ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று மீண்டும் வெடித்து பரவுவதால் பார்சிலோனா மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய ஒன்றிய (European Union-EU) நாடுகள், ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான மற்றும் அலட்சியப்படுத்தும் கொள்கைகளால் தூண்டப்பட்ட கோவிட்-19 நோய்தொற்றின் மறுஎழுச்சிகளை எதிர்கொள்கின்றன. வேலைக்கு மீண்டும் திரும்பும் கொள்கைகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீக்குதல், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு தொடர்ந்து நிலவும் பாதுகாப்பின்மை மற்றும் சுற்றுலாவுக்கு நாடுகளை மீண்டும் திறப்பதற்கான உந்துதல் ஆகியவை சமூக இடைவெளி குலைந்துபோக வழிவகுத்தன. இந்நிலையில், ஒரு புதிய நோய்தொற்று சுகாதார அமைப்புக்களை மீண்டும் அழிவிற்குள்ளாக்க அச்சுறுத்துகிறது.

ஐரோப்பா முழுவதிலுமாக புதிய கோவிட்-19 வெடிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (European Centre for Disease Prevention and Control) சனிக்கிழமை வெளியிட்ட தரவின் படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குறிப்பாக, சுவீடன், போர்ச்சுக்கல் மற்றும் பல்கேரியா போன்ற சில நாடுகள் 100,000 பேருக்கு 40 க்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் என்ற நிகழ்வு விகிதத்துடன் புதிய நோய்தொற்றுக்களின் மிகவுயர்ந்த விகிதங்களை எதிர்கொண்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில், சுவீடனில் புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 6,642 என்றும் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை 208 என்றும் பதிவாகியுள்ளன. மார்ச் மாதத்தில் நோய்தொற்று வெடித்துப் பரவ ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை, இந்த நாட்டில் 77,280 க்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாகவும், 5,619 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அனைத்து அரசாங்கங்களும் பின்பற்றும் கொள்கையான, “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துவதில் சுவீடன் இழிபுகழ் பெற்றது, இதன் அர்த்தம் என்னவென்றால், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வைரஸ் நோய்தொற்றை பரவ அனுமதிப்பதன் மூலம், நோய்தொற்று பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிடுவதாகும்.

போர்ச்சுக்கலில், 14 நாள் நோய்தொற்று விகிதம் தற்போது 47.9 ஆக உள்ளது, அதன்படி அந்த காலகட்டத்தில் அண்ணளவாக 5,300 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. மேலும் கூடுதலாக 95 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். லிஸ்பன் நகரின் 700,000 குடியிருப்பாளர்கள் ஜூலை 1 முதல் முழு அடைப்பில் இருக்கின்றனர், இது ஜூலை இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சில், Sante Public France இன் சமீபத்திய வாராந்த அறிவிப்பு வெளியீடு (bulletin), மாயென்னின் (Mayenne) வடமேற்கு துறை மற்றும் கடல்கடந்த பிரெஞ்சு பிரதேசங்களான பிரெஞ்சு கினியா (Guinea) மற்றும் மயோட்டே (Mayotte) ஆகிய மூன்று பகுதிகளை ஒரு “உயர்” மட்ட கவலைக்குரியதாக வரையறுத்துள்ளது. பாரிஸ் பகுதி மற்றும் Nouvelle-Aquitaine உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளில், உள்ளூர் அதிகாரிகள் நோயாளிகள் குறித்து கண்காணித்து வருவதாகக் கூறுகிறார்கள். சராசரி தினசரி இறப்பு விகிதம் அங்கு 22.4 ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய இரண்டு வாரங்களில் நிலவிய தினசரி இறப்பு விகிதங்கள் முறையே 14.8 மற்றும் 15.5 என்பதிலிருந்து கணிசமான அதிகரிப்பைக் கண்டிருந்தது. நோய்தொற்று காலத்தில் நிகழ்ந்த மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை அங்கு தற்போது 30,138 ஆக உள்ளது.

பெல்ஜியத்தில், நாளொன்றுக்கு உருவாகும் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதாவது ஜூலை 9 முதல் 15 திகதி வரையிலான வாரத்தில் பதிவான தினசரி புதிய நோய்தொற்றுக்களின் சராசரியானது, ஜூலை மாதம் முதல் ஏழு நாட்களில் பதிவாகியிருந்த 200 க்கு அதிகமாக அதிகரித்து, நாளாந்த சராசரியான 124.7 என்பதிலிருந்து 207 வரை பதிவாகியுள்ளது. இது 61 சதவிகித அதிகரிப்பாகும்.

ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) பொடேமோஸ் கூட்டு அரசாங்கம் அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தும், கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்திற்கான பூட்டுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தியும், மற்றும் மில்லியன் கணக்கான அத்தியாவசியமல்லாத தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தியும் வந்ததான ஒரு மாத காலத்திற்குப் பின்னர், ஐரோப்பாவில் வைரஸ் நோய்தொற்றின் மறுஎழுச்சுயின் மையமாக தற்போது ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. ஐபீரிய தீபகற்பத்திற்கான தனது எல்லைகளை மீண்டும் மூடுவது குறித்து பிரான்ஸ் தற்போது விவாதித்து வருகிறது.

கோவிட்-19 நோய்தொற்றுக்கு 28,000 க்கு மேற்பட்டவர்கள் பலியானது உட்பட, இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருந்தது, என்றாலும் சுகாதார நெருக்கடி ஸ்பெயினை மிகக் கடுமையாக தாக்கிய வாரங்களைக் கொண்ட மார்ச் 2 மற்றும் மே 24 திகதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த நாட்டில் நிகழ்ந்த ஒட்டுமொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 48,000 ஆக அதிகரித்திருந்தது என்று தேசிய புள்ளிவிபர நிறுவனம் (National Institute of Statistics) தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் 1,993 பேரை பாதிப்புக்குள்ளாக்கி, குறைந்தது 158 கொரோனா வைரஸின் புதிய வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு கட்டலோனியா பிராந்தியத்தில் மிக மோசமாக ஏற்பட்ட நோய்தொற்று வெடிப்பாக, தினசரி கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,000 ஆக அங்கு மீண்டும் பதிவாகியுள்ளது. பிராந்திய சுகாதாரத் துறை நேற்று இரவு, கடந்த 24 மணிநேர புள்ளிவிபரங்களின் படி, மேலும் 944 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன என்றும், அவற்றில் அண்ணளவாக 700 பேர் பார்சிலோனா பெருநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை, கட்டலான் பிராந்திய அரசாங்கம் கடைசி நிமிடத்தில் புதிய பூட்டுதல் நடவடிக்கைகள் குறித்து அறிவித்தது. பார்சிலோனா மாகாணத்தின் நான்கு மில்லியன் குடியிருப்பாளர்களும் அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் தவிர வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்ததை அடுத்து, கட்டலான் அரசாங்கம் 10 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவதை தடைசெய்து, சினிமாக்கள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளை மூடியுள்ளது.

ஐரோப்பா முழுவதுமாக நோய்தொற்று விரைந்து அதிகரிப்பதானது, இலாப நோக்கத்திற்காக ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை நீக்கிய குற்றகரமான கொள்கைகளின் விளைவாக உள்ளது. சீனாவில், ஜனவரி 23 முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியில், ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட நோய்தொற்று வெடிப்பு மையமான வூஹான் மற்றும் ஹூபே மாகாணத்தின் ஏனைய நகரங்களில் மத்திய அரசாங்கம் முழு அடைப்புக்கு உத்தரவிட்டது. அதாவது, சீனாவில் முழு அடைப்பு இரண்டு மாதங்கள், இரண்டு வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்கு நீடித்தது. ஆனால், பல ஐரோப்பிய நாடுகளில் முழு அடைப்பு எப்போதாவது செயல்படுத்தப்பட்ட போதிலும், சில வாரங்களுக்கு மட்டுமே அவை நீடித்தன.

ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் கவனம் உயிர்களைப் பாதுகாக்காமல், இலாபங்களையே பாதுகாத்தன. மாறுபட்ட அளவுகளில் அவர்களது ஆரம்பகட்ட பதிலிறுப்பு வழமை போல ஆபத்தை குறைத்துக்காட்டி வணிகங்களை தொடர்வதாக இருந்தது. மக்களின் பரந்த கோபம் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களின் காரணமாகவே சில அரசாங்கங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதால், நோய்தொற்று பாதிப்புக்களின் எண்ணிக்கை குறையும் வரை மட்டும் அவை முழு அடைப்பை செயல்படுத்தின.

தற்போது, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 750 பில்லியன் யூரோ பிணையெடுப்பு திட்டம் பற்றி விவாதிக்கையில், பெருநிறுவனங்கள் வெட்கமின்றி பரந்த பணிநீக்கங்களுக்கு ஒப்புதல் அளிக்கின்றன, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் அனைத்தும் இது நிகழும் என்று முன்கணித்திருந்தாலும் கூட, புதிய வெடிப்புக்களை எதிர்கொள்ள தயாராவதற்கு அவை இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்தவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை, El Pais நாளிதழ் நடத்திய ஆய்வில், ஸ்பெயினுக்கு குறைந்தது 12,000 தடய-கண்காணிப்பு அதிகாரிகள் தேவை, ஆனால் அதற்கு பதிலாக அங்கு வெறும் 3,500 பேர் மட்டுமே உள்ளனர் என்று தெரிவித்தது. London School of Hygiene and Tropical Medicine நிறுவனத்தின் சுகாதார நிபுணரான Helena Legido-Quigley, “நாங்கள் மேலும் கூடுதலாக தடயமறிபவர்களை வேலைக்கு இருத்த வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம்” என்று நாளிதழுக்குத் தெரிவித்தார்.

வைரஸ் நோய்தொற்றின் மறுவெடிப்பின் அளவு குறித்து கோபம் பெருகி வருகையில், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இலாபங்களை பிழிந்தெடுக்கும் நோக்கில் உள்ளூர்மயமாக்கப்பட்ட பூட்டுதல்களின் அளவைக் மட்டுப்படுத்துவதற்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.

சண்டே டெலிகிராஃப் செய்தியிதழுக்கு தெரிவிக்கையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், “நான் ஒரு அணுசக்தி அச்சுறுத்தலைக் கைவிடுவதைப் போல் அந்த கருவியையும் கைவிட முடியாது. என்றாலும் இது ஒரு அணுசக்தி அச்சுறுத்தல் கருவியை போன்றதுதான். அதனால் நிச்சயமாக அதை நான் பயன்படுத்த விரும்பவில்லை. மேலும், மீண்டும் அந்த நிலைக்கு நாங்கள் வருவோம் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறி, தேசியளவிலான முழு அடைப்பை ஒரு “அணுசக்தி அச்சுறுத்தலுடன்” ஒப்பிட்டார். மேலும், குளிர்காலம் வருவதால், “எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மிக அதிகமாக இருக்கும் என்ற நிலையில், நிச்சயமாக இதற்கு தேசியளவிலான நடவடிக்கைகளும் தேவைப்படும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்த இங்கிலாந்தின் விஞ்ஞான ஆலோசகரான பாட்ரிக் வாலன்ஸ் (Patrick Vallance) உடன் இவர் முரண்படுகிறார்.

ஜேர்மனியில், மாநிலங்களும் மற்றும் மத்திய அரசாங்கமும் “அதிக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகள்” குறித்து ஒரு உடன்பாட்டை எட்டின. இதன் அர்த்தம், பொது அதிகாரிகள் இலாபங்களின் மீதான தாக்கத்தைக் குறைக்க, நோய்தொற்று தீவிரமாக பரவும் என இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அடைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியதுடன், உள்ளூர் பயணத் தடைகளை மட்டும் கொண்டு வந்தனர். கூட்டர்ஸ்லோ (Gutersloh) மாவட்டத்தில் ஒரு இறைச்சி ஆலையில் நோய்தொற்று வெடித்ததைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட சமீபத்திய அடைப்புக்களுக்குப் பின்னர் இந்த கூட்டம் நடந்தது. அதன் பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

வியாழக்கிழமை, ஸ்பெயினின் மன்னர் ஆறாம் பிலிப்பே அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்று உத்தியோகபூர்வ அஞ்சலி செலுத்தினார். பல ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ள முடியாட்சியின் பிரபலத்திற்கு முட்டுக்கொடுக்கும் ஒரு முயற்சியாகவும், மேலும் முடிந்தவரை நோய்தொற்று முடிந்துவிட்டது என்பதையும், குறிப்பாக சுற்றுலா உட்பட, “வழமை போல் வணிகத்திற்கு” ஸ்பெயின் திறந்திருக்கும் என்பதையும் முன்வைப்பதற்காக ஆளும் வர்க்கத்தால் இந்த நிகழ்வுக்கு பல வாரங்களாக ஊக்குவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள், ஸ்பெயினின் 17 பிராந்திய முதலமைச்சர்கள், மேலும் நேட்டோ பொதுச் செயலர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் (General Jens Stoltenberg), உலக சுகாதார அமைப்பின் தலைவரான Tedros Adanom Ghebreyesus மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவரான ஊர்சுலா வொன் டெர் லையன் ஆகியோர் உட்பட 400 க்கு மேற்பட்டவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் விகாரமானதன்மை கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் மட்டும் அம்பலப்படுத்தப்படவில்லை, மாறாக கடந்த வாரங்களில் குறைந்த ஊதியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை புதுப்பிக்காதது குறித்து மருத்துவர்கள், மருத்துவ குடியிருப்பாளர்கள், மற்றும் ஏனைய சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களாலும் அம்பலமாகியது. 36.3 சதவிகித பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு நிரந்தர ஒப்பந்தங்கள் கிடையாது என்பது போன்ற நிலைமைகளால், கடந்த மாதங்களில் மனச்சோர்வுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி அவர்கள் தற்போது பாதுகாப்பற்ற எதிர்காலம் குறித்து அஞ்சுகிறார்கள். இந்நிலையில், பிராந்திய அரசாங்கங்கள் ஏற்கனவே சுகாதார ஊழியர்களை குறைக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம், 4,600 க்கு மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தக பணியாளர்கள் குறைவூதியங்களுக்கு எதிராகப் போராட காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கினர். அப்போது வீதிகளில் அவர்கள் அணிவகுத்துச் செல்கையில், அவர்களுக்கு பொதுமக்கள் ஆதரவளித்ததுடன், மாடங்களில் நின்றவாறு அவர்களைப் பாராட்டினர்.

அதே வாரத்தில், தவறாக பெயரிடப்பட்ட “முற்போக்கான” சோசலிஸ்ட் கட்சி (PSOE) – பொடேமோஸ் அரசாங்கம், பெருநிறுவன பிணையெடுப்புக்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்காக பில்லியன் கணக்கான யூரோக்களை பாய்ச்சுவது குறித்து விவாதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சென்றது.

Loading