கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததோடு மக்ரோன் பரந்த திவால்நிலையையும் பணிநீக்கங்களையும் அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை COVID-19 தொற்றுநோயைப் பற்றிய ஒரு சுருக்கமான தொலைக்காட்சி உரையில், இமானுவல் மக்ரோன் தனது அரசாங்கம், நெருக்கடிக்கான சுமையை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்ப்படும் என அறிவித்தார். பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஒரு சர்வதேச அலைகளின் பின்னணியில், -"மஞ்சள் சீருடை" இயக்கம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த குளிர்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்குப் பின்னர்- பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்போவதில்லையென மக்ரோன் தெளிவுபடுத்தினார்.

தொற்றுநோய்களின் போது அரசாங்கம் "500 பில்லியன் யூரோக்கள்" செலவழித்ததை மக்ரோன் எடுத்துரைத்தார். "இந்த செலவுகள் நாங்கள் அனுபவித்த விதிவிலக்கான சூழ்நிலைகளின் காரணமாக நியாயப்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை ஏற்கனவே இருக்கும் எங்கள் கடனுடன் கூடுதலாக உள்ளன" என்று அவர் கூறினார். பெரிய வங்கிகள் வைத்திருக்கும் நச்சுப் பத்திரங்களை வாங்குவதற்கும், மிகப் பெரிய பிரெஞ்சு நிறுவனங்களை உறுதிப்படுத்துவதற்கும் பெருமளவில் நிதியளித்த இந்த பாரிய கொடுப்பனவுகளுக்கும், வேலைகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்கான நிதியப் பிரபுத்துவத்தின் எந்தவொரு கடமைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

மாறாக. பிரான்ஸ் "உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக திவால்நிலைகளையும் பல பணிநீக்க திட்டங்களையும் அனுபவிக்கும்" என்று அவர் கூறினார். உத்தியோகபூர்வ கணிப்புகளின்படி, 800,000 முதல் 1 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், மேலும் பாரிஸைச் சுற்றியுள்ள Ile-de-France பிராந்தியத்தில் 40 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வரும் மாதங்களில் திவாலாகும். இது 1930 களில் இருந்து காணப்படாத மட்டத்திற்கு, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் ஒரு வருடத்தில் சுமார் 10 சதவீத பொருளாதார வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது.

பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள், ஆளும் வர்க்கத்திற்கு பொதுமக்களின் பணத்தை வாரிக்கொட்டிக் கொண்டிருக்கையில், வேலைகளையும் சிறு வணிகங்களையும் பாதுகாக்க ஆளும் வர்க்கத்தை கட்டாயப்படுத்துவது நினைத்துப் பார்க்க முடியாதது என்று மக்ரோன் வலியுறுத்தினார். "வரிகளை உயர்த்துவதன் மூலம் இந்த செலவினங்களுக்கு நாங்கள் நிதியளிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.

இது, பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும், தொழிலாள வர்க்கத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் போர் அறிவிப்பாகும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் இழப்பில், நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை அதன் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான ஒரு சாக்குப்போக்காக அவர் தொற்றுநோயைப் பயன்படுத்துகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் பெரும் பணக்கார ட்ரில்லியன்களை வழங்கும்போது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் பசி மற்றும் துயரம் அதிகரிக்கும் போதும், பெரும் செல்வந்தர்கள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு தங்கள் அவமதிப்பைக் காட்டுகிறார்கள்.

பிரெஞ்சு புரட்சிக்கு முன்னர் பழைய பிரெஞ்சு ஆட்சி (États-Généraux) க்கு வரி செலுத்த நிலப்பிரபுத்துவ பிரபுக்கள் மறுத்ததிலிருந்து காணப்படாத ஒட்டுண்ணித்தனத்தையும் அவமதிப்பையும் நவீனகால ஆளும் வர்க்கம் காட்டுகிறது.

இந்தச் சூழலில்தான், தொற்றுநோய் குறித்த மக்ரோனின் கூற்றை நாம் புரிந்து கொள்ள முடியும், அதன்படி, தொற்றுநோயைப் பற்றி, “எங்கள் பதிவைப் பற்றி நாங்கள் வெட்கப்படத் தேவையில்லை. எங்கள் தேர்வுகள் மற்றும் செயல்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.” இந்த அடிப்படையில், ஜூன் 22 முதல் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதாகவும், இன்று முதல் காப்பி அருந்துமிடங்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறப்பதாகவும் மற்றும் வயோதிபரின் ஓய்வகங்களுக்கு கட்டுப்பாடற்ற வருகைகளை அனுமதிப்பதாகவும் மக்ரோன் அறிவித்தார்.

