இலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.) தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, இலங்கை பொதுத் தேர்தலில் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) போட்டியிடுகின்றார். கொவிட்-19 தொற்று நோயால் பல முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற உள்ளது.

அதன் 42 ஆண்டுகால வரலாற்றில், போலி-இடது ந.ச.ச.க. நாட்டின் இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) உடன் அணிசேர்ந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக அது தொடர்ந்து ஐ.தே.க.வை ஆதரித்துவந்துள்ளது.

1948 இல் இலங்கை உத்தியோகபூர்வமான சுதந்திரம் பெற்றதிலிருந்து 72 ஆண்டுகளில், கிட்டத்தட்ட அரைவாசி காலம் நாட்டை ஆட்சி செய்த வலதுசாரி ஐ.தே.க. தொழிலாள வர்க்க-விரோத அடக்குமுறையின் நீண்ட சரித்திரத்தைக் கொண்டுள்ளது. ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுவதற்கான ந.ச.ச.க.வின் முடிவானது இத்தகைய மத்தியதர வர்க்க அமைப்புகள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஏனைய போலி-இடது அமைப்புகளினதும் அரசியல் சீரழிவின் மேலுமொரு வெளிப்பாடாகும்.

கருணரத்ன, மே 16 அன்று தனது தேர்தல் வேட்புமனுவை அறிவிக்கும் ஒரு சுருக்கமான மின்னஞ்சலில், 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து “நீதி, நியாயம் மற்றும் ஜனநாயகத்திற்கான” ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப செயற்றப்பட்டதாக அறிவிக்கின்றார். "நல்லாட்சி அரசாங்கம்," அந்த “பிரச்சாரத்தின் விளைவாகும்" என்று கூறும் அவர், இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவு "2019 இல் பாதியிலேயே முடிவுற்ற ஜனநாயக நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்பதற்ககாவே" எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

"நல்லாட்சி" அரசாங்கம் எனப்படுவது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய 2015 ஜனவரியில் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற சதியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நிர்வாகத்தைக் குறிக்கிறது. இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியுடன் வாஷிங்டனுக்கு அரசியல் வேறுபாடுகள் எதுவும் இல்லாத போதிலும், பெய்ஜிங்கை நோக்கிய அவரது நோக்குநிலைக்கு அது விரோதமாக இருந்தது.

சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதன் பேரில் இராஜபக்ஷவுக்கு எதிரான பரவலான அரசியல் எதிர்ப்பை திசைதிருப்புவதற்காக, "நல்லாட்சி" என்ற போலி பதாகையை ந.ச.ச.க. மற்றும் பிற போலி-இடது குழுக்களும், பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தூக்கிப் பிடித்தன. சிறிசேன தலைமையிலான ஆட்சி, ஜனநாயகத்தை பாதுகாக்கும் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் என்று அவை கூறிக்கொண்டன.

அமெரிக்கா திட்டமிட்ட இந்த ஆட்சி மாற்றத்தை ஒரு "ஜனநாயகப் புரட்சி" என்று சித்தரித்துக்கொண்டு இந்த பிரச்சாரத்தில் கருணாரத்ன ஒரு முன்னணி ஊக்குவிப்பாளராக இருந்தார். உண்மையில் அது ஒரு எதிர் புரட்சிகர நடவடிக்கையாகும்.

நிதி பற்றாக்குறையில் சிக்கி இருந்த சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், அதன் ஜனநாயக தோரணையை விரைவாக கழற்றி எறிந்துவிட்டு தனது சிக்கன செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களினதும் எதிர்ப்பைத் தூண்டியது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸையும் கட்டவிழ்த்துவிட்டதுடன் வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கு கடுமையான அவசரகால சட்டங்களைப் பயன்படுத்தியது.

ந.ச.ச.க. தலைவர் கருணாரத்ன இந்த வெகுஜன போராட்டங்களை எதிர்த்து, அரசாங்கத்தின் அடக்குமுறையை ஆதரித்ததுடன், சீனாவிற்கு எதிரான யுத்தத்திற்கான அமெரிக்க தலைமையிலான தயாரிப்புகளுடன் இலங்கை இராணுவத்தை இணைப்பதற்கான கொழும்பின் நடவடிக்கைகளை ஆதரித்தார். கருணாரத்னவின் “நல்லாட்சியின்” இலட்சனம் இதுவே.

