முன்னோக்கு

அமெரிக்காவில் இறப்பு 150,000 யும் தாண்டி முடிவின்றி தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வார இறுதிக்குள், 150,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்திருப்பார்கள்.

ஏனென்றால், நோய்தொற்று அங்கு கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது. வெள்ளிக்கிழமை, அமெரிக்காவில் ஒரே நாளில் 78,000 புதிய நோய்தொற்றுக்கள் பதிவானது என்ற நிலையில், மற்றொரு உச்சபட்ச எண்ணிக்கையை அது முறியடித்தது. மேலும் அதே நாளில் 1,100 க்கும் மேற்பட்டோர் இந்த நோய்தொற்றால் இறந்துள்ளனர்.

நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (Centers for Disease Control-CDC) தற்போது, ஆகஸ்ட் மாத மத்திக்குள் அமெரிக்க இறப்பு எண்ணிக்கை 175,000 ஆக அதிரடியாக அதிகரிக்கும் என்று முன்கணிக்கிறது, மேலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration) முன்னாள் இயக்குநரான டாக்டர். ஸ்காட் கோட்லியெப் (Dr.Scott Gottlieb) அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 300,000 ஆக இரட்டிப்பாகக்கூடும் என்று கூறுகிறார். “இதன் முடிவுக்கு அருகே நாம் வந்துவிட்டோம் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை,” என்று டாக்டர் அந்தோனி ஃபவுசி (Dr. Anthony Fauci) வெள்ளிக்கிழமை MarketWatch ஊடகத்திற்கு தெரிவித்தார்.

கலிஃபோர்னியா, டெக்சாஸ் மற்றும் ஃபுளோரிடாவில் உள்ள டசின் கணக்கான மருத்துவமனைகள் அவற்றின் திறனை கடந்த நிலையில், சில மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளில் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவாக உள்ளவர்களை திருப்பியனுப்பத் தொடங்கியுள்ளன. மிசிசிப்பி மற்றும் டெக்சாஸில் உள்ள பிணவறைகள் நிரம்பிவிட்டன, மேலும் நாடு எங்கிலுமுள்ள மருத்துவமனைகள் உடல்களை சேர்த்து வைக்க குளிரூட்டபட்ட லாரிகளை வாடகைக்கு எடுத்துள்ளன. இந்த மாநிலங்களைப் பற்றி குறிப்பிடுகையில், வெள்ளை மாளிகை கொரொனா வைரஸ் பணிக்குழு ஒருங்கிணைப்பாளரான (White House Coronavirus TaskForce Coordinator) டாக்டர் டெபோரா பிர்க்ஸ் (Dr.Deborah Birx), “தற்போது நாம் அடிப்படையில் மூன்று நியூயோர்க்குகளை கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த பேரழிவு, நிதிய தன்னலக்குழுவை வளப்படுத்துவது ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு, நோய்தொற்று வெடித்துப் பரவுகையில் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வலியுறுத்தும் வகையில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்களின் உடந்தையுடன், ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் நேரடி விளைவாக ஏற்பட்டுள்ளது.

நோய்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பதிலாக, வெள்ளை மாளிகை எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் பேரழிவை இன்னும் மோசமாக்கும் விதமாகவே பங்காற்றியுள்ளது. ட்ரம்பின் நடவடிக்கைகள் அண்ணளவாக 150,000 மக்களின் தடுக்கப்படக்கூடிய இறப்புக்களுக்கு வழிவகுத்தன, அவர் விரும்பியதைச் செய்ய முடிந்தால், மேலும் நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோவார்கள்.

மனித வாழ்க்கையை முற்றிலும் அலட்சியப்படுத்தும் விதமாக, வெள்ளை மாளிகை, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்யும் செயல்முறையை துரிதப்படுத்தக் கோருகிறது, அதிலும் பள்ளிகளை மரணப் பொறிகளாக மாற்றும் வகையில் ஆசிரியர்களையும் பள்ளி ஊழியர்களையும் மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கு முனைகிறது. அதே நேரத்தில், வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்ட பல மில்லியன் மக்களுக்கு ஒரே உயிர்நாடியாக இருக்கும் 600 டாலர் கூடுதல் வேலையின்மை நலனை நீக்குவதை உறுதிசெய்வதற்கு சாத்தியமுள்ள அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

தொற்றுநோய் பரவுவதற்கு அதிக பங்களிப்பு செய்த அமெரிக்க தன்னலக்குழுவினுள் இருக்கும் புள்ளிவிவரங்கள் தான் அதிகம் பயனடைந்ததை காட்டுகின்றன. சுகாதார அதிகாரிகளை மீறி கலிஃபோர்னியாவின், ஃப்ரீமாண்டில், டெஸ்லா ஆலையை சட்டவிரோதமாக மீண்டும் திறந்த எலோன் மஸ்க் (Elon Musk), ஒரு தலைமை நிர்வாக அதிகாரிக்கு இதுவரை வழங்கப்படாத வகையில் 2.1 மல்லியன் டாலர் பெரியளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். மஸ்க் இந்த ஆண்டு தனது நிகர மதிப்பை 75 பில்லியன் டாலர் அளவிற்கு மும்மடங்காக அதிகரித்துள்ளார்.

