முன்னோக்கு

சமூக வர்க்கம், முதலாளித்துவம் மற்றும் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொலிஸ் வன்முறைக்கு எதிராக இரண்டு வாரங்கள் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் செவ்வாயன்று டெக்சாஸின் ஹூஸ்டனில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் இறுதிச் சடங்கு நிகழ்ந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் நான்கு மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரிகளின் கைகளில் அவர் கொலைசெய்யப்பட்ட வீடியோ வெளியான பின்னர் வெடித்தன.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும், சர்வதேச அளவில் டஜன் கணக்கான நகரங்களிலும் நூறாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு இனத்தினதும் மற்றும் நாட்டினதும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைத்த இந்த தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்கள், நிராயுதபாணியான ஒரு கறுப்பின மனிதனைக் கொன்றது குறித்து மிகுந்த சீற்றம் மற்றும் வெறுப்புணர்வால் மட்டுமல்லாமல், அமெரிக்க சமூகத்தில் நிலவும் மிருகத்தனம், அநீதி மற்றும் சமத்துவமின்மை குறித்த பரந்த கோபத்தினாலும் தூண்டப்பட்டது.

மிருகத்தனமான அமெரிக்க யதார்த்தத்துடன் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பரந்த அனுபவம்தான் ஃபுளோய்ட்டின் இறுதி வேதனைக்கு வெடிக்கும் பதிலை விளக்குகிறது.

ஆர்ப்பாட்டங்கள், அடிப்படையான மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த இயக்கத்திற்குள், பொலிஸ் மிருகத்தனம் என்பது, சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பிலும் மற்றும் மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதிக்குள் செல்வத்தின் தீவிர செறிவு இருப்பதில் வேரூன்றியுள்ள ஆழ்ந்த சமூகக் கேடுகளின் வெளிப்பாடே இந்த பாரியளவிலானோர் உணர்ந்துகொள்கின்றனர். இந்த வளர்ந்து வரும் விழிப்புணர்வு, தவிர்க்க முடியாமல் சோசலிசத்தை நோக்கிச் செல்வதும், முதலாளித்துவத்தை வெளிப்படையாக நிராகரிப்பதும் ஆளும் வர்க்கத்தை பயமுறுத்துகிறது. எனவே வெகுஜன இயக்கத்தை அரசியல்ரீதியாக கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை நோக்கித் திருப்புவதற்கு அது தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. பொலிஸ் மிருகத்தனம் மற்றும் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலை பற்றிய அனைத்து உத்தியோகபூர்வ விவாதங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் இனவாதக் கட்டுக்கதைகளின் செயல்பாடு இதுவாகும்.

கொலைக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலின் வெவ்வேறு கட்டங்களை மதிப்பாய்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

ஃபுளோய்ட்டின் கொலைக்கான ஆரம்ப பதில், வழமையான ஒவ்வொரு பொலிஸ் கொலையையும் மூடிமறைப்பதாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை. அவரது மரணத்தின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி, இது பொலிஸ் காவலில் உள்ள மற்றொரு மரணம் என்ற கட்டுக்கதைகளை உடைத்து, மேற்பரப்புக்கு அடியில் திரண்டுகொண்டிருந்த கோபத்தின் வெடிப்பைத் தூண்டியது.

ஃபுளோய்ட்டின் கொலைக்கான எதிர்வினை குறித்து அரசியல் ஸ்தாபகத்தின் ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து மீண்ட பின்னர், ஒவ்வொரு இரவு ஆர்ப்பாட்டங்களுக்கும் பின்னர் முதலில் மினியாபொலிஸின் தெருக்களிலும் பின்னர் நாடு முழுவதும் ஆளும்வர்க்கம் அரசின் முழு சக்தியுடன் பதிலளித்தது. காவல்துறையினர் எதிர்ப்பாளர்களை அடித்து துன்புறுத்தினர், கண்ணீர் புகை குண்டுகள், புகை குண்டுகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் மிளகு தெளிப்பு ஆகியவற்றின் ஈடுபட்டனர். அமைதியான ஆர்ப்பாட்டக்கார்களை கலகக்காரர்கள் மற்றும் கொள்ளையர்கள் என தூற்றினர். மேலும் செய்தியாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது செய்ய இலக்கு வைக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் ஜனநாயகக் கட்சி மேயர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், மேலும் தாக்குதலின் போது பலர் கொல்லப்பட்டனர். அடக்குமுறைக்கு உதவ தேசிய காவலர்படை டஜன் கணக்கான மாநிலங்களில் நிலைநிறுத்தப்பட்டனர்.