உண்மையில், தொற்றுநோயின் எண்ணிக்கைகள் மக்ரோனும் அவரது ஐரோப்பிய சகாக்களும் என்றென்றும் சுமக்கும் ஒரு கறையாகும். மக்களுக்கு முகமூடிகளை வழங்க மறுத்ததன் மூலமும், பாரியளவிலான சோதனை மற்றும் சமூக இடைவெளியை உடனடியாக விளக்கவும் ஒழுங்கமைக்கவும் அல்லது சுகாதார அமைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்குவதற்கும் மறுத்த இந்த அரசாங்கங்கள் ஒரு சுகாதார படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளன.

ஒரு சில புள்ளிவிவரங்கள் இந்த உண்மையை விளக்குகின்றன. சீனாவில் —பிரான்சை விட 21 மடங்கு மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு, COVID-19 முதன்முதலில் வெளிப்பட்டிருந்தது, எனவே ஐரோப்பாவில் தொற்றுநோயின் ஆரம்பத்தில் அறியப்பட்ட சிகிச்சைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை அது மேம்படுத்த வேண்டியிருந்தது— 4,634 பேர் இறந்தனர். ஆனால் பிரான்சில் 29,400 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மக்ரோன் தனது பதிவைப் பற்றி வெட்கப்படவில்லை என்று கூறும்போது, அது தனது சக குடிமக்களின் வாழ்க்கையைப் பற்றிய அவரது வர்க்க அவமதிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது.

தொழிலாளர்களை வீட்டில் முடக்கி வைப்பதற்கும், ஒரு சோதனை உள்கட்டமைப்பை அமைப்பதற்கும் மக்ரோன் தனது "தேர்வுகள்" என்று அழைப்பதைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் தான் பிரான்சில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மீது அதை திணித்தனர். இத்தாலி, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேலைநிறுத்த அலைகளை எதிர்கொண்ட ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் பாரிய அளவிலான சமூக முடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டன.

இந்த உண்மைக்கு பிரெஞ்சு முதலாளிகளின் அமைப்பு வெளிப்படையாக சாட்சியமளித்தது. "சுகாதார நடவடிக்கைகளால் நடவடிக்கை தடைசெய்யப்படாத இடங்கள் உட்பட, அனைத்து தொழில்துறை துறைகளிலும், தொழிலாளர்கள் மத்தியில் அணுகுமுறையில் மிகவும் மிருகத்தனமான மாற்றம் உள்ளது" என்று மெடெஃப் (தேசிய முதலாளிகள் சங்கம்) துணைத் தலைவர் பாட்ரிக் மார்ட்டின் மார்ச் மாதம் கூறினார். COVID-19 இன் மரண ஆபத்து குறித்து தொழிலாளர்களின் “அதிகப்படியான எதிர்வினை” யை அவர் கண்டித்தார். இதன் பொருள், நிறுவனங்களின் நிர்வாகம், "தொழிலாளர்களின் அழுத்தம் காரணமாக இனி உற்பத்தியைத் தொடர முடியாது" என்று அவர் கூறினார்.

தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பின் வளர்ச்சியால் பீதியடைந்த ஆளும் வர்க்கம், தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது தனது கட்டளையை சுமத்த ஒரு சர்வாதிகார மற்றும் வன்முறைக் கொள்கையை பின்பற்ற விரும்புகிறது. ஆதலால் கடந்த இரண்டு வாரங்களாக வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகளுக்கு மக்ரோன் தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்.

மினியாபொலிஸ் காவல்துறையினரால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டதற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்புக்கள் மற்றும் பிரான்சில் அடாமா ட்ரொரே பொலிஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிரான எதிர்ப்புக்களின் மத்தியில், தான் "இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றில் கடுமையானவர்" என்ற வாக்குறுதியுடன் மக்ரோன் திருப்தி அடைந்தார். தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில், மயோட்டே கடற்கரையில் கொமொரிய அகதிகள் மூழ்கடிக்கப்படுவதை பார்த்து சிரித்த ஒரு ஜனாதிபதியின் இந்த அறிக்கை அபத்தமானது.

மறுபுறம், 2018 நவம்பரில் நாஜி ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று அழைத்த மக்ரோன், கலகப் பிரிவு போலீசார் "மஞ்சள் சீருடையாளர்களை" தாக்கத் தயாராகி கொண்டிருந்தபோது, காவல்துறையினருக்கு அவர் அளித்த ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். "குடியரசின் உத்தரவு இல்லாமல், எங்கள் எதிர்காலத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார். மேலும் "இந்த உத்தரவு எங்கள் மண்ணில் உள்ள காவல்துறை மற்றும் இராணுவ பொலிஸால் உறுதி செய்யப்படுகிறது," காவல்துறை "அரசாங்கத்தின் ஆதரவிற்கும் தேசத்தின் அங்கீகாரத்திற்கும் தகுதியானது" என்றும் கூறினார்.

