முன்னோக்கு

அமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுடனான அமெரிக்க மோதலில் மற்றொரு அபாயகரமான படியைக் குறிக்கும் ஒன்றாக, கடந்த வாரம் வெளியுறவுத்துறை செயலர் பொம்பியோ ரிச்சார்ட் நிக்சன் ஜனாதிபதி நூலகம் மற்றும் அருங்காட்சியகத்திலிருந்து "கம்யூனிச சீனாவும் சுதந்திர உலகின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் ஒரு முக்கிய உரை வழங்கினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையை "கம்யூனிச சீனா" அல்லது "சுதந்திர உலகத்திற்கு" இடையே மேலாதிக்கம் செலுத்தப்படும் ஓர் எதிர்காலத்திற்கான தேர்வாக சித்தரித்ததன் மூலமாக, பொம்பியோ, இராஜாங்கரீதியிலும், பொருளாதார மற்றும் இராணுவரீதியிலும் எல்லா முகப்பிலும் அமெரிக்க மோதலைப் பெரிதும் தீவிரப்படுத்துவதற்குக் களம் அமைத்தார். அனைத்திற்கும் மேலாக அது மறைமுகமாக பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தது.

பொம்பியோ அறிவிக்கையில், “நாம் 21 ஆம் நூற்றாண்டு சுதந்திரமான இருக்க வேண்டுமென விரும்பினால்,” “சீனாவுடன் குருட்டுத்தனமான ஈடுபாடுகளைக் கொண்ட பழைய சூத்திரத்தை" “இந்த புதிய கொடுங்கோலாட்சியைச் சுதந்திர உலகம் வெற்றி கொள்ள வேண்டும்" என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய வேண்டி உள்ளது என்றார்.

Warships (Credit: U.S. Navy photo by Mass Communication Specialist 3rd Class Nicholas Huynh/Released)

அந்த உரை நடைமுறையளவில் அண்மித்து ஓர் அரை நூற்றாண்டு சீனாவுடனான அமெரிக்க ஈடுபாடுகளைத் தலைகீழாக ஆக்குகிறது, பொம்பியோ ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் சீனாவுடனான அமெரிக்காவின் ஈடுபாடு ஒருபோதும் "குருட்டுத்தனமாக" இருக்கவில்லை — அது மட்டுப்பாடின்றியோ அல்லது மேம்போக்காகவோ இருக்கவில்லை.

1972 இல் பெய்ஜிங்குடனான சமரசத்திற்காக நிக்சனின் விஜயத்துடன் அது தொடங்கியது. அதன் மூலோபாய நோக்கம், பொம்பியோ குறிப்பிடுவதைப் போல, சீனாவை "ஜனநாயகம்" என்றழைக்கப்படுவதற்கு மாற்றுவதாக இருக்கவில்லை, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஓர் அணியை உருவாக்குவதே அதன் மூலோபாய நோக்கமாக இருந்தது.

பனிப்போர் வாய்சவடாலில் பொம்பியோ தஞ்சமடைவது வெறும் அபத்தமாக உள்ளது. சீனா "கம்யூனிஸ்ட்" என்பதை அரசியல்ரீதியில் கல்வியறிவு பெற்ற யாரொருவரும் நம்ப மாட்டார்கள். நிக்சன் மற்றும் மாவோவினால் கொண்டு வரப்பட்ட அமெரிக்க-சீன சமரச நிலைப்பாடு தீவிரப்படுத்தப்பட்ட முதலாளித்துவ மீட்டமைப்பு நிகழ்வுபோக்கிற்குக் கதவைத் திறந்துவிட்டது, அது அமெரிக்கா மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்களுக்கு உலகின் மிகப்பெரிய மலிவுழைப்பு தளமாக சீனாவை மாற்றியது.

இதைவிட, ஜனநாயக உரிமைகளை வேகமாக இல்லாதொழித்தவாறு, போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வரும் ட்ரம்ப் நிர்வாகம் “சுதந்திர உலகம்" குறித்து பேசுவது, ஒரு கோமாளித்தனமான பொய்யாகும். இந்த நிலைமை வாஷிங்டனின் "சுதந்திர உலக" கூட்டாளிகளிடையேயும் வேறுவிதமாக இல்லை, அங்கே அதிவலதும் பகிரங்கமாக பாசிசவாத கட்சிகளும் ஊக்குவிக்கப்படுவதுடன், அரசாங்கங்கள் அதிகரித்தளவில் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களில் தங்கியுள்ளன.

பொம்பியோ வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்திற்காக மட்டும் பேசவில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசுகிறார், கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்டு ஓர் ஆழமான உள்நாட்டு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இது, பெரும் சமூக பதட்டங்களை ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக திருப்பி விட முயன்று வருகிறது.

