இலங்கை சோ.ச.க. சுகாதார பணியாளர்களுக்காக உலக சோசலிச வலைத் தள செய்திமடலை தொடங்குகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), சுகாதார ஊழியர்களுக்காக உலக சோசலிச வலைத் தளத்தில் இணையவழி செய்திமடலைத் தொடங்குவதற்கு தயாராகி வருவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. சுகாதாரத் ஊழியர்களுக்கான சோ.ச.க. செய்தி என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த செய்திமடல், சுகாதார சேவையில் உள்ள அனைத்து பிரிவிலும் உள்ள ஊழியர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒன்றிணைத்துக்கொண்டு அவர்களின் போராட்டங்களுக்கு வழிகாட்டும்.

கொவிட்-19 தொற்றுநோய், உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்களை சமீபத்திய வரலாற்றில் முன்கண்டிராத அளவு சவால்களை எதிர்கொள்ள வைத்துள்ளது. இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி 70 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளதுடன் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை பலியெடுத்துள்ளது.

புள்ளிவிவரங்கள் குறைத்து காட்டப்படுகின்ற போதிலும், உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து இலட்சம் ஆகும். அமெரிக்காவில் மட்டும், அந்த எண்ணிக்கை 62,000 ஆகும். அவர்களில் 600 பேர் இறந்துள்ளனர். உலகளவில் சுமார் 600 செவிலியர்கள் மரணித்துள்ளனர். சீனாவில் 500 செவிலியர்கள் மரணித்துள்ளனர்.

அனைத்து முன்னேறிய மற்றும் பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் பல தசாப்தங்களாக சுகாதாரப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்ட வெட்டுக்களின் விளைவாக கொவிட்-19 தொற்றுநோய் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளும் இராணுவத்திற்காக பெரும் தொகையை செலவழிக்கும் பின்னணியிலேயே இந்த வெட்டுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் டிரம்ப் அரசாங்கம் ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இராணுவத்திற்காக செலவிடுகிறது.

இலங்கையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மொத்தம் 393 பில்லியன் ரூபா பாதுகாப்புப் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளை, அதில் கால் பகுதிக்கும் சற்று அதிகமான 105 பில்லியன் ரூபா மட்டுமே சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வெட்டுக்களின் விளைவாக, இலங்கையில் உள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கான அத்தியாவசிய தரப்படுத்தப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தொற்றுநோய்களின் போது கூட வழங்கப்படவில்லை. இலங்கையில் சுமார் 25,000 மருத்துவர்கள் மற்றும் சுமார் 35,000 தாதி ஊழியர்கள் உட்பட முழு சுகாதார ஊழியர்களதும் மேலதிக நேர கொடுப்பனவு போன்ற அடிப்படை உரிமைகளை வெட்டித்தள்ளுவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலைமை, ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும். தொற்றுநோய்களுக்கு மத்தியில், அதற்கு எதிராக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போலவே இலங்கையிலும் சுகாதாரப் பணியாளர்களின் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளதுடன், எதிர்காலத்தில் அவை தீவிரமடையும்.

இலங்கையில் சுகாதாரத் துறையில் செயல்படும் அரச மருத்துவ ஊழியர்கள் சங்கம் மற்றும் தாதிமார் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களின் ஒரு அங்கமாக செயல்பட்டு, இந்த வெட்டுக்களை சுகாதாரத் தொழிலாளர்கள் மீது திணித்து வருகின்றன,.

சுகாதாரத் ஊழியர்களுக்கான சோ.ச.க. செய்தி இணையவழி செய்திமடல், ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் வேலை நிலைமைகளை குறைப்பதற்கு எதிரான, தொழிலாளர்களின் குரல்களுக்கான ஒரு தளமாகும். முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கு இன்றியமையாத, மருத்துவமனைகள் மற்றும் ஏனைய வேலைத் தளங்களில் உள்ள தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கு அவசியமான ஆதரவையும் வழிகாட்டலையும் இது வழங்கும்.

ஒருசிலரின் கைகளில் சமூக நிதியை குவிப்பதற்காக பில்லியன் கணக்கான மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை அழித்து, அவர்களை மரணத்துக்குள் தள்ளும் பூகோள முதலாளித்துவ அமைப்பின் கீழ், தங்களது தொழில்கள் மற்றும் ஏனைய உரிமைகளை பாதுகாக்க முடியாது என செய்திமடல் சரியாக சுட்டிக்காட்டுகிறது.

முதலாளித்துவத்தை ஒழித்து சர்வதேச சோசலிசத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை சுகாதார ஊழியர்கள் மத்தியில் ஸ்தாபிப்பதற்கு உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவரும் உலக அரசியல் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுகளையும் இது வெளியிடும்.

சுகாதார ஊழியர்களுக்கான சோ.ச.க. செய்தி என்ற செய்திமடலுக்காக, தகவல் மற்றும் யோசனைகளை வழங்கி அதை அபிவிருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யுமாறும், மருத்துவமனைகள் உட்பட வேலைத்தள அயல் பிரதேசங்களிலும் உள்ள சக ஊழியர்கள் மத்தியிலும் அதை பகிர்ந்து கொள்ளமாறும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கிறது.

Loading