முன்னோக்கு

அமெரிக்காவில் “வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" பிரச்சாரம் கோவிட்-19 அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது

Back-to-work” campaign in the US has led to surge in COVID-19

அமெரிக்காவில் “வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" பிரச்சாரம் கோவிட்-19 அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது

Andre Damon

27 June 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மிகப்பெரியளவில் கோவிட்-19 இன் புதிய மீள்அதிகரிப்பை முகங்கொடுத்து வருகிறது என்பதை மறுப்பது இப்போது சாத்தியமில்லாது ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை அந்நாடு இதுவரையில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 45,000 க்கும் அதிகமான கோவிட்-19 நோய்தொற்றுக்களைப் பதிவு செய்தது. வாராந்தர நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை ஜூன் மாத ஆரம்பத்தில் இருந்த அதன் குறைந்தளவான 21,000 என்பதிலிருந்து இந்த வாரம் 34,000 ஐ கடந்து 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தெளிவாக தொழிலாளர்களைப் பலவந்தமாக காலத்திற்கு முன்னரே ஆலைகள் மற்றும் வேலையிடங்களுக்குத் திரும்ப அனுப்புவதற்கான இருகட்சிகளது பிரச்சாரத்தின் விளைவாகும், இது இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான எந்தவொரு ஒழுங்கமைந்த முயற்சியையும் கைவிட்டிருந்தது.

டெட்ராய்ட் வாகன உற்பத்தி நிறுவனங்களில் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை மீண்டும் தொடங்கிய ஆறு வாரங்களுக்குப் பின்னர், தொழிற்சாலைகள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், சரக்கு மற்றும் பண்டங்கள் பரிவர்த்தனை நிறுவனங்கள் எங்கிலும் அது பரவிய போதும், ட்ரம்ப் நிர்வாகமும் பிரதான பெருநிறுவனங்களும் அந்த நோயைக் குறைத்துக் காட்டவும் புறக்கணிக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்துள்ளன.

ஜிஎம், ஃபோர்ட், கிறைஸ்லர், டெஸ்லா ஆகிய நிறுவனங்களில் அவற்றின் தொழிற்சாலைகளில் பணியாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டபோது அவற்றை தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கவும் மறுத்துள்ளனர். தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், ஆயிரக் கணக்கான புகார்களைப் பெற்ற போதும், இந்த தொற்றுநோய் சம்பந்தமாக ஒரேயொரு குறிப்பை மட்டுமே வழங்கியுள்ளது.

வணிகங்களை மீண்டும் திறந்துவிடுவது மிகவும் கெடுபிடியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சேர்ந்து இருக்குமென ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்ற போதினும், அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கைகளும் இருக்கவில்லை. போதுமான சமூக இடைவெளிகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பத்தாயிரக் கணக்கான இறைச்சி பதனிடும் தொழிலாளர்கள் கோவிட்-19 நோய்க்கு உள்ளான போதும் கூட, நூற்றுக் கணக்கானவர்கள் இறந்துள்ள போதும், ட்ரம்ப் நிர்வாகம் இறைச்சி பதனிடும் ஆலைகள் தொடர்ந்து செயல்பட நிர்பந்தித்துள்ளது.

ஏனைய பல அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்காவில் தேசியவில் தொற்றுத்தொடர்பை பின்தொடரும் எந்த திட்டமும் இல்லை. “இது சரியாக இல்லை. இதை நான் கூறியே ஆக வேண்டும். இது சரியாக இல்லை,” என்று அமெரிக்காவில் தொடர்பைப் பின்தொடர்வதைக் குறித்து கேட்கப்பட்ட போது டாக்டர் ஆண்டனி ஃபாஸி வெள்ளிக்கிழமை CNBC க்கு தெரிவித்தார்.

இவ்வார ஆரம்பத்தில், நோய் கட்டுப்பாட்டு மையங்களின் இயக்குனர் டாக்டர் ரோபர்ட் ரெட்ஃபீல்ட் கூறுகையில் அமெரிக்கா எங்கிலும் வெறும் சுமார் 27,000 பேர் தான் தொடர்பைப் பின்தொடர்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் — இது, அவசியம் என்று அவர் கருதும் அளவின் மூன்றில் ஒரு பங்காகும். முன்னாள் CDC இயக்குனர் டாக்டர் ரொம் ஃபிரெடென் கூறுகையில் அமெரிக்காவிடம் தற்போது இருப்பதை விட பத்து மடங்கு அதிகமான தொடர்பைப் பின்தொடர்பவர்கள் தேவைப்படுவதாக எச்சரித்தார்.

