அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பூகோள புவிசார்-மூலோபாய தாக்கங்கள் நிறைந்த ஒரு ஆத்திரமூட்டும் அறிக்கையில், ஒரு மூத்த அமெரிக்க இராஜதந்திரி சீன-இந்திய எல்லை கெடுபிடியை வடிவமைத்துள்ளார் -அது கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு வன்முறை மோதலில் வெடித்தது, டஜன் கணக்கான இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்– அதனை ஒரு சீன ஆக்கிரமிப்பு என்றும் சீன வலியத்தாக்குதல் முறையின் ஒரு பகுதி என்றும் கூறியுள்ளார்.

கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் டேவிட் ஸ்டில்வெல் வியாழக்கிழமை மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான “சர்ச்சைக்குரிய பகுதியை”, “ஆக்கிரமிப்பு செய்தது” என்று கூறினார்.

மே மாதத்தில், பெய்ஜிங்கிற்கும் புதுடெல்லிக்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்தபோது, வாஷிங்டன் சீன “வலியத்தாக்குதலை” கண்டனம் செய்வதன் மூலம் சர்ச்சையில் தலையிட்டது. எவ்வாறாயினும், வியாழக்கிழமைக்கு முன்னர், திங்கட்கிழமை மோதல் குறித்து மற்றும் அதன் பின்னர் இந்திய மற்றும் சீன இராணுவப் படைகள் அவற்றின் எல்லைப் பகுதிகளில் மிகப்பெருமளவில் குவிக்கப்பட்ட போதும் அதன் பகிரங்க பதிலிறுப்பு எச்சரிக்கையாக இருந்தது.

எவ்வாறாயினும், இப்போது அமெரிக்கா இந்தியாவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது, அது அறிந்தே செய்யப்பட்ட செயல், அது சீனாவிற்கு எதிராக புதுடெல்லி ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவித்து சீனாவுடன் பகையை தூண்டி விடும் என்று கணக்கு போடுகிறது. மேலும், சீனாவிற்கு எதிரான ஒருவித இராணுவ பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்க மற்றும் இராணுவ வட்டங்களுக்குள் அழுத்தம் வளர்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கும் சூழ்நிலையில் தான் அது அவ்வாறு செய்கிறது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் தொடர்ச்சியான சீன ஆக்கிரமிப்புகளில் இந்தோ-சீன எல்லை மோதல் ஒன்று என்று பரிந்துரைத்த ஒரு வலதுசாரி வாஷிங்டன் எக்ஸாமினர் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஒரு ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை ஜெனரலான ஸ்டில்வெல் பதிலளித்தார்; "இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்பது தெரிந்த விஷயம் தான்.… PLA இந்த சர்ச்சைக்குரிய பகுதியை ஆழமாகவும் நீண்டதாகவும் வரலாற்றில் இதற்கு முன்னெப்போதும் இல்லாதவாறும் அதிகமான படைகளுடனும் ஆக்கிரமித்தது” என்று ஸ்டில்வெல் அறிவித்தார்.

ஸ்டில்வெல் தொடர்ந்து பேசுகையில் "மீண்டும் சொல்வதாயின் இது ஒரு பேச்சுவார்த்தை தந்திரமா அல்லது அவர்களின் மேன்மையை நிரூபிக்க மூக்கில் ஒரு குத்தா என்று எனக்குத் தெரியாது" என்றார்.

இந்த முழு பரிமாற்றமும் கடந்த பத்தாண்டுகளில் வாஷிங்டன் அதிகமான விரோதத்துடன் ஊக்குவித்து வந்த பொய்யான சீன-விரோத கதையை அடிப்படையாக கொண்டது. "சர்வதேச ஒழுங்கை" மற்றும் "சட்டத்தின் ஆட்சியை" சீர்குலைக்கும் ஒரு ஆக்கிரமிப்பாளராக சீனாவை அமெரிக்கா சித்தரிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் சீனாவின் “எழுச்சி” யை தடுக்கும் நோக்கத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான், பெய்ஜிங்கிற்கு எதிராக இடைவிடாத மற்றும் எப்போதும் விரிவடையும் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலை தொடுத்து வருகிறது.

2011 ஆம் ஆண்டில், ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவின் சீன-விரோத “ஆசியாவை முன்னிலைப்படுத்தும்” ஒன்றை அறிமுகப்படுத்தியது, அதில் உள்ளடங்கி இருந்த திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. அது அமெரிக்க இராணுவ தளவாடங்களில் பெரும்பகுதியை ஆசிய பசிபிக் பகுதிக்கு இடமாற்றம் செய்வதாகும். ட்ரம்ப், அந்த சொற்பதத்தை தவிர்க்கும் அதேவேளை பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க பிரச்சாரத்தை வியத்தக முறையில் தீவிரப்படுத்தியுள்ளார்.

"பெரும் சக்தி மோதலின்" ஒரு புதிய சகாப்தத்தில் சீனாவை பென்டகன் ஒரு "மூலோபாய போட்டியாளராக" பெயரளவில் அறிவித்தது, மேலும் வாஷிங்டன் சீனாவை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கான ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது, உயர் தொழில்நுட்பத் தொழில்களில் போட்டியாளராக தோன்றுவதைத் தடுக்க முயன்று, இப்போது அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவிலிருந்து "துண்டிக்க" அழுத்தம் கொடுக்கிறது. சீன-இந்திய எல்லையில் பதட்டங்கள் அதிகரிப்பது சீனாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுடன் நேரடியாக பிணைந்துள்ளது.

முதல் மற்றும் முக்கியமாக, இந்தியாவின் பேராசை பிடித்த ஆளும் வர்க்கம், அமெரிக்கா வழங்கும் மூலோபாய உதவிகள் மற்றும் முதலீட்டு சலுகைகளால் ஈர்க்கப்பட்டு வாஷிங்டனின் சீன எதிர்ப்பு போர் இயக்க உந்துதலுக்கு தன்னைத்தானே குத்தகைக்கு விட்டுள்ளது. நரேந்திர மோடியும் அவரது தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கமும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றியுள்ளன. அவர்கள் அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கு இந்தியாவின் விமான மற்றும் கடற்படை தளங்களை தாராளமாக திறந்து விட்டனர். தென் சீனக் கடல் தகராறில் அமெரிக்க நிலைப்பாட்டை கிளிப்பிள்ளை போல் கூறினர், மேலும் அமெரிக்கா மற்றும் இந்திய - பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்புற இராணுவ பாதுகாப்பு உறவுகளின் வலையை உருவாக்கியுள்ளன.

இரண்டாவதாக, அது முதலாவதில் இருந்து ஊற்றெடுக்கின்றது, சீன பாகிஸ்தான் பொருளாதார தடவழி, சீனாவின் அக்சாய் சின் பகுதி வழியாக செல்கிறது – இந்த எல்லை பகுதியை, இந்தியா தனக்குரியது என்று உரிமை கோருகிறது, இந்த தடவழி இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்சீனக் கடல் ஆகிய “மூச்சடைக்க செய்யும் புள்ளிகளில்” ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் சீனாவை பொருளாதார ரீதியாக கழுத்தை நெரிப்பதற்கான அமெரிக்க திட்டங்களுக்கு எதிரான மாற்று வழியாகும்.

ஸ்டில்வெல்லின் கருத்துக்குறிப்புகளின் முக்கியத்துவம் அவரது தரவரிசையால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது - அவர் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான மிக மூத்த அமெரிக்க இராஜதந்திரி ஆவார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோவிற்கும், வெளிநாட்டு விவகாரங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினரான யாங் ஜீச்சிக்கும் இடையே நடைபெற்ற ஆறு மணி நேர பேச்சுவார்த்தைகளின் முடிவு குறித்து அவர் உரையாற்றினார்.

