இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளோய்ட் படுகொலைக்கு எதிராக இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), அமெரிக்காவில் ஃப்ளோய்ட் படுகொலைக்கு எதிரான சர்வதேச போராட்டங்களும் முதலாளித்துவ சர்வாதிகார திட்டங்களும் ”என்ற தலைப்பில் ஒரு இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டம் ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெறும். கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் வழியாக இந்த கூட்டம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இணையவழி பொதுக்கூட்டம்

மே 25 அன்று ஃப்ளோய்ட் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற சூழ்நிலையிலேயே சோ.ச.க. கூட்டம் நடைபெறுகிறது. பல இன மக்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிலும், அதே போல், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், துனிசியா மற்றும் மெக்சிகோவிலும் உள்ள பிற நகரங்களிலும் நடந்து வருகின்றன.

இந்த சமூக எழுச்சிக்கான தூண்டுதல் ஃப்ளோய்டின் கொலை என்றாலும், அதற்கான அடிப்படை காரணம், மிகத் தீவிரமடைந்து வரும் சமூக பதட்டங்களும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிரான மக்களின் அரசியல் கோபமுமே ஆகும். இது வெளிநாடுகளில் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போர், வாழ்க்கைத் தரங்களின் பேரழிவு மற்றும் அதிசெல்வந்த நிதிய தன்னலக்குழுவின் ஒரு சிறிய அடுக்கின் கைகளில் பெரும் செல்வம் குவிந்து வருவதற்கும் எதிரான பிரதிபலிப்பாகும்.

சமூக எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க கனமாக ஆயுதமேந்திய பொலிஸ் படைகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், அரசியலமைப்பை மீறி நகரங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இராணுவத்தை நிலைநிறுத்துவதாக அச்சுறுத்தினார். அவரது அறிவிப்புகள், இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான சதி முயற்சியாகும்.

அமெரிக்காவில் உள்ள தனது சமதரப்பாரைப் போலவே, மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவும், ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்கிறார். அவரது ஆட்சி, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை கொடூரமாக அடக்குவதற்கான தயார்நிலையை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அச்சுறுத்தலான முன்னேற்றங்கள், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அவசரமாக தலையிட வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வளர்ந்து வரும் போராட்டங்களின் உலகளாவிய தன்மை, அரச அடக்குமுறை மற்றும் சமூக சமத்துவமின்மையின் தோற்றுவாயாக இருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்தின் அடிப்படையில் போராடுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான புறநிலை நிலைமைகள் இருப்பதைக் காட்டுகிறது.

சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தைப் பற்றி கலந்துரையாடும் எங்கள் இணையவழி கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading