முன்னோக்கு

தொடர்ந்து கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மீது ஒரு யதார்த்த ஆய்வு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலும், ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலும் ஆளும் உயரடுக்குகள், சமூக இடைவெளி மூலமாகவும் மற்றும் அத்தியாவசியமல்லாத உற்பத்தையை நிறுத்துவதன் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கலாமென்ற எந்தவித பாசாங்குத்தனத்தையும் கைவிட்டுள்ளன. ஆனால் இந்த வைரஸ் உலகெங்கிலும் வேகமாக தொட்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.

400,000 க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் 7.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் நீண்டிருக்கக் கூடிய படுமோசமான பாதிப்புகளுடன் உள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகையில் எண்ணிக்கையின்றி மில்லியன் கணக்கானவர்களின் உயிர்கள் இன்னும் அபாயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவில் நிலைமை படுபயங்கரமாக உள்ளது. இப்போது அங்கே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் பகுதியிலும் சேர்ந்து 112,000 பேர் உயிரிழந்துள்ளனர், இது உலகின் எந்தவொரு நாட்டை விடவும் அதிகமாகும். ஒவ்வொரு நாளும் பத்தாயிரக் கணக்கானவர்கள் புதிதாக தொற்றுக்கு உள்ளாகி வருவதுடன், பல நூறு கணக்கானவர்கள் உயிரிழக்கிறார்கள், இருப்பினும் அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் யதார்த்தத்தைப் பரந்தளவில் குறைமதிப்பிடுகின்றன.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus நேற்று குறிப்பிடுகையில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் ஏற்படும் அதிகபட்ச அதிகரிப்பைக் கண்டதாக தெரிவித்தார். “இந்த தொற்றுநோய்க்குள் ஆறு மாதங்களுக்கும் அதிகமாக இருந்து வருகையில், எந்தவொரு நாடும் தடுப்பு நடவடிக்கையிலிருந்து பின்வாங்குவதற்கு இது சரியான நேரமில்லை,” என்றார். ஆனால் இதுபோன்ற பரிந்துரைகள் செவிடர்களின் காதில் விழுவதில்லை.

நியூ யோர்க் ஆளுநர் Andrew Cuomo அந்நகரின் 205,000 நோயாளிகள் மற்றும் 22,000 உயிரிழப்புகளின் கொடூரமான யதார்த்தத்தின் மீது கவனத்தைக் கொடுப்பதற்காக அல்ல, மாறாக அந்நகரின் உணவு விடுதிகளும், வியாபாரங்களும் மற்றும் சுரங்கப் பாதை போக்குவரத்தும் இப்போது மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளதால் "நமது உற்சாக வசீகரம் திரும்பி உள்ளது,” என்ற உண்மையின் மீது கவனத்தைக் கொடுப்பதற்காக நேற்றைய தினத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏப்ரலில் இந்நோயின் உலக குவிமையமாக விளங்கிய, நியூ யோர்க் நகரில் மட்டும், நூற்றுக் கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

அமெரிக்காவில் இருபத்தி இரண்டு மாநிலங்கள் கொரொனா வைரஸ் நோயாளிகளின் அதிகரிப்பைக் கண்டு வருகின்றன. புளோரிடாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் சராசரியாக 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கே உத்தாஹ், அர்கன்சாஸ் மற்றும் அரிசோனாவிலும் கூர்மையான அதிகரிப்புகள் உள்ளன.

கோவிட்-19 க்காக மருத்துமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் டெக்சாஸ் சாதனை எண்ணிக்கையைப் பதிவு செய்திருந்தது. “வியாபாரங்களை மீண்டும் திறந்து விடுவதற்கான ஆளுநர் கிரெக் அப்போட்டின் புதிய கட்டத்திற்கு டெக்சாஸ் முன்னோக்கி நகர்கையில்,” Texas Tribune அறிவித்தது, “நாள்தோறும் உறுதி செய்யப்பட்ட கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே சீராக அதிகரிப்பில் உள்ளது... டெக்சாஸில் புதிய நோய்தொற்றுக்களைக் காட்டும் 14 நாள் எண்ணிக்கை போக்கு கடந்த இரண்டு வாரங்களில் 71 சதவீதம் அதிகரித்துள்ளன.”

