அதிகாரம் இல்லாத பொலிஸ் சீர்திருத்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு அரசியல் வித்தையுடன் இணைந்த பெரும் வார்த்தைஜாலங்களுடன், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை திங்களன்று தனது “2020பொலிஸ்துறையில் நீதி” என்ற மசோதாவை வெளியிட்டது.

இந்த நடவடிக்கையை முன்வைப்பதற்கான செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் 20 க்கும் மேற்பட்ட ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்கள், அனைவரும் ஆபிரிக்க கென்ட் துணிகளை அணிந்து, தலைநகரின் Emancipation மண்டபத்தில் எட்டு நிமிடங்கள் 46 வினாடிகள் மண்டியிட்டனர். 46 வயதுடைய ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளியான ஜோர்ஜ் ஃபுளோய்ட்டினை கொல்லுவதற்கு பதவிவிலக்கப்பட்ட மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரி டெரிக் சொவன் முழங்காலில் அழுத்திவைத்திருந்த நேரத்தை அது குறிக்கின்றது.

இந்த ஜனநாயகக் கட்சியினரின் குழுவில் காங்கிரஸ் பேச்சாளர் நான்சி பெலோசி, செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர், காங்கிரஸின் கறுப்பின பிரதிநிதிகளின் தலைவி கரென் பாஸ் மற்றும் செனட்டர்கள் கோரி புக்கர் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடங்குவர்.

செய்தியாளர்கள் சந்திப்பில், பாஸ், பெலோசி, ஷுமர் மற்றும் மசோதாவின் பிற ஆதரவாளர்கள் ஃபுளோய்டின் கொலைக்கு எதிரான நாடு தழுவிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டி, அவர்களின் மசோதாவை பொலிஸ் வன்முறை மற்றும் திட்டமிட்ட இனவெறி மீதான "உருமாற்றும்" மற்றும் "தைரியமான" தாக்குதல் என்று கூறினர். ஆனால் அவர்களின் அறிக்கைகள் மற்றும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் போலித்தன்மை ஆகியவை இந்த நடவடிக்கை அவ்வாறான ஒன்றல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றன.

மாறாக, இது ஒபாமா நிர்வாகத்தின் பொலிஸாரின் வரலாற்றை குறிப்பிடாமல், எதிர்ப்பாளர்கள் மீதான மிருகத்தனமான பொலிஸ் தாக்குதல்களை மேற்பார்வையிட்ட ஜனநாயகக் கட்சி ஆளுநர்களுக்கும் மேயர்களுக்கும் ஒரு மூடிமறைப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சியாகும். இது இனவெறி மற்றும் பாசிச ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் மூலம் எடுத்துக்காட்டப்பட்ட முதலாளித்துவ அமைப்பில் பொதிந்துள்ள சமூக சமத்துவமின்மை, அடக்குமுறை மற்றும் வறுமை ஆகியவற்றிற்கும் எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய சமூக ஆர்ப்பாட்டங்களை தடுத்து திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டதாகும்.

ஜனநாயகக் கட்சியினர் தங்கள் மேலெழுந்தவாரியான சீர்திருத்தங்களின் தொகுப்பு கூட குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட்டால் நிறைவேற்றப்படுவதற்கோ அல்லது ஜனாதிபதி ட்ரம்பால் சட்டத்தில் கையெழுத்திடுவதற்கோ வாய்ப்பில்லை என்பதை நன்கு அறிவார்கள். ஜனநாயகக் கட்சியினரின் செய்தியாளர் சந்திப்புக்கு சில நிமிடங்களுக்குப் பின்னர், பின்னர் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்த ட்ரம்ப், “இந்த ஆண்டு நம் நாட்டின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் கண்டிருக்கிறது. இப்போது தீவிர இடது ஜனநாயகவாதிகள் எங்கள் பொலிஸிற்கு நிதி வழங்லை குறைத்து கைவிட விரும்புகின்றார்கள். மன்னிக்கவும், எனக்கு சட்டமும் ஒழுங்கும் வேண்டும்!” என டுவீட் செய்தார்.

