மியான்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 170 க்கும் மேலானவர்கள் பலி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு மியான்மாரில் கச்சின் மாநிலத்தின் ஹபகாந்த் (Hpakant) பிராந்தியத்திலுள்ள மாணிக்கக் கல் சுரங்கத்தில் கடந்த வியாழனன்று நிகழ்ந்த துயரகரமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்விபத்தில் 170 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர், என்றாலும் ஏனைய சில அறிக்கைகள், உண்மையில் பலியானோர் எண்ணிக்கை 200 அல்லது அதற்கு கூடுதலாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.

இந்த பேரழிவு மியான்மாரின் பல பில்லியன் டாலர் மாணிக்கக் கல் தொழில்துறை வரலாற்றில் மிக மோசமான விபத்தாக உள்ளது. இது, பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாத தொழிற்துறையில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட மற்றும் பெரிதும் சுரண்டப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துநிறைந்த நிலைமைகளை எடுத்துக்காட்டியுள்ளது, மேலும் இந்த தொழிற்துறையானது நாட்டின் இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியின் பிரிவுகளுக்கு பெரும் இலாபங்களை வாரியிறைப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை காலை பொழுதுவிடிந்து சற்று நேரத்தில் Wai Khar சுரங்கத்தில் விபத்து நிகழ்ந்தபோது தாங்கள் போராடிய திகிலூட்டும் காட்சிகள் பற்றி உயிர்தப்பிப் பிழைத்தவர்கள் விவரித்தனர். எப்போது வேண்டுமானாலும் நிகழவிருந்த இந்த பேரழிவுக்கான ஒரே எச்சரிக்கையாக ஒரு ஆழ்ந்த தண்ணீர் சலசலக்கும் சப்தம் மட்டுமே அங்கு கேட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சில விநாடிகளிலேயே அவர்கள் மண்ணும் தண்ணீரும் நிரம்பிய ஏழு மீட்டருக்கும் அதிகமான உயர பெரும் அலையில் சிக்கி மூழ்கிப் போயினர்.

தப்பிப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லாமல், சுரங்கத்திற்குள் பணிபுரிந்து கொண்டிருந்த அனைவரும் தண்ணீரால் சூழப்பட்டு மூழ்கிவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலரும் மூழ்கி இறந்து போயினர், அதேவேளை மற்றவர்கள் கழிவுகளுக்குள் சிக்கி போயிருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், கணக்கிற்கு வராத சுரங்கத் தொழிலாளர்கள் பலர் சேற்றுக்கு அடியில் புதையுண்டு போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த விபத்து ஒரு மாத காலமாக பெய்து கொண்டிருக்கும் கடும் பருவகால மழையினைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியின்படி, இந்த சுரங்கத்தின் பள்ளம் மேல் பக்க சுரங்க பாதையின் கீழ் 300 மீட்டர் சரிவாக செல்லக் கூடியது. இந்த கடும் மழைப்பொழிவு சுரங்க கழிவுகள் நிரம்பிய அடித்தளத்தை இழகச்செய்த காரணத்தால், பள்ளத்திற்கு கீழே கழிவுகளை சரியச் செய்தது. சுரங்கத்தின் சுவர்களில் ஒன்று உடைந்து வீழ்ந்தது. இந்நிலையில், சுவற்றின் மறுபக்கம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சுரங்கத்திற்குள் வெள்ளத்தைப் போல பீறி பாய்ந்தது.

மீட்புப் பணியாளர்கள் சுரங்கப் பகுதியிலிருந்து சடலங்களை மீட்கின்றனர் (நன்றி: மியான்மர் தீயணைப்புத்துறை)

முன்பிருந்த சுரங்கப் பகுதி ஒரு பரந்த ஏரி போல மாறியிருந்த இடத்தில் டசின் கணக்கான உடல்கள் மிதந்து கொண்டிருந்த கொடூரக் காட்சியை மீட்பாளர்கள் எதிர்கொண்டனர்.

நேற்று வரை, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 172 ஆக இருந்தது. உயிர் பிழைத்திருந்த மற்றொரு 52 பேருக்கு பல்வேறு வகையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. மீட்புக் குழுவினர் விபத்துப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், என்றாலும் அடிப்படையில் இது இறந்த உடல்களை மீட்கும் நடவடிக்கையைப் போல மாறியிருந்தது.

