ஒரோமி பாடகரும் சமூக ஆர்வலருமான ஹச்சலு ஹூண்டேசாவின் படுகொலை குறித்து எத்தியோப்பியாவில் நிகழும் கலவரங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எத்தியோப்பிய தலைநகரம் அடிஸ் அபாபாவிலும் மற்றும் ஏனைய நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களிலும் நடந்த கலவரங்களில் பொலிஸாரின் தாக்குதலில் அல்லது உள்நாட்டு இன மோதலில் குறைந்தது 239 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரங்களில் இதுவரை 215 பொதுமக்கள், ஒன்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஐந்து ஆயுதக்குழு உறுப்பினர்கள் இறந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை பொலிசார் நேற்று தகர்த்தனர். மேலும், 3,500 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

பலநாட்களாக நடந்த இந்த கலவரங்கள், பிரபல ஒரோமிய பாடகர், சமூக ஆர்வலர் மற்றும் முன்னாள் அரசியல் கைதியான ஹச்சலு ஹூண்டேசாவை அநாமதேய தாக்குதல்காரர்கள் ஜூன் 29 அன்று படுகொலை செய்ததையடுத்து தூண்டப்பட்டன. சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்து, ஏப்ரல் 2018 இல் பிரதமர் அபி அஹமத் (Abiy Ahmed) ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த மிக மோசமான அத்தியாயங்களில் ஒன்றான இந்த நிகழ்வு, 2004 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு சராசரியாக 10.5 சதவிகித அளவிற்கு ஆபிரிக்காவின் மிகவுயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்ததை எட்டியது குறித்து பாராட்டப்பட்ட ஒரு நாட்டின் மிகவும் ஸ்திரமற்ற நிலைமையையே எடுத்துக்காட்டுகிறது.

ஹச்சலு ஹூண்டேசா

அடிஸ் அபாபாவில், வாகனங்களும் பெட்ரோல் நிலையங்களும் எரிக்கப்பட்டன, கடைகளும் வணிகங்களும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, மேலும் வீடுகளும் வங்கிகளும் கொள்ளையடிக்கப்பட்டன. பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். எத்தியோப்பியாவின் ஒன்பது இன அடிப்படையிலான பிராந்தியங்களில் மிகப்பெரிய பிராந்தியமான ஒரோமியா முழுவதிலும் இதேபோன்ற மோதல்கள் ஏற்பட்டன, ஒரோமா அல்லாத குழுக்களிடமிருந்து பெறப்பட்ட இப்பிராந்தியம் முந்தைய அரசாங்கங்களின் கீழ் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

நாட்டின் கிழக்கு பகுதியான ஹராரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹெய்ல் செலாசியின் (Haile Selassie) தந்தையான அரச இளவரசரான ராஸ் மாகொன்னென் வோல்ட் மைக்கேலின் (Ras Makonnen Wolde Mikael) உருவச்சிலையை தகர்த்தெறிந்தனர், இவர் மார்ச் 1974 இல் ஒரு இராணுவ சதித்திட்டத்தின் மூலம் பதவியிலிருந்து தூக்கியெறியப்படும் வரை எத்தியோப்பியாவை ஆட்சி செய்த மன்னரும் அமெரிக்க கூட்டாளியுமாவார்.

கலவரங்களைத் தணிப்பதற்காக துருப்புக்களை நிலைநிறுத்தியும், இணைய சேவையை தடைசெய்தும், மேலும் ஏறத்தாழ 2,000 பேரை கைதுசெய்தும் அபி பதிலிறுத்தார். கைது செய்யப்பட்டவர்களில், வன்முறையைத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஒரு முன்னணி எதிர்க்கட்சி அரசியல்வாதியும், ஒரோமியரும் மற்றும் முன்னாள் கூட்டாளியாக இருந்து பின்னர் அபியை எதிர்த்தவருமான ஜவார் முகமத் (Jawar Mohammed) ஆகியோர் அடங்குவர்.

அபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒரோமியரான ஹூண்டேசா வழி நடத்தினார். இந்த படுகொலையை செய்தவர்களின் நோக்கம் ஹச்சலுவைக் கொல்வது மட்டுமல்ல, “மாறாக அவர் மூலமாக எத்தியோப்பியாவை கொல்வதாகும்” என்று விரைந்து தனது இரங்கலைத் தெரிவித்தார். ஆனால், சிலர் அவரது அனுதாபத்தை உண்மையானது என்று ஏற்றுக்கொண்டனர்.