அந்த மசோதாவின் முக்கிய விதிகள் பின்வருமாறு:

* பொலிஸ் துஷ்பிரயோகத்தை கையாளும் சட்டங்களின் சொற்களில் மாற்றங்கள் ஒரு தண்டனையைப் பெறுவதற்கான சட்ட வரம்பை ஓரளவு குறைக்கின்றன. ஒரு பாதிக்கப்பட்டவருக்கு இருக்கும் அரசியலமைப்புரீதியான உரிமைகளை தெரிந்தோ அல்லது பொறுப்பற்று புறக்கணிப்பதனால் “வேண்டுமென்றே” மீறும் குற்றவியல் பொலிஸ் நடத்தைக்கான மத்திய அரசின் தரத்தை இந்த மசோதா மாற்றுகிறது.

பலாத்காரத்தைப் பயன்படுத்துவது "நியாயமானதா" என்பதிலிருந்து "அவசியமானது" என்பதற்கு மாற்றுவதன் மூலம் அதை நியாயப்படுத்தப்படுகிறதா என்பதை தீர்மானிப்பதற்கான தரத்தையும் இது மாற்றுகிறது.

* பொலிஸ் குற்றவாளிகளுக்கு "தண்டனையிலிருந்து தகுதிவாய்ந்த பாதுகாப்பு வழங்குவதை" இது ஓரளவு கட்டுப்படுத்துகிறன்தே தவிர அதனை அகற்றாது. கடந்த 15 ஆண்டுகளாக, உச்சநீதிமன்றம் "தண்டனையிலிருந்து தகுதிவாய்ந்த பாதுகாப்பு வழங்கும்" கோட்பாட்டை விளக்கியுள்ளது. இது அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளைத் தொடரும் பொது அதிகாரிகளுக்கு, சிவில் வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்கும், சட்டத்தை மீறும் அல்லது தேவையற்றவிதத்தில் அதிகாரத்தை பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை கைவிடுதற்கும் பொருந்தும்.

சட்ட ஆய்வாளர்கள் அமீர் எச். அலி மற்றும் எமிலி கிளார்க் ஆகியோர் 2019 ஆம் ஆண்டில் "தண்டனையிலிருந்து தகுதிவாய்ந்த பாதுகாப்பு வழங்குவது" சட்ட அமுலாக்க, பிற அரசாங்க அதிகாரிகளுக்கும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உண்மையான பாதுகாப்புடன் மீறுவதற்கு அனுமதிக்கிறது" என்று வாதிட்டனர். ஒபாமா நிர்வாகம் உச்சநீதிமன்ற வழக்குகளில் பலமுறை தலையிட்டு, சிவில் வழக்குகள் அல்லது குற்றவியல் வழக்குகளில் இருந்து போலீஸ்காரர்களைக் காப்பாற்ற "தண்டனையிலிருந்து தகுதிவாய்ந்த பாதுகாப்பு வழங்குவதை" அப்பட்டமாக பயன்படுத்துவதை ஆதரித்தது.

இந்த மசோதா இராணுவ உபகரணங்களை காவல்துறைக்கு மாற்றுவதை கட்டுப்படுத்துகிறது, ஆனால் அகற்றாது. பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள இராணுவ தர ஆயுதங்கள், கவச வாகனங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் பிற தந்திரோபாய ஆயுதங்களுடன் பொலிஸ் திணைக்களங்களை இராணுவமயமாக்கும் நடைமுறையை ஒபாமா தொடர்ந்திருந்தார்.

* இந்த மசோதா பொலிஸாரின் தவறான நடத்தைக்கான தேசிய பதிவை உருவாக்குகிறது.

* இது குரல்வளையைபிடித்தலை தடை செய்கிறது.

* இது ஒரு மன்னிப்புவழங்கும் திட்டத்தை நிறுவுகிறது. ஆனால் விசாரணைகள் தேவையில்லை. அரசு வழக்குத்தொடுனர் தவறான நடத்தை அல்லது அதிமிகை பலாத்காரத்தை பற்றி விசாரிக்க ஒரு சுயாதீனமான செயல்முறையை உருவாக்க வேண்டும்.

