போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்

இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நாட்டின் பொதுத் தேர்தலில் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போட்டியிடுகிறது.

ஏப்ரல் 25 அன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட தேர்தலை வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழு ஒத்திவைத்தது. இதைப் பொருட்படுத்தாமல், மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முகநூல் பக்கத்தில் இணையவழி பொதுக் கூட்டத்துடன் நாம் எமது பிரச்சாரத்தைத் தொடங்குகிறோம். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளையும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு 43 வேட்பாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது. 22 பேர் அடங்கிய கொழும்பு வேட்பாளர் குழுவை நீண்டகால சோசலிச சமத்துவக் கட்சி தலைவர்களில் ஒருவரான விலானி பீரிஸ் வழிநடத்துவார். முன்னணி உறுப்பினர்களான பி. சம்பந்தன் யாழ்ப்பாணத்திலும் எம். தேவராஜா நுவரெலியாவிலும் எமது வேட்பாளர்களுக்கு தலைமை தாங்குவர்.

பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), அதில் இருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவை, தங்கள் வலதுசாரி வர்க்க-யுத்த திட்ட நிரல்களை மூடிமறைப்பதற்காக, தொழிலாளர்களை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதன் பேரில், இனவாதத்தைத் தூண்டிவிடுவதற்காக தேர்தலைப் பயன்படுத்துகின்றன. நாட்டின் 30 ஆண்டுகால தமிழர்-விரோத போரினால் ஏற்பட்ட பேரழிவிற்கு இந்த அனைத்து கட்சிகளும் பொறுப்பாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவ அமைப்புகளும், அதே போல் முஸ்லிம் கட்சிகளும் தங்களது சொந்த இனவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோலிசக் கட்சி (USP), முன்நிலை சோசலிச கட்சி (மு.சோ.க.) போன்ற முதலாளித்துவ சார்பு “இடது” குழுக்கள், முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் வக்காலத்து வாங்கிகளாகவும் அவற்றின் செயற்கைக்கோள்களாகவும் செயல்படுகின்றன.

இந்த அனைத்து கட்சிகளையும் எதிர்த்து, சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் ஒரு புரட்சிகர சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை ஆழப்படுத்தும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு உண்மையைச் சொல்லும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. பேரழிவு தரும் அணுவாயுத மூன்றாம் உலகப் போர், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, கொரோனா வைரஸ் தொற்றுநோய் போன்ற சுகாதார பேரழிவுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள், சர்வாதிகாரம் மற்றும் பாசிசம் ஆகியவற்றின் அபாயத்தை மனிதகுலம் எதிர்கொள்கிறது. இவை அனைத்தும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பூகோளப் பிரச்சினைகள், இவற்றுக்கு பூகோள ரீதியிலான சோசலிச தீர்வுகளே அவசியப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள

கோவிட்-19 தொற்றுநோய் மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றது. அதிகரித்து வரும் இந்த பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளங்கள், பாரிய நிதி ஆதாரங்கள் மற்றும் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகளையும் சர்வதேச அளவில் அணிதிரட்ட வேண்டும்.

தனியார் இலாபம், போட்டி தேசிய நலன்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களால் தூண்டிவிடப்பட்ட புவிசார் அரசியல் பதட்டங்களும், இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிக்கு இன்றியமையாத ஏற்பாடுகளைச் செய்ய தடையாக இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

இந்தியாவில் இந்து-மேலாதிக்கவாத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவும், தங்கள் ஆட்சிகள் தொற்றுநோயைக் கையாள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், “பீதி அடைய” எந்த காரணமும் இல்லை என்றும் பொய்யாகக் கூறிக்கொள்கின்றன.

அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களைப் போலவே, இரு நாடுகளிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சர்வதேச மூலதனம் மற்றும் பெருவணிகத்தின் உத்தரவின் பேரில், இலவச பொது சுகாதார வசதிகள் உட்பட சமூக சேவைகளை முடக்கியுள்ளதுடன், மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி செயல்படுத்துகின்றன.

கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுதல் என்ற பெயரில், இராஜபக்ஷ ஆயுதப்படைகளை அணிதிரட்டுகிறார் -இது தனது நிர்வாகத்தை மேலும் இராணுவமயமாக்குவதாகும்.

சமுதாயத்தின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே, இந்த பேரழிவைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் தேவையான உலகளாவிய வளங்களை அணிதிரட்டுவதற்காக போராடுவதற்கு முன்நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கவும் முடியும். உலகப் பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறுசீரமைப்பதன் அடிப்படையில் மட்டுமே, தேசிய எல்லைகளை கடந்து பகுத்தறிவான முறையில் திட்டமிடல்களை மேற்கொள்ள முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எமது சகோதர கட்சிகளுடன் ஒத்துழைத்து, சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராட அரசியல் மற்றும் நடைமுறை செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் இந்த பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காப் போராடுவதே இப்போதைய பணி!

சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட முன்வருகிறது. இந்த போராட்டங்கள், உலக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை நிறுத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியை அணிதிரட்டுவதற்கான புறநிலை அடிப்படையாகும்.

கடந்த ஆண்டு மெக்சிகோ, போட்டோரிக்கோ, சிலி, பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா, ஈராக், ஈரான், கென்யா, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் ஹாங்காங் உட்பட உலகெங்கிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்தன. அமெரிக்காவில், ஜெனரல் மோட்டர்ஸ் வாகன தொழிலாளர்கள் 40 ஆண்டுகளின் பின்னர் முதல் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

ஜனவரி 8 அன்று, மில்லியன் கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். மாருதி சுசூகி வாகனத் தொழிலாளர்கள் 2013 முதல் அரசு அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர்கள் இந்த உலகளாவிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக உள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, 1980 அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், இப்போது இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்து தொழிலாள வர்க்கத்தின் இந்த மிகப்பெரிய இயக்கத்தில் இணைந்துகொண்டனர். கொழும்பின் பெருவணிக சார்பு கொள்கைகள் மீதான தொழிலாள வர்க்க எதிர்ப்பானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுவதை சிதைத்தது.

சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தின் மீதான வெகுஜன வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டே கோட்டாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு "நிலையான" மற்றும் "வலுவான" ஆட்சிக்கு உறுதியளித்த அதேவேளை, சிங்கள பேரினவாதத்தைத் தூண்டிவிட்டு இராணுவத்தினரின் ஆதரவை பெருக்கிக்கொண்டார். இருப்பினும், இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கஹட்டகஹா சுரங்கத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததுடன், புதிய ஆட்சி மீதான தொழிலாள வர்க்கத்தின் அவநம்பிக்கையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தின.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக!

அனைத்து பிரதான ஏகாதிபத்திய சக்திகளும் உலகப் போருக்கு தயாராகி வருகின்றன. இது அணு ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் ஒரு பேரழிவு மோதலாக இருக்கும். கடந்த ஆண்டு, ட்ரம்ப் நிர்வாகம் ஆண்டுக்கு 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்கிய, அதேவேளை, ஐரோப்பிய சக்திகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தும் தங்கள் ஆயுதப் படைகளை பெருமளவில் விரிவுபடுத்துகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் சமூகப் பதட்டங்கள் அதிகரித்து வருவதுடன், உலகம் பொருளாதார பின்னடைவின் விளிம்பில் உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஈவிரக்கமற்ற முறையில் இராணுவ பலத்தின் மூலம் தனது பொருளாதார மேலாதிக்கத்தை மீண்டும் பெற முயற்சிப்பதோடு சீனா, ரஷ்யா மற்றும் ஈரானை குறிவைக்கிறது.

புது டெல்லியின் ஆதரவுடன், வாஷிங்டன், சீனாவுக்கு எதிரான தனது இராணுவ உந்துதலில் இந்தியாவை ஒரு முன்னணி அரசாக மாற்றியுள்ளது. இந்த புவி-மூலோபாய ஏற்பாடுகளால் ஊக்கமளிக்கப்பட்ட இந்தியாவானது, பாகிஸ்தான் மீதான தனது அழுத்தத்தை முடுக்கிவிட்டு, பாரதூரமான பூகோளத் தாக்கங்களுடன் இந்திய துணைக் கண்டத்தினுள் ஒரு அணு ஆயுத யுத்தத்தின் அபாயத்தை கடுமையாக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நிர்வாகம், சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் காரணமாக, 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளியேற்றப்பட்டது.

சிறிசேன பதவிக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டன் தனது இந்தோ-பசிபிக் கட்டளையகத்துடனும், சீனாவுக்கு எதிரான இராணுவ கட்டமைப்புடனும் இலங்கையின் இராணுவத்தை நெருக்கமாக ஒருங்கிணைத்தது. வாஷிங்டனுக்கும் கொழும்பிற்கும் இடையில் மேம்படுத்தப்பட்டு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ள நுழைவு மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தத்தை (Access and Cross Service Agreement - ACSA) தொடர்ந்து, ஒரு இராணுவ நிலைகொள்ளல் ஒப்பந்தமும் (Status of Forces Agreement - SOFA) கைச்சாத்திடப்பட உள்ளது. சோஃபாவின் கீழ், அமெரிக்க படைகளால் முழு தீவையும் இராணுவத் தளமாகப் பயன்படுத்தவும் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடவும் முடியும்.

கோடாபய மற்றும் மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு திரும்புவது குறித்து வாஷிங்டனும் புது டெல்லியும் ஆழ்ந்த கவனம் கொண்டுள்ளன. இலங்கை வெளியுறவுக் கொள்கையில் சீனாவை நோக்கிய எந்த மாற்றத்தையும் வாஷிங்டன் பொறுத்துக் கொள்ளாது என்று ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட அமெரிக்கத் தலைவர்கள் ஜனாதிபதி இராஜபக்ஷக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும், அமெரிக்க மற்றும் இந்திய நகர்வுகளை நன்கு அறிந்த பெய்ஜிங், நாட்டில் தனது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை முன்னேற்றுவதில் உறுதியாக உள்ளது.

இந்த அபிவிருத்திகள், ஒரு "நடுநிலை வெளியுறவுக் கொள்கையை" பின்பற்ற முடியும் என்ற இராஜபக்ஷவின் கூற்றை அம்பலத்துக்கு கொண்டுவந்துள்ளன. பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே, இலங்கையும் ஒரு புவிசார் அரசியல் புயலில் சிக்கியுள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிடாவிட்டால் போரை நோக்கிய உந்துதலைத் தடுக்க முடியாது. இலங்கையிலும், தெற்காசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு சோசலிச இயக்கத்தை உருவாக்குவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டம்!

ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் எழுச்சி பெறுவதையிட்டு பிரதிபலிக்கும் ஆளும் உயரடுக்குகள் எல்லா இடங்களிலும் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர் மீதான ஈவிரக்கமற்ற அடக்குமுறையும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களும், போருக்கான அதன் தயாரிப்புகளின் ஒரு பகுதியே ஆகும். ஜேர்மனியில், ஹிட்லரின் நாஜி ஆட்சி வீழ்ச்சியடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்தாபகக் கட்சிகள் அரசின் ஆதரவோடு பாசிசத்தை நோக்கித் மீண்டும் திரும்புகின்றன.

இந்தியாவில், பிரதமர் மோடி, இஸ்லாமிய-விரோத உணர்வைத் தூண்டிவிட்டு, இந்து-மேலாதிக்க சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறார். அவரது அரசாங்கம் குடியுரிமைச் சட்டத்தில் பிற்போக்கு திருத்தம் ஒன்றை மேற்கொண்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக டெல்லியில் பாசிச வகைப்பட்ட வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. கடந்த ஆகஸ்டில், அரசாங்கம் காஷ்மீரை பூட்டியதுடன், இந்தியாவின் ஒரே முஸ்லிம் மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, புது டெல்லியின் நேரடி ஆட்சியை திணித்ததோடு பிரமாண்டமானளவில் துருப்புக்களை அதிகரித்து வெளி உலகத்துடன் தொடர்புகளை துண்டித்தது. இந்த கடுமையான முஸ்லிம்-விரோத நடவடிக்கைகள், இந்தியாவின் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரச அடக்குமுறைக்கான ஒரு ஒத்திகையே ஆகும்.

இலங்கையில், போர்க்குற்றங்களில் நெருக்கமாக உடந்தையாக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி இராஜபக்ஷ, தனது ஆட்சியின் மீதான அனைத்து சட்டக் கட்டுப்பாடுகளையும் அகற்றுவதற்காக தனது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. க்கு மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற பிரச்சாரம் செய்கிறார். இராணுவம் மற்றும் சிங்கள-பௌத்த அதிதீவிரவாதிகளில் பெரிதும் தங்கியிருக்கும் இராஜபக்ஷ, தனது நிர்வாகத்தை விரைவாக இராணுவமயமாக்கி வருகிறார். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இதிலிருந்து எச்சரிக்கையை பெற வேண்டும்: பொதுத் தேர்தல் என்ற திரைக்குப் பின்னால் ஜனாதிபதி சர்வாதிகாரம் தயாரிக்கப்படுகிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடு!

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டதும் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக நடத்தப்படும் போலி விசாரணைகளும் ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் கூர்மையான வெளிப்பாடாகும். அமெரிக்க போர்க்குற்றங்கள் மற்றும் அரசாங்க ஊழல் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியதற்காகவே அசான்ஜ் துன்புறுத்தப்படுகிறார். சோசலிச சமத்துவக் கட்சியும் உலகம் முழுதும் உள்ள அதன் சகோதர கட்சிகளும், மற்றும் உலக சோசலிச வலைத்தளமும் (WSWS) அவரது விடுதலைக்கான போராட்டத்தை வழிநடத்துகின்றன. அனைத்து உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு இது இன்றியமையாததாகும்.

இலங்கை ஆளும் வர்க்கக் கட்சிகள் 1948 முதல் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் அடக்குவதற்கும் தமிழர்-விரோத இனவாதத்தை இடைவிடாது பயன்படுத்துகின்றன. 1983 இல் ஐ.தே.க. அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை கட்டவிழ்த்துவிட்டது.

தமிழ் மக்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தையும் அடக்குவதற்கு இந்த யுத்தம் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். பிரசித்தி பெற்ற பத்திரிகை ஆசிரியரும் பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்க உட்பட அரசியல் விமர்சகர்களை கடத்தி கொலை செய்வதற்காக, கொலைப் படைகள் நாடு முழுவதும் சுற்றித் திரிந்தன.

ஜனவரி மாதம், இராஜபக்ஷ, கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கரிடம், போரின்போது காணாமல் போன 20,000 பேர் “உண்மையில் இறந்துவிட்டார்கள்” என்று கூறினார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் இந்த ஒப்புதல் முன்னெப்போதும் நடந்திருக்கவில்லை. காணாமல் போனவர்கள் குறித்து எந்த தகவலையும் வழங்க கொழும்பு தொடர்ந்து மறுத்தே வந்திருக்கின்றது.

இராணுவத்தின் குற்றங்களையும் அவரது சொந்தக் குற்றங்களையும் மூடி மறைப்பதற்காக முயன்ற இராஜபக்ஷ, இப்போது காணாமல் போனவர்கள் “விடுதலைப் புலிகளால் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்” என்றும் அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தனர் என்றும் கூறுகிறார். பெற்றோர்களும் உறவினர்களும் இதை நிராகரித்து, தங்களின் அன்புக்குரியவர்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு கோருகின்றனர்.