வாஷிங்டன் டி.சி.யில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு இராணுவ சதித்திட்டத்தை கட்டவிழ்த்துவிட முயன்றபோது இந்த ஒடுக்குமுறையின் உச்சம் ஏற்பட்டது. இந்த திட்டம் குறைந்தபட்சம் இப்போதைக்கு தோல்வியுற்றது. இது காங்கிரஸின் எதிர்ப்பின் காரணமாக அல்ல (அவ்வாறான எதுவும் இருக்கவில்லை), ஆனால் இராணுவத்தின் பிரிவுகள் காலத்திற்கு முன்கூட்டிய தலையீடு வன்முறை எதிர்ப்பையும், பென்டகன் இன்னும் போதுமான தயாரிப்புடன் இல்லாத ஒரு உள்நாட்டு யுத்தத்தையும் தூண்டக்கூடும் என்று அஞ்சியதால் தோல்வியடைந்தது.

இந்த நிலையற்ற சூழ்நிலையில், ஜனநாயகக் கட்சி, பிரதான ஊடகங்கள் மற்றும் பாரிய நிறுவனங்கள் கூட்டுழைப்பு நிலைக்கு தமது நிலைப்பாட்டை மாற்றி, ஆளும் வர்க்கத்திற்கு பொருத்தமான ஒரு விதத்தில் வீதிகளுக்கு இளைஞர்களையும் தொழிலாளர்களையும் திரும்பத் தூண்டிய பிரச்சினைகளை மறுவடிவமைக்க முயல்கின்றன. பொலிஸ் வன்முறையில் இனவாதம் வகிக்கும் பங்கு, மற்ற எல்லா சமூகப் பிரச்சினைகளையும் மூழ்கடிக்கும் வகையில் ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ளது.

ஃபுளோய்ட்டின் இறுதிச் சடங்குகள் அவரது குடும்பத்தினரும், தங்கள் பக்கம் திரண்ட பொது மக்களும் உண்மையான துன்பத்தை வெளிப்படுத்த அனுமதித்தாலும், இது பொதுமக்களின் கருத்தை தவறாக வழிநடத்துவதற்கும் நிராயுதபாணியாக்குவதற்கும் நிபுணத்துவம் பெற்ற அரசியல் ஸ்தாபகத்தினதும் மற்றும் கறுப்பின முதலாளித்துவத்தின் பிரிவினராலும் இழிந்த முறையில் தவறாக கையாளப்பட்டது.

ஜனநாயகக் கட்சியினரின் ஊக ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அரசியல் வாயாடியுமான அல் ஷார்ப்டன் இருவருக்கும் பொலிஸ் வன்முறையை அடிப்படைரீதியாக ஒரு இனப்பிரச்சினையாக வடிவமைக்கும் விழாவில் முக்கிய பங்கு வழங்கப்பட்டு, இது சாதாரண சீர்திருத்தங்களுடன் தீர்க்கப்பட முடியும் எனக்கூறப்பட்டது. அரசியலமைப்பை கவிழ்க்க ஒரு சதித்திட்டத்தை தயாரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், அரசின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரும் இந்த ஆர்ப்பாட்டங்களை தமக்கு சாதகமாக கைப்பற்றியுள்ளனர் என்பது பற்றி இருவரும் எதுவும் கூறப்படவில்லை.

மினியாபொலிஸில் பாதிக்கப்பட்டவர் வெள்ளையினத்தவராகவும், பொலீசார் கறுப்பினத்தவராகவும் இருந்திருந்தால், பொலிஸ்காரர்களைக் கைது செய்து குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவர தயங்கியிருக்க மாட்டார்கள் என்று ஷார்ப்டன் நேர்மையற்ற முறையில் கூறினார். ஃபுளோய்ட்டின் கொலை "திட்டமிட்ட துஷ்பிரயோகத்தின்" விளைவு என்று பைடென் அறிவித்தார்.