பொலிஸ் வன்முறைக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதால், இது போராட்டத்தில் நுழையும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆழமான பிரச்சினைகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்டவிரோதமாக இராணுவத்தை நிலைநிறுத்த ட்ரம்ப் முயன்றதற்கான காரணம் என்னவென்றால், தொழிலாளர் வர்க்கத்தின் மீது அதன் குற்றவியல் மற்றும் சமூக அழிவுகரமான கொள்கைகளை சுமத்த, இராணுவ சர்வாதிகாரம் நிறுவுவதை நிதியப் பிரபுத்துவம் கருதுகிறது என்பதாகும். பொலிஸ் வன்முறையில் இனவெறி அணுகுமுறைகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பங்கைக் கொண்டுள்ளன. ஆனால் இனவெறி மனப்பான்மைகளை இழிவுபடுத்த முயற்சிப்பதன் மூலம் பொலிஸ் வன்முறையைத் தடுக்க முடியாது, ஏனென்றால் இத்தகைய வன்முறை எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாயாத நலன்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிளர்ச்சியில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நிதிய பிரபுத்துவத்தின் சலுகைகளைப் பாதுகாப்பதே அது.

"மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிரான நடவடிக்கைகளில், காவல்துறையினர் 10,000 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர், 4,400 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை காயப்படுத்தினர், 25 க்கும் மேற்பட்டவர்களின் உடலுறுப்புக்களை அழித்தனர், ஐந்து கைகளை உடைத்தெறிந்தனர், மேலும் வயதான பெண்மணியான ஸினெப் ரெடுவானைக் கொன்றனர்.

மக்ரோனும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களும் கொரோனா வைரஸ் கார்ப்பரேட்டுகளுக்கான அவசரகால நடவடிக்கைகளின் விலையை தொழிலாளர்கள் மீது சுமத்த பாரிய தாக்குதல்களுக்கு தயாராகி வருவதால், பாரிய வர்க்க மோதல்கள் சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. Opinion பத்திரிகை சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது "சிறுபான்மை குழுக்கள், 'மஞ்சள் சீருடையாளர்களிலிருந்து' வெளியே விலகி இருக்கும்போது, உள்நாட்டு உளவுத்துறை ஒரு 'சமூக நெருக்கடி மற்றும் இன நெருக்கடிக்கு இடையிலான உண்மையான போராட்டங்களின் ஒருங்கிணைப்பு' குறித்து கவலை கொண்டுள்ளது" என தெரிவிக்கிறது.

தற்போதைக்கு, பொலிஸ் வன்முறைக்கு எதிரான அணிதிரட்டல்களில் ஜனநாயக மற்றும் இனவெறி எதிர்ப்பு முழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. "மஞ்சள் சீருடையாளர்" இயக்கம் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் கோரிக்கைகளைத் தவிர்த்தது. ஆனால் தீர்க்கமான கேள்வி என்னவென்றால், பிரான்சிற்குள் ஏற்கனவே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டும் இந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல, ஆனால் மக்ரோன் மற்றும் உலகெங்கிலும் உள்ள வங்கியாளர்களால் திட்டமிடப்பட்ட தாக்குதல்களைத் தடுக்க தொழிலாளர்களின் புதிய சர்வதேச இயக்கம் என்ன அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதாகும்.

மக்ரோனுக்கு எதிரான 2 வருட "மஞ்சள் சீருடையாளர்கள்" இயக்கம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறையை தகர்க்க மக்ரோனின் உறுதி ஆகியவை அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மக்ரோன் தனது அரசாங்கத்தின் கொள்கைகளை "சமூக பங்காளிகளுடன்" ஒருங்கிணைப்பதாக உறுதியளித்ததன் மூலம் வரவேற்ற மதிப்பிழந்த தொழிற்சங்க எந்திரத்திலிருந்து முறித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில், ஆபத்தான மற்றும் மோசமான காற்றோட்டமுள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை நூற்றுக்கணக்கான இடங்களில் நெருக்கமாக வேலை செய்ய நிர்பந்திக்கும் நிலையில், 10 க்கும் மேற்பட்டவர்கள் திறந்தவெளி பேரணிகளில் கூடுவது தொற்றுநோயின் சாக்குப்போக்கில் இன்னும் தடை செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பல்வேறு "மஞ்சள் சீருடையாளர்" குழுக்கள், இளைஞர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஆகியோரின் குழுக்கள், வசிப்பிட பகுதிகளிலும் சமூக ஊடகங்களிலும் உள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களின் நனவை உயர்த்தவும், அரசியல் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் எந்திரங்களிலிருந்து தங்கள் சுயாதீனத்தை நிலைநாட்டவும், வரவிருக்கும் போராட்டங்களின் புறநிலை தர்க்கத்தை வெளிப்படுத்தும் முன்னோக்குடன் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கவும் முயல்கிறது. அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கும் ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கும் ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதன் அடிப்படையில் மட்டுமே இவை வெற்றிபெற முடியும்.

Loading