ஜனநாயகக் கட்சியின் ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸின் திங்கட்கிழமை தலையங்கம் சீனாவை நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷமான கொள்கையை முழுமையாக ஆதரித்து, அது இன்னும் அதிக உறுதியுடனும் பொருத்தமாகவும் மட்டும் இருக்க வேண்டுமென வாதிடுகிறது. “தென் சீனக் கடலில் சீனாவின் உரிமைக்கோரல்கள் சட்டவிரோதமானவை. இப்போது என்ன செய்வது?” என்று தலைப்பிட்ட அக்கட்டுரை "உலகின் மிகவும் முக்கிய கடல்வழி பாதைகளில் ஒன்றான" அதில் சீன "ஆக்கிரமிப்பு" மற்றும் "அத்துமீறல்" குறித்து கண்டிப்பதுடன், சர்ச்சைக்குரிய அந்த கடல்பகுதியில் சீனாவின் எல்லை உரிமைக்கோரல்களை "சட்டவிரோதமானது" என்ற பொம்பியோவின் சமீபத்திய அறிக்கையை ஆதரிக்கிறது.

பாசாங்குத்தனம் மிதமிஞ்சி உள்ளது. அமெரிக்காவைச் சர்வதேச சட்டத்திற்கு இணங்க கொண்டு வருவதற்கான பொம்பியோவின் அறிவிப்பை அந்த தலையங்கம் பாராட்டுகிறது, ஆனால் பெய்ஜிங் எதை மீறியதாக அது வாதிடுகிறதோ அதே சர்வதேச சட்டத்தை, அதாவது கடல்சார் சட்டம் மீதான ஐ.நா. தீர்மானத்தை, வாஷிங்டனே நிராகரித்துள்ளது. அந்த தலையங்கம் புகழ்ந்துரைக்கும் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் தான், சீனாவின் அண்டை நாடுகளைத் தென் சீனக் கடலில் அவற்றின் உரிமைகோரல்களுக்கு அழுத்தமளிக்குமாறு தூண்டிவிட்டு, மற்றும் சீனா உரிமைகோரும் கடல் எல்லைபகுதிகளில் ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்க போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, தென் சீனக் கடலை ஓர் அபாயகரமான உலகளாவிய வெடிப்புப் புள்ளியாக மாற்றியது.

அச்சுறுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பது என்பதை பொறுத்த வரையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த கால் நூற்றாண்டாக மத்தியக் கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவில் குற்றகரமான ஒரு போர் மாற்றி ஒரு போரில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், அப்பிராந்திய மக்களுக்கு மனிதாபிமான பேரழிவுகளை உண்டாக்கி உள்ளது. சீனாவை இலக்கில் வைத்து ஆசியா எங்கிலுமான மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பு சம்பந்தப்பட்டிருந்த ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" ட்ரம்ப் பின்தொடர்ந்து விரிவாக்கினார், இதற்குச் சீனா அதன் முக்கிய சீனக் கடற்படை தளங்களுக்குப் பக்கவாட்டில் தென் சீனக் கடலில் உள்ள தீவுத்திட்டுக்களில் அதன் கட்டுப்பாட்டை பலப்படுத்தியதன் மூலமாக விடையிறுத்தது.

ஹாங்காங் சம்பந்தமாக மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் வீகர் மக்கள் சம்பந்தமாக எரிச்சலூட்டும் விதத்தில் "மனித உரிமைகளை" கையிலெடுத்தமை, சீன உளவுபார்ப்பு மற்றும் அறிவுசார் சொத்துத் திருட்டு குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உட்பட ட்ரம்ப் நிர்வாகத்தின் சீனாவை நோக்கிய ஆக்ரோஷமான கொள்கைகளை நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம் மறைமுகமாக ஆதரிக்கிறது.

முக்கியமாக, பொம்பியோவைப் போலவே, அந்த தலையங்கமும் சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போருக்கும் சீனாவுடனான வாஷிங்டனின் அபாயகரமான மோதலுக்கும் இடையிலான வேறுபாட்டை எழுதுகிறது. அது குறிப்பிடுகிறது: “சீனா அமெரிக்காவுடனும் உலகின் ஏனைய பகுதிகளுடனும் ஒரு பிரதான வர்த்தக பங்காளியாக விளங்குகிறது. அதுவொரு சாம்ராஜ்யத்தை ஆளவில்லை, மாஸ்கோவின் திட்டமிட்ட பொருளாதாரத்தில் நடந்ததைப் போல அதன் பொருளாதாரம் மேற்கத்திய சவால்களின் சுமையின் கீழ் அதேவிதத்தில் நொறுங்கி விடுவதற்கான சாத்தியக்கூறு இல்லை.”

