முன்னோக்கு

வெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் Larry Kudlow கூறுகையில், கோவிட்-19 தொற்றுநோயின் போது வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை ட்ரம்ப் நிர்வாகம் நீடிக்க அனுமதிக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

“வேலை செய்யாமல் இருப்பதற்கு நாம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்,” என வோல் ஸ்ட்ரீட்டின் அந்த முன்னாள் செயலதிகாரி தெரிவித்தார். வேலையற்றோருக்கான இந்த கூடுதல் நிதி மக்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதை "நடைமுறையளவில் தடுத்துநிறுத்துகின்றது" என்பதை “ஏறத்தாழ எல்லா தொழில் வழங்குனர்களும்” புரிந்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர், காங்கிரஸ் CARES சட்டத்தை நிறைவேற்றியது. பெருவணிகங்களுக்கு மிகப்பெரும் தொகைகளைக் கையளித்த அதேவேளையில், அதன் மிக மிக குறைவான அரசு வேலைவாய்ப்பற்றோருக்கான நிதியுதவி, சான்றாக மிச்சிகனில் வாரத்திற்கு ஏறக்குறைய 350 டாலர் வரம்பில் இருக்கும் இதனுடன் சேர்ந்து, கூடுதல் தொகையாக பெடரல் அரசாங்கத்தின் வாரத்திற்கு 600 டாலர் அவசரகால நிதியையும் உள்ளடக்கி இருந்தது.

அமெரிக்க தொழிலாளர் சக்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோரான சுமார் 36.5 மில்லியன் பேர் கோவிட் 19 தொற்றுநோயின் காரணமாக வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக வேலையிழந்த குடும்பங்களின் மில்லியன் கணக்கானவர்களைப் பொறுத்த வரையில், இந்த மேலதிக 600 டாலர் உதவித்தொகை அத்தியாவசிய வாழ்வாதாரமாக இருந்துள்ளது. இது பட்டினி மற்றும் வீடற்ற நிலைமையை அவர்கள் தவிர்ப்பதற்கு அனுமதித்தது.

இந்த நிதியுதவி மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, நாடெங்கிலும் இலவச உணவு வழங்கும் நிலையங்கள் உணவுப் பொருள் பற்றாக்குறையில் உள்ளதால், இந்த நிதியுதவி கிடைத்த போதினும் கூட உணவுக்கு உத்தரவாதமற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22 இல் இருந்து 38 சதவீதத்திற்கு இடையே எட்டி, இரண்டு மடங்கிற்கும் அதிகமாக ஆகியுள்ளது. அதேவேளை மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை ஏலத்திற்கு விடப்படுவதையும் வெளியேற்றப்படுவதையும் எதிர் நோக்குகின்றனர்.

அரசு வேலைவாய்ப்பின்மை நிதியுதவியுடன் சேர்ந்து இந்த 600 டாலர் என்பது தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழக்காமல் இருந்திருந்தால் "அவர்களின் சம்பளங்களை விட அதிகமாக" உள்ளது என்று குட்லொவ் குறைகூறினார். ஆனால் இது அரசின் பெருந்தன்மையின் வெளிப்பாடு அல்ல, மாறாக அமெரிக்காவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு எந்தளவுக்கு குறைவூதியங்கள் உள்ளன என்பதற்கான ஒரு பிரதிபலிப்பாகும்.

இந்த தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்ட பாரிய வேலையிழப்புகள் மற்றும் பெருநிறுவன பலப்படுத்தல்களின் ஓர் அலைக்கு மத்தியில், இந்த தொற்றுநோயின் போது இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் திரும்பப் போவதில்லை என்று மதிப்பிடப்படும் நிலையில், இந்த அவசரகால வேலைவாய்ப்பின்மை உதவியை வெள்ளை மாளிகை நீடிக்க மறுப்பதென்பது தொழிலாள வர்க்க மக்கள் பலருக்கும் வறுமை நிலையை அர்த்தப்படுத்தும்.

