கோவிட் – 19: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கில் இராணுவ அடக்குமுறை அதிகரிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

அண்மைய வாரங்களில், இலங்கையின் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் தமிழ் பொதுமக்கள் மீது இராணுவம் மற்றும் பொலிசின் கொடூர தாக்குதல்கள் பரவலாக அதிகரித்துள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே, இலங்கையில் கொவிட்–19 தொற்றுப் பரவலை தடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பயனுள்ள எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒரு வார தாமதத்தின் பின்னர், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல். உடனடியாகவே நாடு தழுவிய ஊரடங்கை அமுல்படுத்தினார். “ஊரடங்கு சட்டத்தை மீறினால்” மக்களைக் கைது செய்வதற்கான பூரண அதிகராத்தையும் அயுதப்படைகளுக்கு ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் வடக்கு கிழக்கில், ஒரு இராணுவ நிர்வாகத்தினை நடத்திக்கொண்டிருக்கும் இந்தப் படைகள், குறிப்பாக அங்கே கொடூரமாக நடந்துகொள்கின்றன. வடக்கில் நடந்துள்ள அத்தகைய எண்ணிலடங்கா சம்பவங்களில் பின்வருவனவும் அடங்கும்:

· மே 10 அன்று, சிவில் உடையில் இருந்த, யாழ்ப்பாணத்துக்கு அருகில் இருக்கும் மானிப்பாய் பொலிசார், அருகில் உள்ள சண்டிலிப்பாய் கிராமத்துக்கு, எதுவிதமான காரணமும் இல்லாமல், அங்குவாழும் ஒரு இளைஞனைத் தேடிச் சென்றார்கள். அவர் அந்த வீட்டில் இல்லை என்று கூறியவுடன், பொலிசார் குடும்பத்தவரைத் தாக்கினர். பல இளைஞர்கள் பொலிசாருடன் முரண்பட்டபோது, அவர்கள் பின்வாங்கத் தள்ளப்பட்டார்கள். ஆனாலும், பல அதிகாரிகளுடன் திரும்பவும் வந்த பொலிசார் மக்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். வீட்டைச் சுற்றியிருந்த வேலிகள் மற்றும் சுவர்களை உடைத்தெறிந்தார்கள். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்காக அழைக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியை பொலிசார் திருப்பி அனுப்பினார்கள். ஐந்து இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றார்கள்.

· மே 9 அன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரைத் தேடிக்கொண்டு, பல இராணுவ சிப்பாய்கள், நாகர்கோயில் கிராமத்துக்குச் சென்றார்கள். அவ்வாறு ஒரு நபர் இங்கு இல்லை என்று, மக்கள் தெரிவித்தபோது, அந்த இடத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை கடுமையாக தாக்கினார்கள். திடீர் தாக்குதல்களால் கோபமடைந்த கிராமவாசிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சிப்பாய்களை விரட்டினர். தாக்கப்பட்ட முதிய பெண்ணொருவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

· மே 6ம் திகதி, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிராமத்தில், குடிபோதையில் இருந்த பொலிசார், ஒரு வீட்டிற்குள் நுழைந்து, ஒரு ஆளைப்பற்றிக் கேட்டார்கள். பின்னர், மூன்று இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். அந்த இளைஞர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது, அந்த முறைப்பாட்டினை ஏற்பதற்கு பொலிசார் மறுத்துவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றபோதும், அவர்களது உடல் நிலை தேறுவதற்கு முன்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு, ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு பொலிசார் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

· மே 1 அன்று, குடத்தனையில் உள்ள மாளிகைத்திடல் கிராமத்தில் ஒரு கொடூரமான பொலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ தினத்துக்கு முதல்நாள், கிராமத்துக்கு வருகை தந்ந பொலிஸ், அங்கே சட்டவிரோத மணல் ஏற்றுவதற்கு பயன்டுத்தப்படுவதாக கூறி, அங்கு நின்ற ஒரு லொறியினைக் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தனர். கிராம வாசிகள் அந்தக் குற்றச்சாட்டினை மறுத்ததோடு, லொறியினைக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்தினர். ஒருவர் பொலிசாரின் நடவடிக்கையை தனது கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவுசெய்தார். மறுநாள், திரும்பவும் ஆயுதந்தாங்கிய விசேட அதிரடிப்படையினருடன் அங்கு வந்த பொலிசார், வீடியோவை ஒப்படைக்குமாறு கேட்டு, பொதுமக்களைக் கண்டபடி தாக்கினார்கள். காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்காக முச்சக்கர வண்டி மற்றும் வாடகை காரினை ஒழுங்கு செய்வதற்கு மக்கள் முயன்றபோது, அவர்கள் தடுக்கப்பட்டனர்.