ஆகவே, சோவியத் ஒன்றிய அதிகாரத்துவம் முட்டுக்கட்டையாக நின்றிருந்ததாக குறிப்பிடப்பட்ட நிலையில், இங்கே “கட்டுப்படுத்தி கூடி வேலை செய்வதற்கான” அல்லது “சமாதான சகவாழ்வுக்கான" ஒரு பனிப்போர் கொள்கைக்குத் திரும்புவது இருக்காது என்று பொம்பியோ அவர் உரையை நிறைவு செய்தார். “கட்டுப்படுத்தி கூடி வேலை செய்வதை” நிராகரிப்பதென்பது ஒரு அச்சுறுத்தலான எச்சரிக்கை சமிக்ஞையாகும். 1950 களில் அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் நடந்து விவாதத்தில், கட்டுப்படுத்தி கூடி வேலை செய்வதற்கு மாற்றீடாக "தூக்கிவீசும்" கொள்கை—அதாவது, சோவியத் ஒன்றியத்தை ஆக்ரோஷமாக பலவீனப்படுத்தி இறுதியில் அழிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தைப் பிரயோகிக்கும் கொள்கை இருந்தது.

நியூ யோர்க் டைம்ஸ் பொம்பியோவைப் போலவே அதே தீர்மானத்திற்கு வெளிப்படையாக வரவில்லை என்றாலும், உள்நோக்கம் வெளிப்படையாக உள்ளது: சோவியத் ஒன்றியத்தைப் போல சீனா நொருங்காது என்றால், பின்னர் ஆக்ரோஷமான மற்றும் பலமான அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். இன்றைய நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடெனைப் போலவே, டைம்ஸூம் சீன ஆட்சியை அடிபணிய செய்வதற்கான ஒரு விரிவார்ந்த மூலோபாயத்தை நெறிப்படுத்த தவறியதற்காக ட்ரம்பை விமர்சித்தது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா சம்பந்தமான விவாதம் ஒரு முக்கிய விவகாரமாக உள்ளது என்றாலும், அடியில் இருகட்சிகளது ஒருமித்த உடன்பாடு இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பணயத்தில் இருக்கும் அதிக அடிப்படை நலன்களைச் சுட்டிக்காட்டுகிறது. அதன் தீவிரமடைந்து வரும் வரலாற்று வீழ்ச்சிக்கு மத்தியில், அமெரிக்கா அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு சீனாவை தலையாய அச்சுறுத்தலாக கருதுகிறது, அது இராணுவம் உட்பட எந்தவொரு மற்றும் எல்லா அணுகுமுறைகள் மூலமாகவும் அதை தக்கவைக்க தீர்மானகரமாக உள்ளது.

பொம்பியோவின் உரையும் அத்துடன் சீனாவை நோக்கிய அமெரிக்க கொள்கையில் ஓர் உறுதியான மாற்றத்தை அறிவித்து வருவதும் மொத்தத்தில் பொய்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் சேர்த்துக் கொண்டு வந்தது, அதைக் கொண்டு ட்ரம்ப் நிர்வாகம் பொதுமக்களின் கருத்தை நஞ்சூட்டவும் மற்றும் ஒரு போர் சூழலை உருவாக்கவும் பயன்படுத்தி வருகிறது. இதில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு வாஷிங்டனின் குற்றகரமான மற்றும் அலட்சியமான விடையிறுப்பால் உண்டான பேரழிவுகரமான உயிரிழப்புகளுக்கு பெய்ஜிங் மீது பழி சுமத்துவதற்கான ஒரு முயற்சியும் உள்ளடங்கும்.

பொம்பியோ மற்றும் ட்ரம்பின் பொய்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வாஷிங்டனின் மூலோபாய வடிவமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளன: அதாவது, ஹாங்காங், திபெத் மற்றும் ஜின்ஜியாங்கில் அது "மனித உரிமைகளை" ஊக்குவிப்பது சீனாவைப் பிளவுப்படுத்துவதற்காக பிரிவினைவாத இயக்கங்களைத் தூண்டிவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளன, தென் சீனக் கடலில் "கடற்போக்குவரத்து சுதந்திரத்திற்கான" அழைப்புகள் என்பது சீனக் கடற்பகுதியைச் சுற்றி அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் "சுதந்திரத்தை" உத்தரவாதப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது.

அமெரிக்கா, விரைவில் உலகையே மூழ்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்ட, அணுஆயுதமேந்திய சீனாவுடன் ஒரு பேரழிவுகரமான போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. உலகம் பேரழிவை நோக்கி சாய்ந்து வருகையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒதுங்கி இருக்க முடியாது. இந்த போர் முனைவைத் தடுக்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும், அது போருக்கு ஆதாரமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிய சோசலிச கொள்கைகள் அடிப்படையிலான ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக அணித்திரட்டப்பட வேண்டும். இந்த முன்னோக்கிற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடி வருகிறது.

Loading