யாராவது முறையான துஷ்பிரயோகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்கள் என்றால் அது பைடென் தான். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளான அவரது அரசியல் வாழ்க்கை குற்றவியல், அலட்சியம் மற்றும் பிற்போக்குத்தனம் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. அவர் ஜனநாயகக் கட்சி அதிகார கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக செயல்பட்டு, வன்முறைக் குற்றக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமுலாக்கச் சட்டத்தை 1994 இல் எழுதினார். இது முதன்மையாக, ஆபிரிக்க அமெரிக்க ஆண்களை பெருமளவில் சிறையில் அடைத்து மரண தண்டனையை விரிவுபடுத்தியது. பராக் ஒபாமாவின் துணைத் தலைவராக எட்டு ஆண்டுகளாக, பைடென் ஒரு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இந்நிர்வாகம் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை காவல்துறையினருக்கு அனுப்பியது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு பொலிஸ் கொலையையும் மூடிமறைத்தது.

காவல்துறையினருக்கு "நிதிக்குறைப்பு" செய்வதற்கான அழைப்புகளை நிராகரித்த பைடென், காவல்துறையை "புத்துயிர் பெறுவதற்கு" 300 மில்லியன் டாலர் கூடுதல் கூட்டாட்சி நிதியை வழங்க முன்மொழிகிறார். அதில் மேலும் அதிக உடல் கமராக்கள், அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தேசிய தரநிலை மற்றும் சிறுபான்மை பொலிஸாரை பணியமர்த்தல் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களைச் செயல்படுத்த உதவுகிறார். சமூக சேவை வழங்குநர்கள் மனநலம், போதைப்பொருள் பாவனை அல்லது வீடற்றவர்கள் தொடர்பான அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது காவல்துறையினருடன் இணைந்து செயற்படவும் அவர் அழைப்பு விடுக்கிறார். இதன் மூலம் சமூக சேவையாளர்களை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு கையாக செயல்பட கட்டாயப்படுத்துகிறார்.

ஜனநாயகக் கட்சியின் முதன்மை நபர்களில் பைடெனின் முன்னாள் போட்டியாளர் பேர்னி சாண்டர்ஸும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். செவ்வாயன்று நியூயோர்க்கரில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், சாண்டர்ஸ் காவல்துறையை "ஒழிக்க" அல்லது "நிதிக்குறைப்பு" செய்வதற்கான அழைப்புகளை எதிர்த்தார். அதற்கு பதிலாக அதிக நிதி மற்றும் கூடுதல் பயிற்சிக்கு அழைப்பு விடுத்தார். தனது நீண்ட நேர்காணலில், சாண்டர்ஸ் "அரசியல் புரட்சி" (அவரது முன்னாள் பிரச்சார முழக்கம்) அல்லது "கோடீஸ்வர வர்க்கம்" பற்றிய எந்த குறிப்பையும் தவிர்த்தார். அவரது நிலைப்பாடுகள் இப்போது பைடெனின் நிலைப்பாடுகளிலிருந்து பிரித்தறிய முடியாதவையாக உள்ளன.

பிரதான ஊடகங்களிலும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திலிருந்தும் கட்டவிழ்த்துவிடப்படும் அனைத்து வர்ணனைகளிலும் காவல்துறையின் மிருகத்தனம் மற்றும் மக்கள் எதிர்ப்புகளின் பாரிய வெடிப்பு ஆகிய இரண்டையும் அடிக்கோடிட்டுக் காட்டும் யதார்த்தத்தைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று கொலைகள், அவர்களில் பெரும்பாலோர் ஆபிரிக்க அமெரிக்கர்கள் அல்ல என்பதில் எந்த குறிப்பும் இல்லை. புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்ப்பின் பாசிசப் போரின் ஒரு பகுதியாக ஹிஸ்பானிக் தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றிவளைக்கப்பட்ட மற்றவர்களின் அவலநிலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. COVID-19 தொற்றுநோயால் நாட்டைப் பிடித்துள்ள வரலாற்றுரீதியான மட்டத்திலான வேலையின்மை குறித்தோ அல்லது ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் மாநில அரசுகள் பின்பற்றிய கொலைகாரக் கொள்கைகளால் இறந்த 114,000 பேர் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வெளிநாடுகளில் முடிவில்லாத அமெரிக்கப் போர்களும், இந்த போர்களுக்கும் நாட்டில் இராணுவமயமாக்கப்பட்ட பொலிஸ் வன்முறைகளுக்கும் இடையிலான உறவும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை உள்நாட்டில் அரசின் வன்முறையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற 1960 களில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு உண்மை புறக்கணிக்கப்படுகிறது. அதோடு காவல்துறை, இராணுவம் மற்றும் பாரிய அடக்குமுறைக்கான தயாரிப்பு ஆகியவற்றிற்கு இடையேயான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உறவு பற்றியும் குறிப்பிடப்படுவதில்லை.

இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளின் வாயிலிருந்து "வெள்ளை மேலாதிக்கம்" மற்றும் "திட்டமிட்ட இனவாதம்" போன்ற சொற்றொடர்கள் வெளிவருவது எளிதானது என்றாலும், ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படாது உள்ளது: அது முதலாளித்துவம் என்பதாகும். ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள், பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட சமூக சமத்துவமின்மை ஆகியவைதான் ஃபுளோய்ட்டின் மற்றும் அவரைப் போன்ற பல தொழிலாளர்கள் மரணத்திற்கான நிலைமைகளை உருவாக்கியது என்பது பற்றிய ஆய்வு இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக, வெற்று சீர்திருத்தங்களுக்கான அழைப்புகள் மீண்டும் உள்ளன, அவை 50 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் கேட்கக்கூடியதாக இருக்கின்றன.

ஜனநாயகக் கட்சியினரினதும் அவர்களின் தொங்குதசைகளான ஊடகங்கள், போலி-இடதுகள் மற்றும் கல்வியாளர்கள் நோக்கம் "வெள்ளையினத்தவரின் ஸ்திரத்தன்மையின்மையை" எதிர்கொள்வதற்கான வெற்றுரைகள் பற்றிய மக்கள் கருத்தை மூடிப்பாதுகாப்பதும், பரந்த சமூக மற்றும் பொருளாதார அமைப்பிற்கும் பொலிஸ் வன்முறைக்கும் உள்ள உறவு பற்றி கேள்வி எழுப்பப்படுவதை தடுப்பதுமாகும். எந்த குறிப்பிடத்தக்க முறையிலும். நடுத்தர வர்க்க கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் இப்போது ஜனநாயகக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வாதங்களின் நோக்கம், எந்தவொரு தவறும் முதலாளித்துவ அமைப்பினது என்பதை மறைப்பதும் மற்றும் தற்போதைய பொலிஸ் வன்முறையை பெரும்பான்மையான வெள்ளையின தொழிலாளர்களை கொண்ட இனவாத சமூகத்தின் விளைவு எனக்காட்டுவதுமாகும்.

பல்லின மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கடந்த இரண்டு வாரங்களின் ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியுள்ளன. இது அமெரிக்கா ஒரு அடிப்படையில் இனவெறி சமூகம் என்ற வாதங்களைத் உடைத்தெறிந்துள்ளது.

நேற்று காங்கிரஸ் முன் சாட்சியமளித்த ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் சகோதரர் பிலோனிஸ் ஃபுளோய்ட், அவரது மரணத்தைத் தொடர்ந்து உருவாகிய ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்தினை பற்றி குறிப்பிட்டு: “ஜோர்ஜ் உதவிக்கு அழைப்பு விடுத்தார், அவர் புறக்கணிக்கப்பட்டார். தயவுசெய்து நான் இப்போது உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன், எங்கள் குடும்பத்தினரின் அழைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் தெருக்களில் ஒலிக்கும் அழைப்புகள், அனைத்து பின்னணியினரும், பாலினங்களும், இனங்களும் ஒன்று சேர்ந்து மாற்றத்தைக் கோருகின்றன”.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட இனவாதக் கட்டுக்கதை எதையும் விளக்கவில்லை என்பதை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்தையும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதையும் சமத்துவமின்மை, வறுமை, போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்துடன் இணைக்க சோசலிச சமத்துவக் கட்சி முயல்கிறது. ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப இப்போது மிகப்பெரிய சாத்தியம் உள்ளது. ஆனால் பாரிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் தீவிரமயமாக்கல் சோசலிசத்திற்கான ஒரு நனவான புரட்சிகர போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்க, இணைய இங்கே அழுத்தவும்.

Loading