பெண் பிள்ளையொன்று, மயக்கமடைந்திருக்கும் தனது தாயாரின் தலையை மடியில் வைத்து அழுதுகொண்டிருப்பதை காட்டும் ஒரு வீடியோ காட்சியில், அவளது தாயாரின் வயிற்றில் பொலிஸார் உதைத்தனர், தனது சகோதரியைப் பொல்லால் தாக்கினர் என அவள் கூறி அழுகின்றாள். பொலிஸ் தனது பின் முதுகில் கிரிக்கட் மட்டையால் தாக்கியதாகவும், தனது தலைமயிரில் பிடித்து இழுத்துச் சென்றதாகவும், இன்னொரு பெண் கூறுகின்றார். பழிவாங்கல்களுக்குப் பயந்து பலர் ஆஸ்பத்திரிகளுக்குச் செல்லவில்லை.

90 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில், கூடுதலானவர்கள் தோட்டங்களில் கூலி வேலை அல்லது மணல் ஏற்றும் வேலை செய்து அற்பமான வருமனாத்தை மட்டுமே ஈட்டுகின்றனர். வறுமை காரணமாக பல இளைஞர்கள் தங்கள் கல்வியைக் கைவிட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் துன்பறுத்தப்பட்ட, வடக்கின் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் மக்கள், யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவலகத்தில் 9 முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான எந்தவிதமான திட்டங்களும் அமுல்படுத்தப்படாத காரணத்தினால், மக்கள், உணவு, மருந்து மற்றும் தண்ணீர் போன்றவற்றினைப் பெற்றுக்கொள்வதற்காக, தங்கள் வீட்டினை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டார்கள்.

வடக்கில், சட்டவிரோதமான ஊடரங்கு நடைமுறைகளைப் பயன்படுத்திக்கொண்டு, நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாடுபூராவும், இதே குற்றச்சாட்டினைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 50,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த ஊரடங்கு நிலமைகளின் கீழ் ஏற்பட்டுள்ள கடுமையான வாழ்க்கை மற்றும் சமூக நிலமைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்துவரும் அமைதியின்மை பற்றி, அரசாங்கத்திற்குள்ளும் மற்றும் ஆக்கிரமிப்புப் படைகளின் மத்தியிலும் அதிகரித்துச் செல்லும் பதட்டங்களின் பிரதிபலிப்பாகவே வடக்கு மற்றும் கிழக்கில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால இரத்தக்களரி யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களாகும். 2009 மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் இறுதி கட்டத்தில் குறைந்த்து 40,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அந்த போருக்கு தற்போதைய ஜனாதிபதியின் சகோதரரும் மற்றும் பிரதமருமான மகிந்தராஜபக்ஷ தலமை தாங்கினார். அந்த நேரத்தில் கோட்டபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். யுத்தத்தின்போது, பொதுமக்களின் வீடுகள் உட்பட சொத்துக்கள் அழிக்கப்பட்டதனால், பலர் இன்னமும் தற்காலிக வீடுகளில், மோசமான வாழ்க்கை நிலமைகளை எதிர்கொள்கின்றனர்.

தொற்றுநோய் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள, பூகோள பொருளாதார வீழ்ச்சியானது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

தொற்றுநோய் அச்சுறுத்தலை நிராகரித்துக் கொண்டு, ஜனாதிபதி ராஜபக்ஷ, பெரு வர்த்தகர்களுக்கு ஆதரவளித்து பொருளாதாரத்தினை மீளவும் திறந்துள்ளார். அவர், பாதுகாப்பற்ற சூழ்நிலைகளின் மத்தியில் தொழிலாளர்களை வேலைக்கு திரும்புமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றார். இலங்கையில் அல்லது இந்தப் பிராந்தியத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவை, தொழில்கள் மற்றும் சம்பளங்களை வெட்டித்தள்ளவும், சுரண்டல்களை தீவிரப்படுத்தவும் ஆரம்பித்துள்ளன.

முன்னர், 3,000 பேருடன் இயங்கிய, கிளிநொச்சியில் இருக்கும் வானவில் தொழிற்சாலை, அண்மையில் 500 பேருடன் திறக்கப்பட்டுள்ளது. பல சிறு வணிகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இன்னமும் மீளத் திறக்கப்படவில்லை. ஆயினும் பல தொழிலாளர்கள் மோசமான நிலமைகளில் வாழ்கின்றார்கள்.

விவசாயிகளால் தங்களின் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாதுள்ளது. அவர்கள் கடுமையான நட்டத்துக்கு முகம் கொடுக்கின்றார்கள். மீனவர்கள், ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டிருப்பதினாலும், ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்ல முடியாமையாலும், வருமானமற்று திண்டாடுகிறார்கள். அரசாங்கத்தின் “நிவாரணம்” ஏழைமக்கள் மத்தியில் சிலருக்கே கிடைத்துள்ளது.