பொது சுகாதார நிபுணர்கள், வெள்ளை மாளிகை அதன் ஆட்கொலைக் கொள்கைகளிலிருந்து பின்வாங்கும் படி மன்றாடுகின்றனர். மாநிலங்கள் அவற்றின் பொருளாதாரங்களை மீண்டும் திறப்பதை மெதுவாக்க, அல்லது மீளப்பெற ஃபவுசி மீண்டும் மீண்டும் வலியுறுத்திய அதேவேளை, இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில், 250 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் அமெரிக்கா அதன் பொருளாதாரங்களை மீண்டும் “திறக்கத் தொடங்குவதை, நிறுத்தும்படி” வலியுறுத்தினர்.

ஆனால் ட்ரம்ப் அதற்கு முற்றிலும் எதிராக செயல்படுகிறார்: அதாவது வெள்ளை மாளிகை, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்வதற்கான அதன் பிரச்சாரத்தை இரட்டிப்பாக்குகிறது. அந்த முடிவை நோக்கி நகரும் விதமாக, மாணவர்கள் சில வாரங்களுக்குள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும் என்று இது கோருகிறது, அப்போதுதான் அவர்களது பெற்றோர்கள் அமெரிக்க பெருநிறுவனங்களுக்காக இலாபமீட்டும் வகையில் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியும் என்று கருதுகிறது.

வியாழக்கிழமை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), ட்ரம்பின் தனிப்பட்ட உரை எழுத்தர்கள் தயாரித்த உரையில் குறிப்பிட்டிருந்தது போல, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதற்கிடையில், ஆசிரியர்களை “அத்தியாவசிய” தொழிலாளர்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ட்ரம்பின் பொறுப்பற்ற உந்துதல் நூறாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும், என்றாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அமெரிக்காவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை, பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் ரீதியாக அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டாக உள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாடு முழுவதிலுமாக கோவிட்-19 பரவிய நிலையில், வெள்ளை மாளிகை, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்கள் என அனைத்தும் மவுனம் சாதித்தன.

இந்த மவுனம் வேண்டுமென்றே காட்டப்பட்டது. ஏனென்றால், இரகசிய செய்தி வெளியீட்டாளரான ரிக் பிரைட் (Rick Bright) காங்கிரஸின் சாட்சியத்தில் தெளிவுபடுத்திய படி, “ஜனவரி 2020 ஆரம்பத்திலேயே கோவிட்-19 இன் அச்சுறுத்தல் எழும் என்பதை பொது சுகாதார அதிகாரிகள் முழுமையாக அறிந்திருந்தனர்.” என்றாலும் கூட, சட்டமியற்றுபவர்களின் ஒரே பதில் பங்குகளின் பங்குகளை விற்க வேண்டும் என்பதே, மேலும் ஒரு பெரிய பங்கு விற்பனை வரவிருப்பது பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதுமாக நோய்தொற்று பரவுகையில் அவர்கள் எதையும் செய்யவில்லை.

மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் பங்குச் சந்தைக்குள் 4 டிரில்லியன் டாலர் தொகையை பாய்ச்சுவதும், மற்றும் 2 டிரில்லியன் டாலர் CARES சட்டத்தின் மூலம் மார்ச் மாதத்தில் பெருநிறுவனங்களுக்கு பாரிய பிணையெடுப்பை வழங்குவதும் மட்டுமே வாஷிங்டனின் ஒரே பதிலிறுப்பாக இருந்தது, அதேவேளை இந்த சட்டம் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக மிகச்சிறிய நிதி ஒதுக்கீட்டையே கொண்டிருந்தது.

பிணையெடுப்பு பாதுகாப்பு பெற்றவுடன், ஊடகங்கள் உடனடியாக வணிகங்களை மீண்டும் திறப்பதற்குக் கோரின, அத்துடன் நியூ யோர்க் டைம்ஸ் செய்தியிதழ் பூட்டுதல்களை “பாதுகாப்பது” “நோயை காட்டிலும் மோசமானது” என்று அறிவித்தது. அடுத்த நாளிலேயே, முன்கூட்டியே வேலைக்குத் திரும்பச் செய்வதை நியாயப்படுத்தும் தனது கூற்றை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டதான வெள்ளை மாளிகையுடன் ஒருங்கிணைந்த நவ நாஜி கூறுகளின் தலைமையிலான சிறிய ஆர்ப்பாட்டங்கள், வணிகங்களை மீண்டும் திறக்க மக்கள் கோரிக்கை விடுப்பதாக காட்டிக் கொண்டன.

இந்நிலையில், நோய்தொற்றை கட்டுப்படுத்த மேற்கொண்டிருந்த மிகச்சிறிய முயற்சிகளைக் கூட மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இரண்டும் விரைந்து கைவிட்டன என்ற நிலையில், மெயின், வடக்கு கரோலினா, கான்சாஸ் மற்றும் கொலராடோ ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் உட்பட, பாதிக்கும் மேற்பட்ட ஆளுநர்கள் CDC இன் சொந்த வழிகாட்டுதல்களை மீறி வணிகங்களை மீண்டும் திறந்து கொண்டிருக்கின்றனர், இவர்கள் அனைவருமே ஜனநாயகக் கட்சியினர்.

தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான இந்த இருகட்சி பிரச்சாரம், கடந்த இரண்டே மாதங்களில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோகும் வகையிலான ஒரு பேரழிவை தற்போது உருவாக்கியுள்ளது.

நோய்தொற்றுக்கு வழங்கப்பட்ட பேரழிவுகர பதிலிறுப்பு, மன்ஹாட்டன் உயரடுக்கிலிருந்து வந்த கோடீஸ்வர வியாபாரி டொனால்ட் ட்ரம்பின் உருவடிவில் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் அறியாமை, பேராசை, முட்டாள்தனம் மற்றும் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.

ட்ரம்ப், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சார்பாக பேசுகையில், ஊழல் மற்றும் குற்றவியல் நிறைந்த அரசாங்கத்திற்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பிற்கும் மக்கள் எதிர்ப்பின் வளர்ச்சியை கண்டே அதிகம் அஞ்சுகிறார்.

அமெரிக்க நிர்வாகத்தையும் மற்றும் அமெரிக்காவின் பாசிச பொலிஸ் படைகளை அது மேம்படுத்துவதையும் கண்டித்து, அமெரிக்க வரலாற்றில் எழுந்துள்ள சில மிகப்பெரிய பரந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலிறுக்கும் விதமாக, அமெரிக்காவின் பெரு நகரங்களில் மத்திய பொலிஸையும் துணை இராணுவப் படையினரையும் களமிறக்கி, அமெரிக்காவை ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்குள் கொண்டுவர ட்ரம்ப் முயல்கிறார்.

ஜூன் மாதத்தில் ட்ரம்ப் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு முயற்சித்த பின்னரும், தற்போது அவர் படைகளை நிலைநிறுத்திய பின்னரும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் பொது ஆலோசகர் ஒருவர் தனது நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை "குண்டர் படை" என்று அழைத்தார், அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவும் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரவில்லை.

“வெளிநாட்டு கூட்டு” மோசடி என்ற கூற்றுக்களின் அடிப்படையில் ட்ரம்பை குற்றம்சாட்ட முயன்று கடந்த ஆண்டின் குறிப்பிட்ட பகுதியை செலவழித்த ஜனநாயகக் கட்சியினர், பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து அமெரிக்காவை ஒரு பொலிஸ் அரசாக ட்ரம்ப் மாற்றுகின்ற தற்போதைய நிலையிலும் கூட மவுனம் சாதிக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியும் அதன் வக்காலத்து வாங்குபவர்களும் ஜோ பைடனின் தேர்தலில் எல்லாவற்றையும் பதுக்கி வைத்திருக்கிறார்கள், அது ஒரு வலதுசாரி நிறுவனமாகும், அது ட்ரம்புடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு விடயங்களிலும் உடன்படுகிறது. நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் தனக்கு எதிராகச் சென்றால் அதைப் புறக்கணிக்க விரும்புவதாக ட்ரம்ப் தெளிவுபடுத்திய போதிலும் இதுதான் நிலையாகும். பொலிஸ் அரசு வழிமுறைகள் மூலம் ஆட்சியில் நீடிப்பதற்கான ஏற்பாடுகளை ட்ரம்ப் செய்து வருகிறார் என்பது தெளிவாகிறது.

ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, அவர்களது பங்கு தொகுப்புக்கள் அரசாங்க பிணையெடுப்புக்களால் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களது கூட்டுத் தலைமை ஆட்சிகளையும் மாளிகைகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பதால், நோய்தொற்று அவர்களுக்கு பரலோகத்திலிருந்து கிடைத்த பரிசாகும். அதேவேளை, கோவிட்-19 நோய்தொற்று பரவுவதற்கான அனுகூலமான சூழ்நிலைகளாகவுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்களுக்கும், மற்றும் வகுப்பறைகளுக்கு திரும்புவதற்கு முன்பாக தங்களது விருப்பங்களை குறிப்பிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், நோய்தொற்றை தடுப்பது என்பது வாழ்வா சாவா பிரச்சினையாக உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதிலும் மற்றும் உலகெங்கிலுமாக தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாள வர்க்கம், ஆளும் வர்க்கத்தின் கொலைவெறி பிடித்த மீண்டும் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை உருவாக்க வேண்டும். மருத்துவ முன்னணியில் நோய்க்கு எதிரான போராட்டம் அரசியல் முன்னணியில் உள்ள போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்: அதாவது வெள்ளை மாளிகையில் இருந்து பாசிசத்தை விரட்டுவது.

Loading