முன்னோக்கு

பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் படுகொலை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், ஒருபுறம், முரட்டுத்தனமான படைபலம் மற்றும் இராணுவ ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களைக் கொண்டும், மறுபுறம், “சீர்திருத்தம்" மற்றும் "பொறுப்புக்கூறல்" ஆகியவற்றுக்கான வாக்குறுதிகளைக் கொண்டும் பதிலளித்தனர்.

பொலிஸூடன் சேர்த்து நிறைய சமூக தொழிலாளர்கள் மற்றும் மனநல மருத்துவ நிபுணர்களையும் உள்ளடக்கும் ஒரு நிர்வாக ஆணையில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார், இது அதிக பலத்தைப் பிரயோகித்ததற்காக குற்றஞ்சுமத்தப்பட்ட அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளைப் பின்தொடர்வதற்காக ஒரு தேசிய தகவல் களஞ்சியத்தை உருவாக்குகிறது, மற்றும் ஜனாதிபதி விவரித்ததைப் போல, “அதிகாரிகள் உயிர் ஆபத்தில் இருக்கும் போது” தவிர, குரல்வளையை வளைத்துப் பிடிப்பதற்குத் தடை விதிக்கிறது.

“சட்டம் ஒழுங்கிற்கான" அழைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான கண்டனங்களுடன் நிரம்பிய இருந்த பொலிஸ் அதிகாரிகளின் முன்னால் ஆற்றிய ஓர் உரையில் ட்ரம்ப் அவரின் அந்த நிர்வாக உத்தரவை அறிவித்தார். குரல்வளையை நெரித்துப் பிடிப்பதற்கு ட்ரம்ப் தடைவிதிப்பது உயிராபத்தான நடவடிக்கைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான வழியைப் பரந்தளவில் திறந்து வைக்கிறது, ஏனெனில் பொலிஸ் அதிகாரிகள் தீங்கு விளைவிக்கும் விதத்தில் யாரையேனும் காயப்படுத்துகையில் அல்லது கொல்லும்போது அவர்கள் தங்களின் உயிருக்கு அஞ்சியே அவ்வாறு செய்ததாக வழமையாக வாதிடுகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியினர், குரல்வளையை நெரித்துப் பிடிப்பதற்கான தடை மற்றும் துஷ்பிரயோக அதிகாரிகளின் தேசிய தகவல் களஞ்சியத்தை உருவாக்குவது உட்பட பெரிதும் ட்ரம்பினது பரிந்துரைகளையே எதிரொலித்து அவர்களின் சொந்த மேலோட்டமான பல திருத்தங்களை வழங்கி உள்ளனர், அதேவேளையில் போராட்டக்காரர்களிடையே பெருவாரியாக நிலவும், பொலிஸிற்கு "நிதியுதவியை நிறுத்துவதற்கான" கோரிக்கையையும் வெளிப்படையாக நிராகரித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியின் இப்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பைடென் நாடெங்கிலும் பொலிஸ் துறைகளை மேம்படுத்த 300 மில்லியன் டாலர் கூடுதல் பெடரல் நிதி வழங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார், அதேவேளையில் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் கூறுகையில் காவலர்களுக்கு அதிக சம்பளங்கள் வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஒன்றுக்கும் உதவாதவை. அவர்கள் பொலிஸ் சீருடைகளின் நிறங்களை மாற்ற வேண்டுமெனக் கூட கேட்கலாம். ஆளும் வர்க்கத்தின் இத்தகைய பிரதிநிதிகளிடமிருந்து வரும் "சீர்திருத்த" கோரிக்கைகள், தவிர்க்கவியலாமல், அரசின் ஒடுக்குமுறை எந்திரமான பொலிஸைப் பலப்படுத்துவதிலேயே போய் முடியும்.

ஆளும் வர்க்கத்தால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் சீர்திருத்த வாக்குறுதி அதீத வன்முறைக்கு ஒரு தீர்வாக கூறப்படுகிறது. 1960 களின் புறநகர் பகுதி கிளர்ச்சிகளுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியினர் அதிக கறுப்பின பொலிஸ் அதிகாரிகளைப் பணியில் அமர்த்துமாறும், நிறைய கறுப்பின அதிகாரிகள் படைகளை மேற்பார்வையிடுவதும், நிறைய கறுப்பின நகரசபை தலைவர்கள் இருப்பதும் பிரச்சினையைத் தீர்க்குமென அவர்கள் வாதிட்டனர்.