இந்த குற்றங்களைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், கொலைகளின் சூழ்நிலைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. இதற்கு ஜனநாயக உரிமைகள் மற்றும் சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் பாகமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டம் அவசியமாகும்.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்தபோதிலும், வடக்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளன. அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) உட்பட அடக்குமுறை சட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு கொண்ட இஸ்லாமிய குழுவால் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், ஸ்தாபகக் கட்சிகள் அனைத்தும், அவசரகால சட்ட ஆட்சியை அமுல்படுத்துவதற்கும், நாடு முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும், கொடூரமான முஸ்லிம்-விரோத பிரச்சாரத்திற்கும் ஆதரவளித்தன. சிறிசேன, விக்ரமசிங்க மற்றும் மஹிந்த இராஜபக்ஷ ஆகியோருக்கு நடக்கவிருந்த தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான அரச அடக்குமுறையை நியாயப்படுத்தும் பொருட்டு, அவர்கள், அந்த தக்குதல்களை நடத்த அனுமதித்தனர் என்பதை சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும் "வலுவான அரசாங்கத்திற்காக" —அதாவது ஒரு எதேச்சதிகார ஆட்சிக்காக— பிரச்சாரம் செய்கின்றன. ஐ.தே.க. மற்றும் அதில் இருந்து பிரிந்து போன ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்களாக ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும், மேலும் வலதிற்கு மாறிவிட்டன. இந்த கட்சிகளில் எதுவும் ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரச எந்திரத்தை இராணுவமயமாக்குவதற்கும் அவரது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. இந்த கட்சிகளில் எதுவுமே ஜனநாயக உரிமைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டவை அல்ல.

கருத்து சுதந்திரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது! பௌத்த மத குருமார்களின் பிற்போக்கு சக்திளால், விருது பெற்ற எழுத்தாளர் சக்திக சத்குமாராவின் எழுத்துக்கள் குறித்து பொலிசில் போலியான புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இராஜபக்ஷ தேர்வான பின்னர், பாதாள துணை இராணுவ குழுக்களால் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

முதலாளித்துவத்திற்கு எதிரான, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான தொழிலாள வர்க்க இயக்கம் முன்னெடுக்கும் போராட்டத்தின் மூலம் மட்டுமே மக்களின் ஜனநாயக உரிமைகளை அடைய முடியும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சபைக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் இரத்து செய்வதற்கும், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரதும் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கிறது.

சமூக சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக - சோசலிச கொள்கைகளுக்காக போராடுவோம்

சமூக சமத்துவமின்மை விரிவடைந்து வருவது ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும். சமீபத்திய ஒக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, பூமியின் 4.6 பில்லியன் அதிவறிய மக்களை விட அதிக செல்வத்தை 2,153 பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். உச்சத்தில் இருக்கும் 1 சதவிகிதம் பேர் கிட்டத்தட்ட முழு உலக மக்கள் தொகையான 6.9 பில்லியன் மக்களை விட மொத்தமாக இரு மடங்கு செல்வத்தைக் கொண்டுள்ளனர். 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான பெரும் வல்லரசுகள் வங்கிகளுக்கும் பங்குச் சந்தைகளுக்கும் சுமார் 4 ட்ரில்லியன் டாலர்களை ஊட்செலுத்தி, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இதே போக்குகள் இலங்கையிலும் கூர்மையாக வெளிப்படுத்தப்படுகின்றன. 2016 இல், நாட்டின் அதிசெல்வந்த 10 சதவிகிதம் பேர், அதிவறிய 70 சதவிகித குடும்பங்கள் சம்பாதித்த மொத்த தொகைக்கு சமமாக சம்பாதித்ததுள்ளன. கீழ் மட்டத்தில் உள்ள பத்துவீதம் பேரின் பங்கு, மொத்த குடும்ப வருமானத்தில் 1.6 சதவிகிதம் மட்டுமே.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 2.6 சதவீதமாக சரிந்தது. இது 2002 இன் பின்னர் ஆகவும் குறைவானதாகும். நாடு அதன் வெளிநாட்டு கடன் தவணை தவறுதலின் விளிம்பில் உள்ளது — இந்த தவணைகள் 2019 முதல் நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் 20 பில்லியன் டாலர்கள் ஆகும். எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை கடுமையாக பாதிக்கின்றது. பெருகிவரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள கூட்டுத்தாபனங்கள், இடுப்பு உடையும் வேலை இலக்குகளையும் புதிய விதிமுறைகளையும் தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றன. ஊதியத்தை குறைக்க வேலையின்மை மற்றும் வேலை நிரந்தரமின்மையையும் பயன்படுத்தி, ஒவ்வொரு துறையிலும் உள்ள நிர்வாகங்கள், வேலை பாதுகாப்பு இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களை மேலும் மேலும் நாடுகின்றன.