ஹச்சலுவின் படுகொலை, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள எத்தியோப்பிய புலம்பெயர்வு சமூகங்களிடையே ஐக்கியப்பட்ட எதிர்ப்புக்களைத் தூண்டியது, இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஒரோமா கொடியை ஏந்திய 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் இலண்டனில் விம்பிள்டன் பூங்காவில் உள்ள ஹெய்லி செலாஸியின் சிலையை அடித்து நொருக்கினர்.

ஒரோமியா, மோசமடைந்து வரும் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள், மற்றும் தங்களது நீண்டகால ஒரோமா நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்கள் கைப்பற்றப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த வேளாண் வணிகத்திற்காக பெரும்பாலும் வளைகுடா மற்றும் சீனாவைச் சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது குறித்த கோபம் ஆகியவற்றால் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல ஆர்ப்பாட்ட அலைகளை எதிர்கொண்டது. நாடு வறட்சி, பஞ்சம் மற்றும் வெட்டுக்கிளி திரள்களின் தொந்திரவு என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எதிர்கொண்ட ஒருநேரத்தில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்பட்ட நிலம், தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளுக்காக பூக்கள், காப்பி, பாமாயில் மற்றும் ஏனைய பணப்பயிர்களை உற்பத்தி செய்கிறது.

இந்த நில அபகரிப்பு மீதான மக்கள் கோபத்தை சுரண்டியும், தனது பிரச்சாரங்களுக்கு ஹச்சலுவின் அரசியல் பாடல்களை பிரபலமாக பயன்படுத்தியும் ஒரோமா எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக அபி முக்கியத்துவம் பெற்றார்.

எத்தியோப்பிய அரசாங்கங்களுடன் நீண்டகாலமாக தொடர்புடைய சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதியளித்து ஆட்சிக்கு வந்தவுடன், பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை அவர் விடுவித்ததுடன், ஹைலேமாரியம் தேசலெங்கின் (Hailemariam Desalegn) முந்தைய அரசாங்கம் திணித்திருந்த இணையத் தடையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

மேலும், பல அரசியல் கட்சிகள் மீதான தடையை நீக்கினார், அவற்றில் சில “பயங்கரவாத” குழுக்களாக நியமிக்கப்பட்டிருந்தன, இந்நிலையில் இது தடைசெய்யப்பட்டிருந்த குழுக்களின் தலைவர்கள் எத்தியோப்பியாவிற்கு திரும்புவதற்கு வழிவகுத்தது. மேலும், அண்டை நாடான எரித்திரியாவுடனான 20 ஆண்டுகால போரை அவர் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், 100 க்கும் மேற்பட்ட தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார், இவர்களில் பெரும்பாலானோர் முந்தைய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திய டைக்ரே (Tigray) இனக்குழுவைச் சேர்ந்தவர்களாவர்.

இது, இராணுவம் அரசியல் அதிகாரத்தை இழந்ததை எதிர்த்த அதிகாரிகளிடமிருந்தும், மற்றும் டைக்ரே மக்கள் மீதான தாக்குதலாக இதை கருதியவர்களிடமிருந்தும் இராணுவத்திற்குள் கடுமையான எதிர்ப்பைத் தூண்டியது, மேலும் கடந்த ஆண்டில் நிகழ்ந்த காலத்திற்கு முந்தைய சதித்திட்டத்திற்கும் வழிவகுத்தது. அபி பிரதமரானதிலிருந்து நிகழ்ந்த இனவெறி வன்முறையின் காரணமாக, முந்தைய ஆட்சியின் குற்றங்களுக்கு கூட்டாக பொறுப்பாளிகளாகக் கருதப்பட்டு, நூறாயிரக்கணக்கான டைக்ரே மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு, உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இன பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக அபி உறுதியளித்திருந்தாலும், இன்னும் இரத்தக்களரியான இன வன்முறை வளர்ந்து வருவதற்கான ஆபத்துடன் இன வன்முறை அங்கு அதிகரித்துள்ளது. டைக்ரே மக்கள் மீதான தாக்குதலுக்கு கூடுதலாக, மேற்கு குஜி பகுதியில் அண்ணளவாக ஒரு மில்லியன் கெடியோ (Gedeos) இனத்தவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விவகாரங்களிலுமே, தாக்குதல் நடத்தியவர்கள் ஒரோமா ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்களாவர்.