* இதற்கு கூட்டாட்சி சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான உடல் கமராக்கள் மற்றும் அடையாளரம் குறிக்கப்பட்ட கூட்டாட்சி பொலிஸ் வாகனங்களின் சாரதிக்கு முன் இருக்கும் பகுதியில் கமராக்கள் பொருத்துதல் தேவை எனக்கோருகின்றது. இந்த கூட்டாட்சி படைகள் அமெரிக்காவில் உள்ள 687,000 முழுநேர சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. உடல் மற்றும் வாகனங்களில் கமராக்களின் பயன்பாட்டை "உறுதிப்படுத்த" மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் கூட்டாட்சி நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த மசோதா கட்டளையிடுகிறது.

* இந்த மசோதா இனரீதியான விவரக்குறிப்பை தடை செய்கிறது.

* இது பொலிஸ் திணைக்களங்களின் “மாதிரி மற்றும் நடைமுறை” விசாரணைகளுக்காக நீதித்துறையின் சிவில் உரிமைகள் பிரிவுக்கு அழைப்புவிடும் அதிகாரங்களை வழங்குகிறது.

* இது நீதிக்கு அப்பாற்பட்ட கொலையை ஒரு கூட்டாட்சியின் வெறுப்புக்குரிய குற்றமாக்குகின்றது.

செய்தியாளர் சந்திப்பில், தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஸ், காவல்துறைக்கு தனது ஆதரவை தெரிவிக்க தனது வழியிலிருந்து வெளியேறினார். "பொலிஸ் அதிகாரிகள், ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் தொழில் வல்லுநர்கள், தங்கள் தொழிலைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மேலும் ஒரு சக அதிகாரி பொதுமக்களை துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதை அறிந்தால் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டிய சூழலில் பணியாற்ற விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகளை மோசமான பயிற்சி மற்றும் பொலிஸ் நடைமுறைகள் மற்றும் "வெளிப்படைத்தன்மை" இல்லாமையால் தெரியாமல் செய்கின்ற பலியாட்களாக அவர் முன்வைத்தார்.

பெலோசி இந்த மசோதாவை "உருமாற்றும்" மற்றும் "கட்டமைப்பு மாற்றம்" என்று அழைத்தார், அதன் முக்கிய விதிகளை பற்றி குறிப்பிட்டு, "பொலிஸ் மிருகத்தனம் என்பது அமெரிக்காவில் இன அநீதியின் வேரூன்றிய அமைப்பின் இதயத்தை உடைக்கும் பிரதிபலிப்பாகும்" என்று கூறி முடித்தார். அவர் இந்த மசோதாவை "இன்னும் வரப்போவதற்கு" உறுதியளித்த "முதல் படி" என்று அழைத்தார்.

வோல் ஸ்ட்ரீட்டிலிருந்து வரும் செனட்டர் என்று அழைக்கப்படும் நியூ யோர்க் செனட்டர் ஷுமர், நியூ யோர்க் நகரத்திலும், அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களிலும் நகரங்களிலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தொடர்ந்த பாரிய ஆர்ப்பாட்டங்களை பற்றி பதட்டமாகக் குறிப்பிட்டார், குறிப்பாக அவர்களின் பல இன மற்றும் பல இனங்களைக் கொண்ட பன்முகத்தன்மை பற்றி குறிப்பிட்டார்.

பொலிஸ் வன்முறை பிரச்சினையை இன அடிப்படையில் பிரத்தியேகமாக வரையறுக்க அவர் தொடர்ந்தார், “இனவெறியின் விஷம் நமது குற்றவியல் நீதி முறையை விட அதிகமாக பாதிக்கிறது. அது அதை விட ஆழமாக செல்கின்றது. வீட்டுவசதி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம், வேலைகள், வருமானம் மற்றும் செல்வம் ஆகியவற்றில் இன வேறுபாடுகள் உள்ளன. மேலும் கோவிட் அவற்றின் மீது ஒரு பூதக்கண்ணாடியை மட்டுமே வைத்துள்ளது.”