கிராமப்புற மக்கள் பெரும்பாலும் வாழ்வாதார விவசாயத்தில் தங்கியிருக்கின்றனர். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர நிறுவனங்களால் விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள். இந்த நிறுவனங்களே விவசாய உற்பத்திக்கான விலைகளையும் நிர்ணயிக்கின்றன. நிரந்தர மற்றும் வளர்ந்து வரும் கடனில் மூழ்கி, நிதிச் சுமை தாங்க முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் உர மானியங்களைக் குறைத்துள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி, பின்வரும் கொள்கைகளுக்கு நிதியளிக்க, வங்கிகள் மற்றும் பெருவணிகங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும், செல்வந்தர்களிடமிருந்து ஏழைகளுக்கு செல்வங்களை பரவலாக மறுபங்கீடு செய்வதற்கும் அழைப்பு விடுக்கிறது.

 எந்தவொரு ஊதிய இழப்பும் இல்லாமல், வேலை வாரத்தை 30 மணி நேரமாகக் குறைப்பதன் மூலம் வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும். வீட்டுத் திட்டங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீதிகளைக் கட்டுவதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் ஒரு பாரிய வேலைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

 அனைத்து தொழிலாளர்களுக்கும் பணவீக்க சுட்டெண்ணுக்கு ஏற்ப வாழக்கூடிய ஊதியத்துடன், பாதுகாப்பான, சிறந்த ஊதியத்துடன் கூடிய தொழிலைப் பெறும் அடிப்படை சமூக உரிமை இருக்க வேண்டும். அடக்குமுறை ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.

 அனைவருக்கும் இலவச, உயர்தர சேவைகளை வழங்க பொது கல்வி மற்றும் சுகாதார சேவையை விரிவுபடுத்த வேண்டும். கௌரவமானதும் நியாயமான விலையிலானதுமான பொது வீடுகளை வாழ்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 நிலமற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அரசு நிலங்கள் ஒதுக்கப்படுவதோடு அனைத்து ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்களினதும் கடன்களை இரத்து செய்ய வேண்டும். மலிவான கடன், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பிற உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க விலைக் கட்டுப்பாட்டை உறுதிசெய்ய வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுவோம்

கடந்த ஐந்து ஆண்டுகளின் கசப்பான படிப்பினைகள், ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் தங்கள் அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடாமல் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.

2015 இல், அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரியது. சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உண்மையான பங்காளியாகி, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை செயல்படுத்தி, போர்க்குற்ற விசாரணைகளை அடக்குவதற்கு ஆதரவளித்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிங்கள-பௌத்த பேரினவாதத்தில் மூழ்கிப்போன ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், "சர்வதேசம் [சக்திகள்] எங்களுக்கு பின்னால் உள்ளது" என்றும் "[தமிழர் பிரச்சினைகளுக்கு] ஒரு அரசியல் தீர்வை உருவாக்க அவை உதவும்" என்றும் கூறிக்கொண்டு சமீபத்தில் தமிழ் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அமெரிக்க சார்பு கட்சி, மீண்டும் தமிழ் தொழிலாளர்களையும் ஏழைகளையும் ஏகாதிபத்திய சார்பு இனவாத அரசியலில் சிக்க வைக்க தயாராகி வருகிறது.

சிறிசேனவின் போலி “நல்லாட்சி” பிரச்சாரத்தை நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) ஆதரித்தன. சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சிக்கு ஒப்புதல் அளித்த ந.ச.ச.க., அது ஒரு "ஜனநாயகப் புரட்சியின்" விளைவு என்று கூறியதுடன், தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதல்களையும் ஆதரித்தது. ஐ.சோ.க., மு.சோ.க. ஆகியவை தொழிற்சங்கங்கங்களுக்கு ஆதரவளித்து, தொழிலாளர்களின் போராட்டங்களையும் அரசாங்கத்திற்கு பாதிப்பில்லாத வேண்டுகோள்களுக்குள் திசை திருப்புவதற்கான அவற்றின் முயற்சிகளையும் ஆதரித்தன.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இந்த கட்சிகள் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரித்து, இராஜபக்ஷ தன்னை அரசாங்கத்திற்கு எதிரான ஒரே "எதிர்ப்பாக" காட்டிக்கொள்வதற்கு உதவின. இராஜபக்ஷவுக்கு வாக்களித்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பெரும்பாலும் விக்ரமசிங்க ஆட்சிக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவே வாக்களித்தனர்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் போலவே, இந்த போலி இடது குழுக்களும், இன வேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடிப்பதைக் கண்டு அச்சமடைகின்றன. ஆளும் உயரடுக்கால் தயாரிக்கப்பட்டு வரும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் தனது அரசியல் சுதந்திரத்தை ஸ்தாபிக்க இந்த முதலாளித்துவ-சார்பு கட்சிகளை நிராகரிக்க வேண்டும்.

தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவோம்

தொழிலாளர்கள் சமீபத்திய போராட்டங்களின் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் —அவர்களால் தொழிற்சங்கங்களின் பிடிக்குள் இருந்துகொண்டு தங்கள் உரிமைகளை வெல்ல முடியாது. முதலாளித்துவ கட்சிகள் அல்லது "இடது" குழுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரள்வை எதிர்ப்பதுடன் எந்தவொரு போராட்டத்தையும் தனிமைப்படுத்தவும் கலைக்கவும் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்க, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், அண்டை அயல் குடியிருப்பு பிரதேசங்களிலும் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது அவசியமாகும். உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைவதற்கான தளத்தை இது உருவாக்கும்.

2018 டிசம்பரில் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றிய வலுவான போராட்டத்தின் போது, எபோட்சிலி தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பற்கு சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அழைப்பை நடைமுறைப்படுத்தினர். தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத்தளத்திலும் இந்த முன்நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.

தொழிலாளர்கள் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரள்வதற்கும், கிராமப்புற மக்களுக்கு தலைமை வகிப்பதற்கும், முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிசக் கொள்கைகளை செயற்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் இந்த நடவடிக்கை குழுக்கள் அடிப்படையாக அமைகின்றன.

சர்வதேச மற்றும் தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காக, சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. அத்தகைய அரசாங்கம், பெரிய வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்களை தேசியமயமாக்கும். மற்றும் பெரிய தோட்டங்கள் மற்றும் வங்கிகள், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும். வெளிநாட்டுக் கடன்களை அது நிராகரிக்கும் மற்றும் சோசலிச வழிகளில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மறுசீரமைக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இலங்கை போன்ற முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் மிக அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக பணிகளைச் செய்யக் கூட இலாயக்கற்றது என்பதை நிரந்தரப் புரட்சி தத்துவம் நிரூபித்தது. ஆகவே, தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கான அதன் போராட்டத்தின் பாகமாக இந்த சவாலை பொறுப்பேற்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியை வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புவோம்

புரட்சிகர போராட்டங்களின் புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு, உலக சோசலிச முன்னோக்கும் புரட்சிகர தலைமையும் அவசியமாகும். ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் அனைத்து வகையான சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிரான போராட்டத்தில் புடம்போடப்பட்டுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவே இந்த தலைமைத்துவமாகும். அனைத்துலகக் குழுவினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் குரல், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது 52 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக ஸ்தாபிக்கப்பட்டதுடன், 1964 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து சோசலிச சர்வதேசவாத கொள்கைகளை காட்டிக் கொடுத்த லங்கா சம சமாஜ கட்சிக்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

எமது கட்சி, தமிழர்களுக்கு எதிரான இனவாத போரை எதிர்த்து வந்துள்ளதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெறக் கோருகிறது. கிராமப்புற மக்களை அரச பயங்கரவாதத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான அடக்குமுறையில் இருந்தும் பாதுகாத்து வந்துள்ள சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக உறுதியுடன் போராடி வருகின்றது.

இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளும் எமது தேர்தல் பிரச்சாரத்தை சாத்தியமான அனைத்து வகையிலும் ஆதரிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதுடன் எமது தேர்தல் நிதிக்கு நன்கொடை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்துலகக் குழுவினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் வரலாற்றையும் வேலைத்திட்டத்தையும் படித்து, இந்த புரட்சிகரக் கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading