இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ உயர்நீதிமன்றத் தீர்ப்பை பற்றிக்கொண்டு சர்வாதிகாரத் திட்டங்களை தீவிரப்படுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை உயர் நீதிமன்றம், இந்த மாத தொடக்கத்தில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்ததையும், தேர்தல் திணைக்களம் பொதுத் தேர்தல் நடத்தும் திகதியை தீர்மானிப்பது சம்பந்தமான விடயத்தையும் சவால் செய்து தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதை நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு, சர்வாதிகார ஆட்சி ஒன்றை ஸ்தாபித்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பச்சை கொடி காட்டுவதாகும்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உட்பட ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு, மனுக்கள் குறித்து முழு விசாரணையை வழங்க ஒருமனதாக மறுத்துவிட்டது. இந்த மறுப்புக்கு அது எந்த காரணமும் காட்டவில்லை. பத்து நாள் வழக்கு விசாரணைக்குப் பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இவ்வாறு காரணம் காட்டாமை, வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்க மறுக்கின்றமை, அநேகமான வழக்குகளில் உயர் நீதிமன்றத்தால் பின்பற்றப்படும் ஒரு ஜனநாயக விரோத நடைமுறையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) இருந்து பிரிந்த குழுவான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பொதுச் செயலாளரும் சிங்கள பேரினவாத ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் முன்னால் ஐ.தே.க. அரசாங்கத்தின் அமைச்சருமான சம்பிக ரனவக்க, மேலும் சில தனிநபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல உள்ளடங்களாக எட்டு பேர் தாக்கதல் செய்த மனுவையே உயர் நீதிமன்றம் பிரதானாமாக ஆராய்ந்து வந்தது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் ஆகியோர், பதிலளிக்கப்பட வேண்டியவர்களாக மனுவில் பெயரிடப்பட்டிருந்தனர்.

மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக்கொள்வதற்கு ஐ.ம.ச. மற்றும் ஹெல உறுமய எடுக்கும் முயற்சிகள் முற்றிலும் போலியானவை. இந்த இரு கட்சிகளும் ஜனநாயக உரிமைகளை நசுக்கி, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்திய கடந்தகால ஆட்சிகளின் பங்காளிகளாகும். அவற்றின் உறுப்பினர்கள் அந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றுநோய் உச்ச கட்டத்தை அடைந்த போது, ஐ.ம.ச. தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரணவக்க மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம் மற்றும் தமிழ் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி, இராஜபக்ஷவின் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை சட்டப்பூர்வமானதாக ஆக்கிக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தை திரும்ப கூட்டுமாறு அழைப்பு விடுத்தனர். தங்களது "பொறுப்புள்ள ஆதரவை" வழங்குவதாக அவர்கள் ஜனாதிபதிக்கு வாக்குறுதியளித்தார். இது இராணுவமயப்படுத்தலையும் சர்வாதிகாரத்தையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இராஜபக்ஷ முன்னெடுத்து வரும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துவதாகும்.

மனுதாரர்களின் உண்மையான நோக்கம், நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பொதுமக்களின் அதிருப்தியைத் திசைதிருப்பி, வளர்ந்து வரும் வர்க்க வெடிப்புகளை பின்னுக்குத் தள்ளுவதாகும்.

எட்டாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, அதை மார்ச் 2 அன்று கலைப்பதற்காக அரசியலமைப்பில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை இராஜபக்ஷ பயன்படுத்திக் கொண்டார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு, சர்வாதிகார அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, 19 வது திருத்தத்தால் விதிக்கப்பட்டுள்ள சட்டரீதியான தடைகளை அகற்றி, அரசியலமைப்பை மீண்டும் எழுதுவதன் பேரில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் குறிக்கோளுடன், விரைவில் பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளார். எவ்வாறெனினும், பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பையும் அலட்சியம் செய்தே இராஜபக்ஷ செயல்படுகிறார்.

தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கும், ஒன்பதாவது பாராளுமன்றத்தை மே 14 அன்று கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. நாட்டில் தொற்றுநோய் பரவி வந்த வேளையில், அதை தடுக்கும் நடவடிக்கையாக முழு அடைப்பை அமுல்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், தேர்தல்கள் ஆணைக்குழுவால் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்வது முடிவுக்கு வந்த மார்ச் 19 வரை, ராஜபக்ஷ தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதை தாமதப்படுத்தினார்.

