நூற்றுக்கணக்கான கூட்டாட்சி முகவர்களை சிகாகோவுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சர்வாதிகார ஆட்சியை நோக்கிய தனது உந்துதலை மேலும் விஸ்தரிக்கும் விதமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இல்லினோயின் சிகாகோ மற்றும் நியூ மெக்சிக்கோவின் அல்புகெர்கி (Albuquerque) நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான கூட்டாட்சி முகவர்களை அனுப்பியுள்ளார். ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடக நிகழ்வில் இந்நிர்வாக உத்தரவு அறிவிக்கப்பட்டது.

LeGend Operation இன் ஒரு பகுதியாக, மிசூரி மாநிலத்தின் கான்சாஸ் நகரில் ஏற்கனவே இருநூறு மத்திய உளவுத்துறை முகவர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், கடந்த மாதம் இந்த நகரத்தில் LeGend Taliferro என்ற நான்கு வயது சிறுவன் கொல்லப்பட்டதால் அவனது பெயரில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மேலும் இருநூறு பேர் சிகாகோவிற்கும், 35 பேர் அல்புகெர்கிக்கும் அனுப்பப்படுகின்றனர். மேலும் நிர்வாகம், இந்த மூன்று நகரங்களையும் உள்ளூர் பொலிஸை கூடுதலாக பணியமர்த்துமாறு கூறி அவற்றிற்கு 61 மில்லியன் டாலர் நிதியும் வழங்குகிறது.

கடந்த ஆண்டு முழுவதும் துப்பாக்கி குற்றம் மற்றும் படுகொலைகளின் விகிதங்கள் அதிகரித்திருந்ததான அந்த நகரங்களின் சிறுபான்மை மக்களைக் காப்பாற்றும் முயற்சியாக மத்திய உளவுத்துறை முகவர்கள் அங்கு நிலைநிறுத்தப்படும் கருத்தை ட்ரம்ப் முன்வைத்தார். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் முண்டுகோல்களாக பயன்படுத்துவதற்காக, அவரது அரசியல் உதவியாளர்கள் வீதி வன்முறையில் கொல்லப்பட்ட பல குழந்தைகளின் பெற்றோர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவும் அனுமதித்தனர், அப்போதுதான் ட்ரம்ப் அவர்களுக்கு விரல் காட்டி, வணக்கம் செலுத்த முடியும்.

ஜூலை 22, 2020, புதன்கிழமை, ஒரேகனின் போர்ட்லாந்தில் உள்ள மார்க் ஓ. ஹாட்ஃபீல்ட் யுனைடெட் ஸ்டேட்ஸ் நீதிமன்றத்தில் கூட்டாட்சி அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குகின்றனர் (AP Photo/Noah Berger)

இந்த முயற்சியின் இழிந்த தன்மையையும் அயோக்கியத்தனத்தையும் மிகைப்படுத்த முடியாது. சிகாகோவில் துப்பாக்கி வன்முறையால் ஏற்பட்ட இறப்பு மற்றும் காயங்களுக்கான புள்ளிவிவரங்களை ட்ரம்ப் மேற்கோள் காட்டினார். ஒரு சமூக துன்பியலான இதை, பிற்போக்குத்தனமான அரசியல் நோக்கங்களுக்காக முடிந்தவரை அவரால் சுரண்ட முடியும் என்பதால், அவர் முற்றிலும் அலட்சியமாக இருக்கிறார்.

பச்சாதாபமிக்க ஒரு காட்சியை உருவாக்குவதில் ட்ரம்ப் தோல்வியுற்றார். “எந்தவொரு தாயும் தனது இறந்த குழந்தையை தன் கைகளில் தொட்டிலிட வேண்டியதில்லை, ஏனென்றால் அரசியல்வாதிகள் தங்கள் சுற்றுப்புறத்தையும் நகரத்தையும் பாதுகாக்க தேவையானதை செய்ய மறுக்கிறார்கள்,' என்று அவர் கூறினார்.