பெரும் எண்ணிக்கையில் சடலங்களை ஒன்றாக அடக்கம் செய்வதன் விளைவாக நோய் பரவக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், இறந்தவர்களில் சுமார் 77 பேர் வெள்ளிக்கிழமை அன்று பெரியளவிலான கல்லறையில் தொகையாக அடக்கம் செய்யப்பட்டனர். மற்றொரு 40 தொழிலாளர்களின் உடல்கள் சனியன்று அடக்கம் செய்யப்பட்டன. அதேவேளை ஒரு சிறுபான்மையினர் மட்டுமே புத்த மத நடைமுறைகளின் படி தகனம் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட வேலை மற்றும் வாழ்க்கை ரீதியான கடுமையான நிலைமைகள் பற்றி இறந்துபோனவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

சுரங்கத்திற்கு அருகே வசித்து வந்த 30 வயது பெண்மணியான Aye Mon என்பவர், இந்த விபத்தில் தனது கணவரும் சகோதரரும் பலியாகி போனதால் தான் நிற்கதியாக நிற்பதாக அல் ஜசீரா ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும் அவர், “எனது கணவர் மாணிக்கக் கல் சுரங்கத் தொழிலில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார். ஆனால் எனது சகோதரர் முதல்முறையாக இப்போது தான் அங்கு பணியில் சேர்ந்திருந்தார். விபத்து நடந்த நாள் அவரது இரண்டாவது வேலை நாளாகும்” என்றும் தெரிவித்தார்.

வெறும் 22 வயதான அவரது சகோதரர் வேலை தேடுவதற்காக, தனது சொந்த கிராமமான Monywa இல் இருந்து 600 கிலோமீட்டருக்கு மேலாக பயணித்து அங்கு வந்திருந்தார். “நேற்று எனது கணவரும் சகோதரரும் அடக்கம் செய்யப்பட்டனர். எனது வாழ்க்கையில் எனக்காக இனி எதுவுமில்லை. எனது இரண்டு வயது மகளைத் தவிர அனைத்தையும் இழந்து நிற்கிறேன்,” என்றும் Aye Mon கூறினார்.

அல் ஜசீரா ஊடகத்தால் மேற்கோள்காட்டப்பட்ட, விபத்தில் சிக்கிய நபரின் மற்றொரு சொந்தக்காரரான Win Kyaw என்பவர், தனது 20 வயது மகன் இவ்விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். 42 வயதான Kyaw 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியிலுள்ள சுரங்கங்களில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில், ஒரு சிறு மாணிக்கக் கல்லுக்கு வெறும் 10 டாலரில் இருந்து 15 டாலர் வரை மட்டுமே வருமானம் கிடைக்கக்கூடிய மாணிக்கக் கற்களை கண்டறிய இதுபோன்ற அபாயகரமான நிலைமைகளில், தான் வேலை செய்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் Kyaw, “எனது மகனுக்கு இரண்டு பெரிய மாணிக்க கற்கள் கிடைத்தன. ஆனால் மியான்மர் இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய்களின் ஒரு குழு அவற்றை எனது மகனிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது. பெரிய கற்களை எப்போது நாங்கள் கண்டறிந்தாலும், அவர்கள் வந்து எங்களிடமிருந்து கேட்டு வாங்கி சென்றுவிடுவர்” என்றும் கூறினார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர் ஒருவரை மீட்புப் பணியாளர்கள் எடுத்துச் செல்கின்றனர் (நன்றி: மியான்மர் தீயணைப்புத்துறை)