ஹொனலுலு (Honolulu) இல் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் பற்றி அமெரிக்கா சொல்வதற்கு சிறிதும் கூட இருக்கவில்லை, அவற்றில் பங்கேற்ற ஸ்டில்வெல் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அது குறித்து பேச முன்வரவில்லை. எவ்வாறாயினும், ஒரு தொடரான ஆத்திரமூட்டும் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது என்பதை அவர் கூறியது தெளிவுபடுத்தியது, அவற்றில் தான் வணிக உறவுகள் உட்பட சீன-அமெரிக்க உறவுகளின் எதிர்காலம் சார்ந்ததுள்ளது என்று பெய்ஜிங்கிடம் கூறப்பட்டது.

COVID-19 தொடர்பாக சீனாவை கடுமையாக தாக்கி பேச அமெரிக்கா முயன்றதாக ஸ்டில்வெல் சுட்டிக்காட்டினார். ”இந்த தொற்று நோய் எப்படி தொடங்கியது என்று அவர்களுக்கு தெரிந்ததை எல்லாம்” சீனா வெளிப்படையாக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அமெரிக்காவில் COVID-19 ஆல் ஏற்பட்ட கொடூரமான உயிர் இழப்புக்கு அவரது நிர்வாகம் மற்றும் ஆளும் உயரடுக்கின் அலட்சியமான கையாளல் பற்றிய குற்றச்சாட்டை திசைதிருப்பும் ஒரு பகுதியாக ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த பிரச்சாரமாகும். இது சீனாவுக்கு எதிராக மேலும் வன்முறையை சட்டபூர்வமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெய்ஜிங் "நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று ஸ்டில்வெல் வலியுறுத்திய பிற பிரச்சினைகளில் தென்சீனக் கடல் தகராறு, தைவான், ஹாங்காங் மற்றும் உய்குர்கள் ஆகியவை அடங்கும். பிந்தைய இரண்டு விஷயங்களில் வாஷிங்டன் சீன அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது சொந்த கொள்ளையடிக்கும் நலன்களைப் பின்தொடர்வதற்கு ஒரு போலி "மனித உரிமைகள்" மறைப்பை வழங்க முயற்சிக்கிறது.

நிச்சயமாக சீன அடக்குமுறைக்கு எதிராக வாஷிங்டன் அறிவித்த அபத்தம் பற்றி மாநாட்டில் செய்தியாளர்கள் யாரும் சுட்டிக்காட்டவில்லை, குறிப்பாக ஜோர்ஜ் ஃப்ளோய்ட் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவில் வெடித்த எதிர்ப்புகளை நசுக்க எடுக்கப்பட்ட பெரும் அரசு தாக்குதல் மற்றும் ட்ரம்ப் இராணுவத்தை வீதிகளுக்கு கொண்டுவர கட்டளையிட முயற்சித்தமை மற்றும் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சித்தமை பற்றி கூறப்படவில்லை. மேலும் உலகெங்கிலும் உள்ள எதேச்சாதிகார மற்றும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு வாஷிங்டனின் வழங்கும் ஆதரவு பற்றியும் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

புதன்கிழமை பேச்சுவார்த்தையில் பரிமாற்றங்களின் பதட்டமான தன்மையைப் பற்றி பேசிய ஒரு அறிக்கையில் ஸ்டில்வெல், “ஜனாதிபதி இனி மேலும் குத்து விளையாட்டில் ஈடுபடவில்லை. அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க அவர் செய்ய வேண்டியதைச் செய்கிறார், அவர் அடிப்படையில் தெளிவாகவே வர்த்தக ஒப்பந்தத்துடன் தொடங்குகிறார்”. சீன-அமெரிக்க உறவுகள் எங்கு நோக்கி செல்கின்றன என்று, அவரால் சொல்ல முடியாது என்று ஸ்டில்வெல் கூறினார்.

பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் இணைந்து செயல்படக்கூடிய இரண்டு சாத்தியமான விஷயங்கள் குறித்து ஸ்டில்வெல் அங்கு கூறினார். இது ஒரு முள்ளுடைய பிரேரணையாக நிரூபிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான வட கொரியா, அமெரிக்க கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்க சீனாவின் உதவியை வாஷிங்டன் விரும்புகிறது. அது சீனாவை ரஷ்யாவுடன் முன்மொழியப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் சேர அழுத்தம் கொடுக்கிறது, ஆனால் பெய்ஜிங் அதற்கு மறுத்துவிட்டது, அதன் அணு ஆயுதக் களஞ்சியம் மற்ற இரண்டு சக்திகளிடம் இருப்பதில் ஒரு சிறிய பகுதியே என்று வாதிடுகிறது.