அமெரிக்க பொலிஸால் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காக ட்ரம்ப் ஒருபோதும் சிறிதும் கவலைப்பட்டதில்லை. அவரது ஆரம்பகால வெளிப்படையான அரசியல் தலையீடுகளில் ஒன்று, சென்ட்ரல் பார்க் ஃபைவ் (Central Park Five) ஐ நிறைவேற்றக் கோருவது, அது இளைஞர்களை தூக்கிலிடுமாறு கோரி இருந்தது, சிறுபான்மை இளைஞர்களான இவர்கள் மன்ஹாட்டனில் தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக குற்றம்சாட்டப்பட்டு பின்னர் முற்றிலும் விடுவிக்கப்பட்டனர்.

புதன்கிழமை தனது கருத்துக்களில், ட்ரம்ப் சிகாகோவிலும், போர்ட்லாந்திலும் உள்ள நிலைமைகளுக்கு இடையில் முற்றிலும் நேர்மையற்ற கலவையை ஏற்படுத்தினார். சிகாகோவில், இந்த மாதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி வன்முறையில் இறந்துள்ளனர். போர்ட்லாந்தில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (Department of Homeland Security-DHS) அதிக ஆயுதமேந்திய கூட்டாட்சி முகவர்கள், "அராஜகவாத கும்பல்கள்" என்று அழைக்கப்படுவதற்கு எதிராக தெருக்களில் நிறுத்தப்பட்டனர். உண்மையில், ட்ரம்பின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், அவர்கள் பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பாளர்கள், கிட்டத்தட்ட அனைவரும் அமைதியானவர்கள்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் உள்ள தனது அரசியல் எதிப்பாளர்கள் மீது அவர் குற்றம் சாட்டினார். அநாமதேய அரசியல்வாதிகள் என்பவ்ர் வெளிப்படையாக ஜனநாயகக் கட்சியினர், “இப்போது தீவிர இடது இயக்கத்தைத் தழுவிகின்றனர், அவர்கள் எங்கள் பொலிஸ் சேவைகளை அகற்ற விரும்புகிறார்கள், இதனால் அவர்களின் நகரங்களில் வன்முறைக் குற்றங்கள் உருவாகின்றன, ஒரு சுழல் தீவிரமாக கட்டுப்பாட்டில் இல்லை” என்று அவர் கூறினார்.

ஓவல் அலுவலகத்தில் வசிப்பவர் ஒரு பொய்யர், மற்றும் தொடர்ச்சியான பயிற்சி இருந்தபோதிலும், மிகவும் திறமையானவர் அல்லர். எந்தவொரு பொலிஸ் சேவையும் பற்றாக்குறையில் இல்லை, உடைந்து போக விடவுமில்லை. எந்தவொரு ஜனநாயகக் கட்சி அரசியல்வாதியும் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் போலவே முதலாளித்துவ அரசின் அடக்குமுறை கருவியை அவையும் பாதுகாக்கின்றன.

சிகாகோவில் நடந்த இரத்தக்களரி அலைக்கு அந்த நகரத்தில் காவல்துறையினரின் எந்தவொரு "மென்மைத்தன்மையும்" காரணமாக இருந்ததாக கூற முடியாது. மாறாக, பல தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சியின் ஆட்சியின் கீழ் சிகாகோ, பொலிஸ் மிருகத்தனம், சித்திரவதை மற்றும் கொலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகிவிட்டது. தற்போதைய மேயர், லோரி லைட்ஃபுட் (Lori Lightfoot), முந்தைய மேயரான ரஹ்ம் இமானுவலின் கீழ் நடந்த பொலிஸ் படுகொலைகளை மூடிமறைப்பதற்கு தனது அரசியல் முன்னேற்றத்தை பயன்படுத்தினார்.

லைட்ஃபுட்டின் சட்ட ஒழுங்கு கொள்கைகளை அம்பலப்படுத்துவது தொடர்பாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) சமீபத்தில் குறிப்பிட்டது போல:

அரசியல் வலதுசாரிகள் நீண்டகாலமாக சிகாகோ நகரத்தை குழப்பமானதாகவும், சட்டவிரோதமாகவும் சித்தரிக்க முயன்றாலும், மிக மோசமான அண்டைப் பகுதிகளில் கும்பல்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் வன்முறை குவிந்துள்ளது. பெருநிறுவன நலன்களுக்கான சேவையில் நகரத்தின் ஜனநாயகக் கட்சி எந்திரம் பின்பற்றும் கொள்கைகளின் அடிப்படையில், தொழிற்சாலைகளை மூடச்செய்வது, மற்றும் பள்ளிகள், மனநல மையங்கள் மற்றும் ஏனைய சமூக சேவைகளையும் மூடச்செய்வது போன்றவையே அண்டைப் பகுதிகள் அனுபவிக்கும் கடுமையான பாதிப்புகளாக உள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த இரத்தக்களரிமிக்க எழுச்சி என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் சமூக சிதைவின் வெளிப்பாடாகும், இதற்கான பொறுப்பை இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் பகிர்ந்து கொள்கின்றன.