ட்ரம்ப் நிர்வாகத்தாலும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆளுநர்களாலும் நடைமுறை கொள்கையாக "கூட்டாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்" கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது பலன் கொடுக்காவிட்டால், அந்நாட்டில் 1.6 மில்லியன் பேர் இறுதியில் உயிரிழப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்பதே ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக உள்ளது.

இந்த தொற்றுநோயின் உயிராபத்தான தன்மை அமெரிக்கா எங்கிலுமான இறைச்சி பதனிடும் ஆலைகளில் கூர்மையான தன்னை வெளிப்படுத்தி காட்டியுள்ளது. இறைச்சி வெட்டும் ஆலைகளும் பதனிடும் ஆலைகளும் தொடர்ந்து திறந்திருக்க நிர்பந்தித்து கடந்த ஏப்ரலில் ட்ரம்ப் நிர்வாக ஆணை வெளியிட்டதன் விளைவாக, “இறைச்சி ஆலைகளுடன் தொடர்புபட்ட கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது... 33 மாநிலங்களில் 216 ஆலைகள் எங்கிலும் 20,400 க்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக புலனாய்வு செய்திகளுக்கான மத்திமேற்கு அமைப்பு (Midwest Center for Investigative Reporting) கண்டறிந்தது. குறைந்தபட்சம் 74 பேர் உயிரிழந்துள்ளனர்,” என்று USA Today அறிவித்தது.

அரசாங்கங்களால் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் பெற்ற பெருநிறுவனங்கள் அடிப்படை சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்களை நிராகரித்து வருகின்றன. USA Today கட்டுரை பெடரல் அரசின் இறைச்சி பதப்படுத்தும் துறைக்கான ஆய்வாளர் ஒருவரின் கருத்துக்களை மேற்கோளிட்டது, அவர் பார்வையிட்ட ஆலைகளில் தொழிலாளர்கள் "முகக்கவசம் அணியாமல் ஓரளவுக்கே சமூக இடைவெளியைப் பேணியிருந்தனர். சிலருக்கு கோவிட்-19 இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தது,” என்றவர் கூறியிருந்தார்.

கொரொனா வைரஸ் தேசிய எல்லைகளை மதிப்பதில்லை, அதன் உலகளாவிய பரவல் ஒவ்வொரு நாட்டிலும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

ஐரோப்பாவில் சுமார் 2.1 மில்லியன் பேர் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர், 179,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற முந்தைய குவிமையங்களில் இந்த வைரஸ் ஓரளவுக்கு அடங்கி உள்ளது என்றாலும், பிரிட்டனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து நோய்த்தொற்றும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் இப்போது 476,000 நோயாளிகள் உள்ளனர், 5,900 தெரிந்த உயிரிழப்புகள் உள்ளன, உலகில் புதிய நோயாளிகள் மற்றும் புதிய உயிரிழப்புகளின் அதிகபட்ச விகிதங்களில் ஒன்றை அந்நாடு கொண்டுள்ளது.

இந்த தொற்றுநோயின் மற்ற குவிமையங்களாக தெற்காசியாவும் தென் அமெரிக்காவும் உள்ளன. இப்போது அங்கே இந்தியாவில் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10,000 புதிய நோயாளிகளும், 250 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன, இந்த எண்ணிக்கை இன்னும் மேல்நோக்கி அதிகமாகி கொண்டே செல்கிறது. அந்நாடு தற்போது 265,000 நோயாளிகளையும், 7,400 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.

பிரேசிலில் நிலைமை படுமோசமாக உள்ளது, அது கடந்த பதினான்கு நாட்களாக நாளொன்றுக்கு 15,000 இல் இருந்து 30,000 க்கு இடையே புதிய நோயாளிகளைப் பெறுகிறது, அத்துடன் தினந்தோறும் 500 இல் இருந்து ஏறத்தாழ 1,500 புதிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதன் உத்தியோகபூர்வ நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும், இந்த எண்ணிக்கையை பாசிசவாத ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ தணிக்கை செய்ய முயன்றுள்ள நிலையில், முறையே 694,000 மற்றும் 37,000 இல் நிற்கின்றன.