நாட்டின் பெரும் பகுதிகளில் இந்த நோய் மிகப் பெரியளவில் மீளெழுந்துள்ள போதினும் கூட, கோவிட்-19 பரவுவதற்கான விளைநிலமாக ஆகியுள்ள ஆலைகளுக்குத் தொழிலாளர்களை பலவந்தமாக திரும்ப செய்வதற்கான குட்லொவ்வின் நோக்கம் வெளிப்படையாகவும் மூர்க்கமாகவும் உள்ளது.

தேசியளவில், இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் மட்டுமே கோவிட்-19 ஆல் 10,000 இக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் டஜன் கணக்கானவர்கள் உயிரிந்துள்ளனர். கன்சாஸின் மொத்த நோயாளிகளில் அண்மித்து மூன்றில் ஒரு பங்கினரைக் கணக்கில் கொண்டு வரும், அண்மித்து 3,000 இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள் அம்மாநிலத்தில் நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதை போலவே வாகனத்துறை ஆலைகள், எத்தனை தொழிலாளர்கள் நோய்வாய்படுகிறார்கள் என்பதைப் பகிரங்கமாக அறிவிப்பதில்லை என்பதைத் தவிர, இத்துறை ஆலைகளும் இந்த வைரஸிற்கான வளர்நிலமாக உள்ளன. ஜிஎம், ஃபோர்ட், FCA, டொயோட்டா மற்றும் தெஸ்லா உட்பட ஒவ்வொரு பிரதான வாகனத்துறை உற்பத்தி நிறுவனமும் அவற்றின் ஆலைகளில் நோயாளிகளை அறிவிப்பதில்லை என்றவொரு கொள்கையைக் கொண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களிடம் இருந்து கிடைத்த அநாமதேய தகவல்கள் அடிப்படையிலான ஒன்றுக்கொன்று தொடர்பற்ற செய்திகளின்படி, அங்கே வாகனத்துறை ஆலைகளில் டஜன் கணக்கான நோயாளிகள் உள்ளனர்.

ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் நவிஸ்டார் ட்ரக் ஆலையின் ஒரு தொழிலாளி, அங்கே ஐந்து தொழிலாளர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 20 க்கும் அதிகமானவர்கள் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்குமாறு திங்கட்கிழமை WSWS வாகனத்துறை சிற்றிதழுக்கு எழுதினார். நவிஸ்டார் ஆலை ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த ஆலையில் உற்பத்தியை மீண்டும் தொடங்கி இருந்தது.

கார்ல் மார்க்ஸ் வார்த்தைகளில், இந்த ஆலைகள் "பயங்கரத்தின் மாளிகைகளாக" ஆகியுள்ளன, இவற்றில் எந்தவொரு பணிநேரமும் மரண தண்டனையை அர்த்தப்படுத்துகின்றன.

அறிவிக்கப்பட்ட நோயாளிகள் இல்லாத ஆலைகளிலும் கூட, நிலைமைகள் சகித்துக் கொள்ளவியலாதளவுக்கு உள்ளன. சமூக இடைவெளி ஏற்படுத்துவதற்காக உற்பத்தி வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, முதலாளிமார்கள் காற்று சுழலாமல் இருப்பதற்காக சர்வசாதாரணமாக மின்விசிறிகளை நிறுத்துவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். கோடையின் மத்தியில், சூடான இயந்திரங்கள் சுற்றி இருக்க, மின்விசிறிகளும் இல்லாமல், முகக்கவசமும் அணிய வேண்டியிருப்பதால், தொழிலாளர்கள் உற்பத்தியிடங்களில் சோர்ந்து போகிறார்கள் அல்லது மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தங்களுக்கும் தங்களின் அன்புக்குரியவர்களுக்கும் மரணம் ஏற்படலாம் என்ற நிலைமைகளின் கீழ் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுத்து வருகிறார்கள். உணவு மற்றும் வர்த்தகத்துறை தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தினது புள்ளிவிபரங்கள்படி, தேசியளவில் இறைச்சி பதப்படுத்தும் பணியாளர்களில் சுமார் 30 இல் இருந்து 50 சதவீதத்தினர் கடந்த வாரம் வேலைக்கு வரவில்லை. சில வாகனத்துறை ஆலைகளில், 15 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏதேனுமொரு தினத்தில் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டனர்.

தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பது அதிகபட்ச உற்பத்தித்திறனுக்குத் திரும்புவதற்கான பெருநிறுவனங்களின் முயற்சிகளைத் தொந்தரவுப்படுத்தி உள்ளது. அவை புதிதாக வேலைக்குச் சேர்க்கப்பட்ட மற்றும் தற்காலிக தொழிலாளர்களை 60 மணி நேரம் அல்லது ஒரு வாரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய நிர்பந்தித்ததன் மூலமாக இதை அதிக அதிகரிக்கச் செய்ய முயன்றுள்ளன. ஆனால் உற்பத்தி இலக்குகளை அடைவதற்காக எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கைவிடுவதற்கான முயற்சிகளுக்குத் தொழிலாளர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

குட்லொவ்வின் நேர்காணலுக்கு வெறும் ஒரு நாளைக்குப் பின்னர், திங்கட்கிழமை, பெடரல் ரிசர்வ் அறிவிக்கையில் அது முன்னர் அறிவித்திருந்த நேரடியாக பெருநிறுவன பத்திரங்களை வாங்குவதற்கான திட்டங்களை இவ்வாரம் தொடங்குமென அறிவித்தது. இது வரிசெலுத்துவோரின் நூறு பில்லியன் கணக்கிலான டாலர் பணத்தை இன்னும் கூடுதலாக நேரடியாக பெருநிறுவன இருப்புநிலை கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பு என்பதால் பங்குகளின் மதிப்புகளை அதிகரித்தது.

இந்த தகவல் தெளிவாக உள்ளது: அதுவாவது, பில்லியனிய நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குப் பிணையெடுப்பு வழங்குதல் என்று வருகையில், எந்த செலவும் தவிர்க்கப்படுவதில்லை. ஆனால் பட்டினியிலிருந்தும் அல்லது அப்புறப்படுத்துவதில் இருந்தும் தொழிலாளர்களைப் பேணுவது என்று வருகையில், அரசின் உதவி என்பது உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஏற்றுக் கொள்ள முடியாத "தடுத்துநிறுத்தலாக" மற்றும் இலாபம் உருவாக்குவதற்கு ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது.

முதலீட்டு வங்கி Bear Stearns இன் முன்னாள் இயக்குனரும் பல கோடி சொத்துக்களின் கோடீஸ்வரருமான குட்லொவ், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பிரதான பெருநிறுவனங்களுக்கு நிதி திரட்டுபவராக பேசி வருகிறார். இந்த தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலைமைகளின் கீழ் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்ய நிர்பந்திப்பது பாரியளவில் நோய்தொற்றுக்கும் பாரிய உயிரிழப்புகளுக்கும் வழி வகுக்கும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ட்ரம்ப் நிர்வாகத்திற்குள்ளே, அதன் கொள்கைகளிலிருந்து எத்தனை நூறாயிரம் பேர் மரணிப்பார்கள் என்ற மாதிரிகளைக் கொண்டு அது செயல்பட்டு வருகிறது. அதனால் தான் வெள்ளை மாளிகை பெருநிறுவனங்களின் வேலையிடங்களில் நோய்தொற்றுக்கான பொறுப்புகளில் இருந்து பெருநிறுவனங்களுக்கு விதிவிலக்கு வழங்குவதற்காக அழுத்தமளித்து வருகிறது.

முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் பண்டிதர்கள் அனைவராலும் மறுக்கப்படும் முதலாளித்துவத்தின் மிகப்பெரும் இரகசியம் என்னவென்றால் அரசால் பெருநிறுவனங்களுக்கு எத்தனை ட்ரில்லியன் டாலர்கள் கையளிக்கப்படுகின்றன என்பது விடயமல்ல, தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதன் மூலமாக மட்டுமே நிதியியல் செல்வந்த தட்டுக்கள் இலாபங்களை ஈட்ட முடியும்.

