பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு விடையிறுத்து, ஜேர்மனியின் இடது கட்சி ஒரு பொலிஸ் அரசுக்கு முறையிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோர்ஜ் ஃபுளோய்டை காட்டுமிராண்டித்தனமாக பொலிஸ் படுகொலை செய்ததைத் தொடர்ந்து உலகெங்கிலும் பரவியுள்ள பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு ஜேர்மனியின் இடது கட்சி பகிரங்கமான விரோதத்துடன் விடையிறுத்துள்ளது. ஒரு மாநில அரசாங்கத்தில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியுடன் கூட்டணியில் இடது கட்சி பங்கு வகிக்கும் பேர்லினில், ஜூன் 6 இல் நடந்த பாரிய போராட்டங்களை பொலிஸ் ஈவிரக்கமின்றி ஒடுக்கியது, அந்த போராட்டங்கள் ஜேர்மனி எங்கிலும் நூறாயிரக் கணக்கானவர்களை ஈர்த்திருந்த ஆர்ப்பாட்டங்களின் பாகமாக இருந்தன.

அப்போதிருந்து, அக்கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் அந்த பொலிஸ் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியதுடன், இன்னும் கூடுதலாக பொலிஸ் இராணுவமயப்படுத்தலுக்கு ஆலோசனை வழங்கியது. மிகத் தெளிவான அறிக்கை, இடது கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் டீற்மார் பார்ட்ஷ் ஆல் Redaktionsnetzwerk Deutschland (RND) க்கு வழங்கப்பட்டது.

“மூடிமறைப்பின்றி எல்லா பொலிஸ் அதிகாரிகளும் இனவெறி கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டி அவ்விதத்தில் ஒட்டுமொத்த பணியையும் இழிவுபடுத்துவது தவறானது,” என்றார். “அமெரிக்க நிலைமையுடன் சமாந்தரங்களை வரைவது நியாயமில்லை. பொலிஸ் தகுதி குறைந்தவர்கள் அல்ல, மாறாக, அவர்கள் குறிப்பாக வீதிகளில் அதிக சமூக பொறுப்புடன் உள்ள படையினர்,” என்றார்.

பேர்லினின் Alexanderplatz இல் பொலிஸ் தலையீடு (காணொளி காட்சியிலிருந்து)

ஜூன் 8 பத்திரிகையாளர் கூட்டத்தில், இடது கட்சியின் கட்சி விவகாரங்களுக்கான கூட்டாட்சி தலைவர் ஜோர்ஜ் ஷின்ட்லர் இதே தொனியில் பேசினார். பொலிஸை "வழக்கமான சந்தேகத்தின்" கீழ் நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நடந்த இத்தகைய ஆர்ப்பாட்டங்களைப் பொறுத்த வரையில், பொலிஸ், அவை நடப்பதற்கு அவர்களால் ஆனமட்டும் சாத்தியமாக்கியதை முக்கியமானதாக கருதுகிறேன். ஏனென்றால் வேறு நடவடிக்கைகள் மக்களிடையே அதிக அதிருப்திக்கு இட்டுச் சென்றிருக்கும், இன்னும் கூடுதலாக பொலிஸ் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்கான காரணங்களையும் ஏற்படுத்தி இருக்கும்” என்று கூறி, பொலிஸ் ஈவிரக்கமின்றி போராட்டக்காரர்களை ஒடுக்கியதை அவர் பாதுகாத்தார். இந்த நடவடிக்கைகள் "பொருத்தமானவை மற்றும் சரியானவையே,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: சமூக ஜனநாயக கட்சி/ இடது கட்சி/ பசுமைக் கட்சி கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள பொலிஸ் அந்த அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக இன்னும் வன்முறையாக ஒடுக்கவில்லை என்பதற்கு ஒரே காரணம் ஒரு சமூக வெடிப்பைக் குறித்து அவர்கள் அஞ்சினார்கள். இந்த அணுகுமுறை அமெரிக்காவில் ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் "இரட்டை மூலோபாயத்தை" நினைவூட்டுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப் போராட்டங்களை நசுக்க முனைந்துள்ளதுடன் ஓர் இராணுவ சதியைக் குறித்தே கூட அச்சுறுத்தி உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் பிரிவுகள் இது தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மேலெழுச்சியைத் தூண்டிவிடுமென அஞ்சுகின்றன. ஆகவே அவை "சீர்திருத்தங்களை" கோருகின்றன, இவை பொலிஸை பலப்படுத்துவதையும் மற்றும் மிகவும் மோசமான சூழலில் மக்களுக்கு எதிராக அவற்றை நிலைநிறுத்த தயாரிப்பு செய்வதையுமே நோக்கமாக கொண்டுள்ளன.

அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ஷின்ட்லர் குறிப்பிடுகையில் பொலிஸ் "சமூகத்தின் பிரதிபலிப்பு" என்று வாதிட்டார். அவர் கூறினார், “மக்களிடையே இருப்பதைப் போலவே, பொலிஸிலும், இனவெறி நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களும், நனவுபூர்வமற்ற இனவெறியர்கள் மற்றும் வெளிப்படையாகவே இனவெறி-எதிர்ப்பாளர்களும் உள்ளனர்,” என்றார். பின்னர் அவர் பல அலங்கார சீர்திருத்தங்களை அறிவுறுத்தினார்: இனரீதியில் பட்டியலிடுவதை முடிவுக்குக் கொண்டு வருவது, பொலிஸிற்கு எதிரான புகார்களுக்கான பதிவேடு, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ஓர் அடையாள எண் ஆகியவற்றை பரிந்துரைத்தார்.

ஷின்ட்லரைப் பொறுத்த வரையில், “அரசியலமைப்பு அரசின் மீது நம்பிக்கையைப் பலப்படுத்துவதே" நோக்கமாகும். “மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் பல சிறப்பு அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பான,” பொலிஸ், “அவர்களின் அனைத்து நடவடிக்கையிலும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு மேலுயர்த்தப்பட" வேண்டும் என்றவர் தொடர்ந்து தெரிவித்தார்.

யதார்த்தத்தில், பொலிஸ் "சமூகத்தின் பிரதிபலிப்பு" அல்ல, மாறாக சொத்துக்கள், செல்வவளம் மற்றும் முதலாளித்துவவாதிகளின் அதிகாரத்தைப் பாதுகாக்க பணிக்கப்பட்ட "ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்பு" (பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்) ஆகும். இனவாதத்தின் வளர்ச்சி மற்றும் பதவிகளில் உள்ள அதிவலது தீவிரவாத போக்குகளின் வளர்ச்சி ஒரு தனிநபர் பிரச்சினை இல்லை, மாறாக பொலிஸின் சமூக செயல்பாட்டிலிருந்து புறநிலைரீதியாக மேலெழுகிறது. சமூக பதட்டங்களும் வர்க்க போராட்டமும் இன்னும் அதிகமாக ஆழமடைகையில், முதலாளித்துவ அரசு எந்திரமும் இடது கட்சி உட்பட அதன் அனைத்து பாதுகாவலர்களும் இன்னும் அதிகமாக வலதுக்கு நகர்கிறார்கள்.

அவரது கட்சி “இனவெறிக்கு எதிராக தீர்க்கமாகவும் தெளிவாகவும் செயல்படும் அமைப்புகளை பலப்படுத்த" உத்தேசிக்கிறது என்ற ஷின்ட்லரின் எரிச்சலூட்டும் கூற்றின் இழிந்த தன்மையை மிகைப்படுத்துவது கடினம். யதார்த்தத்தில், போராட்டக்காரர்கள் எதிர்த்து வரும் கொள்கைகளுக்கு —அதாவது பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் அதிகரிப்பு, இனவெறியை பலப்படுத்துதல் மற்றும் வலதுசாரி தீவிரவாதம், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான பரந்த இடைவெளி, அகதிகள் எதிர்கொண்டிருக்கும் அவலநிலை மற்றும் மரணங்கள், ஜேர்மன் இராணுவவாதம் திரும்பி இருப்பது ஆகியவற்றுக்கு— முற்றிலும் இடது கட்சி தான் பொறுப்பாகிறது. அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்காக, இடது கட்சியும் பொலிஸைக் கட்டமைத்து வருவதுடன், அதிவலதுடன் தன்னை அணி சேர்த்து வருகிறது.

