைஞர்களும் ட்ரம்பின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான், தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளவிலான இயக்கம் வடிவம் பெறத் தொடங்கும் என்பதுடன், சோசலிசத்திற்கான போராட்டத்தில் பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தை திணிக்கும் ட்ரம்பின் திட்டத்தையும் அது தோற்கடிக்கும்.

Loading