எத்தியோப்பியாவின் 104 மில்லியன் மக்களில் 80 சதவிகிதத்தினர் தங்களது வாழ்வாதாரத்திற்காக நிலத்தை நம்பியுள்ள மற்றும் மக்கள்தொகையில் குறைந்தது 25 சதவிகிதத்தினர் நாளொன்றுக்கு இரண்டு டாலருக்கும் குறைவான தொகையை வருமானமாக ஈட்டும் நிலைமைகளின் கீழ் நில விற்பனையும் அங்கு தொடர்கிறது.

அபியின் எத்தியோப்பியாவின் தொழிலாளர் சட்டங்களை தாராளமயமாக்குதலும் மற்றும் எத்தியோப்பியன் எயர்லைன்ஸ் –ஆபிரிக்காவின் மிகப்பெரிய மற்றும் மிகுந்த இலாபகரமான நிறுவனம்– தொலைத் தொடர்புகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து, அத்துடன் உற்பத்தி, உணவகங்கள் மற்றும் சில விவசாயத் துறைகளும் உட்பட அனைத்து துறைகளையும் விற்பதற்கான அவரது திட்டங்களும் வாஷிங்டனின் ஆதரவைப் பெற்றுள்ளன. வாஷிங்டன் அதன் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகம் (International Development Finance Corporation) மூலம் எத்தியோப்பியாவில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் நாட்டில் சீன செல்வாக்கை எதிர்ப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2.9 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கும் (International Monetary Fund Programme) பச்சைக்கொடி காட்டுகிறது.

என்றாலும், நீதிக்கு புறம்பான மரணதண்டனைகள் மற்றும் சித்திரவதை உட்பட, அம்ஹாரா மற்றும் ஒரோமியா பிராந்தியங்களில் ஆயுதக் குழுக்கள் மற்றும் இனங்களுக்கு இடையிலான வன்முறைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மிருகத்தனமாக அடக்கி வரும் நிலையில், எத்தியோப்பியாவிற்குள்ளாக, அபி அதிகாரத்திற்கு வந்தது குறித்த பரவசம் நீண்டகாலத்திற்கு முன்பாகவே ஆவியாகிவிட்டது.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, அரசியல் கைதிகளை விடுவிப்பதும், தேர்தலுக்கான திட்டங்களும், கோவிட்-19 நோய்தொற்றின் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதானது, ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அரசியல்வாதிகள் இன மற்றும் மத மோதல்களைத் தூண்டுவதுடனும், பல பிராந்திய மாநிலங்களில் இனங்களுக்கு இடையிலான வன்முறை மற்றும் ஆயுதத் தாக்குதல்களைத் தூண்டுவதுடனும் ஒத்துப்போகிறது. இராணுவம், பொலிஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாதுகாப்பு கட்டளை தளங்களை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசாங்கம் இதற்கு பதிலிறுத்துள்ளது.

ஒரோமியாவில் தொடர்ச்சியாக நடந்ததாக கூறப்படும் துஷ்பிரயோகங்களை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது, இங்கு, 2018 இல் அமைதியான திட்ட நிரலை தொடரும் வகையில் எத்தியோப்பியாவிற்கு தான் திரும்புவதற்கு முன்னர் இராணுவப் போராட்டத்தை பின்பற்றிய எதிர்க்கட்சியான ஒரோமா விடுதலை முன்னணியில் (Oromo Liberation Front-OLF) இருந்து பிரிந்த ஆயுதப் பிரிவான ஒரோமா விடுதலைப் படைக்கு (Oromo Liberation Army-OLA) எதிரான பிரச்சாரத்தை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அறிக்கையின்படி, 2019 ஜனவரி முதல் நிகழ்த்தப்பட்ட பரந்த தடுப்புக்காவல் சுற்றுக்களில், OLA க்கு ஆதரவளிப்பதாக அல்லது சேவையாற்றுவதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது 10,000 பேரை பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