ஹபகாந்த் பிராந்தியத்திலுள்ள மாணிக்கக் கல் சுரங்கப் பிரிவு இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். இதில், பெரும்பாலான மூத்த இராணுவ தளபதிகள் அடங்கிய மர்மமான வலையமைப்பு, இராணுவத்துடன் இணைந்த மிகப்பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள், இடைத்தரகர்கள், பிரிவினைவாத கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் பணக்கார கொள்முதலாளர்கள் என அனைவரும் ஈடுபட்டிருந்தனர். இந்த கொள்முதலாளர்ளில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இதன் காரணமாகவே, Wai Khar சுரங்கத்திலிருந்து இலாபமீட்டிக் கொண்டிருந்த தனிநபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் காண்பது தொடர்ந்து மூடிமறைக்கப்பட்டதாகவே இருந்தது. ஊடக அறிக்கைகளின் படி, இந்த சுரங்கப் பகுதியில் பணிகளை மேற்கொள்ள உத்தியோகபூர்வ அனுமதி பெற்றிருந்த ஐந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை வரை இங்கு வேலை செய்து வந்துள்ளது. இது உண்மையாக இருக்குமானால், தொடர்ந்து பொழிந்த பருவகால மழை சுரங்க கழிவுகளின் மலை போன்ற குவியல் பள்ளத்திற்குள் சரிவதற்கு அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் கூட, இந்த துயரகர சம்பவம் நிகழும் நாள் வரை சுரங்கத்தில் வேலைகள் நடைபெறுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றை அர்த்தப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை ஆபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில் நிறுவனங்களும் அதிகாரிகளும் சுரங்கத்தை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது, என்றாலும் சுரங்கத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்துள்ளனர்.

1961 ஆம் ஆண்டு முதல் கச்சின் இன சிறுபான்மையினருக்காக ஒரு சுதந்திர அரசிற்காக பிரிவினைவாதப் போரை நடத்திய கச்சின் சுதந்திர இராணுவம் (Kachin Independence Army), இந்த சுரங்கப் பகுதிக்கு அருகாமையில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதுடன், மாணிக்கக்கல் வணிகத்தின் மூலமாக அதன் செயல்பாடுகளுக்கு நிதி சேகரித்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. Wai Khar இல் விபத்து நிகழ்வதற்கு முன்பு வரை இது அங்கு தொடர்ச்சியான செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம், என்றாலும் அது தொடர்பான உறுதியான ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சில கருத்துரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மியான்மரில் உள்ள பழமையான மற்றும் ஆபத்து நிறைந்த நதி தங்க சுரங்கம் (நன்றி: ஜோன் ஹல்ம்)

இந்த பிராந்தியத்தில் பல சுரங்கத் தொழிலாளர்கள் வறிய ஒப்பந்தக்காரர்களாக செயல்பட்டு, பல்வேறு தளங்களில் வேலை செய்கிறார்கள். மேலும் அவர்கள் பிரித்தெடுக்கும் அனைத்திலிருந்தும் குறைந்த வருமானத்தையே அவர்கள் ஈட்டுகிறார்கள். இதன் காரணமாக, சுரங்கங்கள் உத்தியோகபூர்வமாக மூடப்படுகின்ற வேளையில், அவர்களுக்கு எந்தவித உரிமைகளும் கிடைக்காது என்ற நிலையில், ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் மாணிக்கக் கற்கள் தேடுவதைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் குடும்பத்தினரின் ஆதரவிலிருந்து விலகி தூரத்தில் வாழும் உள்நாட்டு புலம்பெயர்ந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

விபத்துக்கள் பொதுவாக இங்கு நிகழ்வதுடன், அதிலும் குறிப்பாக பருவமழை காலத்தில் விபத்துக்கள் நிகழும் வாய்ப்பு அதிகம். இந்த துறை ஒழுங்குமுறைப்படுத்தப்படாதது என்பதால், உண்மையான இறப்புக்களின் எண்ணிக்கையை அறியமுடியவில்லை, என்றாலும் வருடத்திற்கு 100 க்கு மேலாக இத்தகைய இறப்புக்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாணிக்கக் கல் வர்த்தகம் மூலமாக பெரும் செல்வம் திரட்டப்படுகையில் இந்த பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் மோசமான வறுமையில் வாழ்கின்றனர். மதிப்பீட்டின் படி இவர்கள் 100,000 மற்றும் 300,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

வடக்கு மியான்மரில் தங்க சுரங்கத் தொழிலாளர்கள் (நன்றி: ஜோன் ஹல்ம்)

பிரிட்டிஷை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான Global Witness, 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்த துறையின் மதிப்பு அதிகபட்சமாக 31 பில்லியன் டாலராக இருந்தது என்று மதிப்பிட்டிருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கு அநேகமாக பாதிக்கு சமமாக இருந்திருக்கும்.

இந்த நிறுவனத்தின் ஆசிய இயக்குநரான, மைக் டேவிஸ், அதேவேளை “மியான்மரின் பச்சை மாணிக்கக் கல் வணிகம் நவீன வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை வளமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார். மேலும் அவர், இதில் “இராணுவ கடுங்கோட்பாளர்கள், இராணுவ நிறுவனங்கள், பினாமி அதிபர்கள் மற்றும் முக்கிய போதைப் பொருள் பிரபுக்கள்,” ஆகியோர் இதில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன்களை இங்கிருந்து வாரிக் கொண்டனர் என்றும் குறிப்பிட்டார்.

