முன்னோக்கு

தொற்றுநோய்க்கு மத்தியிலும் சோசலிச சமத்துவக் கட்சி கையெழுத்துக்களை திரட்ட வேண்டுமென மிச்சிகன் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த கொரோனா தொற்றுநோயின் போதும், வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்காக எழுத்துப்பூர்வமாக 12,000 கையெழுத்துக்கள் திரட்ட வேண்டுமென்ற மிச்சிகன் மாநிலத்தின் நிபந்தனைக்கு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) விடுத்த சவாலை மிச்சிகனின் கிழக்கு மாவட்ட பெடரல் நீதிபதி புதன்கிழமை நிராகரித்தார்.

குடியரசுக் கட்சியை சேர்ந்த நீதிபதி Sean F. Cox ஆளுநர் கிரெட்சென் வெட்மெர் (Gretchen Whitmer) இன் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் பக்கம் தரப்பெடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுநோய் நமது அரசியலமைப்பு உரிமைகள் மீதோ அல்லது நமது பிரச்சாரத்திற்கு வாக்களிக்க விரும்பும் மிச்சிகன்வாசிகளின் உரிமைகள் மீதோ கடுமையான "சுமை" யை ஏற்றவில்லை என்று தீர்ப்பளித்தார்.

இந்த உயிராபத்தான கொரொனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகின்ற நிலையில், கொக்ஸ் அவரின் தீர்ப்பை வழங்கினார். நேற்று உத்தியோகபூர்வ உலகளாவிய மரண எண்ணிக்கை 550,000 ஐ கடந்தது, நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 12.3 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்தது.

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர்

இப்போது கட்டுப்பாடின்றி பரவி வரும் இந்த வைரஸின் குவிமையமாக அமெரிக்கா உள்ளது. கோவிட்-19 ஏற்கனவே அமெரிக்காவில் 135,000 க்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கி உள்ளது. நேற்று ஒரு புதிய அதியுயர்ந்த அளவாக 61,000 க்கும் அதிகமானவர்களுக்கு நோய்தொற்று கண்டறியப்பட்டது, நாளாந்த மரண எண்ணிக்கை 1,000 ஐ எட்டி வருகிறது.

டெக்சாஸ், புளோரிடா மற்றும் அரிசோனாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, செவிலியர்கள் மீண்டும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளின் முக்கிய பற்றாக்குறையை முகங்கொடுத்து வருகின்றனர். மிச்சிகன் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், மே முடிவில் இருந்து இதுவரையில் பார்த்திராத மட்டங்களுக்கு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள்.

நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பானது, ட்ரம்ப் நிர்வாகத்தினதும் மற்றும் விட்மெர் நிர்வாகம் உட்பட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தினதும் குற்றகரமான கொள்கைகளது நேரடியான அனுமானிக்கத்தக்க விளைவாகும். இந்த தொற்றுநோய் அதன் பயங்கர எண்ணிக்கையை எடுத்துக்காட்டி வருகின்ற போதும் கூட, வெள்ளை மாளிகை ஒட்டுமொத்தமாக வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தின் பாகமாக இந்த இலையுதிர் காலத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க கோரி வருகிறது, இது நூறாயிரக் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிர்களை அச்சுறுத்துகின்றன.

இந்த சூழ்நிலையில்தான், சோசலிச சமத்துவக் கட்சி கையொப்பங்களை சேகரித்திருக்க வேண்டும், அது இன்னும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற மிச்சிகன் மாநிலத்தின் வாதத்தை தான் முழுமையாக ஆதரிப்பதாக நீதிபதி கொக்ஸ் அறிவித்தார்.

கொக்ஸின் முடிவு நீதிபரிபாலனத்தின் அடிப்படையிலோ அல்லது பகுத்தறிவார்ந்த பகுப்பாய்வின் அடிப்படையிலோ அமைந்த ஓர் ஆழ்ந்த சட்டப்பூர்வ தீர்ப்பாக இருக்கவில்லை. அது வாக்குச்சீட்டில் இருந்து சோசலிஸ்டுகளைத் தடுப்பதை நோக்கமாக கொண்ட ஓர் அரசியல் முடிவாக இருப்பதுடன், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு முடிவை நியாயப்படுத்த இந்த சட்ட பகுத்தறிதல் சேவையாற்றுகிறது.

கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கு கொரொனா வைரஸ் தொற்றுநோயோ அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமென்ற ஆளுநரின் உத்தரவுகளோ தடையாக இல்லை, மாறாக வேட்பாளருக்குச் சுயமான "அக்கறை" இல்லை என்று கொக்ஸ் வலியுறுத்தினார்.