இந்த உள்ளடக்கத்தில், இந்தியாவின் பக்கமாக பகிரங்கமாக நிற்பதற்கு அமெரிக்கா எடுத்த முடிவை -2017 இல் சீனாவும் பூட்டானும் உரிமை கோரிய ஒரு பாறைப்பகுதி தொடர்பாக இந்திய மற்றும் சீன துருப்புக்கள் ஒருவருக்கொருவர் எதிர்கொண்டபோது அது எடுக்கவில்லை- அனைத்துக்கும் மேலாக அதனை தென் சீனக் கடல் தகராறுடன் இணைப்பது தீப்பற்றச்செய்யும் மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.

இந்திய-சீன எல்லை தகராறுக்கும் பெய்ஜிங்குடனான அமெரிக்க மூலோபாய மோதலுக்கும் இடையிலான தொடர்பை வாஷிங்டன் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இராணுவ மோதல்கள் மற்றும் யுத்தம் அல்லது துருப்புகளை கலைந்து செல்ல முயற்சிப்பது போன்ற எந்த வடிவத்திலும், அது இன்னும் சிக்கலான மற்றும் வெடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது, அது ஒட்டுமொத்தமாக அமெரிக்க-சீன மோதலில் ஏற்படுத்தும் தாக்கத்தினால் மதிப்பிடப்படும்.

மேலும், அமெரிக்காவின் தலையீடு இந்தியாவின் ஆளும் உயரடுக்கில் மிகவும் மோசமான கூறுகளை தைரியப்படுத்தும். மோடி அரசாங்கமும் அதன் இந்து மேலாதிக்க கூட்டாளிகளும், ஒரு கேவலமான எதிர்க்கட்சியின் உதவியுடனும் சீன எதிர்ப்பு பேரினவாதத்தையும், போர்வெறிகொண்ட தேசியவாதத்தையும் தூண்டிவிடுகின்றன.

பாஜகவின் அழிவுகரமான, மோசமாக தயாரிக்கப்பட்ட COVID-19 முடக்கம் பூட்டுதல் இரட்டை சமூக பேரழிவுகளை உருவாக்கியுள்ளது - ஒரு பொருளாதார சரிவு, அது நூறு மில்லியனுக்கும் அதிகமான வறிய தொழிலாளர்களின் வேலைகளை அழித்தது, மேலும் இப்போது தொற்றுநோய் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலைமைகளின் கீழ், சமூக கோபத்தை திசை திருப்புவதற்கும் எதிர்வினைகளை ஊக்குவிப்பதற்கும் சீனாவுடனான மோதலை அது சாதகமாக்கியுள்ளது.

வெளியுறவுத்துறை செயலர் பொம்பியோ மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் இப்போது திங்களன்று நடந்த மோதலில் கொல்லப்பட்ட 20 இராணுவத்தினருக்காக இந்தியாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். "அவர்களின் துணிச்சலும் தைரியமும் மறக்கப்படாது" என்று தூதர் கென்னத் ஜஸ்டர் ட்வீட் செய்துள்ளார். இது வாஷிங்டன் இப்போது இந்தியாவுக்குப் பின்னால் பகிரங்கமாக நகர்கிறது என்பதையும், சீனாவுடனான மோதலைத் தூண்டுவதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்கா தூண்டிவிடும் பயங்கரமான அபாயங்களின் ஒரு அறிகுறியாக செனட் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் வியாழக்கிழமை செனட்டில் கூறினார்: “பிரதேசத்தை அபகரிக்கும் பொருட்டு, இரண்டு நாடுகளும் 1962 ல் போருக்கு சென்ற பின்னர் PLA, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மிகவும் வன்முறை மோதலைத் தூண்டியதாகத் தெரிகிறது.” எந்தவொரு நாட்டிலும் அணு ஆயுதம் இல்லாதபோது நடந்த அந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் அல்லது காயமடைந்தனர்.

Loading