ஐரோப்பா முழுவதும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் இணைகின்றார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொடூரமான பொலிஸ் கொலை மற்றும் பொதுவாக பொலிஸ் வன்முறையை எதிர்த்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வார இறுதியில் ஐரோப்பா முழுவதும் வீதிகளில் இறங்கினர். ஜேர்மனியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் சனிக்கிழமையன்று பல முக்கிய நகரங்களில் குறைந்தது 200,000 பேர் எதிர்ப்பு கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜேர்மனியில் ஆர்ப்பாட்டங்களின் ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு நகரத்திலும் சில நூறு பங்கேற்பாளர்களை மட்டுமே பதிவு செய்தனர். ஆனால் அவை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக மாறியது. அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 1,500 பேருடன் ஒப்பிடும்போது, பேர்லினில் சுமார் 30,000 பேர் அணிவகுத்துச் சென்றனர். 200 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த முனிச்சில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் 30,000 பேர் இணைந்தனர்.

ஆர்ப்பாட்டங்களில் இளவயதினரே அதிகமானளவில் கலந்துகொண்டனர். குறைந்தது 20,000 பேர் ஹம்பேர்க் மற்றும் டுஸ்செல்டோர்ஃப் நகரில் அணிவகுத்துச் சென்றனர். 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொலோன், பிராங்பேர்ட் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் ஸ்ருட்கார்ட், ஃப்ரைபேர்க், நூரம்பேர்க், டிரெஸ்டன் மற்றும் பல நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். மொத்தத்தில், 25 நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

Protest at Rome’s People’s Square, Sunday, June 7, 2020 in solidarity with protests in the U.S. and elsewhere. (Roberto Monaldo/LaPresse via AP)

#SilentDemo, #BlackLivesMatter அல்லது #SayTheirNames ஹஷ்டேக்குகளின் கீழ் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. #SayTheirNames என்பது ஜேர்மனிய நகரமான ஹனோவரில் வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களைப் பற்றிய குறிப்பாகும். தீவிர வலதுசாரிகளுக்கும், அரசு அமைப்பினுள் நவ-நாஜி கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதற்குமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் 8 நிமிடங்கள் 46 வினாடிகள் மௌனமாக இருப்பது அனுஸ்டிக்கப்பட்டது. இது பொலிஸ் அதிகாரி டெரிக் சொவன் (Derek Chauvin) ஃபுளோய்ட்டின் கழுத்தை நெரித்து அவரை மூச்சுத் திணறடித்த நேரமாகும்.

பங்கேற்ற பல புலம்பெயர்ந்தோர் தாங்கள் எதிர்கொள்ளும் இனவாதத்தின் அன்றாட எடுத்துக்காட்டுகளை பற்றி கவனத்தை ஈர்த்தனர். பல ஆர்ப்பாட்டங்களில் பதாகைகள் Oury Jalloh என்பவரை நினைவு கூர்ந்தனவாக இருந்தன. அவர் 2005 இல் சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது எரித்துக் கொல்லப்பட்டார். பேர்லினில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர், "சமத்துவம் இல்லாமல் மகிழ்ச்சி என்ன?" கொலோன் நகரில், ஒரு கையால் செய்யப்பட்ட பதாகையில், “மனிதனின் இருப்பை மதி அல்லது எதிர்ப்பை எதிர்கொள்” என்று எழுதப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதால் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க காவல்துறை கருதியது. ஆனால் இறுதியில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தது. ஒவ்வொரு நபருக்கும் இடையில் 1.5 மீட்டர் தூரத்தை பராமரிக்குமாறு அமைப்பாளர்கள் பலமுறை ஆர்ப்பாட்டக்காரர்களை வேண்டுகோள் விடுத்தாலும், அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்றதால் இது சாத்தியமற்றதாக இருந்தது.

பேர்லினில், பெரும்பாலான ஆர்ப்பாட்டகாரர்கள் வழமையாக கூடும் அலெக்ஸாண்டரா சதுக்கத்திற்கு செல்லும் தெருக்களை காவல்துறையினர் தடுத்தனர். அமைதியான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பேர்லின் மற்றும் ஹம்பேர்க்கில் காவல்துறையினரின் வன்முறைச் செயல்கள் நிகழ்ந்தன. ஹம்பேர்க்கில் இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, தடியடி நடத்தும் போலீசாரால் தாக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் WSWS இடம் தெரிவித்தனர். ஒரு சதுரங்கத்திலிருந்து மக்களை கலைக்க நீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. புலம்பெயர்ந்த 36 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கண்கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

பொலிஸ் மிருகத்தனம் பற்றிய பிரச்சினை சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. சனிக்கிழமை மட்டும் #BlackLivesMatter ஹஸ்டாக் 400,000 தடவைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டது. ரொபேர்ட் என்பவர் ட்விட்டரில் பின்வருமாறு எழுதினார், “பாசிசம் பல வடிவங்களை எடுக்கிறது…,” மற்றும் அமெரிக்காவில் காவல்துறை மற்றும் தேசிய காவலரின் வெறித்தனமான நடவடிக்கையை பார்க்கும்போது, “இது பாசிசத்தின் வடிவத்தை மிகவும் நினைவூட்டுகிறது.”

பேர்லினில் ஏற்பட்ட மோதல்களின் போது 90 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ட்விட்டரில் பரவலாக பகிரப்பட்ட ஒரு ஒளிப்பதிவு ஜேர்மன் பொலிஸின் வன்முறைக்கு ஒரு உதாரணத்தைக் காட்டி, "ஜோர்ஜ் ஃபுளோய்ட் போதாதா?" என்பதையும் அதில் இணைத்திருந்தது.

ஜேர்மனியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கையில், பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பா முழுவதும் வீதிகளில் இறங்கினர். பாரிஸில், 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல முயன்றனர். ஆனால் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அவ்வாறு செய்யாமல் தடுத்தனர். பாதுகாப்புப் படையினர் தூதரகத்தை உலோகத் தடைகள் மற்றும் சாலைத் தடைகளால் தடுத்துவிட்டனர். போர்தோ, லீல், ரென், மார்சைய் மற்றும் லியோன் ஆகிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற முக்கிய போராட்டங்கள் நிகழ்ந்தன.

பீலிக்ஸ்

அகதிகளுக்கு உதவுகின்ற பீலிக்ஸ் என்ற சமூக சேவகர் பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முயன்றார். அவர் WSWS இடம் பின்வருமாறு கூறினார், “நான் சென்ட்-லசார் வழியாக ஆர்ப்பாட்டத்தில் சேர வந்தேன், ஆனால் எல்லா வீதிகளும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சாலையிலும் அவர்கள் எங்களை மற்றொரு சாலைக்கு அனுப்பினர். எனவே யாரும் போராட்டத்திற்கு வராத வகையில் இது அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

"பொலிஸ் வன்முறை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை ஆகியவற்றால் நான் கவலைப்படுகிறேன். இது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு இயக்கம், இங்கும் நடப்பது ஒரு நல்ல விஷயம். பொலிஸ் வன்முறைக்கு எதிராக நம்மில் பலர் ஒன்றுபட்டுள்ளோம் என்பதைக் காட்ட இதைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

"அரசு வன்முறையின் உண்மையென்னவெனில், அது ஒரு இனவெறி வன்முறையாகும். அது பிரான்சுக்கும் பொதுவானது. வெவ்வேறு வடிவங்களில் இது இடம்பெற்றாலும் ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதன் முடிவு ஒன்றுதான்: அரசாங்கத்தினால் சட்டத்தினை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு மக்கள் தாக்கப்பட்டு, காவல்துறையினரால் கொல்லப்படுகின்றனர்…”

தற்போதைய ஆர்ப்பாட்டங்களுக்கும் "மஞ்சள் சட்டை" சமூக எதிர்ப்பு இயக்கத்துடன் உள்ள தொடர்பை பற்றியும் அவர் பேசினார்: "இது அதே போராட்டமாகும். இது பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் ... இந்த நடைமுறைகள் மேலும் மேலும் பொதுவானதாகிவிட்டதை சமீபத்தில் பார்த்தோம். பலர் கைகளை இழந்தனர், கண்களை இழந்தார்கள் என்பதை ‘மஞ்சள் சீருடை’ போராட்டம் காட்டியது. இப்போதைய போராட்டங்களும் ‘மஞ்சள் சீருடைகளுடன்’ மிகவும் பொதுவானதாகிவிட்டது. இவை அனைத்தும் ஒரே நிகழ்வுதான், இது மிகவும் கவலையளிக்கிறது, அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்”.

பிரிட்டனில், பல்லாயிரக்கணக்கானோர் லண்டனில் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாஞ்செஸ்டரில் குறைந்தது 15,000 பேரின் ஆர்ப்பாட்டம் நடந்தது, ஷெஃபீல்ட் (3,000) மற்றும் கார்டிஃப் (1,000) ஆகியவற்றிலும் பெரிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. நேற்று, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் மற்றொரு போராட்டத்திற்காக கூடினர். அதில் "இனவெறி ஒரு வைரஸ்" என்று பதித்த முகமூடிகளை பலர் அணிந்திருந்தனர்.

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். போர்ச்சுகலில், லிஸ்பனில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலந்தின் வார்சோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே, பல நூறு பேர் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இத்தாலியிலும் போராட்டங்கள் நடந்தன. சனிக்கிழமையன்று ஜெனோவாவில் நடந்த அணிவகுப்பில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர், நேபிள்ஸ் மற்றும் பாரியில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நேற்று பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. கோபன்ஹேகனில், 5,000 பேர் என மதிப்பிடப்பட்ட ஒரு கூட்டம் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கூடியது. ரோம் மற்றும் மாட்ரிட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அங்கு ஃபுளோய்டின் கடைசி வார்த்தைகளான “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில், அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே 1,000 க்கும் மேற்பட்டோர் "எல்லா இடங்களிலும் பொலிஸ், நீதி எங்கும் இல்லை" என்ற பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

சுவீடனின் கோதன்பேர்க்கில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையினர் வன்முறையில் கலைத்தனர். "ஆர்ப்பாட்டம் நன்றாக இருந்தது. இது ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் ”என்று ஆர்ப்பாட்டக்காரரான அலி ஃபதுரிஹ் Göteborgs-Posten இடம் கூறினார். ஸ்டொக்ஹோமில் 1,000 க்கும் மேற்பட்டவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இதேபோன்ற அடக்குமுறைக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் வந்த இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்த சமூக விலகல் கவனிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறியது.

வியாழக்கிழமை மாலை ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 50,000 பேர் பெருமளவில் அணிதிரண்டதை தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் வார இறுதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஃப்ளோய்டின் கொலைக்கான ஆர்ப்பாட்டங்களின் அளவு மற்றும் பரந்த புவியியல் பரவல் உலகெங்கிலும் உள்ள இனவெறி மற்றும் பொலிஸ் வன்முறைக்கு பரந்த அடிப்படையிலான எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. இன்னும் அடிப்படையில், அவை தொழிலாள வர்க்கத்திற்கும் சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கும் எதிரான பரவலான அரசு வன்முறைகள் மற்றும் முன்னோடியில்லாத வகையில் உள்ள சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் உந்தப்படுகின்றது.

சமூகத்தின் உச்சியில் ஒரு சிலரின் கைகளில் பரந்த செல்வத்தின் குவிப்பு மற்றும் பெரும்பான்மையினரின் வறுமை ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது பின்பற்றப்பட்ட கொள்கைகளால் மட்டுமே ஒவ்வொரு நாட்டிலும் துரிதப்படுத்தப்படுகின்றன. உலக சோசலிச வலைத் தளம் சமீபத்திய முன்னோக்கில் குறிப்பிட்டுள்ளபடி, ஜோர்ஜ் ஃபுளோய்டின் கொலையானது "கொதித்துக்கொண்டிருக்கும் வர்க்க பதட்டங்களை முன்கொண்டுவரும் ஒரு தூண்டுதல் நிகழ்வாக" செயற்பட்டுள்ளது.

Loading