Global Witness நிறுவனம், நாட்டின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரியான Than Shwe, நாட்டின் முந்தைய ஆளும் கட்சியான யூனியன் ஐக்கிய மற்றும் அபிவிருத்திக் கட்சியின் (Union Solidarity and Development Party) முன்னாள் பொதுச் செயலரான Maung Maung Thein, மற்றும் முன்னாள் உயர் இராணுவ தளபதியான Ohn Mint ஆகியோரை இதில் ஈடுபட்ட முக்கிய நபர்களாக அடையாளம் கண்டிருந்தது. அவர்களது குடும்பங்கள் 2014 ஆம் ஆண்டில் நாட்டின் அதிகாரபூர்வ மாணிக்கக் கல் வர்த்தக ஸ்தலத்தில் விற்பனைக்கு முந்தைய வரித் தொகை நிகர மதிப்பாக 220 மில்லியனை ஈட்டிய நிலையில், வர்த்தக மற்றும் வரி சலுகைகளைப் பெற்ற பயனாளிகளாக அவர்கள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

நாட்டின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரம் ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்து தொடங்கிய “ஜனநாயகத்திற்கு மாற்றம்” நிகழ்கிறது என்று கூறப்பட்ட போதிலும், இந்த வர்த்தகம் தடையின்றி தொடர்ந்தது. நடைமுறையில், இராணுவ தளபதிகள் மியான்மரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (National League for Democracy-NLD) கட்சி அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக அவர்களது ஆட்சிக்கு ஜனநாயக ரீதியான மூடிமறைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, ஆளும் ஆட்சிக் குழுவை எதிர்ப்பதாக NLD கூறியது. அதன் தலைவர் ஆங் சாங் சூ கி (Aung San Suu Kyi) ஐ ஜனநாயகத்திற்காக போராடும் ஒரு துணிச்சல் மிக்க போராளி என்று மேற்கத்திய சக்திகளும் பெருநிறுவன ஊடகங்களும் அவரை பாராட்டின.

என்றாலும், NLD, இது பர்மிய உயரடுக்கு சாத்தியமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதிலிருந்தும், ஏகாதிபத்தியத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிறுவனங்களின் ஈடுபாட்டை துண்டித்துவிட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்து இராணுவ ஆட்சியை எதிர்த்தது. ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான மிருகத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டதன் மூலம் NLD இன் வலதுசாரி தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது, இத்தாக்குதல்கள் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன.

ரோஹிங்கியாக்களின் துன்புறுத்தலை பாதுகாத்த சூ கி, NLD தலைமையிலான அரசாங்கம் மாணிக்கக்கல் தொழில்துறையை சீர்திருத்தும் என்று 2016இல் உறுதியளித்த போதிலும், நான்கு ஆண்டுகள் சென்ற பின்னரும் அங்கு எதுவும் மாறவில்லை.

மாண்டலேயில் உள்ள ஒரு மாணிக்கக் கல் சந்தை (நன்றி: ஜோன் ஹல்ம்)

கடந்த ஆண்டு, ஒரு புதிய இரத்தினக் கல் சட்டத்தை இயற்றுவதற்கு NLD ஆதரவளித்தது, இச்சட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கும் துஷ்பிரயோகங்கள் பற்றி பேசவில்லை அல்லது இராணுவத்தின் குற்றத்தனமான நடவடிக்கைகளையும் மற்றும் பிற பணக்காரர்களின் விருப்புக்களையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட எந்தவித நடவடிக்கைகளையும் உட்படுத்தியிருக்கவில்லை. இச்சட்டம் மனித உரிமை அமைப்புக்களால் கண்டிக்கப்பட்டது, அதேவேளை மியான்மரின் சுரங்கத் தொழில் குழுக்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வறுமைநிலை குறித்து வெறுமனே மேம்போக்காக புலம்பியும், அவர்களின் இறப்புக்கள் குறித்த “சோகத்தை” வெளிப்படுத்தியும் சமீபத்திய பேரழிவுக்கு சூ கி விடையிறுத்துள்ளார்.

Loading