கோவிட்-19 கொடுங்கனவுக்கு மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வட அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.

உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் செய்திமடல் (WSWS Autoworker Newsletter), சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை (rank-and-file safety committees) ஸ்தாபிப்பதில் வாகனத் தொழிலாளர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் உதவும். இதுபற்றி மேலும் விபரம் அறிய, autoworkers@wsws.org என்ற மின்னஞ்சல் முகவரியில் உலக சோசலிச வலைத் தள வாகனத் தொழிலாளர்கள் செய்திமடலுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் பெருநிறுவனங்கள் காலத்திற்கு முன்கூட்டியே தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பும்படி வலியுறுத்தியது குறித்து வட அமெரிக்காவில் வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு பெருகி வருகிறது. தொழிற்சாலைகளிலும் பண்டகசாலைகளிலும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உந்துதலில் அடிப்படை பாதுகாப்பு நெறிமுறைகள் கூட பின்பற்றப்படாமல் உள்ள நிலைமைகளுக்கு மத்தியிலும், மற்றும் தொழிற்சங்கங்களுடன் பகிரங்கமாக கூட்டு சேர்ந்து கொண்டு நிர்வாகம் எதிர்ப்பதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ள நிலைமைகளுக்கு மத்தியிலும் கோவிட்-19 தீவிரமாக பரவி வருகிறது.

ஒஹியோவில் உள்ள ஃபியட் கிறைஸ்லர் டொலிடோ வாகன ஒருங்கிணைப்பு வளாகத்தில் (Fiat Chrysler Toledo Assembly Complex) தொழிலாளர்கள் தங்கள் ஆலையில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு பதிலிறுக்கும் விதமாக சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை தொடங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். டொலிடோ தொழிலாளர்களின் துணிவுகரமான நிலைப்பாட்டை தொடர்ந்து மிச்சிகன், டெட்ராய்ட்டில் உள்ள ஜெபர்சன் வடக்கு வாகன ஒருங்கிணைப்பு ஆலையிலும் (Jefferson North Assembly), மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளில் அருகிலுள்ள ஸ்டெர்லிங் ஹைட்ஸ் வாகன ஒருங்கிணைப்பு ஆலையிலும் (Sterling Heights Assembly) சாமான்ய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்கள் தொடங்கப்படவுள்ளன.

டொலிடோ வடக்கு வாகன ஒருங்கிணைப்பு ஆலை

மேலும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது குறித்து இந்த வாரம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய ஃபோர்ட் லூயிஸ்வில் ட்ரக் ஆலையிலும் (Ford Louisville Truck Plant) இதுபோன்ற சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதற்கான முன்முயற்சிக்கு கிடைத்த ஆதரவு பற்றிய அறிக்கைகள் உலக சோசலிச வலைத் தள வாகனத் தொழிலாளர் செய்திமடலுக்கு வந்து சேர்ந்துள்ளன.

கொடிய வைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகின்ற நிலையில் கூட, யுனைடெட் வாகனத் தொழிலாளர்களும் நிர்வாகமும் தொழிலாளர்களிடமிருந்து வரும் அடிப்படைத் தகவல்களை கண்டுகொள்ளாமல், எந்தவொரு விலை கொடுத்தும் உற்பத்தியை அதிகரிக்க ஒத்துழைத்து வருகின்றன.

டொலிடோ பிளேட் (Toledo Blade) நிறுவனம் அதன் ஆலை மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டது முதல் அங்கு 31 தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தது. எந்தவொரு நோய்தொற்றுக்கள் இருப்பதையும் ஏற்பதற்கு நிர்வாகம் மறுத்துவிட்ட நிலைமைகளின் கீழ், இந்த எண்ணிக்கை மிகக் குறைந்த மதிப்பீடாகும். 312 ஏக்கர் கொண்ட வளாகத்தில் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக எந்தவித இடைநிறுத்தமும் செய்யப்படாமல், தடையின்றி அங்கு உற்பத்தி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் சுமார் 6,500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதுடன், ஜீப் கிளாடியேட்டர்கள் மற்றும் ரேங்க்லர்கள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஒஹியோவில், வெள்ளியன்று கோவிட்-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாதளவிற்கு அதிகபட்சமாக 1,525 என பதிவாகியிருப்பதானது, இதுவரையிலான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 62,856 ஆக அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் 26 இறப்புக்கள் அன்று பதிவாகி, மாநில அளவிலான மொத்த இறப்பு எண்ணிக்கையை 3,000 க்கு சற்று அதிகமாக்கியது.