உண்மையில், சோசலிச சமத்துவக் கட்சியின் 'விடாமுயற்சி' தான் கையொப்பங்களை சேகரிக்க முயற்சிக்கக் கூடாது என்று கோரியது. நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தால், ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற கொள்கைகளின் ஆபத்தான விளைவுகள் பற்றிய நமது சொந்த அரசியல் கோட்பாடுகளையும் எச்சரிக்கைகளையும் நாமே மீறியிருப்போம் — இப்போது இந்த எச்சரிக்கைகள் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அம்மாநில வரலாற்றில் மிக மோசமான மருத்துவ நெருக்கடிக்கு மத்தியில், ஆயிரக் கணக்கான வாக்காளர்களுடன் பேனாக்கள், எழுத்துப்பலகைகள் மற்றும் காகிதங்களைப் பரிமாறி அவர்களை நேருக்கு நேராக சந்திப்பதை எங்கள் பிரச்சாரக் குழு விரும்பவில்லை என்பதற்காக, கொக்ஸ், “அது அவர்களின் சொந்த விருப்பம்,” என்று தீர்மானித்தார். ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞர்கள் வாதிட்டதைப் போல, நாங்கள் கொரோனா வைரஸை முன்கணித்து, 2019 இலேயே அல்லது ஜனவரியிலேயே கையெழுத்துக்களைத் திரட்டாமல் போனது எங்களின் தவறுதான் என கொக்ஸ் குறிப்பிடுகிறார்.

அம்மாநிலம் அமல்படுத்திய சமூக இடைவெளி முறைகள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தின் போதே எங்களின் பிரச்சாரக் குழு கையெழுத்துக்களைச் சேகரித்திருக்க வேண்டும், அவ்வாறு செய்கையில் அது வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான உத்தரவுகளை மீறி, எங்களின் சுய ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டாலும் கூட அதை செய்திருக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியின் வாதத்தை கொக்ஸ் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் எந்த கையெழுத்துக்களும் திரட்டாமலேயே வாக்குச்சீட்டில் தன்னியக்கமாக இடம் பெறுவார்கள். ஜோ பைடென் அவரின் தாழ்வாரத்திலிருந்து பாதுகாப்பாக பிரச்சாரம் செய்ய முடியும், ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு காணொளி கூட்டத்தின் மூலமாக அதன் வேட்பாளரை நிறுத்த முடியும், ஆனால் சோசலிஸ்டுகள் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்காக பெருமளவில் அவர்களின் உயிரையும் பொதுமக்களின் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும், இது தான் அமெரிக்க ஜனநாயகம்.

முதலாளித்துவ அமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வாக்காளர்களால் வாக்களிக்க முடியாது என்பதை உறுதி செய்வதே நீதிபதியின் குறிக்கோளாக இருந்தது. போர் குற்றவாளியான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் ஆயுள்கால பதவிக்கு நியமிக்க அந்த தேர்ந்தெடுக்கப்படாத முன்னாள்-பெருநிறுவன அட்டார்னி, மிச்சிகனின் 7.6 மில்லியன் பதிவு செய்த வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்கக்கூடாதென்பதை அவரே முடிவு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி மற்றும் அவர் சேர்ந்துள்ள அந்த குடியரசுக் கட்சி, இவ்விரு கட்சிகளினது உத்தியோகப்பூர்வ வேட்பாளர்களுக்கு இடையே ஒருவரை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அவர் தீர்ப்பின் அர்த்தமாக உள்ளது.

உலகிலேயே எந்தவொரு பிரதான முதலாளித்துவ நாட்டின் தேர்தல் விதிமுறைகளையும் விட அமெரிக்கா மிகவும் கடுமையான தேர்தல் விதிமுறைகளைக் கொண்டதாகும். அது 328 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், அதன் அரசியல் அமைப்புமுறை 150 ஆண்டுகளாக ஒரே இரண்டு கட்சிகளால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. தகுந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதை உறுதிப்படுத்துவதற்காக, ஆளும் வர்க்கம் பாரியளவில் பணத்தைச் செலவிட்டு ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளையும் சீர்குலைக்கிறது.

வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்காக, சுயேட்சை வேட்பாளர்களும் மூன்றாவது கட்சிகளும் மாநிலங்களைப் பொறுத்து ஆயிரக் கணக்கான, பத்தாயிரக் கணக்கான அல்லது நூறாயிரக் கணக்கான கையெழுத்துக்களைச் சேகரிக்க வேண்டும். இந்த நிபந்தனைகள், இடதுசாரி மற்றும் குறிப்பாக முதலாளித்துவக் கட்சிகளுக்கு சோசலிச எதிர்ப்பை தவிர்ப்பதற்கான ஒரு பிரதான இயங்குமுறையாக அமைக்கப்பட்டுள்ளன.