ட்ரம்பின் மறுதேர்தல் பிரச்சாரம் போர்ட்லாந்து மற்றும் சிகாகோவில் நிகழ்வுகளை இணைக்கும் தொடர்ச்சியான இலத்திரனியல் விளம்பரங்களுக்கு 20 மில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. "தீவிர இடது குழுக்கள் எங்கள் தெருக்களில் ஓடுகின்றன, அவை முழுமையான குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்றும் "அவர்கள் எங்கள் நகரங்களை அழித்து, கலவரத்தைத் தூண்டுகிறார்கள்" என்றும் விளம்பரங்களில் ஒன்று கூச்சலிடுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் “உதவியை” ஏற்றுக்கொண்டு மேயர் லைட்ஃபுட் நேற்று ஒரு அறிக்கையில் வலியுறுத்தியது போல, சிகாகோவிற்குள் மத்திய உளவுத்துறை முகவர்களின் உட்புகுதல் திரைக்குப் பின்னால் நடத்தப்படுமே தவிர, நகரத்தின் வீதிகளில் அல்ல, மேலும் அவர்கள் பிராந்தியத்திற்கான அமெரிக்க அரசு வழக்குத்தொடுனரின் வழிகாட்டுதல் படி செயல்படுவார்களே தவிர, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (Department of Homeland Security) கீழ் அல்ல.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்திய அரசாங்கத்திற்குரிய ஒரு பெரும் பங்கிற்கான முன்னுதாரணத்தை அமைக்க ட்ரம்ப் முனைந்தாலும் கூட, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்கள், சிகாகோ மற்றும் இல்லினோயில் பொலிஸ் அடக்குமுறையை அதிகரிக்கச் செய்வதற்கான இயக்குபவரின் இருக்கையில் தொடர்ந்து இருக்கும்.

இருந்தாலும், போர்ட்லாந்தில் நிலைமை வேறுபட்டிருக்கும். உள்ளூர் காவல்துறையினர், கூட்டாட்சி அலுவலக கட்டிடத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி படைகளாலும், மற்றும் இரண்டு தொகுதிகள் தொலைவிலுள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தாலும் நகரப்புற பகுதிகளுக்கு பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை நீதிமன்ற விசாரணையில், மத்திய உளவுத்துறை முகவர்களை நம்பத்தகுந்த காரணங்கள் எதுவுமில்லாமலும், அவர்களை சரியாக அடையாளம் காணாமலும் கைதுசெய்வதை தடைசெய்ய கூட்டாட்சி நீதிபதியை ஒரு தடையுத்தரவை வழங்கச் செய்வதற்கு ஒரேகன் மாநில அதிகாரிகள் முனைந்தனர். அப்போது, மாநில அரசு வழக்குத்தொடுனரான எலென் ரோசன்ப்ளூம் (Ellen Rosenbloom), “அரசியலமைப்பற்ற பொலிஸ் அரசு வகை தந்திரோபாயங்கள்” என்று DHS அழைத்ததை கண்டித்தார்.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகளுடன் இணைந்து பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்கள், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு, புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கம் மற்றும் பெரும் துறையின் ஏனைய துணை பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட, Rapid Deployment Force என்றழைக்கப்பட்ட முந்தைய இரகசிய உளவு அமைப்பின் 114 முகவர்களை DHS தான் அனுப்பியிருந்தது என்பதை குறித்துக் காட்டியது.

போர்ட்லாந்தில் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைக்கு, இராணுவ பாணி குறியீட்டு பெயர் "Operation Diligent Valor" வழங்கப்பட்டது. இது ஜூலை 4 ஆம் தேதி தொடங்கியது, சந்தர்ப்பங்களை பார்த்து இரண்டு கூட்டாட்சி கட்டிடங்களுக்குள் முகவர்களை நிறுத்தியது, இறுதியாக ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தலையீட்டை முன்வைத்தது. முகவர்கள் உருமறைப்பு பாணியிலான இராணுவ சீருடைகளையும் மற்றும் “பொலிஸ்” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட பேட்ஜ்களையும் அணிந்திருந்தனர், என்றாலும் அவர்களது பெயர் மற்றும் முகமை பற்றி அடையாளம் காண்பதற்கான அடையாளங்கள் எதுவும் அவர்களிடமில்லை. அவர்கள் அடையாளம் குறிக்கப்படாத வாகனங்களைப் பயன்படுத்தினர் என்பதுடன், நம்பத்தகுந்த காரணம் எதுவுமின்றி மக்களை தடுத்து வைத்தனர்.

புதன்கிழமை செனட் குழு விசாரணையில், ஒரேகனின் செனட்டர் ரோன் வைடன் போர்ட்லாந்தில் அமைக்கப்பட்ட முன்னுதாரணத்தை பற்றி எச்சரித்தார். "நாங்கள் இப்போது மணலில் கோடு வரையவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் இராணுவச் சட்டத்தின் யதார்த்தத்தை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தில் உள்நாட்டு பாதுகாப்புக்கான முதல் செயலாளராக இருந்தவரும், பென்சில்வேனியாவின் குடியரசுக் கட்சி முன்னாள் ஆளுநருமான, டோம் ரிட்ஜ் (Tom Ridge), “ஜனாதிபதியின் தனிப்பட்ட ஆயுதக் குழுவாக DHS நிறுவப்படவில்லை” என்று ஒரு வானொலி நேர்காணலில் தெரிவித்தார்.

ஆனால், ஜனநாயகக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ பைடன், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான அல்லது ட்ரம்ப் தனது பதவி விலகலின் போது DHS ஐ துணை இராணுவப் படையாக மாற்றுவதற்கான அவரது முயற்சி குறித்து எதையும் குறிப்பிடாத ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

“நிச்சயமாக, கூட்டாட்சி சொத்தை பாதுகாப்பதற்கான உரிமையும் கடமையும் அமெரிக்க அரசாங்கத்திற்கு உள்ளது,” என்று அவர் அறிவித்தார். மேலும், “ஒபாமா-பைடன் நிர்வாகம் இந்த நாட்டில் பிரிவினைக்கான தீயை தூண்ட முயற்சிக்காமல், இத்தகைய மிகச்சிறந்த தந்திரோபாயங்கள் எதையும் நாடாமல் நாடு முழுவதிலுமான கூட்டாட்சி சொத்துக்களை பாதுகாத்தது. நம்மை பிரிப்பதற்கு பதிலாக ஒன்றிணைக்கும், நம்மிடையே எரியூட்டுவதற்கு பதிலாக அமைதியை ஏற்படுத்தும், மற்றும் தனது அரசியல் நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதை காட்டிலும் சட்டத்தை உண்மையாக செயல்படுத்தும் ஒரு ஜனாதிபதி நமக்கு தேவை” என்றும் அவர் தெரிவித்தார்.

பைடனின் பிரச்சாரத்திற்காக “ஜனநாயக சோசலிஸ்ட்” தண்ணீர் விநியோகிக்கும் சிறுவனாக மாறிய பேர்னி சாண்டர்ஸைப் பொறுத்தவரை, ட்ரம்பின் நடவடிக்கைகள் "ஒரு பொலிஸ் அரசு என்றால் என்ன" என்று எச்சரித்து ஆதரவாளர்களுக்கு ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். ஆனால் அவரது ஓரே தீர்வு, நவம்பர் 3 அன்று பைடனுக்கு வாக்களிப்பதை தவிர, “எங்கள் சமூகங்களில் கூட்டாட்சி இராணுவ படைகளின் நடவடிக்கைகளை வெகுவாகக் குறைப்பதற்கான” சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகும்.

நிச்சயமாக, குடியரசுக் கட்சி செனட் அத்தகைய சட்டத்தை நிறைவேற்றாது, அது நிறைவேற்றப்பட்டாலும் கூட அது ட்ரம்பால் வீட்டோ செய்யப்படும்: அவருடைய இலக்கு, சாண்டர்ஸ் தனது மீதமுள்ள ஆதரவாளர்களையும் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகளை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் திசைதிருப்ப முற்படுவதாகும்.

Loading