ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது

10 July 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில்இங்கே கேட்கலாம்.

மவுண்ட் ரூஸ்மோரில் அவரின் ஜூலை 3 உரையில் டொனால்ட் ட்ரம்ப் கோமாளித்தனத்தின் புதிய உச்சத்தை எட்டினார், அங்கே ஜனநாயகத்திற்கான அவரது அர்ப்பணிப்பை அறிவிக்கும் ஓர் அர்த்தமற்ற பேருரையை மிகவும் கவனமாக பயிற்சி செய்யப்பட்டிருந்த சர்வாதிகாரி முசோலினியின் சாயலுடன் இணைக்க முயன்றார்.

எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகங்களுடன் போராடிய ட்ரம்ப், “244 ஆண்டுகளுக்கு முன்னர் பிலடெல்பியாவில் ஒன்றுகூடி, சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட 56 தேசபற்றாளர்களின் தைரியத்தை” துணைக்கிழுத்தார். “'எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று அவர்கள் அறிவித்தபோது, என்றென்றைக்கும் உலகை மாற்றியமைத்த ஓர் தெய்வீக உண்மையை அவர்கள் பொதிந்தார்கள்,” என்றார். “நம் நாடு யூத-கிறிஸ்துவ கோட்பாடுகளின் மீது ஸ்தாபிக்கப்பட்டது,” என்று அறிவிக்குமளவுக்குச் சென்றார்.

ட்ரம்ப் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரே அறியவில்லை. வரலாற்று துல்லியத்திற்காக மட்டும் குறிப்பிடுவதானால், அமெரிக்க அரசாங்கத்தை எந்தவொரு மதக் கோட்பாடுகளுக்கும் சாதகமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஸ்தாபகர்கள் வெளிப்படையாக எதிர்த்தனர் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். 1776 இல் வேர்ஜீனியா மத சுதந்திர சாசனத்தில் தோமஸ் ஜெஃபர்சன் எழுதியவாறு அவரின் மத சுதந்திரத்திற்கான கருத்துரு, "யூதர்களுக்கும், யூதர் அல்லாதவர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், மொஹமதியர்கள், ஹிந்துக்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் இருந்த மதநம்பிக்கையற்றவர்களுக்கும்" சமமான சட்ட உரிமைகளை வழங்கியது. பின்னர், இன்னும் அதிக பிரபலமாக, அப்போதைய ஜனாதிபதி ஜெஃபர்சன் கனக்டிக்கட்டின் டான்பரி பாபிஸ்ட் அமைப்புக்கு (Danbury Baptist Association) 1802 இல் எழுதிய அவரது கடிதத்தில், அரசியலமைப்பின் முதல் சட்ட தீர்மானத்தின் மதம் தொடர்பான ஷரத்துக்கள் "தேவாலயத்திற்கும் அரசுக்கும் இடையே ஒரு சுவரை" எழுப்பி இருப்பதாக எழுதினார்.

சுதந்திர பிரகடனம் மற்றும் அரசியலமைப்பு மீதான ட்ரம்பின் அணுகுமுறையில் உள்ள நிஜமான பிரச்சினை, நிச்சயமாக, அவரது அறியாமை அல்ல. மாறாக, அவரின் கருத்துக்கள் ஒரு பாசிச ஆதரவாளரின் கருத்துக்கள் என்பதனால் ஏற்படுகிறது. அவரிடம் வேறொரு மாற்றீடு இருக்கிறது என்றால், அது அரசியலமைப்பைத் தூக்கிவீசி ஓர் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை தலைமைக்குக் கொண்டு வருவதாகும். அதை தான் அவர் துல்லியமாக ஜூன் மாத ஆரம்பத்தில் செய்ய முயன்றார். போதுமான தயாரிப்பு இல்லாததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது, ஆனால் அது ட்ரம்பின் இலக்கில் இன்னும் இருக்கிறது. மவுண்ட் ரூஸ்மோர் உரை மற்றும் ஜூலை 4 வாஷிங்டன் டிசி உரைகளில், அவரது அரசியல் எதிர்ப்பார்களை, குறிப்பாக "மார்க்சிஸ்டுகள்" மற்றும் "தீவிர இடதுசாரிகளை" நசுக்குவதற்கான அச்சுறுத்தல்கள் உள்ளடங்கி இருந்தன.

ஆனால் அவரின் மவுண்ட் ரூஸ்மோர் உரை மற்றும் ஜூலை 4 உரையைக் குறித்து மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ட்ரம்ப் அவரின் இன்றியமையா பாசிசவாத உரையை, அமெரிக்காவின் புரட்சிகர ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்காக என்று தொகுத்து வழங்கினார். அவரது எதிர்ப்பாளர்கள், அமெரிக்க புரட்சி மற்றும் அதன் தலைவர்களுடன் தொடர்புபட்ட அனைத்து ஜனநாயகக் கோட்பாடுகளையும் மரபுகளையும் கைத்துறந்து வருவதாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் அவர், டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் புரட்சிகர பாரம்பரியத்தின் பாதுகாவலராக இருக்கிறாராம்.

ட்ரம்ப் தன்னை அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள எவ்வாறு சாத்தியமாயிற்று?

ட்ரம்ப்பின் உரையை முழுமையாக பாராட்டி இருந்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் விவரிக்கிறது:

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை மீதான நியாயமான கோபத்தை, அமெரிக்காவின் தாராளவாத அமைப்புகளை தமக்கு சாதகமாக்கிக்கொள்வதற்கான கருவியாக பயன்படுத்தி, அவர்களின் சகிக்க முடியாத அரசியல் கண்ணோட்டங்களை ஒவ்வொருவரின் மீதும் திணித்து வரும் தீவிரக் கொள்கையாளர்களுக்கு எதிராக தாராளவாத உயரடுக்குகள் திரண்டெழுந்து நிற்பதற்கு தவறியதே அவருக்கு இந்த பாதையை திறந்து கொடுத்துள்ளது.

1776 இல் அமெரிக்காவின் ஸ்தாபிதத்தையே ஏளனம் செய்திருக்கும் "நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தை கொண்டு கருவரை இனவாதமாக இருக்கும் ஒரு அடிமை உடமை அமைப்புகளுக்குள் நாட்டை மூழ்கடிக்கும் ஒரு வரலாறைக் கொண்டு பிரதியீடு செய்வதை" சுட்டிக்காட்டிய ஜேர்னல், “யார் உண்மையில் பிளவையும் ஒரு கலாச்சார போரையும் தூண்டுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்புகிறது.

கோவிட்-19 தொற்றுநோயை ட்ரம்ப் நிர்வாகம் மிக மோசமாக கையாண்டு வருவதற்கு மத்தியிலும், அவர் இதே வழியில் சென்றால் ட்ரம்ப் மீண்டும் கூட தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அப்பத்திரிகை நிறைவு செய்கிறது:

சந்தேகத்திற்கு இடமின்றி இந்த கருத்துரு அவரின் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கிவிடுமென திரு. ட்ரம்ப் நம்புகிறார், மற்றும் அதற்காக தன்னை விட ஏதோவிதத்தில் வேறு ஒன்றைப்பற்றிய ஓர் உரையை வழங்கினார். எழுதப்பட்ட எழுத்தைக் கடைபிடித்தால், இரண்டாவது பதவிக்கால திட்டநிரலைச் சேர்த்துக் கொண்டால், அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் நவம்பரில் முடிவு என்னவாக இருந்தாலும், திரு. ட்ரம்பின் மவுண்ட் ரூஸ்மோர் கருத்துரு மறைந்து போகாதிருக்கும். முற்போக்கு உயரடுக்குகள் ஒன்றுக்கு மேம்பட்ட வெற்றியாளர்களை கொண்ட ஓர் எதிர்விளைவைப்பற்றி ஆர்வமாக உள்ளனர்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொலிஸ் வன்முறைக்கு எதிரான பல இனத்தவரின் போராட்டங்களை ஜனநாயகக் கட்சி பிற்போக்குத்தனமான இனவாத அரசியல் பாதையில் திசைதிருப்ப முயன்று வருகிறது என்ற உண்மையின் முழு ஆதாயத்தையும் ட்ரம்ப் சாதகமாக்கி வருகிறார்.

கூட்டாட்சி நினைவுச்சின்னங்களை நீக்குவதற்கான நியாயமான கோரிக்கைகள், வாஷிங்டன், ஜெஃபர்சன், லிங்கன் மற்றும் யூலிஸீஸ் எஸ். கிரான்ட் (ulysses s. grant) சிலைகள் மீதும் அத்துடன் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர போராடி உயிர்நீத்த அடிமை ஒழிப்புவாதிகளின் சிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பும் குடியரசு கட்சியினரும் அர்த்தமின்றி தங்களை அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ள சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்.

லிங்கனை ஒரு பரவலாக காணப்படும் இனவாதியாக சித்தரிக்கும் 1619 திட்டத்தில் வரலாற்றை இனவாதரீதியில் திருத்தி எழுதுவதில் டைம்ஸ் வகுத்த தர்க்கத்தைப் பின்தொடர்ந்து, பாஸ்டனில் லிங்கனின் நினைவுச்சின்னமும் அடிமைத்தன ஒழிப்பு சிலையும் பொதுப்பார்வையிலிருந்து நீக்கப்பட உள்ளது. திங்களன்று டைம்ஸ் இல் வெளியான ஒரு துணை தலையங்கம் வாஷிங்டன் டிசி இல் உள்ள ஜெஃபர்சன் நினைவகத்தை நீக்க அழைப்பு விடுக்கிறது. டைம்ஸைப் பொறுத்த வரையில், ஜெஃபர்சனும் அவரின் சமகாலத்தியவர்கள் பலரும் அடிமைகளின் உரிமையாளர்கள் என்பதால், அவர்கள் என்ன செய்தார்களோ அதில் எந்த முற்போக்கான உள்ளடக்கமும் இருக்கவில்லையாம்.

அரசியல் மூலோபாய நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், அமெரிக்காவின் புரட்சிகர பாரம்பரியங்களில் இருந்து "இடதை" தனித்து ஒதுக்குவது, "மிகப்பிரமாண்டளவிலான" (உரிய வார்த்தையில்) ஒரு பிழையாக இருக்கும், இது, அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாவலராக ட்ரம்ப் அவரின் பாசிசவாத செய்தியை நியாயப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பை வழங்குகிறது.

ஆனால், 18 ஆம் நூற்றாண்டிலேயே “எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்" என்ற தலைச்சிறந்த அறிவொளி வாசகத்தை எழுதியவரான ஜெஃபர்சன் போன்ற பிரமுகர்கள் மீதான தாக்குதலுக்கும் உண்மையான இடதுசாரி அல்லது சோசலிச அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு மாறாக, அது அடிப்படையில் உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கின் ஜனநாயக விரோத விருப்பங்களுக்கும் சமூக நலன்களுக்கும் வெளிப்பாட்டை வழங்குகிறது.

ரோனால்ட் ரீகன் ஜனாதிபதி பதவிக்கு வந்ததில் இருந்து தொடங்கி அதற்கு பின்னர் தொடர்ந்து வந்த அனைத்து நிர்வாகங்கள் வரையில் கடந்த நான்கு தசாப்தங்களில், அசாதாரணமான சமூக சமத்துவமின்மை வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிகழ்வுபோக்கில் ஆபிரிக்க அமெரிக்க மக்கள் விதிவிலக்காக விடப்படவில்லை. ஆபிரிக்க அமெரிக்கர்களின் செல்வ செழிப்பான 10 சதவீதத்தை மிகவும் வறிய 90 சதவீதத்திலிருந்து பிரிக்கும் ஒரு பரந்த சமூக இடைவெளி உள்ளது.

செல்வவள திரட்சியின் இந்த நீடித்த நிகழ்வுபோக்கு காலப்போக்கில் ஜனநாயக நனவை அழித்தது. இது வர்க்கம் மற்றும் வர்க்க போராட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வரலாற்று தத்துவங்களுக்கு அதிகரித்தளவில் விரோதமான, பதவியிலிருக்கும் பேராசிரியர்களின் மிகப் பெரிய உயர்மட்ட நடுத்தர வர்க்க கல்வித்துறை சமூகத்தில் பிரத்யேக வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. இந்த சமூக பிரிவு, இனம், பாலினம், பாலியல் மற்றும் இதர பிறவற்றில் அடையாளம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்குவிந்த தத்துவங்களில் மிக அதிக ஆர்வம் கொண்டுள்ளது, இந்த தத்துவங்களை இப்போது சமூகத்தின் உயர்மட்டத்தில் குவிந்துள்ள பாரிய செல்வவளத்தை இன்னும் அதிகளவில் அடைய கோருவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

இந்த அடுக்கின் சமூக நலன்கள், ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுப்படுத்தவும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தின் அபிவிருத்தியை முடக்குவதற்குமான ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளுடன் இணைந்துள்ளன.

இந்த நோக்கத்திற்காக ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அவர்களின் சொந்த வழியில் இனத்தை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். ட்ரம்ப் ஒரு பாசிசவாத அடித்தளத்தை உருவாக்க முயன்று வருகையில், ஜனநாயகக் கட்சியினரோ "வெள்ளையின தனிச்சலுகை" போன்ற பிற்போக்குத்தனமான கருத்துருக்களையும் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு முதலாளித்துவ அரசை விட "வெள்ளையின மக்களே" பொறுப்பு என்பதை ஊக்குவித்து இடைவிடாது இனவாத மோதலைத் தூண்டிவிடுகின்றனர்.

டைம்ஸ் உட்பட ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள வட்டாரம், ஒவ்வொரு பிரச்சினையையும் ஓர் இனவாத பிரச்சினையாக விளங்கப்படுத்துகிறது. வறுமை, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொலிஸ் வன்முறை மற்றும் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு ஏனைய விளைவும் சமரசப்படுத்தியலாத இனவாத பிளவின் விளைபொருட்களாக சித்தரிக்கப்படுகின்றன.

அமெரிக்க சமூகத்தை இவ்வாறு வடிவமைப்பது, முதலாளித்துவ அமைப்புமுறையின் மீது எந்தவொரு கேள்வியெழுப்புவதை தடுப்பதையும் அல்லது சமூகம் மீது பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் மேலாதிக்கத்திற்கும் சாதகமாகிறது. அது உண்மையான சமூக சமத்துவத்தை ஸ்தாபிக்கும் கேள்வியாக இல்லை, மாறாக —அதிகாரம் மற்றும் செல்வவளத்தை மக்கள்தொகையில் சிறுபான்மையாக உள்ள சிறிய பிரிவுகளுக்குள் மிகப்பெரியளவில் பகிர்ந்து கொள்வதற்காக— "பாரபட்சமாக" உள்ளது.

அடிப்படை சமூக வரையறையாக இனத்தை மேலுயர்த்துவதன் அடிப்படையில் ஒருபோதும் எந்தவொரு முற்போக்கான இயக்கமும் கட்டமைக்கப்படவில்லை. உண்மையான இடதுசாரி, அதாவது சோசலிச அரசியல் என்பது இனம், பாலினம் அல்லது தேசியம் என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். இந்த அடித்தளத்தில் மட்டுமே இனவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்க முடியும். இந்த போராட்டத்தை நடத்துவதில், தொழிலாள வர்க்கமே மொத்தத்தில் நிஜமான நம்பிக்கைக்குரிய பாசறையாக உள்ளது, அதாவது இரண்டு மாபெரும் முதலாளித்துவ அமெரிக்க ஜனநாயகப் புரட்சிகளான சுதந்திர போர் மற்றும் உள்நாட்டு போர் உட்பட கடந்த காலத்தின் புரட்சிகர போராட்டங்களில் அதுவே முற்போக்காக இருந்துள்ளது.

ஒரு புத்திஜீவித தன்மை கொண்ட தர்க்கவுரையால் மட்டுமே இதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்துவிடமுடியாது. வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியே தீர்க்கமான கேள்வியாகும். ஆளும் உயரடுக்கின் ஆட்கொலைக்குரிய வேலைக்குத் திரும்ப செய்யும் பிரச்சாரம் மற்றும் ட்ரம்ப் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் விடையிறுத்து வரும் அந்நாட்டைச் சூழ்திருக்கும் பாரியளவிலான சமூக நெருக்கடி என இவற்றால் தீவிரப்படுத்தப்பட்டு துல்லியமாக அதுபோன்றவொரு இயக்கம் தான் மேலெழுந்து வருகிறது.

தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். இது தான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள அதன் சகோதர கட்சிகளின் மத்திய பணியாகும். இந்த இயக்கத்தைக் கட்டமைக்க விரும்புபவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Niles Niemuth