இப்போது தொற்றுநோய் நிலவுகின்ற நிலையில், இது வேட்புமனு தாக்கல் செய்பவரின் உயிரையும் மற்றும் எண்ணற்ற ஆயிரக் கணக்கான மக்களின் உயிரையும் ஆபத்திற்குட்படுத்த விரும்பாவிட்டால், வேட்புமனு தாக்கல் செய்வதையே சாத்தியமில்லாமல் செய்கிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் குறிவைக்கப்பட்ட ஒரு நாட்டில் இதுபோன்றவொரு முடிவை எடுத்திருந்தால், "ஆட்சி மாற்றத்திற்கான" நியாயப்பாடாக அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இந்த முடிவை சாதகமாக்கிக் கொள்ளும்.

உண்மையில், ஜனவரி 9, 2020 இல், “வெனிசுவேலாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள்" என்று தலைப்பிட்ட அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிடுகையில், “தேர்தல்கள் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் திறந்திருக்க வேண்டும்,” என்று கோரியது. “ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சுதந்திரமாக பங்கெடுப்பதற்காக தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க" வேண்டுமென வெனிசுவேலா அரசாங்கத்திற்கு அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.

பெப்ரவரி 20, 2020 இல், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஈரானிய மக்கள் தகுதியானவர்கள்" என்று தலைப்பிட்ட ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிவிக்கை அறிவித்தது, “ஈரானில் பெப்ரவரி 21 இல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக, கார்டியன் கவுன்சில் 7,000 க்கும் அதிகமான வேட்பாளர்களை போட்டியிடுவதில் இருந்தே கூட தடுத்தது. அவர்களில் பலரும் தலையாய தலைவரின் கொள்கைகள் மீது கேள்வி எழுப்பிய ஈரானியர்களாவர். இந்த நடைமுறையே வெட்கக்கேடாக உள்ளது. அது சுதந்திரமானதோ அல்லது நியாயமானதோ இல்லை.”

மிச்சிகன் தீர்ப்பானது, அமெரிக்க தேர்தல்கள் “சுதந்திரமான அல்லது நியாயமானவை” அல்ல என்பதை கூடுதலாக உறுதிப்படுத்துகிறது.

கொக்ஸின் முடிவு, பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக கோபம் மீது ஆளும் வர்க்கத்திற்கு நிலவும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. அங்கே 40 மில்லியன் வேலைவாய்ப்பற்றவர்கள் உள்ளனர், பத்து மில்லியன் கணக்கானவர்கள் வறுமை, பட்டினி, கடனுக்கான சட்ட நடவடிக்கைகள், ஜப்தி மற்றும் நிரந்தர வேலை இழப்புகளை முகங்கொடுத்து வருகின்றனர். அவ்விரு கட்சிகளும் CARES சட்டம் மூலமாக ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களை பெருநிறுவனங்களுக்கு வழங்கின. இதற்கிடையே, வேலைவாய்ப்பின்மை உதவிகள் மற்றும் கடனுக்கான சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவை இம்மாத இறுதியில் முடிவடைகின்றன.

தொழிலாளர்களும் இளைஞர்களும் திருப்பி போராட தொடங்கி உள்ளனர். பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனத்தவர்கள் மற்றும் பல வம்சாவழியைச் சேர்ந்த பெருந்திரளானவர்களின் போராட்டங்களின் வெடிப்பு ஆழ்ந்த மக்கள் கோபத்தின் ஓர் ஆரம்ப வெளிப்பாடாக இருந்தன. SEP மற்றும் WSWS இன் அழைப்புகளால் ஈர்க்கப்பட்டு, மிச்சிகனில் வாகனத்துறை தொழிலாளர்கள் கடந்த மாதம் இறுதியில் தொடர்ச்சியாக பல வேலை வெளிநடப்புகளை நடத்தியதுடன், எதிர்ப்பை ஒழுங்கமைக்க சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்களையும் உருவாக்கினர்.

இது தொடக்கம் மட்டுமே. ஆளும் வர்க்கத்தின் கொள்கை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பாரிய சமூக வெடிப்புகளுக்கு இட்டுச் செல்லும்.

நீதிமன்றங்கள் மூலமாக நமது உரிமைகளையும் மற்றும் வாக்காளர்களின் உரிமைகளையும் தீவிரமாக பாதுகாக்க நமது பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படும். ஆனால் நிஜமான மாற்றம் இப்போதிருக்கும் கொடுமையான மற்றும் ஜனநாயக-விரோத அரசியல் அமைப்புமுறை மூலமாக நடக்க முடியாது என்ற உண்மையையே புதன்கிழமை தீர்ப்பு கூடுதலாக அம்பலப்படுத்துகிறது. அது சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக நடக்க வேண்டும்; நடக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் எங்களின் தேர்தல் பிரச்சாரமும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையைக் கட்டமைப்பதை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ளன. சோசலிசத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரும் SEP இல் இணையுமாறும் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading