முன்னோக்கு

ட்ரம்பும் காங்கிரஸூம் வேலைவாய்ப்பற்றோரை பட்டினியில் தள்ளுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் காங்கிரஸ் சபையிலுள்ள ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்ற நிலையில், நடைமுறையளவில் கடந்த நான்கு மாதங்களாக வேலைவாய்ப்பற்றோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வந்த வாரத்திற்கு 600 டாலர் அரச உதவித்தொகை இந்த வாரத்துடன் நிறுத்தப்பட அனுமதிக்கப்படலாம். இந்த உதவித்தொகைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அது மீண்டும் தொடர்ந்து வழங்கப்படுவதுகூட மாதங்களுக்கு பின்னர் அல்லது சில வாரங்களுக்குப் பின்னர் தான் நடக்கும். அவ்வாறு நடந்தாலும் கூட, அந்த தொகை பெரிதும் குறைந்தளவிலேயே இருக்கும்.

பெறுநர்கள், உணவு கொடுக்கும் போது Giving Hope Food Pantry யில் உணவுக்காக வரிசையில் நிற்கிறார்கள், இது ஜூலை 21, 2020 செவ்வாயன்று நியூ ஆர்லியன்ஸில் நகர சபை உறுப்பினர் Cindi Nguyen ஏற்பாடு செய்தது. (AP Photo/Gerald Herbert)

எல்லாவற்றுக்கும் மேலாக, இது, வேலைவாய்ப்பின்மை உதவிக் கோரி புதிதாக பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு மாத கால வாராவார அதிகரிப்பில் முதல்முறையாக கடந்த வாரம் 1.4 மில்லியனுக்கு உயர்ந்தது என்ற வியாழக்கிழமை செய்திகளின் வெளிச்சத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. வேலைவாய்ப்பின்மை உதவிகளைத் தொடர்ந்து கோரியுள்ள 16.1 மில்லியன் தொழிலாளர்களுடன், இவர்களின் மாநில அளவிலான உதவிக்காலம் முடிந்து ஆனால் மத்திய அரசின் உதவிகளுக்கு மட்டுமே இவர்கள் தகுதி உடையவர்களாக இருக்கின்ற நிலையில், ஒப்பந்ததாரர்களும் சுய-தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் தொற்றுநோய் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகையின் கீழ் வருவதால் அவர்களுடன் சேர்ந்து, இப்போது மத்திய அரசின் உதவித்தொகை பெற்று வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனாக உள்ளது: அதாவது, ஒவ்வொரு ஐந்து தொழிலாளர்களின் ஒருவர் இவ்வுதவி பெறுகின்றனர்.

வேலைவாய்ப்பு இழப்பீட்டு தொகையின் துல்லியமான அளவு மீது தொடர்ந்து கொண்டிருக்கும் சர்ச்சை, அடுத்த வார தொடக்கத்தில் மில்லியன் கணக்கானவர்கள் உதவித்தொகைகளை இழப்பார்கள் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்துகிறது, இது ஏனென்றால் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அவற்றின் கணினி அமைப்புகளை மறுநிரல் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும், முதலில் அவை வாராந்தர 600 டாலர் மத்திய அரசின் கூடுதல் நிதியுதவியை நீக்க வேண்டும், பின்னர் தவிர்க்கவியலாமல் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் வெகுவாக குறைக்கப்பட்ட நிதியுதவிகளை அவற்றில் மீளமைக்க வேண்டும். சில மாநிலங்களின் தொழிலாளர்கள் மார்ச் மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட CARES சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் ஆரம்ப தொகைகளைக் கூட பெறவில்லை, ஏனென்றால் அமெரிக்க வரலாற்றிலேயே வேலைவாய்ப்பின்மையில் ஏற்பட்ட மிகப்பெரிய மற்றும் மிக வேகமான அதிகரிப்பின் தாக்கத்தால் பழைய கணினி அமைப்புமுறைகள் செயலிழந்து போயின.

செனட் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவரின் மாநில வேட்பாளர்களுக்கு தெரிவிக்கையில், ஆகஸ்ட் வரையில் காங்கிரஸ் எந்த இறுதி உடன்பாட்டிற்கும் ஒப்புதல் வழங்காது என்றார். இது பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் மத்திய அரசின் கூடுதல் நிதியுதவியை இழப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. வாரத்திற்குச் சராசரியாக வெறும் 300 டாலர், அதுவும் டென்னஸியில் வாரத்திற்கு 144 டாலர் என்றளவுக்கு குறைவாக மாநிலங்கள் வழங்கும் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை மொத்தத்தில் போதுமானளவையும் விடக் குறைவாக இருக்கும். இது உதாரணத்திற்கு ஒரு வேலைவாய்ப்பற்ற தொழிலாளரின் வாராந்த வருமானத்தில் 64 சதவீத வெட்டை பிரதிநிதித்துவம் செய்வதாக House Ways and Means குழுவின் ஒரு பகுப்பாய்வு குறிப்பிட்டது.

வாரத்திற்கு 200 டாலர் என்றளவுக்கு மிகவும் குறைந்த மட்டத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியைத் தொடர்ந்து வழங்குவதற்கான ட்ரம்ப் ஆதரவிலான திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரையறைகள் மீது மெக்கொன்னலும் மற்ற உயர்மட்ட செனட் சபை குடியரசுக் கட்சியினரும் வெள்ளை மாளிகையில் தொடர்ந்து விவாதித்து கொண்டிருக்கிறார்கள், இதை நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் குறிப்பிடுகையில் "ஏறக்குறைய 70 சதவீத கூலி மாற்றீட்டின் அடிப்படையில்" இருப்பதாக விவரித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் குறுகிய கால விடுப்பில் அனுப்பப்பட்ட தொழிலாளர்களுக்கு சராசரியாக 30 சதவீத கூலி வெட்டுக்கான இந்த திட்டமும் கூட, மத்திய அரசின் கூடுதல் நிதியுதவியில் செய்யப்படும் இந்த வெட்டுக்களைப் பகுதியாக ஈடுகட்டுவதற்கு திவாலான மாநில அரசாங்கங்களின் வேலைவாய்ப்பின்மை இழப்பீட்டு உதவித்தொகையை உயர்த்துவதைச் சார்ந்திருக்கும்.

வேலைவாய்ப்பின்மை இழப்பீட்டின் மீது ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் சொந்த திட்டங்களை முன்வைக்கின்றனர். இதுவும் குறிப்பிட்டளவு வெட்டைக் கொண்டிருக்கும். மினுசின் கருத்துக்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க விடையிறுப்பு பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் Steny Hoyer வசமிருந்து வந்தது. இவர் CNBC இக்கு கூறுகையில் கூலிகளில் வெறும் 70 சதவீதத்தை மட்டும் மீளமைப்பது "நாங்கள் பின்பற்ற விரும்பும் கொள்கையில் இல்லை,” என்று கூறிய அதேவேளையில், “நாங்கள் அதை குறைக்க ஒப்புதல் வழங்கினால், அது குறிப்பிட்ட காலத்திற்குள் நிகழவேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

“இது உடன்படிக்கையிலிருந்து பின்வாங்குவதில்லை,” என்றவர் நிறைவு செய்தார். இந்த அறிக்கை ஜனநாயகக் கட்சியின் முழுமையான சிடுமூஞ்சித்தனத்தையும் இரக்கமில்லா குரூரத்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது. மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்களின் வருமானங்கள் கடுமையாக குறைக்கப்படும் இந்த திட்டம் மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு ஒரு பின்வாங்கலாகும், அதன் வருமானம் கடுமையாகக் குறைக்கப்படும். ஆனால் ஜனநாயகக் கட்சியினர் இதில் ஆட்சேபிக்கத்தக்கதாக எதையும் காணவில்லை.

காங்கிரஸ் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் வெள்ளை மாளிகையின் பல்வேறு முன்மொழிவுகளுக்குப் பின்னால், ஒரு பொதுவான வர்க்க நோக்கம் உள்ளது. வாரத்திற்கு 600 டாலர் வேலைவாய்ப்பின்மை இழப்பீட்டு கூடுதல் உதவித்தொகையானது, கொரோனா வைரஸின் ஆபத்துக்களைக் கருத்தில் கொள்ளாமல் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் வேலைகளுக்குத் திரும்ப நிர்பந்திப்பதற்கான தங்களின் பிரச்சாரத்திற்கு ஒரு மிகப்பெரும் தடையாக அமெரிக்க முதலாளித்துவவாதிகள் கருதுகிறார்கள்.

பல தொழிலாளர்களை பொறுத்த வரையில் மாநில மற்றும் மத்திய அரசின் வேலைவாய்ப்பின்மை நிதியுதவி சேர்ந்து வாரத்திற்கு சராசரியாக அண்மித்து 1000 டாலர் என்பது பண்டகச்சாலையிலும், ஆலைகள், துரித உணவு விடுதிகள் மற்றும் சில்லறை வர்த்தக கடைகளிலும் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு முன்னர் அவர்கள் பெற்று வந்த அற்ப கூலிகளுடன் ஒப்பிடுகையில் இது சம்பள உயர்வை பிரதிநிதித்துவம் செய்வதாக பெருநிறுவன செயலதிகாரிகள் புலம்புகின்றனர்.

பெருவணிகம் சார்ந்த பத்திரிகையான Forbes, “சாத்தியமான வேலைவாய்ப்பின்மை திட்டம் என்பது இந்த வெட்டை சமாளிக்கமுடியாத பத்து மில்லியன் கணக்கானோருக்கு மிகப்பெரிய வருவாய் வெட்டை அர்த்தப்படுத்துகிறது,” என்று இன்றைய அதன் வலைப் பக்கத்தில் ஒரு தலைப்புசெய்தி வெளியிட்டுள்ளது. நிதியியல் செல்வந்த தட்டுக்களைப் பொறுத்த வரையில், அதுவொரு குற்றப்பத்திரிகை இல்லை, மாறாக அந்த திட்டத்தின் நோக்கமே அது தான். கோவிட்-19 அர்த்தத்தில் எவ்வளவு ஆபத்தாக இருந்தாலும் சரி எவ்வளவு குறைந்த சம்பளமாக இருந்தாலும் சரி, இந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த ஏதேனும் வேலையில் சேர்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை என்றவர்கள் கணக்கிடுகின்றனர்.

இதற்கு கூடுதலாக, பெரு வணிகங்கள், CARES சட்டம் போன்று, எந்தவொரு புதிய மத்திய அரசின் செலவினங்களிலும் மிகப் பெரியளவிலான கடன்கள் மற்றும் மானியங்கள் என இரண்டு விதத்திலும், மற்றும் காசோலைப் பாதுகாப்பு திட்டத்தில் (Paycheck Protection Program) "சிறுவணிக" நிதிகள் என்றழைக்கப்படுவதிலும் பெருநிறுவன அமெரிக்காவுக்குப் பெரும் பங்கை உறுதிப்படுத்தி வைக்க விரும்புகின்றன, இவற்றில் பெரும்பங்கு பெரிய நிறுவனங்களுக்கும் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் அரசியல்ரீதியில் தொடர்பில் உள்ளவர்களுக்குமே சென்றுள்ளது.

