இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் 56 வயதில் காலமானார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், மே 26 அன்று 56 வயதில் மாரடைப்பால் காலமானார். தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களை அடித்தளமாகக் கொண்ட தொழிற்சங்கங்களில் இ.தொ.கா. மிகப்பெரிய தொழிற்சங்கமாகும். சுமார் 150,000 அளவிலான தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினர் ஆவர்.

ஆறுமுகம் தொண்டமான்

அவரது மரணம் தொடர்பாக “அதிர்ச்சியையும் கவலையையும்” தெரிவித்தவர்களில், இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள் மற்றும் சிங்கள இனவாத குழுக்களும் அடங்குகின்றனர்.

மே 31 அன்று, ஆளும் வர்க்கத்திற்கு தொண்டமான் செய்த சேவைக்கு நன்றிக்கடனாக, அரசாங்கம் அவருக்கு "அரச மரியாதைகளுடன் மரணச்சடங்கை" நடத்தியது. இறுதிக் கிரியைகள் மத்திய பெருந்தோட்ட பிரதேசத்தில் ஹட்டனுக்கு அருகிலுள்ள நோர்வூட் மைதானத்தில் நடைபெற்றன.

எனினும், இலங்கையில் தொழிலாளர்கள் மத்தியில், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகவே தொண்டமான் இறந்தார்.

இலங்கை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, இறுதிச் சடங்கில் உரையாற்றிய போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்த போது, "அவர் [தொண்டமான்] எங்களில் ஒருவர்" எனக் கூறியதாக தெரிவித்தார். இவ்வாறுதான் இந்திய மற்றும் இலங்கை உயரடுக்கிற்கு தொண்டமான் காட்டிய விசுவாசத்தை மோடி நினைவுபடுத்தினார்.

இலங்கையின் பெருவணிக மற்றும் தொழிலதிபர்களின் உயர்மட்ட அமைப்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளும், தொண்டமான் “தோட்டத் தொழில்துறைக்கும், அதன் பிரஜைகளுக்கும் மற்றும் தொழில்துறை உறவுகளை பேனுவதற்கும் செய்து மகத்தான பங்களிப்புக்கு நேர்மையான பாராட்டுக்களை” தெரிவித்தன.

இலாபத்தினை அதிகரிப்பதற்கான தமது திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்பட்டு உதவிய ஒரு தொழிற்சங்கத்தின் நம்பகமான தலைவரை இழந்துவிட்டோம் என்பதே அவர்களின் கவலை ஆகும்.

1994 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் நுழைந்த தொண்டமான், இ.தொ.கா. முன்னாள் தலைவரும் அவரது தாத்தாவுமான சௌமியமூர்த்தி தொண்டமன் இறந்த பின்னர், 1999 அக்டோபரில் தொழிற்சங்கத்துக்கு தலைவரானார். எஸ். தொண்டமான், ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கங்களின் கீழ் சுமார் 20 ஆண்டுகள் அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார்.

2002 இல், ஐ.தே.க. அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், 2015-2019 காலப்பகுதியில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தைத் தவிர எல்லா ஆட்சியிலும் இறக்கும் வரை அமைச்சர் பதவியை வகித்தார். கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சியைப் பிடித்த ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் இணைந்து, கொவிட்-19 தொற்றுநோய் பரவல் மத்தியில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை நோக்கிய ராஜபக்ஷவின் நகர்வுகளுக்கு அவர் உதவினார்.

தொண்டமானின் மரணத்திற்குப் பின்னர், அவரது மகன் ஜீவன் தொண்டமானை இ.தொ.கா.வின் வாரிசாக அது அலங்கரிக்கிறது. மேலும் அவர் நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இ.தொ.கா. தலைமை, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமை அல்ல, அது மேலிருந்து நியமிக்கப்படும் ஒரு குடும்ப விவகாரமாக மாறியுள்ளது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, தனது இரங்கல் உரையில், "ஆறுமுகம் தொண்டமானும் அவரது தாத்தா எஸ். தொண்டமானும் முன்னெடுத்த போராட்டங்களால், தோட்டத் தொழிலாளர்கள் உயர் வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுள்ளனர்," எனக் கூறினார்.

