முன்னோக்கு

சோசலிச சமத்துவக் கட்சி மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கான ஜனநாயக விரோத சட்டங்களைச் சவால்விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் குழு, வியாழக்கிழமை, மிச்சிகன் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குச்சீட்டில் அவர்கள் பெயர்கள் இடம் பெறுவதற்கு அவசியமான விதிமுறைகளைச் சவால்விடுத்து அம்மாநிலத்தில் ஒரு சட்டவழக்கு தாக்கல் செய்தது. Kishore v. Whitmer (மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் வெட்மெர்) என்ற அந்த சட்டவழக்கு, "நேரடியான அர்த்தத்தில் இத்தகைய விதிமுறைகளை … பரவிவரும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது பூர்த்தி செய்வது சாத்தியமில்லை என்ற அடித்தளத்தில்" அந்த தேர்தல் விதிமுறைகளைச் சவால்விடுத்துள்ளது.

“கடந்த மூன்று மாதங்களாக,” அந்த சட்டவழக்கு குறிப்பிடுகிறது, “மிச்சிகனில் இதுபோன்று கையெழுத்துக்களைச் சேகரிக்க முயற்சிக்கும் எவரொருவரும் சமூகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பெறும் அபாயத்தை மற்றும் மரண அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும், அனேகமாக குற்ற வழக்கையே கூட முகங்கொடுக்கக் கூடும்.” பிரச்சாரக் குழுவினர் மட்டும் அபாயத்தில் இல்லை, அந்த சட்டவழக்கு குறிப்பிடுகிறது, கையெழுத்து சேகரிக்கும் நிகழ்முறை பெருமளவில் சமூகத்தின் உடல்நலனையே அச்சுறுத்தவதாக இருக்கும்.

இதனால், இத்தகைய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியானது சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களின் அரசிலமைப்பு உரிமைகளையும் அத்துடன் மிச்சிகனில் தங்களின் விருப்பத்திற்குரிய வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் மீறுவதாகும்.

டெட்ராய்டில் பெடரல் நீதிமன்ற வாசலில் ஜோசப் கிஷோர் மற்றும் எரிக் லீ உரையாற்றுகின்றனர்

அரசியல் எதிர்ப்பு, ஸ்தாபக முதலாளித்துவக் கட்சிகளின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும் என்பதன் மீது அமெரிக்க ஆளும் வர்க்கத்தை விட வேறெந்த ஆளும் வர்க்கமும் இந்தளவுக்கு அதிகமாக பயந்து நடுங்கி கொண்டிருக்காது. வேட்பாளர்கள் அவர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்காக, ஒவ்வொரு மாநிலத்தைப் பொறுத்து, பத்தாயிரக் கணக்கான அல்லது ஒரு நூறாயிரத்திற்கும் அதிகமாகவே கூட கையெழுத்துக்களைத் திரட்டியாக வேண்டும்.

மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு 30,000 கையெழுத்துக்கள் அவசியமாகும். தனிநபர் கையெழுத்தின் செல்லுபடித்தன்மை மீது தவிர்க்கவியலாத சவால்கள் இருப்பதால், ஒருவர் உண்மையில் இந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக சேகரிக்க வேண்டும்.

வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கான சட்ட விதிமுறைகள், இரண்டு முதலாளித்துவக் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கான எந்தவொரு சவாலையும் தவிர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட —பாரியளவில் பணம் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களால் தில்லுமுல்லு செய்யப்படும்— பரந்த தேர்தல் முறையின் பாகமாக உள்ளன.

2020 ஜனாதிபதி தேர்தல்களில், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மட்டுமே, மக்கள்தொகையில் பரந்த பெரும்பான்மை தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் வாழ்வா-சாவா பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வரும் ஒரே பிரச்சாரமாகும்.