இது ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகும். குறிப்பாக 1960 களின் பாரிய நகர்ப்புற கிளர்ச்சிகளுக்குப் பின்னர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகக் கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஒரு பிரிவானால் பயன்படுத்தப்பட்டது. 1968 ஆம் ஆண்டின் Kerner ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து தொடங்கி, அமெரிக்காவில் அத்தியாவசிய சமூக வகைப்படுத்தலை வர்க்கமாக இல்லாமல் இனமாக சித்தரிக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்ட வர்க்க சுரண்டலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஆரம்பத்தில் இருந்தே வடிவமைக்கப்பட்டதாகும். மேலும் அவ்வமைப்பினுள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இனவெறி ஒரு ஆயுதமாக செயல்படுகிறது. ஜனநாயகக் கட்சியினரின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஆபிரிக்க-அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அனைவரும் ஒரு சிறிய தட்டு கறுப்பினத்தவர்களை முதலாளித்துவவாதிகளாகவும் மேல் மத்தியதர வர்க்கத் தட்டாகவும் உயர்த்திய இந்த கொள்கைகளின் செல்வந்த பயனாளிகளாவர். இதேவேளை அவர்கள் கறுப்பின தொழிலாளர்களையும் மற்றும் முழு தொழிலாள வர்க்கத்தையும் 1960களில் இருந்ததை விட மோசமான சூழ்நிலைகளில் கைவிட்டுள்ளனர்.

"பொலிஸ்துறையில் நீதி சட்டத்தினை" முன்மொழிபவர்கள் சில உள்ளூர் ஜனநாயகக் கட்சி அதிகாரிகளால் ஆதரிக்கப்பட்ட காவல்துறைக்கு "நிதி வழங்கலை குறைக்க" செய்வதற்கான அழைப்புகளை ஆதரித்தார்களா என்று ஒரு நிருபர் கேட்டார். அவர்கள் பொதுவாக பொலிஸ் வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு சிறிய பகுதியை சமூக சேவைகளுக்கு திருப்பிவிடுவதாக வரையறுத்துள்ளனர். பாஸ் முன்னர் அத்தகைய அழைப்புகளை ஆதரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். ஜோ பைடனின் பிரச்சாரம் திங்களன்று அதனை ஆதரவளிக்கவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த பெலோசி, “நாங்கள் எங்கள் காவல் துறைகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். தங்கள் வேலையில் பெருமிதம் கொள்ளும் பலர் உள்ளனர். மேலும் அவர்கள் மீது கவனம் செலுத்துவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். ” "ஒரு சிலரின் குறுகிய சிந்தனைகளில் வரக்கூடிய இந்த கேள்விகளில்" இறங்குவதை எதிர்த்து அவர் எச்சரித்தார்.

மார்க்சிஸ்டுகள் நீண்ட காலமாக விளக்கியது போல, காவல்துறை “பொது பாதுகாப்பின் பாதுகாவலர்கள்” அல்லது “மக்களைப் பாதுகாப்பவர்கள்” அல்ல. அவர்கள் முதலாளித்துவ அரசின் அதிர்ச்சி துருப்புக்களாகும். லெனின் மற்றும் ஏங்கெல்ஸ் விளக்கமளித்தபடி, "முதலாளித்துவ அரசானது சிறைச்சாலைகளைக் கொண்ட ஆயுதமேந்திய மனிதர்களின் சிறப்பு அமைப்புகள் போன்றவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றன". ஏங்கெல்ஸை மேற்கோள் காட்டி, லெனின் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அரசு அடிப்படையிலேயே “வர்க்க முரண்பாடுகள் சமரசம் செய்யப்படமுடியாததன் ஒரு உற்பத்தியும் மற்றும் வெளிப்பாடுமாகும்” என்றும், அரசின் அதிகாரமும் வன்முறையும் “வலுவாக அதிகரிக்கையில்… அதற்கேற்ற விகிதத்தில் அரசுக்குள் இருக்கும் வர்க்க முரண்பாடுகளும் மிகவும் கூர்மையடைகின்றன.”

காவல்துறையை சீர்திருத்த முடியாது. முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிந்து சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு உண்மையான ஜனநாயக தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமாக அணிதிரட்டல் மூலம் இந்த அமைப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

ட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்

[4 June 2020]

Loading