இந்த வாய்ச்சவடால் முற்றிலும் பொய்யானதாகும். சில ஒப்பனை மாற்றங்களைத் தவிர, தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் 700 ரூபாய் (4 அமெரிக்க டாலர்) என்னும் வறிய ஊதியத்திலேயே வாழத் தள்ளப்பட்டுள்ளனர். சரியான அடிப்படை வசதிகள் இல்லாத, பழைய குதிரை தொழுவங்களை திருத்தி அமைக்கப்பட்ட, நெரிசலான லயின் (வரிசை) வீடுகளிலேயே தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இங்கு சரியான கல்வி, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக பாரபட்சங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 1800களின் நடுப்பகுதியில் இருந்து, இலங்கையில் தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களைத் தொடங்கிய பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் மரபு அவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நிலைமைகளை மாற்றியமைப்பதற்காக மீண்டும் மீண்டும் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், அவர்களின் நிலைமை மாறாது பேணப்படுவததற்கு முதலாளித்துவ அரசாங்கங்களும் இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்களும் உடந்தையாக இருந்து வருகின்றன.

ஒரு முதலாளித்துவக் கட்சியாகவும் தொழிற்சங்கமாகவும் செயல்படும் இ.தொ.கா.வின் வகிபாகம், அரசாங்கங்களதும் கம்பனிகளதும் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலன்களை அடக்கி வைப்பதாகும். அது அதன் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

இ.தொ.கா., இலங்கையில் உள்ள செல்வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்களால், இந்திய தேசிய காங்கிரஸின் தலையீட்டுடன் 1939 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸின் வழிவந்ததாகும். இது 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி, எஸ். தொண்டமானை தலைவராக நியமித்தது. இலங்கை இந்திய காங்கிரஸ், பெருந்தோட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தொழிலாளர்கள் அங்கத்தவர்களாக இருந்த லங்கா சம சமாஜ கட்சியினதும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தினதும் ஆதிக்கத்தை பலவீனப்படுத்த செயற்றப்பட்டது.

1948இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரம் கிடைத்த பின்னர், அப்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை இல்லாதொழிப்பதாக இருந்தது. இலங்கை இந்திய காங்கிரஸ் இந்தச் சட்டத்தை எதிர்த்த போதிலும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்துவதற்காக அந்தச் சட்டத்துக்குள் பொதிந்திருந்த பிற்போக்கு குறிக்கோளை அன்று அம்பலப்படுத்தியது நான்காம் அகிலத்தின் அப்போதைய இலங்கைப் பிரிவாக இருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியே ஆகும்.

இரண்டு ஆண்டுகளில், இலங்கை இந்திய காங்கிரசும் அதன் தொழிற்சங்கமும் தங்களை கலைத்துக்கொண்டு, இ.தொ.கா.வாக மாறின. அப்போதிருந்தே இ.தொ.கா. தலைவர்கள் இடைவிடாது முதலாளித்துவ ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்களுடன் கூட்டணி வைக்க முயன்றதுடன், அதனை நியாயப்படுத்துவதற்கு, அத்தகைய கூட்டணிகள் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் உரிமையைப் பெற முடியும் என்ற நொண்டிச்சாக்கையும் கூறினர். எவ்வாறெனினும், இதன் விளைவாக தொழிலாளர்கள் ஆளும் உயரடுக்கோடு கட்டிபோடப்பட்டனர்.

இ.தொ.கா. அதிகாரத்துவம் கொழும்பு அரசாங்கங்களுடன் தங்கள் சலுகைகளுக்காக பேரம் பேசுவதற்கு இந்தியாவின் பிரதான முதலாளித்துவ கட்சிகளுடன் தனது விசுவாசத்தை பேணியது. அதே நேரம், உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சி கண்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக, மட்டுபடுத்தப்பட்ட போராட்டங்களை ஏற்பாடு செய்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு உதவி செய்து, முதலாளித்துவ ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, கொழும்பு அரசாங்கங்களுக்கு இ.தொ.கா. அதிகாரத்துவம் ஒத்துழைத்தது.

லங்கா சம சமாஜ கட்சி (ல.ச.ச.க.) 1964 இல் சிறிமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்திற்குள் நுழைந்து கொண்டு, சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை காட்டிக் கொடுத்தமை, முதலாளித்துவ அரசாங்கங்கள் வெகுஜன எழுச்சிகளைத் தடுத்து, தொழிலாள வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதல்களை நடத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்தது. இந்த காட்டிக்கொடுப்பானது பெருந்தோட்டங்களில், இ.தொ.கா. தனது கைகளை வலுப்படுத்திக்கொள்ள உதவியது.

1948 குடியுரிமைச் சட்டத்திற்குப் பின்னர், 1964 அக்டோபரில், கொழும்பு ஆட்சி, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இரண்டாவது பெரிய அடியாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட இருந்தனர். இ.தொ.கா. தலைவர் எஸ். தொண்டமன், குறித்த அரசாங்கத்தில் 1960 முதல் நியமிக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். இ.தொ.கா., நொண்டி சாட்டு மற்றும் முமுனுப்புடன் “கவலை” தெரிவித்து இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தது.

எஸ். தொண்டமான், 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கத்தில், 1978இல் அமைச்சரவை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு நுழைந்துகொண்டார். உற்பத்தியின் பூகோளமயமாக்கலின் ஆரம்ப நிகழ்வுப் போக்குடன் ஒருங்கிணைந்த ஜயவர்தனவின் அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளை நசுக்கும் திறந்த சந்தை பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தியது. இந்த தாக்குதல்களை எதிர்த்துப் போராடிய சுமார் 100,000 அரச ஊழியர்களை ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம் வெளியேற்றியது.

ஜயவர்தன, தமிழர் விரோத இனவாதத்தைத் தூண்டியதோடு ஒரு எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் ஸ்தாபித்தார். இந்த ஆத்திரமூட்டல்கள், 1983 தொடக்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பது ஆண்டுகால யுத்தத்திலேயே உச்சகட்டத்தை அடைந்தன.

இந்த கொள்கைகளுக்கு இ.தொ.கா. வழங்கிய வெளிப்படையான ஆதரவு, அரசியல் ஸ்தாபனக் கட்சிகள் போலவே “இடது” குழுக்களதும் தொழிற்சங்கங்களதும் வலதுசாரி மாற்றத்தை குறித்தது.

தொழிலாளர்களின் அமைதியின்மை வளர்ந்து வரும் போது, ஏனைய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து இ.தொ.கா.வும் ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் ஏற்பாடு செய்து, அந்த போராட்டங்கள் அரசுக்கு சவாலாக அமையாமல் இருக்கும் வகையில் கட்டுப்படுத்தி வந்துள்ளது.

1992-1993 ஆம் ஆண்டுகளில், அரச பெருந்தோட்ட யாக்கத்தை ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் அரசாங்கம், 23 பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கி தனியார்மயப்படுத்திய போது, அமைச்சரவை அமைச்சராக இருந்த எஸ். தொண்டமான் அதை ஆதரித்தார்.

1999 இல் இ.தொ.கா. தலைமையை எடுத்துக் கொண்டு, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களில் 2002 முதல் அமைச்சரவை அமைச்சராக இருந்து வந்த ஆறுமுகம் தொண்டமான், இந்த துரோக வகிபாகத்தை மேலும் தீவிரமாக முன்னெடுத்தார்.

2005 டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நுழைவதற்கு ஆறுமுகம் தொண்டமான் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். இருப்பினும், புதுடெல்லி, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக, இ.தொ.கா. மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சமரசப்படுத்தியது. தொண்டமான் 2015 வரை அரசாங்கத்துக்கு விசுவாசமாக செயற்பட்டு அமைச்சரவை பதவியை வகித்து வந்தார்.

புலிகளுக்கு எதிரான போர் காலத்தில் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை அபிவிருத்தியடைந்த போது, தொண்டமானும் அவரது தாத்தாவும், யுத்தத்தை எதிர்த்த, தொழிலாளர் உரிமைகளுக்காக போர்க்குணமிக்க பிரச்சாரம் செய்த இளைஞர்களின் பட்டியல்களைத் தயாரித்து, காவல்துறைக்கு வழங்கினர். பொலிசார் டசின் கணக்கான இளைஞர்களை கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை செய்தனர்.

இந்த காலகட்டம் முழுவதும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அதன் வாரிசான சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக ஒரு சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்ததன் விளைவாக பல இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தோட்ட கம்பனிகள், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களின் ஊதியத்தை வறிய மட்டத்தில் வைத்திருக்கவும், வேலைச் சுமையை அதிகரிக்கவும் பயன்படுத்தி வரும் வழிமுறைகளில் ஒன்றே “கூட்டு ஒப்பந்த” முறைமை ஆகும். இந்த ஒப்பந்தங்களைத் தயாரிப்பதில் இ.தொ.கா. முன்னிலை வகித்தது, ஏனைய தொழிற்சங்கங்கள் அதை பின்பற்றின.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத்தின் முடிவிலும், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஒழுக்கமான சம்பள உயர்வு கோரி போராட்டங்களில் இறங்கினர். அதிகரித்த வேலைப் பளு, வீட்டு வசதியின்மை மற்றும் நிர்வாகத்தின் அடக்குமுறை போன்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இன்னும் பல போராட்டங்கள், பெரும்பாலும் தொழிற்சங்கத் தலைமைக்கு வெளியில் வெடித்தன. இ.தொ.கா. ஏனைய தொழிற்சங்கங்களின் உதவியுடனும் அரசாங்கத்தின் ஆதரவுடனும் இந்த போராட்டங்களை கம்பனிகளுக்கு சாதகமான ஒப்பந்தங்களுடன் முடிவுக்கு கொண்டு வந்தது.

2006 டிசம்பரில் அரை மில்லியன் மக்கள் பங்குபற்றிய போராட்டம் குறிப்பிடத் தகுந்த உதாரணமாகும். அமைதியின்மை தலைதூக்கிய சூழ்நிலையில் இன்னொரு தோட்டத் தொழிற்சங்கமான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஒரு வேலைநிறுத்ததுக்கு அழைப்புவிடுத்தது. தொழிலாளர்கள் இதன்போது தினசரி ஊதியமாக 300 ரூபா கோரினர். இ.தொ.கா. மற்றும் ஐ.தே.க. கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் இந்த வேலைநிறுத்தத்தை எதிர்த்தன.

சோசலிச சமத்துவக் கட்சி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தொழிலாளர்களை எச்சரித்தது: "வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. இ.தொ.கா., ம.ம.மு. ஆகிய சங்கங்கள், நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிவிட்டு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய, மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள தனியார்மயமாக்கலையும் சமூக சேவை வெட்டுக்களையும் நடைமுறைப்படுத்திய இராஜபக்ஷவினது அமைச்சரவையின் ஒரு பகுதியாகும்….” (இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திருப்புமுனையில் -19 டிசம்பர் 2006)

35 ரூபாய் அதிகரிப்புடன் 170 தினசரி ஊதியத்திற்கு ஒப்புக் கொண்டு இரண்டாவது வார இறுதியில் இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. அந்த வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்தன. கையெழுத்திட முடிவு செய்த பின்னர், தொண்டமான் பொகவந்தலாவ இ.தொ.கா. அலுவலகத்திற்குச் சென்றபோது, எல்லா தோட்டங்களில் இருருந்தும் தொழிலாளர்கள் அங்கு வந்து, அலுவலகத்தை சுற்றிவளைத்து ஒப்பந்தத்தை எதிர்த்து போராட்டத்தை மேற்கொண்டனர். அவர் தொழிலாளர்களுடன் பேச மறுத்து நழுவிச் சென்றார்.

கொழும்பில் வேலை செய்யும் தோட்டப்புறத்து இளைஞர்கள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்துக்கு ஆதரவாக 2018 அக்டோபரில் காலிமுகத் திடலில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

2018 ஊதியப் போராட்டங்களில் இ.தொ.கா. மற்றும் ஏனைய சங்கங்களினதும் வகிபாகம் பற்றி தொழிலாளர்கள் பாரதூரமான அனுபவத்தைப் பெற்றனர். 1000 ரூபாய் தினசரி அடிப்படை ஊதியத்திற்கான பல மாதகால போராட்டங்களுக்குப் பின்னர், லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் தலைமைத்துவத்தை மீறி 2018 டிசம்பரில் காலவரையறை அற்ற வேலைநிறுத்தத்தில் குதித்தனர். இந்த வேலைநிறுத்தம் இலங்கையில் வெடித்த வேலை நிறுத்தங்களதும் மற்றும் வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச எழுச்சியினதும் ஒரு பகுதியாகும்.

