இலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது

ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய போர் ஆபத்து மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிராக சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்புடன் இணைந்து, அதன் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது. கட்சியின் முகநூல் பக்கத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்த இணையவழி கூட்டம் ஆகஸ்ட் 2 ஞாயிறு மாலை 3 மணிக்கு இடம்பெற உள்ளது.

ஆகஸ்ட் 5 நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு 43 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சோ.ச.க. நடத்திய முந்தைய அனைத்து தேர்தல் கூட்டங்களும், இணையவழியாக நடத்தப்பட்டதுடன் குறிப்பிடத்தக்க பார்வையாளர்களையும் ஈர்த்தன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கம் கொவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட்டதாக முன்பு கூறிய கூற்றுக்களை அம்பலப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நோய்த்தொற்றுகள் பரவி வரும் நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களின் உடல்நலம் மற்றும் உயிர்வாழ்வு குறித்து அலட்சியமாக இருக்கும் அரசாங்கம், மார்ச் மாத இறுதியில் தயக்கத்துடன் அமுல்படுத்திய முழு அடைப்பை இப்போது நீக்கி, பொருளாதாரத்தை "மீண்டும் திறந்துள்ளது".

ஜனாதிபதியின் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை அகற்றுவதற்காக, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிர்வாகம், மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை தேர்தலில் வெல்ல விரும்புகிறது. அது செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தவிர்க்க முடியாத போராட்டங்களை நசுக்குவதற்காக, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதே அதன் நோக்கமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி, அதில் இருந்து பிரிந்த, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகள் என்று கூறிக்கொள்பவை, இராஜபக்ஷவின் சர்வாதிகார செயல்நிரலுக்கு எந்தவொரு அடிப்படை எதிர்ப்பையும் காட்டவில்லை. தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை கண்டு அனைவரும் பீதியடைந்துள்ளனர்.

வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய போர் ஆபத்து மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிராக, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

சோ.ச.க. தேர்தல் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் மற்றும் முன்னணி வேட்பாளர்கள் உரையாற்றவுள்ளனர். கட்சியின் தேர்தல் பிரச்சாரம் அடிப்படையாகக் கொண்டுள்ள சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை பேச்சாளர்கள் விரிவாக்குவார்கள்.

இந்த முக்கியமான நிகழ்வில் இணையவழியாக கலந்துகொண்டு பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் WSWS வாசகர்களையும் அழைக்கிறோம்.

கூட்ட விவரங்கள்:

facebook.com/sep.lk

ஆகஸ்ட் 2 ஞாயிறு,மதியம் 3 மணி.

Loading