அரை நூற்றாண்டுக்குப் பின்னர், பொலிஸ் அதிகாரிகளில் 13 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆபிரிக்க அமெரிக்கர்களாக உள்ளனர், இது ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே பிரதிநிதித்துவம் செய்கிறது. கறுப்பு காவல்துறைத் தலைவர்கள் நாடு முழுவதும் துறைகளை நடத்துகிறார்கள், பெரிய மற்றும் சிறிய நகரங்கள் கறுப்பின நகரசபை தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த தசாப்தத்தில், பொலிஸ் வாகனங்களிலும் உடல்களிலும் கேமராக்களைப் பொருத்துவது அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மற்றொரு சர்வரோக நிவாரணியாக முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் படுகொலைகளும் துஷ்பிரயோகங்களும் தொடர்கின்றன, உண்மையில் தீவிரமடைந்துள்ளன.

பொலிஸ் வன்முறை குறித்த எல்லா ஊடக கருத்துரைகளிலும் என்ன காணாமல் போய்விடுகிறது என்றால், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கருத்துக்களை விட்டுவிட்டாலும் கூட, முதலாளித்துவ சமூகத்துடன் பொலிஸின் உறவு என்ன என்பது குறித்து எந்த ஆய்வும் இருப்பதில்லை.

பொலிஸ் வன்முறையை இனவாதத்தின் ஒரு வெளிப்பாடாக விளங்கப்படுத்துவது எந்தவொன்றையும் விவரிப்பதில் தோல்வியடைகிறது. நிச்சயமாக, பொலிஸிற்குள் இனவாதம் இருக்கிறது தான். பொலிஸ் படைகளுக்குள் இருக்கும் அடுக்குகளிடையே பாசிசவாத உணர்வுகள் நீக்கமற நிறைந்துள்ளன. இருப்பினும் எல்லா இனத்தையும் சேர்ந்த வறியவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் பொலிஸ் வன்முறைக்குப் பலியாக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டங்கள் கட்டவிழ்ந்து வருகின்ற நிலையிலும் கூட, ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ரேஷர்ட் புரூக்ஸ், இவர் கறுப்பினத்தவர், மற்றும் மிசூரி செடாலியாவில் ஹன்னா ஃபிஜர், இவர் வெள்ளை இனத்தவர், இவர்கள் உட்பட படுகொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

பொலிஸ் என்பது இனவாத ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக செயல்படவில்லை, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படுகிறது. மினெயாபொலிஸில் ஃபுளோய்ட் படுகொலைக்காக, 1934 இல் 86 ஆண்டுகளுக்கு முன்னர் மினெயாபொலிஸ் பொது வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்த வேலைநிறுத்தக்காரர்களை அடித்து நொருக்குவதில் பொலிஸ் வகித்த பாத்திரத்தை நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும்.

இது பல உதாரணங்களில் ஒன்று மட்டுந்தான். 1877 இல் மாபெரும் இரயில் போக்குவரத்து வேலைநிறுத்தத்தில் இருந்து 1886 இன் ஹேமார்க்கெட் படுகொலை வரையில் 1983-85 இல் வரலாற்று புகழ்பெற்ற அரிசோனா Phelps Dodge தாமிர சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வரையில் அமெரிக்காவின் ஒவ்வொரு பிரதான வர்க்க போராட்டம் மற்றும் சமூக மோதலிலும், தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தின் "சட்ட நெறிமுறைகளை" அமல்படுத்துவதற்கான கருவியாக பொலிஸை எதிர்கொண்டுள்ளனர். ஒரு புதிய வேலைநிறுத்த மேலெழுச்சி நிச்சயமாக பொலிஸ் அதன் தொல்சீர் பாத்திரம் ஏற்பதை, அதாவது ஆலை மறியலைத் தாக்குவதைக் காணும். முதலாளித்துவ சட்டத்தை தாங்கிப் பிடிப்பதில் பொலிஸின் மரபார்ந்த செயல்பாட்டுக்கான மற்றொரு வரலாற்று எடுத்துக்காட்டாக, போராட்டக்காரர்கள், சமீபத்தில் பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கையைக் காணும் ஒரு வாய்ப்பைப் பெற்ற இவர்கள், 1968 இல் இழிபெயரெடுத்த சிகாகோ பொலிஸ் கலகத்தை நினைவுகூர வேண்டும். ஆயிரக் கணக்கான வியட்நாம் போர் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்கள் மூர்க்கமாக தாக்கப்பட்டனர்.