அரசாங்கத்தின் பங்காளியாக இல்லாத இ.தொ.கா. தலைவர், ஏனைய தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தார். கடைசியில் அவர், தொழிலாளர்கள் கோரிய 1,000 ரூபாவை அன்றி 700 ரூபாய் குறுகிய ஊதியத்திற்கு ஒப்புக் கொண்டார்.

11 நாட்களில் வேலைநிறுத்தத்தை முடித்து தொண்டமான தெரிவித்ததை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட கட்டுரையில் மேற்கோள் காட்டியது: "தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். அதே நேரம் தோட்டங்களும் காப்பாற்றப்பட வேண்டும்... நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொள்ளுமறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள நாங்கள் ஒப்புக்கொண்டோம்," எனக் கூறினார்.

2019 ஜனவரியில் பொகவந்தலாவையில் நடந்த தோட்டத் தொழிலாளர் போராட்டம்

இந்த ஒப்பந்தம் 2019 ஜனவரி 28 அன்று கையெழுத்திடப்பட்டது. புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், தொழிற்சங்கங்கள் “வருமானப் பங்கீடு மற்றும் வெளியார் உற்பத்தி முறையுடன் –குத்தகை தொழிலாளர் முறை- இணைக்கப்பட்ட ஒரு ஊதிய உயர்வை ஆதரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டன.

இந்த மாதிரியை தோட்டக் கம்பனிகள் கிட்டத்தட்ட அரை தசாப்தங்களாக ஊக்குவித்து வருகின்றன. இந்த முறைமையை நடைமுறைப்படுத்தும் போது, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற நிலையான ஊதியம், ஓய்வூதிய நிதி, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஏனைய வரையறுக்கப்பட்ட உரிமைகளும் ரத்துச் செய்யப்பட்டு தொழிலாளர்கள் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படுவார்கள். இந்த முறைமை செயல்படுத்தப்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி எதிர்த்தனர்.

தானும் இ.தொ.கா.வும் தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக பெருந்தோட்ட கம்பனிகளதும் அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதை தொண்டமான் மீண்டும் வெளிக்காட்டினார். கோபமடைந்த தொழிலாளர்கள் பல தோட்டங்களில் பல நாட்கள் மேலும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். ஜனவரி மாதம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, தோட்டப் பகுதிகள் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், ம.ம.மு. மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களின் சரித்திரமும் இதுவே ஆகும். அவை அனைத்தும் ஏற்கனவே கம்பனிகளதும் அரசினதும் தொழில்துறை பொலிஸ்காரனாக மாறிவிட்டன.

அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அதன் தொடர்ச்சியான போராட்டத்தின் பாகமாக, சோசலிச சமத்துவக் கட்சி 2018 போராட்டத்தில் சக்திவாய்ந்த முறையில் தலையீடு செய்தது. அது, தோட்டத் தொழிலாளர்களின் கடந்தகால போராட்டத்தின் போது போலவே, தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து விலகி, வேலைத் தளங்களிலும், தோட்டங்கள் மற்றும் தொழிலாளர் வாழ்விடங்களிலும் சுற்றுப்புறங்களிலும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை விளக்கியது.

2018 டிசம்பரில் எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சம்பளப் போராட்டத்தில் ஈடுபட்ட போது.

பெரிய இலாபம் ஈட்டும் கம்பனிகளின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்கப்படும் போது, ஒழுக்கமான ஊதியம், ஓய்வூதியத் திட்டம், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்குமான தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வெல்வதும், அனைத்து விதமான பாரபட்சங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதும் சாத்தியமற்றது என்பதை சோ.ச.க. விளக்கியது. அனைத்து பெருந்தோட்டங்களையும் தேசியமயமாக்குவதும் அறிவியல் ரீதியாக உற்பத்தியை ஒழுங்கமைப்பதும் மட்டுமே, இந்த அடிப்படை உரிமைகளை வெல்வதற்கான ஒரே வழி ஆகும். சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே, தோட்டத் தொழிலாளர்களால் அத்தகைய கோரிக்கைகளை வெல்ல முடியும்.

2018 ஊதியப் போராட்டத்தின் சோ.ச.க. விடுத்த இந்த அழைப்புக்கு செவிமடுத்து எபோட்சிலி தோட்டத்தில் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவை அமைத்தமை, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஏற்பட்டு வரும் புரட்சிகர மாற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த போராட்டத்தை வழிநடத்த தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம். அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி ஆகும்.

Loading