தொற்றுநோய் அரம்பிப்பதற்கு முன்னர், இலங்கையில் 2018இல் இருந்து வர்க்கப் போராட்டங்கள் அபிவிருத்தியடைந்தன. வடக்கு கிழக்கில் வாழும் தொழிலாளர்கள் இன வேறுபாடுகளைத் தாண்டி, நாட்டின் ஏனைய பாகங்களில் வாழும் தங்களுடைய வர்க்க சகோதர, சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டுப் போராடினார்கள். யுத்த காலத்தில் “காணாமல் ஆக்கப்பட்டவர்களை” பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரி, வடக்கில் பல எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வேலை மற்றும் சம்பள வெட்டுக்களுடன், வேலை நேரத்தின் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பற்ற நிலமைகளின் கீழ் வேலைக்குத் திரும்ப தள்ளப்பட்டிருப்பதினால், வளர்ந்துவரும் சமூக அமைதியின்மை மற்றும் தொழிலாளர்களின் கோபம் பற்றி, இலங்கை அரசாங்கம் பதட்டமடைந்து வருகின்றது. வெகுஜனப் போராட்டம் பற்றிய பீதியில், “யுத்த கால” சூழ்நிலையைப்போல, அரசாங்கம் ஆயிரக்கணக்கான சிப்பாய்களை – குறிப்பாக கொழும்பில் நிலைநிறுத்தியுள்ளது.

ஒரு சதி திட்டத்துக்கான ஒரு தயாரிப்பின் அறிகுறியாக, ராஜபக்ஷ பெரும் எண்ணிக்கையான படைகளை கொழும்புக்கு அழைத்துள்ளார். அவர்கள், அங்கு 16 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில், இராணுவம் 20 பாடசாலைகளில் தங்கியுள்ளது. அண்மைய ஆண்டுகளில், 150,000 துருப்புக்கள், வடக்கை ஆக்கிரமித்துள்ளன.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது, பொலிஸ் – இராணுவ அடக்குமுறைகள் சம்பந்தமாக முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌனமாக உள்ளது. பிரதமரை இரகசியமாக சந்தித்த தமிழ் தேசியக கூட்டமைப்பினர், அரசாங்கத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்கள். இது, வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களை அடக்குவதற்கான அரசின் தீர்மானத்தினை பலப்படுத்தி, ஜனாதிபதி சர்வாதிகாரத்துக்கான ஒரு பாதையை வழங்குவதாகும்.

முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற ஏனைய தேசியவாத குழுக்கள், பாடசாலைகளில் இராணுவம் தங்கியிருப்பதை, வெறித்தனமான தமிழ் வகுப்புவாத்தினைக் கிளறிவிடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துகின்றன. வடக்கில், இராணுவத்துக்கான தனிமைப்படுத்தும் நிலையங்களாக அங்குள்ள பாடசாலைகளைப் பயன்படுத்துவதாக, அவர்கள் கொழும்பு அரசாங்கத்தினைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள். எவ்வாறாயினும், ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பூராவும் உள்ள பாடாசாலைகளில் இராணுவத்தினை நிறுத்தியுள்ளார்.

இந்த சகல கட்சிகளும், தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள தொழிலாளர் வர்க்கத்தின் அபிவிருத்தியடைந்துவரும் போராட்டங்கள் பற்றி பீதியடைந்துள்ளன. அவர்கள், ஜனாதிபதியின் சர்வாதிகார கொள்கைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, இனவாத ரீதியில் தொழிலாள வர்க்கத்தினைப் பிளவுபடுத்துவதற்கு முயற்சி செய்கின்றார்கள். ராஜபக்ஷவைப் போலவே, அவரது சிங்களப் பேரினவாத ஆதரவாளர்கள் தமிழர் விரோத மற்றும் முஸ்லீம் விரோத பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள்.

சர்வாதிகாரத்தை நோக்கிய ராஜபக்ஷவின் நகர்வுகளுக்கு எதிராக, தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தின் பிரதான இலக்காக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினை நிபந்தனையற்று வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில், இன மற்றும் மத பிளவுகளுக்கு அப்பால், தொழிலாளர்கள் தங்கள் வேலை தளங்களில் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்பி, கிராமப்புற ஏழைகள் மற்றும் இளஞர்களுக்கும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்துக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். சோசலிசத்துக்காக போராடுவதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், சம்பளம் மற்றும் சகல ஜனநாய உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இந்த அடிப்படையிலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச ரீதியிலும் மற்றும் தென்னாசியப் பிராந்தியத்திலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா – ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வேலைத்திட்டத்துக்காக போராடுமாறு, தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது.

Loading