ட்ரம்ப் மற்றும் பைடெனுக்கு இடையிலான பிரச்சாரமானது இரண்டு பிற்போக்குத்தனமான ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு இடையிலான பிரச்சாரமாகும். மறுபுறம், ட்ரம்ப், ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, அமெரிக்காவில் செல்வந்தர் ஆட்சியின் ஆளுருவாவார். தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அதிகரிப்பால் பீதியுற்று, ட்ரம்ப் நிர்வாகம் முதலாளித்துவ ஜனநாயகத்தில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதை கலைத்து விட்டு, அதிவலது மற்றும் பாசிசவாத கூறுபாடுகளின் ஆதரவுடன், பொலிஸில் உள்ளடங்கி உள்ளவை உட்பட, ஓர் இராணுவ சர்வாதிகாரத்தைக் கொண்டு வருவதற்கான அதன் சூழ்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ட்ரம்ப் உடனான ஜனநாயகக் கட்சியினரின் கருத்து வேறுபாடுகள் உள்நாட்டின் சமூக கொள்கை மீதோ அல்லது ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கவியலாத அடிப்படை சர்வதேச மூலோபாய நிர்பந்தங்கள் மீதோ இல்லை. ட்ரம்ப் அரசாங்கம் தொடங்கியதில் இருந்தே, ஜனநாயகக் கட்சியினர் பாரிய சமூக அதிருப்தியை ரஷ்யாவுக்கு எதிராக அதிக ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கைக்கான இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் கோரிக்கைகளுக்குப் பின்னால் திருப்பி விட முனைந்துள்ளனர்.

சமூக சமத்துவமின்மை குறித்த கோபத்திற்கு தனது வேண்டுகோளை விடுத்த பேர்ணி சாண்டர்ஸைப் பொறுத்த வரையில், அவர் அவரின் "அரசியல் புரட்சியை" மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, பைடெனை ஆமோதித்ததுடன், பெரிதும் அரசியல் காட்சிகளில் இருந்தே காணாமல் போய்விட்டார்.

பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆதிக்கத்துடன் இந்த 2020 தேர்தல் அசாதாரண அரசியல் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகிறது. மார்ச் இறுதியில் ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு இருகட்சிகளது ஆளுநர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட, பிரதிநிதிகள் சபையில் வெறும் அடையாள எதிர்ப்புடனும் செனட் சபையில் ஏகமனதுடனும் நிறைவேற்றப்பட்ட CARES சட்டம் என்றழைக்கப்படுவதால் அங்கீகரிக்கப்பட்டு, ஆளும் வர்க்கம் தனக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் கையளித்துக் கொண்ட பின்னர், அதன் "வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" பிரச்சாரம் தொடங்கப்பட்டது. பொருளாதார நடவடிக்கை மற்றும் சமூக ஒன்றுகூடல்கள் மீதான கட்டுப்பாடுகள் நாடெங்கிலும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவுகள் இப்போது வெளிப்படையாக உள்ளன. புதிய கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை நாடெங்கிலும் மாநிலங்களில் கூர்மையாக அதிகரித்து கொண்டிருக்கிறது. அது ஆளுநர் Whitmer இன் கீழ் மீண்டும் தொடங்கப்பட்ட மிச்சிகன் வாகனத்துறை ஆலைகள் உட்பட, திறக்கப்பட்டுள்ள ஆலைகள் மற்றும் வேலையிடங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் அண்மித்து 1,000 பேர் அன்றாடம் உயிரிழந்து வருகிறார்கள், உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை இப்போது 120,000 இல் உள்ளது. அக்டோபர் வாக்கில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்து விடுமென மிதமான மதிப்பீடுகள் முன்கணிக்கின்றன, ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும்.

கொரொனா வைரஸ் தொற்றுநோயின் ஸ்தூலமான பாதிப்பு மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் ஒரு பாரிய சமூக பேரழிவுடன் சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேலையின்மை 1930 களின் பெருமந்தநிலைமையில் பார்த்ததையே கடந்து சென்றுள்ளது. இன்னும் கூடுதலாக 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்மை சலுகைகளுக்குப் பதிவு செய்த இந்த வாரம், ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்த தொடர்ச்சியான 13 வது வாரமாக இருந்தது. ஒரு வாரத்திற்கான முந்தைய பதிவுகள் 695,000 ஆகும். இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 40 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உதவி கோரி பதிவு செய்துள்ளனர்.

பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு மற்றும் உயிர்களைக் காப்பாற்ற சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கு திரும்புவதோ அல்லது சமூக நெருக்கடியை சரி செய்வதற்கான எந்தவொரு நிவாரணமோ இல்லை என்பதை ஆளும் வர்க்கம் தெளிவுபடுத்தி உள்ளது. அதற்கு பதிலாக இந்த நெருக்கடி வர்க்க உறவுகளைப் பாரியளவில் மறுகட்டமைப்பு செய்யவும், சுரண்டலை அதிகரிக்கவும், வெளியேற்றங்களை அமலாக்கவும், கல்வி மற்றும் பிற சமூக சேவைகளை வெட்டுவது உட்பட சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கவும் பயன்படுத்தப்படும்.

இந்த தொற்றுநோய், வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்திற்கு எரியூட்டி வருகிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சமூக கோபத்தின் அதிக ஆதாரம் ஜோர்ஜ் ஃபுளோய்டைப் பொலிஸ் படுகொலை செய்ததன் மீதான பாரிய ஆர்ப்பாட்டங்களில் வெடித்துள்ளது. ஆனால் பொலிஸ் வன்முறை மீதான இந்த போராட்டங்கள், அரசியல்ரீதியில் உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகள் மேலோங்கிய இவை, வரவிருக்கும் சமூக கொந்தளிப்பின் ஓர் ஆரம்ப வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அங்கே சோசலிசத்திற்கு ஆதரவும் அதிகரித்த ஆர்வமும், முதலாளித்துவத்தின் மீது விரோதமும் நிலவுகிறது. அதன் கொள்கைகளைத் திணிப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள் பாரிய எதிர்ப்பையும் புரட்சிகர கொந்தளிப்புகளையும் எதிர்கொள்ளும்.

தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இயக்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் தலைமையுடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

அரசியல் அதிகாரத்திற்காக போராடும் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக, நாங்கள், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை மேலுயர்த்தவும் மற்றும் ஆதரவை ஒன்றுதிரட்டவும் இந்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். இந்த தொற்றுநோயால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சீரழிவும் அதற்கு நிதியியல் செல்வந்த தட்டுக்களின் விடையிறுப்பும் இந்த அரசியல் பணி எவ்வளவு அவசரமானது என்பதை அடிக்கோடிடுகின்றன. நூறாயிரக் கணக்கான உயிர்கள் பணயத்தில் உள்ளன.

மிச்சிகனில் இந்த சட்டவழக்கு இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கிய முனைவாகும். அனைத்து தொழிலாளர்களும் இதற்கு பின்னால் அணிதிரளுமாறும், சோசலிச சமத்துவக் கட்சி வாக்குச்சீட்டில் இடம் பெற வேண்டுமென கோருமாறும் அழைப்பு விடுக்கிறோம். மற்ற மாநிலங்களிலும் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி எடுத்து வருகிறது. வேட்பாளர்கள் மின்னணு முறையில் கையெழுத்துக்களை சேகரிக்கலாமென இலினோயில் நீதிமன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன, ஆதரவாளர்கள் அங்கே இணையவழி மனுக்களை வழங்கி வருகிறார்கள். வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் மேற்கொண்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்.

நாங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்குப் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்: சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரியுங்கள்! socialism2020.org என்பதில் இன்றே பதிவு செய்யுங்கள்! நீங்கள் அமெரிக்க பிரஜை என்றால் அல்லது நிரந்தர குடிமக்கள் என்றால், மிச்சிகனில் இந்த சட்ட போருக்கு நிதியுதவி வழங்க இந்த பிரச்சாரத்திற்கு நன்கொடை வழங்குங்கள். நீங்கள் அமெரிக்காவில் இல்லையென்றால், உங்கள் நாட்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் இணைந்து செயல்படவும் அல்லது ஒரு பிரிவைக் கட்டமைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Loading