செப்டம்பர் 1984 இல் Phelps Dodge வேலைநிறுத்தக்காரர்கள் மீது கனரக ஆயுதமேந்திய அரிசோனா மாநில பொலிஸ் கண்ணீர் புகைகுண்டுகளையும் இரப்பர் தோட்டாக்களையும் பிரயோகிக்கிறது. [படம்: டேவிட் நோர்த்]

கடந்த நான்கு தசாப்தங்களாக சமூக சமத்துவமின்மையும் வர்க்கப் பதட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில், பொலிஸின் அளவும் அதற்கான வரவு-செலவுத் திட்ட கணக்கும் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதான அமெரிக்க நகரங்களின் வரவு-செலவுத் திட்டக் கணக்கில் பொலிஸிற்கு 20 இல் இருந்து 45 சதவீதம் விருப்புடை மானியமாக ஒதுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, பொலிஸிற்கான செலவுகள் 40 ஆண்டுகளில் பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடுகட்டப்படும் விதத்தில் 42 பில்லியன் டாலர் அதிகரித்து, 115 பில்லியன் டாலரில் நிற்கிறது.

மத்திய புலனாய்வுத்துறைக்கான (FBI) நிதியுதவிகள், மாநில மற்றும் உள்ளாட்சித்துறை பொலிஸ் அமைப்புகளுக்கான மானியங்கள் உட்பட மத்திய பொலிஸ் நிதி ஒதுக்கீடு, இதே காலகட்டத்தில் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 1980 இல், பொலிஸ் மற்றும் அது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கான மொத்த செலவுகள் தேசிய வருவாயில் ஒரு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாக உயர்த்தப்பட்டது, அதேவேளையில் நலன்புரி திட்டங்களுக்கான செலவுகள் ஒரு சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அனைத்திற்கும் மேலாக பொலிஸ் படைகள், வெளிநாடுகள் மீதான அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கான கருவியான இராணுவத்துடன் அதிகரித்தளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இராணுவ தளவாடங்களுக்கான சுமார் 7 பில்லியன் டாலர் கடந்த இரண்டு தசாப்தங்களாக உள்ளாட்சி பொலிஸ் படைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை ட்ரம்ப் "உள்நாட்டுப் பயங்கரவாதிகளாக" குறிப்பிடுகின்றபோது, அவர் வெறுமனே அமெரிக்காவுக்குள் எதிர்ப்புக்கு எதிராக "பயங்கரவாதம் மீதான போரின்" தர்க்கத்தை விரிவாக்குகிறார். போராட்டக்காரர்களை எதிர்கொள்ள தாக்கும் துப்பாக்கிகளை ஏந்தியவாறு கவச வாகனங்களில் துணை இராணுவப்படையின் SWAT குழுக்கள் வலம் வரும் காட்சிகள் ஆக்கிரமிப்பு படைகளின் மொத்த முத்திரைகளையும் தாங்கி உள்ளன.

வளர்ந்த பொருளாதாரங்களிலேயே அமெரிக்காவில் பொலிஸ் படுகொலையின் அளவு தனித்துவத்துவமாக இருந்தாலும், பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் என்பது உலகளாவிய நிகழ்வுபோக்காக உள்ளது.

வறிய சேரி பகுதிகளில் ஊழல்பீடித்த பொலிஸ் அட்டூழியம் நிறைந்த பிரேசில், பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திலேயே வழமையாக உலகின் முன்னிலையில் உள்ளது, அங்கே ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். பிலிப்பைன்சில், ஆயிரக் கணக்கான வறிய தொழிலாளர்கள் பாசிசவாத ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றயின் "போதை மருந்துகளுக்கு எதிரான போருக்கு" பலியாக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில், அரசின் மொத்த படையும் பெருவாரியாக வெள்ளையினத்தவர்கள் மேலோங்கிய சமத்துவத்திற்காக போராடி வரும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள், அத்துடன் ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில், ஹங்கேரிய காவல்துறை ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான வன்முறை பற்றிய 1000 புகார்களை எதிர்கொள்கிறது, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு உண்மையான தாக்கங்கள் எதுவும் இல்லை.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டுக்கு ஒற்றுமையுணர்வு தெரிவித்து பொலிஸ் வன்முறைக்கு எதிரான அளவிடக்கூடிய போராட்டங்கள், பழிக்கு அஞ்சாமல் மூர்க்கமான பொலிஸ் படைகளைக் கொண்ட நாடுகளான கென்யா, கானா, நைஜீரியா மற்றும் தென் ஆபிரிக்காவிலும் வெடித்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் அரசு பாதுகாப்பு படைகளால் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். ஏப்ரல் மாதம் BBC News இன் ஒரு அறிக்கை, “கோவிட்-19 ஐ விட பாதுகாப்பு படைகளே அதிக நைஜீரியர்களைக் கொல்கிறது,” என்று குறிப்பிடுகிறது.

கடந்தாண்டு அந்நாட்டின் அரசு அமைப்புகளால் குறைந்தபட்ச 1,476 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவு கவுன்சில் குறிப்பிடுகிறது. அரசு முகமையான NHRC அதன் அறிக்கையில் குறிப்பிடுகையில், நைஜீரியாவின் கொரோனா வைரஸ் முடக்க காலத்தில் "நீதி விசாரணையற்ற 8 வெவ்வேறு படுகொலை சம்பவங்கள் 18 உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்றிருப்பதாக" அது கண்டறிந்திருந்தது.

இதையெல்லாம் எப்படி இனவாதத்தைக் கொண்டு விவரிக்க முடியும்? கறுப்பின பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கறுப்பின நகரசபை தலைவர்கள் மேற்பார்வையிலுள்ள நகரங்களில் நடந்துள்ள இதுபோன்ற வன்முறை அதிகரிப்புகளுடன் சேர்ந்து, பொலிஸ் வன்முறையின் சர்வதேச தன்மை, இனவாத சொல்லாடல்களை, அதாவது அமெரிக்காவில் "வெள்ளையின அமெரிக்காவால்" “கறுப்பின அமெரிக்கா" ஒடுக்கப்படுகிறது என்ற வாதத்தை, மறுத்தளிக்கிறது.

பொலிஸ் வன்முறையானது முதலாளித்துவ சமூகத்தின் தன்மையுடன் பிணைந்துள்ளது. அமெரிக்காவில் பொலிஸின் குறிப்பிட்ட காட்டுமிராண்டித்தனத்தை, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் வீடாகவும் சமூக சமத்துவமின்மையின் பெருநிலமாகவும் விளங்கும் அமெரிக்காவின் வர்க்க உறவுகளில் நிலவும் குறிப்பிட்ட காட்டுமிராண்டித்தனத்தைக் கொண்டு விவரிக்கலாம்.

1884 இல் எழுதப்பட்ட குடும்பம், தனிச்சொத்து, மற்றும் அரசின் தோற்றம் என்ற அவரின் படைப்பில் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் அரசுக்கான தொல்சீர் மார்க்சிச விளக்கத்தை வழங்கினார். அரசு, "சமூகத்தின் மீது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட சக்தி அல்ல...” என்றவர் எழுதினார்.

அதற்கு பதிலாக, அது ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தி கட்டத்தில் சமூகத்தின் விளைபொருளாகும்; அது, இந்த சமூகம் அதற்குள்ளேயே ஒரு தீர்க்கவியலாத முரண்பாட்டில் சிக்கியுள்ளது என்பதற்கான ஒப்புதலாகும், அதாவது அது தீர்க்க சக்தியற்ற சமரசப்படுத்தவியலாத எதிர்விரோதங்களுக்குள் அது பிளவுபட்டுள்ளது.

ஏங்கெல்ஸ் தொடர்ந்து குறிப்பிட்டார், “மக்கள் அதிகாரத்தை" ஸ்தாபிப்பது அரசின் தனித்துவமான ஒரு மத்திய அம்சமாகும், அது "வெறுமனே ஆயுதமேந்திய மனிதர்களை மட்டுமல்ல மாறாக ஸ்தூலமான எடுபிடிகளையும், சிறைக்கூடங்களையும் மற்றும் எல்லா விதமான அச்சுறுத்தும் அமைப்புகளையும் கொண்டுள்ளது... அரசுக்குள் வர்க்க எதிர்விரோதங்களைப் போலவே, அண்டைபகுதி அரசுகள் பெரியதாகவும் மிகவும் மக்கள்தொகை நிறைந்ததாகவும் ஆவதைப் போலவே, அதற்கேற்ற விகிதாச்சாரத்தில் அது [மக்கள் அதிகாரம்] பலமாக வளர்ந்து இன்னும் கூர்மையாகிறது.”

அதாவது, அரசு என்பது ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் கிடையாது. அது, மற்றும் அதனுடன் சேர்ந்து, “அனைத்து விதமான அச்சுறுத்தும் அமைப்புகளும்" ஆளும் வர்க்கத்தின் அரசியல் கருவிகளாகும், அவை வர்க்க நலன்களின் சமரசப்படுத்தவியலாத தன்மையிலிருந்து எழுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி காவல்துறையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்கிறது. என்றாலும், காவல்துறையை ஒழிப்பது என்பது வர்க்க சமூகத்தைக் ஒழிப்பதோடு பிணைந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் தோல் நிறம் அல்லது நகர அதிகாரிகளின் இனப் பின்புலத்தினாலோ, அல்லது இந்த அல்லது அந்த அடையாள சீர்திருத்தங்களாலோ எதுவும் மாறப் போவதில்லை.

பொலிஸ் வன்முறையை நிறுத்துவதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முதலாளித்துவ அரசைக் கலைத்து விட்டு, ஆளும் செல்வந்த தட்டுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்திற்காக அல்லாது சமூக தேவையின் அடிப்படையில் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்தாபிக்க, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவது அவசியமாகும். அதாவது, இதற்கு ஒரு சோசலிச புரட்சி அவசியமாகும்.

Loading