மத்திய அரசின் கூடுதல் நிதியுதவிகளை முடிவுக்குக் கொண்டு வருவது பாரியளவில் அவலங்கள் மற்றும் சேதங்களின் ஒரு பிரமாண்ட அலையைக் கட்டவிழ்த்து விடும் என்பதில் உத்தியோகபூர்வ வாஷிங்டன் முழுமையாக நனவுபூர்வமாக உள்ளது. மத்திய அரசின் மூலமாக ஆதரிக்கப்பட்ட வீட்டுவசதி திட்டத்தின் உரிமையைப் பறிக்கும், முதலில் CARES சட்டத்தில் கொண்டு வரப்பட்ட, கடன் இடைநிறுத்தக் காலத்தை ட்ரம்ப் நிர்வாகம் சத்தமில்லாமல் 30 நாட்களுக்கு நீடித்துள்ளது. தற்போது வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருக்கும் மற்றும் செப்டம்பர் 1க்குப் பின்னர் வெளியேற்றத்தை முகங்கொடுக்கும் 12.3 மில்லியன் குடும்பத்தினர் என மதிப்பிடப்படுவோருக்கு எதிராக அது நடவடிக்கை எடுக்க தொடங்குவதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகை அவசியமான தயாரிப்புகளை —குறிப்பாக உள்ளூர் பொலிஸ் மற்றும் உயர்அதிகாரிளின் துறைகளைப் பலப்படுத்துவதை— செய்ய விரும்புகிறது.

வடக்கு கரோலினா ஒரு மாநிலத்தில் மட்டுமே ஏறக்குறைய ஒரு மில்லியன் குடும்பங்கள் "அவர்களின் மின்கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் கழிவுநீர் கட்டணம் கட்ட முடியாமல் உள்ளனர், மத்திய அரசின் சட்ட வகுப்பாளர்கள் கூடுதல் அவசரகால உதவிகளுக்கு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்காவிடில் அங்கே வசிப்போரும் அவர்களின் நகரங்களும் கடுமையான நிதி இன்னல்களுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் உள்ளது" என்று வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு செய்தி வரவிருக்கும் சமூக பொறிவின் அளவைச் சுட்டிக்காட்டுகிறது. Duke Energy நிறுவனம் மட்டுமே 130,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, இவர்கள் 60 நாட்களுக்கும் அதிகமாக மின்கட்டண பாக்கி வைத்துள்ளனர்.

அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் இரண்டு பெருநிறுவன கட்டுப்பாட்டிலான கட்சிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டு வருகின்றன. அது முன்கண்டிராத ஒரு சமூகப் பேரிடரின் பின்புலத்தில் தான் நடப்பதாக இருக்கும். பாசிசவாத ட்ரம்பிடமும் சரி அல்லது வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிஐஏ இன் விருப்பத்திற்குரிய வேட்பாளரான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனிடமும் சரி, பத்து மில்லியன் கணக்கான இந்த உழைக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு ஒன்றும் இல்லை.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் 2020 தேர்தல் வேட்பாளர்களுமான ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி நொரிஸ்ஸா சாண்டா குரூஸ் ஆகியோர் அமெரிக்க நிதியியல் உயரடுக்கின் திராணியற்ற ஆட்கொலை கொள்கையால் தோற்றுவிக்கப்பட்ட நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பாகாது என்றுரைக்கின்றனர். காலத்திற்கு முன்கூட்டிய பாதுகாப்பற்ற இந்த வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரம் மற்றும் பள்ளிக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறும், இந்த தொற்றுநோயால் ஓரங்கட்டப்பட்டுள்ள எல்லா தொழிலாளர்களுக்கும் முழு சம்பளமும் உதவிகளும் வழங்குமாறும், வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் இன்றியமையா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலையிடமும் ஆபத்துக்கால சம்பளமும் வழங்குமாறு நாங்கள் கோருகிறோம்.

இந்த நெருக்கடிக்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரின் விடையிறுப்பு ஒட்டுமொத்தமாக இந்த இலாபகர அமைப்புமுறையின் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது. உழைக்கும் மக்கள் ஒரு சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நேரடி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Loading