சர்வதேச அளவில் கொரொனா வைரஸ் பரவி வரும் நிலையிலும், மேலும் ஒட்டுமொத்த நாட்டிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வெறும் 22 சுவாச கருவிகளையே கொண்டிருக்கும் நிலையிலும், அபியின் அரசாங்கம் தன்னால் முழு அடைப்பை சமாளிக்க முடியாது என்பதால், பொது செய்தியை நம்பியது. இது சீனாவிலிருந்து வரும் நேரடி விமானங்களை உடனடியாக நிறுத்தவில்லை, மாறாக அடிஸின் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிப்பை செய்ய கட்டாயப்படுத்தியது. தங்களது நாட்டிற்கு முதல் கோவிட்-19 நோயாளி ஜப்பானில் இருந்து வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர், ஏனையோர் முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து பின்னர் வந்தனர்.

மூத்த அமைச்சரும் அபியின் சிறப்பு ஆலோசகருமான ஆர்கெப் ஓக்பே (Arkebe Oqubay), “இந்த நோய்தொற்று சுவாச கருவிகள் தேவைப்படும் வகையிலான அல்லது தீவிர சிகச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய அளவிலான நோயல்ல,” என்றும் “இதற்கு 90 சதவிகித தீர்வு கை கழுவுதலும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுமாகும். இந்த நோயை தடுப்பதில் நாம் கவனம் செலுத்துவது மட்டுமே இந்த நோயை நாம் வெல்வதற்கான ஒரே வழியாகும்” என்றும் தெரிவித்தார்.

அபி பின்னர் அவசரகால நிலையை அறிவித்ததுடன், நாட்டில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான தனது உறுதியளிப்பின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த தேர்தல்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். தேர்தல்களுக்கான புதிய திகதிகள் நிர்ணயிக்கப்படாததற்கு கொரோனா வைரஸ் நோய்தொற்றை காரணமாக குறிப்பிட்டார். குறிப்பாக, பல இன அடிப்படையிலான கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அபி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏறத்தாழ 8,500 கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாக உத்தியோகபூர்வமாக எத்தியோப்பியா பதிவு செய்துள்ளதுடன், ஆதாரங்களின் அடிப்படையில், ஒருசில இறப்புக்களே அங்கு நிகழ்ந்துள்ளது என்ற நிலையில், நோய்தொற்றின் மோசமான நிலையை இந்நாடு தவிர்த்துள்ளது, என்றாலும் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் மிகவும் மோசமானவையே. இந்நாட்டின் தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறைகள், அவற்றின் ஏற்றுமதிக்கு பெரிதும் சார்ந்திருக்கும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியின் காரணமாக அழிந்து போயின. மேலும், சுற்றுலா தொடர்பான வருமானங்களும் மற்றும் மத்திய கிழக்கில் பணிபுரியும் எத்தியோப்பியர்களின் பணம் செலுத்துதலும் குறைந்துள்ளது.

4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான மாபெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை (Grand Ethiopian Renaissance Dam-GERD) தொடர்பாக எகிப்து மற்றும் சூடான் உடனான மோதலில் கவனத்தை செலுத்தி பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்ப அபி முயன்றார். GERD என்பது நீல நைல் நதி மீது கட்டப்பட்ட ஆபிரிக்காவின் மிகப்பெரிய அணையாகும். நைல் நதியின் 80 சதவிகித நீரை நீல நைல் வழங்குகிறது, மேலும் அதனை இரண்டு கீழ்நிலை நாடுகள் சார்ந்திருக்கின்றன.

எத்தியோப்பியா, எகிப்து மற்றும் சூடான் நாடுகளுக்கான தங்களது நீர் விநியோகம் போதுமானதாக உள்ளதா என்பது குறித்த அச்சங்களைத் தீர்த்து வைப்பது தொடர்பாக ஒப்பந்தமிடுவதற்கும் சலுகைகளை வழங்குவதற்கும் இதுவரை நிராகரித்து வந்துள்ளது. அடுத்த மாதம், எத்தியோப்பியா மற்றும் பரந்தளவிலான பிராந்தியத்திற்கு மின்சார விநியோகம் செய்யும் வகையில் 6,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முன்னோடியாக, எத்தியோப்பியா பரந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை சேமித்து வைக்கத் தொடங்கவுள்ளது.

Loading