அரசியலமைப்பு நெருக்கடி ஒன்றை உருவாக்கி, ஜூன் 2ம் திகதிக்கும் அப்பால் தேர்தலை ஒத்திவைத்தமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. இலங்கை அரசியலமைப்பின் 70 வது பிரிவின்படி, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்தி புதிய பராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். பாராளுமன்றத்தை திரும்ப கூட்டுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும், புதிய தேர்தல் திகதியை தீர்மானிப்பது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்குமாறு தேர்தல் ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளையும் இராஜபக்ஷ முற்றிலும் நிராகரித்தார்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள காலக்கெடுவுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தவறியதன் காரணமாக, பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் அறிவிப்பு இரத்தாகின்றது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அதற்கு ஏற்ப நீதிமன்ற தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர். முன்னைய பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை எனக் கருதி மீண்டும் பாராளுமன்ற அமர்வை மேற்கொள்ளலாம் என்பது இதன் சட்ட விளைவு ஆகும்.

புதிய திகதி பற்றிய தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பானது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்ட மனுதாரர்கள், தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும் என்றும் புதிய திகதியை அறிவிக்கும் வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர்.

தொற்றுநோய் காரணமாக, தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை பூர்த்தி செய்ய இயலாமையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 70 (7) வது பிரிவின் கீழ் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை அகற்றிக்கொண்டு மீண்டும் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரினர்.

அதற்கு பதிலளித்த சட்டமா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்காக ஜனாதிபதிக்கு உள்ள அரசியலமைப்பு ரீதியான "அபிப்பிராய அதிகாரத்தை" பயன்படுத்துமாறு அறிவுறுத்த யாருக்கும் -நீதித்துறைக்கு கூட- முடியாது என தெரிவித்தார். அரசியலமைப்பானது எந்தவொரு ஜனநாயக விரோத வழியிலும் அர்த்தப்படுத்தக்கூடிய ஒரு ஆவணம் என்பதும், பிற்போக்கு அரச அதிகாரிகள், எந்தவொரு ஜனநாயக விரோத விளக்கத்திற்கும் தயாராக இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

நீண்ட வழக்கு விசாரணைக்கு பின்னர், எந்தவொரு சட்ட ரீதியான விடயம் சம்பந்தமாகவும் உயர் நீதிமன்றம் முடிவு எடுக்கவில்லை. பல தொழில்நுட்ப சிக்கல்கள் சம்பந்தமாக, பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட சில அடிப்படை ஆட்சேபனைகளை அது நிராகரித்தது. வழக்கு தொடரப்படுவதற்கு அனுமதி வழங்க மறுத்ததில், நீதிமன்றத்தால் அரசியலமைப்பில் தற்போதுள்ள பரஸ்பர முரண்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது: அதாவது புதிய பாராளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என அரசியலமைப்பில் விதிக்கப்பட்டுள்ள காலக் கெடு, பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் அறிவித்தலின் செல்லுபடியாகும் தன்மைக்கு, ஒரு முன்நிபந்தனையாக இருக்க முடியாது.

அரசியலமைப்பில் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அப்பாலும், பாராளுமன்றத்தின் மேற்பார்வை இல்லாமலும், இராஜபக்ஷ முன்னெடுக்க இருக்கும் நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு ஒரு சட்டப்பூர்வமான தன்மையை இந்த வழக்கு முடிவு அளிக்கிறது. அரச தலைவர்கள், இராணுவம் மற்றும் அரசாங்கத்தினதும் தலைவர் என்ற வகையில், இராஜபக்ஷ நடத்திவந்துள்ள எட்டு மாத ஆட்சியானது, சட்டத்தின் ஆட்சியை அவமதிக்கும் வகையில் புறக்கணித்து, எதேச்சதிகாரமாகவும் அரசியலமைப்பிற்கு முரணாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒன்றாகும். தீவின் நீதித்துறை, சட்டவாக்கம் (பாராளுமன்றம்) மற்றும் அரச அதிகாரத்துவம் ஆகியவை, நிறைவேற்று அதிகாரத்திற்கு "தொந்தரவு" செய்யக்கூடாது என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாகக் பற்றிக்கொண்ட ஜனாதிபதியின் மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாடு நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

"இந்த முடிவின் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் வளர்ந்து வருகிறது" என்று பிரதமர் ஊடகங்களில் பெருமை பேசினார். தனது அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை ஒத்திவைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சியே அதை தாமதப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார். ஜனநாயகத்தின் தளபதியாக காட்டிக்கொண்டு மஹிந்த இராஜபக்ஷ வெளியிட்டுள்ள போலி கூற்றுக்கள், எதிர்க்கட்சிகளின் கூற்றுக்களைப் போலவே கொடூரமானவை ஆகும். அவரது முந்தைய அரசாங்கம் கொடூரமாக முன்னெடுத்த போரினாலும் ஜனநாயக உரிமைகளை நசுக்கியதாலும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை கிடைத்தால், அது அதை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வலுப்படுத்தவே பயன்படுத்திக்கொள்ளும்.

ஜனாதிபதி ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்பதும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தல்கள் மூலம் அத்தியாவசிய சேவை கட்டளைகளை அறிவிப்பதும் சட்டவிரோதமானது ஆகும். ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தல்கள் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் கிடையாது என பலவீனமான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூட, ஜூன் 13 அன்று ஒரு அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது.

அவர் பதவிக்கு வந்ததில் இருந்தே, ராஜபக்ஷ தனது சொந்த அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அவரது சகோதரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட நெருங்கிய உறவினர்களதும் குழுவைக்கொண்டு தனது அதிகாரத்தை பலப்படுத்தியுள்ளார். அமைச்சுக்கள் மற்றும் அரசாங்கத் திணைக்களங்களில் உயர் பதவிகளுக்காக ஓய்வு பெற்ற அல்லது பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம், சிவில் நிர்வாகம் மேலும் மேலும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான கடன் நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை பாராளுமன்ற எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் அமுல்படுத்தி வருகின்றது. இந்த சகல தாக்குதல்களையும் தபால், நிர்வாகம், சுகாதாரம், பெருந்தோட்ட மற்றும் ரயில்வே தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று இரவே, தீர்ப்பின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில், இராஜபக்ஷ, இராணுவ, உளவுத்துறை மற்றும் பொலிஸ் தலைவர்களைக் கொண்ட இரண்டு ஜனாதிபதி செயலணிகளை ஸ்தாபித்து இரண்டு வர்த்தமானிகளை வெளியிட்டமை குறிப்பிடத் தக்கதாகும். இந்த செயலணிகளில் ஒன்று, "பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்ப" உருவாக்கப்பட்டது. இதன் மூலம், முழு சிவில் சேவையையும், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தையும் இராணுவத்திற்கு அடிபணியச் செய்து அவற்றுக்கு இணையான ஒரு நிர்வாக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வரையறை தெளிவின்றி, "சமூக விரோத நடவடிக்கைகளை" தடுக்கும் போர்வையில், தொழிலாள வர்க்கம், ஊடகங்கள் மற்றும் பிற "சமூக குழுக்களுக்கு" எதிராக இந்த எந்திரம் செயல்படும். [இணைப்பு: இலங்கையின் தலைவர் இராணுவ பணிக்குழுவை நிறுவுகிறார்: சர்வாதிகாரத்திற்கு மற்றொரு படி, ஜூன் 9, 2020].

இராஜபக்ஷ, தொற்று நோயை அலட்சியம் செய்து, பொருளாதாரத்தை மீண்டும் திறந்து, தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்துவதோடு, தொழிற்சாலைகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது குறித்து முடிவு செய்ய முடியும் என்றும், சுரண்டலை அதிகரிப்பதற்கு தேவையான சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார். அரசியலமைப்பிற்கு விரோதமாகவும் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலும் "அமைதியை பேணுவதற்காக" முப்படைகளை நாடு முழுவதும் நிலைநிறுத்துவது ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்படுகிறது.

முந்தைய சிறிசேனா-விக்ரமசிங்க அரசாங்கத்தின் பிளவுக்கு வழிவகுத்த, தொழிலாளர்களின் போராட்டங்களும் மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் எதிர்ப்பும் வளர்ந்து வரும் நிலைமையில், "வலுவான மற்றும் நிலையான அரசாங்கத்தை" உருவாக்குவதாக பெருவணிகத்திற்கு உறுதியளித்தே ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஒரு வலுவான மற்றும் நிலையான அரசாங்கத்தின் சூத்திரமானது சர்வாதிகார ஆட்சியின் அடையாளம் ஆகும்.

உலகளாவிய தொற்றுநோயினால் நெருக்கடி மேலும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பற்ற சுகாதார நிலைமைகளில் பணியாற்ற நெருக்கப்பட்டு தொழில்கள், ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளும் கடுமையாகக் வெட்டப்படுகின்ற சூழ்நிலையினால் தொழிலாளர்களின் உக்கிரமான போராட்டங்கள் வளர்ச்சியடையும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மேலும். இந்த தொழிலாளர்கள் மீது பாய்வதற்கே இராஜபக்ஷ தயாராகி வருகிறார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பெருவணிகங்கள் அதை ஆதரிக்கின்றன.

இந்த நிலைமையிலேயே நீதித்துறையின் நடத்தையை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறையை பக்கச்சார்பற்ற தன்மையின் சின்னமாகவும், ஜனநாயகத்தின் கடைசி காவரனாகவும் முதலாளித்துவவாதிகளும் குட்டி முதலாளித்துவ குழுக்களும் வருணிக்கின்றன. ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில், முதலாளித்துவ அரச எந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நீதித்துறை, அதன் உண்மையான வகிபாகத்தை வெளிப்படுத்தி, இராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு பச்சை கொடி காட்டியுள்ளது.

Loading