இந்த தொற்றுநோய் மீண்டும் மேலெழுந்திருக்கின்ற நிலையிலும், அங்கே மீண்டும் பொதுமுடக்கத்திற்கு திரும்புவது இருக்காது என்பதை அரசியல் ஸ்தாபகம் தெளிவுபடுத்தி உள்ளது. அமெரிக்காவினால் "மீண்டும் பொருளாதாரத்தை அடைக்க முடியாது,” என்று கருவூலத்துறை செயலர் மினுசின் இம்மாத ஆரம்பத்தில் தெரிவித்து, “அது நீறுபூத்த நெருப்போ அல்லது கொளுந்துவிட்டெறியும் நெருப்போ என்னவாக இருந்தாலும் … நாம் நமது நாட்டை அடைக்கப் போவதில்லை,” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பையே எதிரொலித்தார்.

ஆலைகளுக்குத் தொழிலாளர்களைக் கூட்டங்கூட்டமாக திரும்ப அனுப்ப செய்வதில் நீண்டகாலமாக வக்காலத்துவாங்கி வந்துள்ள வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், இவ்வாரம், இந்த வைரஸின் மறுஎழுச்சி மீது கருத்துரைக்கையில், “மாநிலங்கள் அவற்றின் பொதுமுடக்கங்களைத் தளர்த்த தொடங்குகையில் அதிக பரவுதல் தவிர்க்கவியலாதது,” என்று சர்வசாதாரணமாக கருத்து தெரிவித்தது.

அப்படியா? அப்படியானால் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பதிப்பாசிரியர்கள் ஏன் எவரொருவருக்கும் அதைக் கூற நினைக்கவில்லை? அந்த பத்திரிகை பல மாதங்களாக, பொதுமுடக்கங்களால் நோய் பரவல் மீது எந்த தாக்கமும் இல்லை என்று வாதிடுவதற்காக அதன் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்திருந்தது. வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் கூட, ஜேர்னல் ஒரு தலையங்கத்தில் அறிவிக்கையில், “இந்த வசந்தகாலத்தில் பொதுமுடக்கம் செய்திராத மாநிலங்கள் அந்த வைரஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன, அதை செய்த மாநிலங்களை விட மிகக் குறைந்த உயிரிழப்புகளையே அனுபவித்தன,” என்று அறிவித்திருந்தது.

பல மாதங்களாக, அந்த பத்திரிகை மரணப்பொறி தொழிற்சாலைகளை மூடிவைத்திருப்பதற்காக "அமெரிக்கர்களின் மனரீதியிலான எண்ணிக்கை" குறித்து முதலைக் கண்ணீர் விட்டது. “உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் ஆனால் அரசால் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த தேசிய பொருளாதாரத்தின் மீதிருந்து ஏதோவிதத்தில் அதை நீக்குவதையும் உள்ளடக்கி இருக்கும்" அதிக நீடித்த வைரஸ்-எதிர்ப்பு மூலோபாயத்தை அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஆனால் அதன் வியாழக்கிழமை தலையங்கத்தில், அந்த பத்திரிகை அப்பட்டமாக அறிவிக்கையில், “அமெரிக்கர்கள் இந்த வைரஸுடன் இணைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே தவிர்க்கவியலாத உண்மை,” என்றது. "அதனுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்" என்பதே ஜேர்னல் அறிவுறுத்திய "நீடித்த மூலோபாயம்" என்பது வெளிப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை "வைரஸ் எவ்வாறு ஜெயித்தது,” என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆனால் இதே பத்திரிகை தான், “இயற்கை அன்னையின்" முகத்திற்கு முன்னால் ஒன்று செய்யவியலாது என்பதால் இந்த வைரஸ் ஜெயிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காக, வாராவாரம், கட்டுரையாளர் தோமஸ் ஃபிரீட்மனுக்கு அதன் தலையங்க பக்கத்தில் இடத்தை ஒதுக்கியளித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “பொதுமுடக்கங்கள் அர்த்தமற்றவை,” என்றது.

"சமூக கூட்டு நோய் எதிர்ப்புசக்தியை" உருவாக்க மக்கள்தொகையில் கணிசமான பிரிவுகளிடையே கோவிட்-19 பாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று, கடந்த மூன்று மாதங்களாக, ஃபிரீட்மன் இடைவிடாது வாதிட்டு வந்துள்ளார். இந்த காலங்களில், டைம்ஸ் அதே அர்த்தத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஃபிரீட்மனின் பதினொரு கட்டுரைகளைப் பிரசுரித்தது.

வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதில் ஃபிரீட்மனும் டைம்ஸூம் மத்திய இடத்தில் இருந்தனர். மார்ச் 22 இல், “அமெரிக்காவை மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்வதற்கான ஒரு திட்டம்" என்று தலைப்பிட்ட ஒரு துணை-தலையங்கத்தைப் ஃபிரீட்மன் பிரசுரித்து, கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக வணிகங்களை நிறுத்துவதனால் கிடைக்கும் "சிகிச்சை" “நோயை விட மோசமானதாக" இருக்கும் என்று வாதிட்டதுடன், அத்தியாவசியமல்லாத துறை தொழிலாளர்களையும் வேலைக்குத் திரும்ப அனுமதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று வாதிட்டார்.

CARES சட்டம் என்றாக இருந்த முதல் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்த அதே நாளில் தான் ஃபிரீட்மனின் கட்டுமை வெளியானது, அந்த சட்டம் தான் பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு 6 ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு வழங்க களம் அமைத்தது.