பேர்லின் மற்றும் பிராண்டன்பேர்க் மாநிலங்களில் அரசாங்கம் அமைத்துள்ள கட்சியாக இடது கட்சி, உளவுபார்ப்பதற்கும் மற்றும் ஒடுக்குமுறைக்கும் பொலிஸிற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் புதிய பொலிஸ் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அதற்கும் கூடுதலாக, பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சியுடன் சேர்ந்து, இடது கட்சி காலநிலை மாற்றத்திற்கான இயக்கம் Ende Gelände (சாலையின் முடிவு) என்பதன் மீது உளவுபார்க்க, அவ்விதத்தில் மறைமுகமாக அதன் சொந்த இளைஞர் அமைப்பையே உளவுபார்க்க, மாநில இரகசிய சேவைக்கு அனுமதி அளித்தது.

துரிங்கியாவில், இங்கே இடது கட்சி தான் மாநில அரசை நடத்துகின்ற நிலையில், முதலமைச்சர் போடோ ராமலோவ் அதிவலது தீவிரவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு கௌரவமான நாடாளுமன்ற துணை ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொடுப்பதற்காக மாநில நாடாளுமன்றத்தில் அவரின் வாக்கைப் பயன்படுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போக்கில், இடது கட்சி இன்னும் கூடுதலாக அதிவலதிற்கு நகர்ந்துள்ளது. மார்ச் மாதம், அது கொரொனா வைரஸ் பிணையெடுப்பு பொதிக்கு ஆதரவாக கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. அதையடுத்து, துரிங்கியாவில் ராமலோவ்வுடன் சேர்ந்து, இடது கட்சி மிகப்பெரும் பெருநிறுவனங்களுக்கும், பெரிய வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கும் பெரிவாரியாக பாய்ச்சப்பட்ட நூறு பில்லியன் கணக்கிலான யூரோ பிணையெடுப்பு பணத்தை ஆதரிப்பதற்காக தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் இருந்து பெருவணிகங்கள் இலாபத்தை உறிஞ்ச தொடங்கும் விதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை முன்னெடுத்தது.

பாரிய மக்கள் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு வரும், மனித உயிர்களை விட தனியார் இலாபங்களை முன்னிறுத்தும் கொள்கையை அமலாக்குவதற்காக, கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற துணை தலைவர் ஆண்ட்ரே ஹூன்கோ உட்பட இடது கட்சியின் முன்னணி பிரமுகர்கள், கொரொனா வைரஸ் தடுப்பதற்கான சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிரான அதிவலது போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

பார்ட்ஷ் மற்றும் ஷின்ட்லர் போன்றவர்கள் தற்போதைய நிலைமை எந்தளவுக்கு வெடிப்பார்ந்து உள்ளது என்பதை உள்ளுணர்வாக உணர்கின்றனர். உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் கூட இதையே தான் உணர்ந்து வருகிறார்கள் என்பதால் தான் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை ஒரு சர்வதேச பாரிய இயக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளது. பெருவாரியாக இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்காவில் நடந்த பொலிஸ் படுகொலையால் மட்டும் கோபமடையவில்லை, மாறாக அவர்களுக்கு எந்த எதிர்காலமும் வழக்க முடியாத ஒரு சமூக அமைப்புக்கு எதிராக கோபமடைந்துள்ளனர். ஜேர்மனியில், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தவர்கள் எதிர்பார்த்ததை விடவும் 10 அல்லது 20 மடங்கிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

இடது கட்சியோ, போராட்டங்களின் அளவைக் கண்டு எச்சரிக்கை அடைந்துள்ளது. அந்த போராட்டங்கள் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிராக திருப்பி விடப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்படலுடன் இணைந்து விடுமோ என்று அக்கட்சி அஞ்சுகிறது. பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு இடது கட்சி விரோதத்துடன் விடையிறுப்பது வர்க்க போராட்டத்தின் தீவிரமயப்படல் குறித்த அதன் அச்சத்தில் வேரூன்றியுள்ளது. அதன் பெயரைத் தவிர, இடது கட்சி அவசியமான எல்லா வழிவகைகளையும் கொண்டு தனிச்சொத்துடைமை மற்றும் முதலாளித்துவ அரசைப் பாதுகாக்க பொறுப்பேற்றுள்ள ஒரு வலதுசாரி முதலாளித்துவ கட்சியாகும்.