பன்னிரெண்டு வருடங்களாக மத்திய வங்கிகள் நடைமுறையளவில் வரம்பின்றி பணத்தை அச்சிட்டு வருவது, பங்குச் சந்தையில் பெருநிறுவன மதிப்புகளைப் பாரியளில் விரிவாக்கி உள்ளதுடன், பெருநிறுவனங்கள் கடன் பெறுவதை விரிவாக்கியதன் மூலமாக நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வ செழிப்புக்கு எரியூட்டி வருகிறது. ஆனால் இத்தகைய கடன் பெறும் சேவைக்காக, பெருநிறுவனங்கள் அவற்றின் தொழிலாளர்களிடமிருந்து உபரி மதிப்பைத் தடையின்றி உறிஞ்சி எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

செயலதிகாரிகளின் சம்பளத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நூறு மில்லியன் கணக்கில் செலவிடும் மிகப்பெரும் பெருநிறுவனங்கள் கடன் சேவைகளைப் பெறுவதற்காக தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை ஆபத்திற்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வாதம் அர்த்தமற்றதும், பகுத்தறிவற்றதுமாகும்.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் இயலுமளவுக்கு எதைப் பெற முடியும் எதைப் பெற முடியாது என்ற அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்பட வேண்டும். பாதுகாப்பான வேலையிட சூழல்களுக்குப் பணம் வழங்கவோ அல்லது பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவோ "பணம் இல்லை" என்ற கூச்சல், வோல் ஸ்ட்ரீட்டுக்கு 4 ட்ரில்லியன் டாலர் கையளிக்கப்பட்டதால் பொய்யாகி உள்ளது.

பெருநிறுவனங்களில் இருந்து தொழிற்சங்கங்களில் உள்ள அவர்களின் "பங்காளிகள்" வரையில், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் இரண்டு பெருவணிக கட்சிகள் வரையில், சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பும், நிதியியல் உயரடுக்கைச் செல்வசெழிப்பாக்கும் நோக்கத்துடன் தொழிலாளர்களை மரணப் பொறி ஆலைகளுக்குள் திரும்ப அனுப்ப முயல்வதுடன், தொழிலாளர்களுக்கு எதிராக அணிசேர்ந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்! என்ற அதன் அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு குறிப்பிட்டது:

இதனால்தான் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பணியிடங்கள் மற்றும் அலுவலகங்களிலும், தொழிலாளர்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய தொழிலாளர்களை ஒழுங்கமைத்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் தொழிற்துறை முழுவதிலும் மற்றும் பிற துறைகளிலும் உள்ள தொழிலாளர்களை அணுகவும், அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் தகவல்களைப் பகிரவும் சமூக ஊடகங்கள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடெங்கிலும் கோவிட்-19 அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளவர்களின் அவர்களின் சொந்த வேலையிடங்கள் மீதான தமது கட்டுப்பாட்டை அவர்கள் வலியுறுத்த வேண்டியது மிக முக்கியமாகும். உற்பத்தி வேகங்கள் மீதும் சமூக இடைவெளி மீதும் கட்டுப்பாட்டை ஸ்தாபிக்க தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். கோவிட்-19 பரவி வரும் தொழிற்சாலைகளில், இத்தகைய குழுக்கள் உடனடியாக உற்பத்தியை நிறுத்த வேண்டும்.

இந்த நெருக்கடியால் வேலையின்றி விடப்பட்ட தொழிலாளர்கள் வாழ்வதற்கேற்ற உத்தரவாதமான கூலியைப் பெறுவதையும், இந்த தொற்றுநோயின் விளைவாக எந்தவித வருவாய் குறைப்பிலும் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டம் என்பது பாதுகாப்பான வேலையிடங்களுக்கான கோரிக்கையிலிருந்து பிரிக்கவியலாததாகும்.

வேலையிட பாதுகாப்புக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளானது, இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளுக்கு விஞ்ஞானிகளும் மருத்துவத்துறை வல்லுனர்களும் விடுத்து வரும் அழைப்புகளுக்கு இணக்கமாக உள்ளன. கோவிட்-19 க்கு ஒரு பகுத்தறிவார்ந்த, விஞ்ஞானப்பூர்வ விடையிறுப்புக்கான போராட்டத்திற்கு, இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான மற்றும் சமூகத்தின் மீதான நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு போராட்டம் அவசியமாகிறது.

Loading