ஃபிரீட்மனின் வரிகள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உணர்வுகளை, அதாவது பிணையெடுப்பு கிடைத்த நிலையில், தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கும் மற்றும் பங்குதாரர்களுக்கு வருமானத்தை உருவாக்கவும் இதுவே தருணம் என்பதை தொகுத்தளித்தது. “குணப்படுத்துதல், பிரச்சினையை விட மோசமாக ஆவதை நாம் அனுமதிக்க முடியாது,” என்று ட்ரம்ப் அறிவித்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க பெருநிறுவனங்கள் வெறும் இரண்டு வாரங்களில் வணிகத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென கோரினார்.

இந்த தொற்றுநோயின் மீளெழுச்சி உலக சோசலிச வலைத் தளம் செய்த எச்சரிக்கைகளை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஏப்ரல் 18 இல், WSWS எழுதியது:

பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலைக்குப் பலவந்தமாக திரும்ப செய்வதையும் வணிகங்களையும் விரைவாக மீண்டும் திறப்பதையும் சட்டபூர்வமாக்க உதவும் வகையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் எரிச்சலூட்டும் மோசடியான "வழிகாட்டி நெறிமுறைகளின்" அறிவிப்பு, அமெரிக்காவுக்குள் உடல்நலனுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் மற்றும் COVID-19 தொற்றுநோயின் வேகத்தை எதிர்த்துப் போராடி மனித உயிர்களைக் காப்பாற்றுவதிலும் ஒரு திட்டமிட்ட ஒருங்கிணைந்த முயற்சியைக் குறித்த எந்தவொரு பகிரங்க பாசாங்குத்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வருகிறது.

அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் ஏப்ரல் 24 இல், அமெரிக்காவில் "வேலைக்குத் திரும்ப செய்வதற்கான" பிரச்சாரம் "கொரொனா வைரஸ் உயிரிழப்புகளின் அதிகரிப்புக்கு இட்டுச் செல்கிறது" என்று நாங்கள் எச்சரித்தோம்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் வேகமாக மீண்டும் உற்பத்தியைத் தொடங்கவும், தொழிலாளர்களை வேலைகளுக்குத் திரும்பச் செய்யவும் முயன்று வருகிறது. இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆயிரத்திற்கும் அதிகமாக எண்ணற்ற பேர் உயிராபத்தாக நோயில் வீழ்வார்கள் அல்லது உயிரிழப்பார்கள்.

வேலைக்குத் திரும்ப செய்யும் பிரச்சாரம் மீதான WSWS இன் மதிப்பீடு, முதலாளித்துவத்தின் அடிப்படை வர்க்க இயக்கவியல் மீதான ஒரு பகுப்பாய்வை அடித்தளத்தில் கொண்டிருந்தது. மே 22 இல் நாங்கள் எழுதினோம்:

மரண எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறது என்பதெல்லாம் கவலை இல்லை, வோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுவதில் சமூகத்தின் தேவைகளைக் குறுக்கிட அனுமதிக்க மாட்டார்கள். உயிர்களைக் காப்பாற்றுவதில்லை, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைத் தொடர்வதே அரசின் முன்னுரிமையாக இருக்கும்.

இதனால் தான் இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மருத்துவ முகப்பிலிருந்து மட்டுமல்ல, மாறாக அரசியல் முகப்பிலிருந்தும் தொடுக்கப்பட வேண்டியதாக உள்ளது. கோவிட்-19 க்கு எதிரான போராட்டமானது ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஜனநாயக கட்சியிலுள்ள அதன் எதிர்ப்பற்ற உதவியாளர்களின் குற்றகரமான கொள்கைகளுக்கு எதிராக சாத்தியமானளவில் பரந்த விதத்தில் போராடுவதில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

இந்த போராட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. டெட்ராய்டின் FCA ஜெஃபர்சன் உற்பத்தி ஆலையில், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தினார்கள், அதேவேளையில் கலிபோர்னியாவின் ரிவர்சைடில் HCA Healthcare இல் ஆயிரக் கணக்கான செவிலியர்கள் பாதுகாப்பான வேலையிட நிலைமைகள் கோரி வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

ஆளும் வர்க்கத்தின் ஆட்கொலை பிரச்சாரமான வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தை எதிர்க்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இந்த போராட்டத்தைத் தொடுப்பதில் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வார தொடக்கத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எழுதியதைப் போல:

ஆளும் வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள், “குணப்படுத்துவது நோயை விட மோசமானதாக ஆகி விடக்கூடாது” என்று வற்புறுத்துகையில், தொழிலாளர்களோ முதலாளித்துவமே அடியிலிருக்கும் சமூக நோய் என்றும், நோய்தொற்று இந்த நோயின் அறிகுறி தான் என்றும், இதற்கான சிகிச்சை சோசலிசமே என்றும் பதிலளிக்க வேண்டும்.

Loading