டொலிடோ FCA தொழிலாளி ஒருவர், “இன்று, ஒரு மெல்லிய முகக்கவசம் எனக்கு அளித்த பாதுகாப்பை தவிர வேறு எந்தவித பாதுகாப்புமில்லாமல் 10 மணித்தியாலங்கள் வரை நேரடியாக எனக்கருகே ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நபர், மூன்று நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார், மேலும் பயணத்திற்குப் பின்னர் மீண்டும் வேலைக்கு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். உண்மையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கள் மீது நிறுவனத்திற்கோ அல்லது தொழிற்சங்கத்திற்கோ எந்தவித அக்கறையும் இல்லை” என்று உலக சோசலிச வலைத் தள வாகனத் தொழிலாளர் செய்திமடலுக்கு எழுதியுள்ளார்.

“டொலிடோ வாகன ஒருங்கிணைப்பு வளாகத்திற்குள் உருவாக்கப்பட்ட விவகாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து தயவுசெய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும், மேலும் மேலதிக விசாரணை மேற்கொள்ளும்படியும் நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அனைவருமே எந்தவித உதவியும் இல்லாமல் தான் எங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுடன், எங்களுக்கு நேர்மையான பதிலளிப்பதற்கு எவரும் முன்வர வில்லை.”

மேலும், மற்றோரு ஜீப் தொழிலாளி, “எனது பகுதியில், ஒரு பிரிவில் இருந்து ஒரு ஊழியர் வெளியேற்றப்பட்டார் என்பதுடன், இந்த சூழ்நிலை பற்றி எதையும் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையினால் ஒரு ஊழியர் வெளியேறினார் என்பதுடன், வெளியேறுகையில் எங்களுக்கும் அவர் விடயத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அவர்கள் ஆலையை மூடவும் இல்லை, நன்கு சுத்தம் செய்யவும் இல்லை, ஒரு மாற்றீட்டைக் கண்டுபிடிக்கும் வரை வெறுமனே அந்த பிரிவை நிறுத்தி வைத்து பின்னர் தொடர்ந்து இயக்கினார்கள்..” என்று வாகனத் தொழிலாளர் செய்திமடலுக்கு தெரிவித்தார்.

“எங்களது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பற்றியோ, எங்களது குடும்பங்களின் பாதுகாப்பு பற்றியோ அவர்கள் அக்கறை காட்டுவதில்லை,” என்பதாக பெருநிறுவன நிர்வாகத்தின் மற்றும் ஆலையின் UAW அதிகாரிகளின் பதிலிறுப்பு பற்றி ஒரு தொழிலாளி குறிப்பிட்டார்.

மேலும் மற்றோரு ஜீப் தொழிலாளி, “அவர்கள் சில கந்தல் துணிகளுடன் 70 துடைக்கும் ஆல்கஹால் போத்தல்களை எங்களுக்கு அளிக்கிறார்கள், அவற்றைக் கொண்டு இயந்திரங்களை நாங்கள் சுத்தம் செய்யுமாறு கூறப்படுகிறோம். இந்த கந்தல் துணிகள் ஒருவரது காரிலிருந்து எடுக்கப்பட்ட பழைய டி-சர்ட்கள் போல இருந்தன. இவையும் பாதுகாப்பற்றவையே. நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் மேலே இருந்தவாறு வேலை செய்கிறோம். இந்நிலையில், எங்களால் சமூக இடைவெளியை பின்பற்றுவது முடியாது” என்று வாகனத் தொழிலாளர் செய்திமடலுக்கு தெரிவித்தார்.

“அவர்கள் அனைவருமே பணம் சம்பாதிப்பது பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். நோய்தொற்று உள்ள நபருடன் நேரடி தொடர்பில் பணிபுரியும் அனைவருக்கும் அதுபற்றி அவர்கள் தெரிவிப்பதில்லை. கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நண்பர் ஒருவருடன் நான் வேலை செய்துள்ளேன். யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது பற்றி தொழிலாளர்களுக்கு எப்படித் தெரிய வரும்? அவரது அணிக்குக் கூட அவர்கள் தெரிந்துகொள்ளச் செய்வதில்லை. அவர் தனது குழு உறுப்பினர்களை தானே தொடர்பு கொண்டு இதுபற்றி அவர்களுக்கு தெரிவித்தார்.”

வாகன உற்பத்தி ஆலைகள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் விநியோக நிறுவனங்கள் எங்கிலும் மோசமான பாதுகாப்பற்ற நிலைமைகள் தான் பரவலாக காணப்படுகின்றன. ஃபோர்ட் லூயிஸ்வில் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் ஒரு தொழிலாளி வியாழக்கிழமை அன்று, “கோவிட்-19 ஆலையில் பரவியதால் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வெளியேறியதால், வேலைகளை முடிக்க ஒட்டுமொத்தமாக அமைப்பு 2 ஐ அவர்கள் மூடிவிட்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்வதற்கு பதிலாக அமைப்பு 2 இன் 90 சதவிகித தொழிலாளர்கள் வெளியேறினர். இப்போது அதுவே ஒற்றுமையை குறிக்கிறது!” என்று அங்குள்ள அபிவிருத்திகள் பற்றி முகநூலில் பதிவிட்டார்.

ஃபோர்ட் லூயிஸ்வில் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள்

சென் லூயிஸூக்கு அருகிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் வென்ட்ஸ்வில் வாகன ஒருங்கிணைப்பு ஆலையின் (General Motors Wentzville Assembly plant) மூத்த தொழிலாளி ஒருவர், வியாழக்கிழமை அண்ணளவாக 20 கோவிட்-19 நோயாளிகள் இருப்பது அங்கு பதிவானது என்றும், அதன் பின்னர் மேலும் அதிகரித்தது என்றும் WSWS க்கு தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களை “வெளி நோயாளிகள்” என்று கருதுவதாக அவர் தெரிவித்தார், ஆலைக்குள் பணிபுரிவதன் விளைவாகவே நோய்தொற்று பரவியுள்ளது என்பதை ஏற்க அது மறுக்கிறது. மேலும், “ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆலைக்குள் பணிபுரிந்து வரும் நிலையில், இது ஜெனரல் மோட்டார்ஸ் தொடர்பானது அல்ல என்று அவர்கள் எப்படி கூற முடியும்” என்றும், “நாங்கள் ஆலைக்குள் நுழைகையில் மட்டும் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும் அதேவேளை வேலை நேரம் முடிந்து நாங்கள் வெளியேறுகையில் எங்களது உடல் வெப்பநிலையை அவர்கள் ஏன் சோதிப்பதில்லை” என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார்.

வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி ஆலைகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. டெட்ராய்ட்டில் உள்ள Flex-N-Gate ஆலை தொழிலாளி ஒருவர், “நீங்கள் மருத்துவரின் குறிப்பை கொண்டிருந்தாலும், இதற்கு முன்னர் இப்படி நடக்காதிருந்த போதிலும் கூட, அவர்கள் உங்களுக்கு புள்ளிகள் [அதாவது, வராதிருப்பதற்கான ஒழுங்கு மதிப்பீடுகளை] வழங்குகிறார்கள். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நான் இங்கு வேலை செய்து வருகிறேன், மேலும் எங்களில் பலர் இந்த நிலைமைகளை சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையானது எனது இதயத்தை நொருக்குகிறது” என்று எழுதினார்.

மற்றொரு வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி தொழிலாளி, “[டெட்ராய்ட் புறநகர் பகுதியில்] பிஸ்டன் தானியங்கி (Piston Automotive) தொழிற்சாலையில் ஒரு ஊழியர் வேலை நேரத்தில் துப்பியதால் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என்று ஒரு ஊழியர் கூறியதை நான் கேட்டேன். அந்த ஊழியர் ஆலையை விட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், தனது தாய்க்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் மற்றொரு தொழிலாளி தன்னை சுற்றியுள்ளவர்களில் ஒருவருக்கு கோவிட்-19 நோய்தொற்று இருப்பதாகக் கூறிக் கொண்டே வேலைக்குச் சென்றார். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது, ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறது என்பதால்தான் இதுபற்றி விசாரிக்க முடியுமா என்று கேட்க நான் எழுதுகிறேன், மேலும் ஏன் நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்” என்று எழுதினார்.

மெக்சிக்கோவில் கொரொனா வைரஸ் நோயாளிகள் பெருகி வரும் நிலையில், மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடோரின் (Andres Manuel Lopez Obrador) மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொள்கைக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்ட தொழிலாளர்கள் முயன்று வருகின்றனர். இந்த நாட்டில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட 282,000 க்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் இருக்கின்றனர் என்பதுடன், இந்த நோய்தொற்றின் காரணமாக 33,500 க்கு மேற்பட்ட இறப்புக்களும் அங்கு நிகழ்ந்துள்ளன.

மெக்சிக்கோவின் குவானாஜூவாடோவில் ஜெனரல் மோட்டார்ஸ் சிலாவோ வளாகத்தில் (General Motors Silao Complex) தொழிலாளர்கள், அங்கு மொத்தம் 17 கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாகவும், ஐந்து இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வாகனத் தொழிலாளர்கள் செய்திமடலுக்கு தெரிவித்துள்ளனர். நிர்வாகமும் தொழிற்சங்கமும் சந்தேகத்திற்கு இடமான அல்லது உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் எவரும் இருப்பதை அங்கீகரிக்க மறுத்துள்ளதோடு, ஆலையின் நிலைமைகள் பற்றி எவரிடம் பேசுவதைத் தடுக்கும் விதமாக இந்த ஆண்டு மூன்று “இரகசிய ஒப்பந்தங்களில்” கையெழுத்திடுமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

சிலாவோ ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் ஆக்கபூர்வ இயக்கத்தின் உறுப்பினர்கள்

குவானாஜூவாடோ மாநிலம் “சிவப்பு குறியீட்டை” கொண்டிருக்கும் நிலையில் கூட, அதாவது வாகன உற்பத்தி ஆலைகள் தொழில்நுட்ப ரீதியாக 30 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு இயங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று பொருட்படும் நிலையில், இந்த சிலாவோ தொழிற்சாலை சுமார் 80 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ஆலையில் நிலவி வரும் நோய்தொற்றுக்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகள் பற்றி தொழிலாளர்களை புகாரளிக்க ஊக்கப்படுத்தும் சாமானிய தொழிலாளர்களின் ஆக்கபூர்வ இயக்க (Generating Movement) குழு, வியாழனன்று 57 வயதான Gilberto Medrano Ramirez சமீபத்தில் இறந்தது பற்றி வாகனத் தொழிலாளர் செய்திமடலுக்குத் தெரிவித்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆலையில் தொழில்சார் சுகாதாரத் துறையின் (Occupational Health Department) மருத்துவர் கையெழுத்திட்ட ஆவணத்தின்படி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அவரை ஜூலை 2 அன்று வீட்டிற்கு அனுப்பிவிட்டது, இந்த ஆவணம், “நோய்தொற்று அவரது மூச்சுப்பாதை வழியாக ஏற்பட்டுள்ளது” என்று விவரித்து “சந்தேகத்திற்குரிய கோவிட்-19 நோயாளி” என்று அவரை வகைப்படுத்தியிருந்தது. என்றாலும், மாநில சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனமான IMSS, அவருக்கு வைரஸ் நோய்தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யாமலேயே அவரை திருப்பியனுப்பிவிட்டது.

Loading