மெக்சிகோவின் மக்கில்லாடோரா ஆலையில் ஆயிரக் கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மே மாதம் அவை மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய இராஜ்ஜியம் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பாசாங்குத்தனமான அடைப்பைச் செய்திருந்த போதினும் கூட, இலண்டனில் டஜன் கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பொருளாதாரங்களை மீண்டும் திறப்பதற்கான அவற்றின் ஆட்கொலை நகர்வுகளை அரசாங்கங்கள் தொடர்கையில் இந்த கொடூரமான யதார்த்தம் இன்னும் வெளிப்படையாக மட்டுமே ஆக இருக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் கொள்கை, தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் மூலமாக எதிர்கொள்ளப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி அதன் மே 21 அறிக்கையில் குறிப்பிட்டது, “நோய்தொற்று, நோய் மற்றும் மரணம் தடுக்கப்பட வேண்டுமானால், வேலையிட நிலைமைகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட்டு அமல்படுத்தும் வேலையிட அமைப்புகளின் ஒரு புதிய வடிவம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

“ஆகவே ஒவ்வொரு ஆலையிலும், அலுவலகத்திலும், வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குமாறு SEP தொழிலாளர்களை அறிவுறுத்துகிறது. தொழிலாளர்களாலேயே ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் இத்தகைய குழுக்கள், தொழிலாளர்களின், அவர்களின் குடும்பங்களின் மற்றும் பரந்த இந்த சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.”

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் இத்தகைய அமைப்புகளை உருவாக்குவது தொழிலாளர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஓர் அவசர அவசியமாகும்.

இந்த தொற்றுநோய் பரவலானது, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் முன்னொருபோதும் இல்லாத சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து வரும் நிலையில் நிகழ்கிறது. பொருளாதாரம் திரும்பவும் சீறி எழுந்து வருவதாக ட்ரம்பின் வாதங்களுக்கு மத்தியில், பத்து மில்லியன் கணக்கானவர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், மீண்டும் திரும்பி வருவதற்கு வேலைகளே இல்லாமலும் உள்ளனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியினரின் ஆதரவுடன், வோல் ஸ்ட்ரீட் மற்றும் நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டுள்ளதால் இந்த தொற்றுநோய்க்கு முன்பிருந்த உயரங்களுக்குப் பங்குச் சந்தை திரும்பவும் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு மீது கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமூக கோபம் தான், ஜோர்ஜ் ஃப்ளோய்ட்டைப் பொலிஸ் படுகொலை செய்ததால் தூண்டிவிடப்பட்ட உலகெங்கிலுமான பாரிய போராட்டங்களின் வெடிப்புக்கு அடியிலிருக்கும் மத்திய காரணியாகும். அதே நேரத்தில், காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் விடையிறுப்பும், ஓர் இராணுவ சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான மற்றும் மக்கள் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்குமான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சியும், வரவிருக்கும் இன்னும் அதிக சமூக கொந்தளிப்புகளை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதில் இருந்து உந்தப்படுகின்றன.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கான போராட்டமும், சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த தொற்றுநோய், மனிதகுல வளர்ச்சிக்கும் மனித உயிர்களின் உயிர்வாழ்வுக்குமே ஒரு முட்டுக்கட்டையாக ஆகியுள்ள முதலாளித்துவத்தின் யதார்த்தம் மற்றும் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது.

தொழிலாளர்கள், இந்த முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் ஆட்கொலை கொள்கைக்கு எதிராக, "தொழிலாளர்களின் உயிர் மதிப்புடையது" என்று வலியுறுத்த வேண்டும் மற்றும் வலியுறுத்துவார்கள் என்றாலும், இந்த கொரொனா வைரஸிற்கு எதிராக தொழிலாளர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது, பிரிக்க முடியாதவாறு ஆளும் வர்க்கம் மற்றும் இந்த முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடனும் பிணைந்துள்ளது.

Loading