பொலிஸ் அரசுக்கான ஆதரவு என்பது இடது கட்சியின் மரபணுவுக்கு (DNA) உள்ளேயே பொதிந்துள்ளது. முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஆளும் அதிகாரத்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைப் பாரிய பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி ஒடுக்கிய ஸ்ராலினிச அரசு கட்சியான சோசலிச ஐக்கிய கட்சியில் (SED) அக்கட்சி வேரூன்றி உள்ளது. கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவ மீட்சியின் போது, கடைசி SED முதலமைச்சர் ஹன்ஸ் மொட்ரொவ் வார்த்தைகளில் கூறுவதானால், “குழப்பங்களைத் தவிர்க்க அந்நாட்டின் அரசாளும் தன்மையை உறுதிப்படுத்தும்" பணியை இடது கட்சி ஏற்றிருந்தது. அது "உறுதியுடன்… (ஜேர்மன்) ஐக்கியத்திற்கான பாதையை" பின்தொடர்ந்தது, அதை மொட்ரொவ் "தவிர்க்கவியலாத அவசியமாக" கருதினார்.

14,000 தொழில்நிலையங்கள் இல்லாதொழிக்கப்பட்டு மக்கள்தொகையில் 71 சதவீதத்தினர் வேலையிழந்த முதலாளித்துவ மீட்சியின் பேரழிவுகரமான சமூக மற்றும் பொருளாதார தாக்கம் வெளிப்பட்டதும் SED என்ற தனது முன்னைய பெயரை PDS என் மாற்றிக்கொண்ட அந்த ஜனநாயக சோசலிச கட்சி (PDS - Party of Democratic Socialism) அரச ஒழுங்கமைப்பை பாதுகாக்கும் ஒரு கட்சியாக அதன் பழைய பாத்திரத்தை ஏற்றது, இந்த முறை முதலாளித்துவ அரசமைப்புமுறையின் பாதுகாப்புக்கு முன்வந்தது.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், PDS வெளிப்படையாகவே முதலாளித்துவ சார்பு அடிப்படையில் இடது கட்சியை உருவாக்க சமூக ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் பல்வேறு போலி-இடது போக்குகளின் பிரிவுகளுடன் இணைந்தது. 2014 ஐரோப்பிய தேர்தல்களின் போது, இடது கட்சி "புரட்சி: வேண்டாம், நன்றி!” என்ற கோஷத்தைத் தாங்கிய பதாகைகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டது.

இன்று அக்கட்சியின் பொலிஸ் அரசு சார்பான தன்மை மிகவும் வெளிப்படையாக உள்ளது, அக்கட்சி செயற்குழுவின் சில உறுப்பினர்கள் பொலிஸ் உடனான பார்ட்ஷின் பகிரங்க கூட்டிலிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாக உணர்கிறார்கள். இத்தகைய அறிக்கைகள் அமெரிக்காவில் பொலிஸ் "சீர்திருத்தத்திற்கான" ட்ரம்பின் வாக்குறுதியைப் போலவே அதேயளவுக்கு வஞ்சகமாக உள்ளன. அதிகரித்த எண்ணிக்கையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் போராட்டங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து ஸ்தாபக கட்சிகளையும் ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகளாகவே உணர்ந்து வருகிறார்கள். இந்த உண்மையிலிருந்து முக்கிய அரசியல் படிப்பினைகளை வரைவதே மத்திய பிரச்சினையாகும்.

இனவாதம் மற்றும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ அரசையும் ஒட்டுமொத்த அரசு ஒடுக்குமுறை எந்திரத்தையும் பாதுகாக்கும் இடது கட்சி மற்றும் அனைத்து போலி-இடது போக்குகளுடனும் கணக்கைத் தீர்த்துக் கொள்வது அவசியமாகும். அது சமத்துவமின்மை, சுரண்டல், போர், எதேச்சதிகாரம் மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்
[17 June 2020]

Germany’s Left Party spearheading deadly back-to-work drive
[26 May 2020]

Germany’s Left Party backs multibillion-euro bailout of banks and big business
[22 April 2020]

Loading