பெருமளவில் மதிப்பிழந்த அரசாங்கம், வளர்ச்சிகண்டுவந்த தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களால் உலுக்கப்பட்ட போதிலும், ந.ச.ச.க. விடாமல் ஐ.தே.க.வை பற்றிக்கொண்டிருந்தது. ஏனைய "இடதுசாரிகள்" மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் சேர்ந்து, கடந்த ஆண்டு ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்த ந.ச.ச.க., அவரை "குறைவான தீமை" என்று ஊக்குவித்தது.

கோட்டாபய இராஜபக்ஷ தன்னை ஐ.தே.க.விற்கு எதிரான ஒரே எதிர்க் கட்சியாக காட்டிக்கொள்ளவும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வெகுஜன விரோதத்தை பயன்படுத்திக்கொள்ளவும் இது வழி வகுத்தது. தலைமைத்துவத்திற்கான ஒரு மோதலுக்குப் பின்னர், பிரேமதாசவும் ஐ.தே.க.வின் பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியிலிருந்து பிரிந்து, ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்துக்கொண்டனர். ஐ.தே.க. தலைமையை பிரேமதாசவிடம் ஒப்படைக்க விக்கிரமசிங்க தயக்கம் காட்டினார். விக்ரமசிங்கவின் நீண்டகால கூட்டாளியான கருணாரத்ன, முன்னாள் பிரதமருக்கு விசுவாசமாக இருக்கிறார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில், கருணாரத்ன, ரத்தத்தில் ஊரிப்போன ஐ.தே.க.வுக்கு வெள்ளை பூசுவதில் தொடர்ந்து ஈடுபடுகின்றார். அவர் ஐ.தே.க. தலைமையகத்தில் வழக்கமான கூட்டங்களில் பங்கேற்கிறார்.

ஜூன் 10 அன்று அத்தகைய ஒரு கூட்டத்தைப் பற்றிய குறிப்பில், கருணாரத்ன அறிவித்ததாவது: “ஆரம்பத்தில் இருந்தே ஐ.தே.க. தேசிய இனங்களின் ஒற்றுமையின் அடிப்படையில் செயல்பட்டது, அதை கடுமையான இனவெறியால் அடக்க முடியாது… சம சமாஜ [லங்கா சம சமாஜா கட்சி (ல.ச.ச.க.)] இனவாதத்திற்கு எதிராக ஐ.தே.க.வுடன் செயல்பட்டதாலேயே அதன் அதிகாரம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டது.”

1980 களின் பிற்பகுதியில், ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து பிரிந்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, ந.ச.ச.க., ல.ச.ச.க. மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்கிய ஒரு கூட்டணி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுடன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்ததும் இதில் அடங்கும், என அவர் எழுதினார்.

1988-1990ல் கிராமப்புற இளைஞர்கள் மீது ஈவிரக்கமற்ற படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் ஐ.தே.க. அரசாங்கத்துடனான ஒரு கூட்டணியையும் கருணாரத்ன சுட்டிக் காட்டினார். பிரேமதாச “இதனால் [மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொலைகார நடவடிக்கைகளால்] ஆத்திரமடைந்து சகல கட்சி மாநாட்டை கூட்டியதோடு அனைவரின் உடன்பாட்டுடன் கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார்,” என கருணாரத்ன தெரிவித்தார்.

கருணாரத்ன வாயார பொய்யளக்கிறார். வலதுசாரி ஐ.தே.க.வை "தேசிய இனங்களின் ஒற்றுமையை கட்டியெழுப்ப உழைத்த" ஒரு ஜனநாயக அமைப்பாக சித்தரிக்க அவர் எடுத்த முயற்சி ஆத்திரமூட்டுவதாகும்.

இலங்கைக்கு உத்தியோபூர்வமான சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில், ஐ.தே.க. ஆட்சி இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ரத்துச் செய்தது. ட்ரொட்ஸ்கிச புரட்சிகர முன்னோக்கை ஆதரித்த இந்த சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த இந்த பிற்போக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட தமிழர்-விரோத பிரச்சாரத்திற்கு களம் அமைத்தது.

1964 இல், ல.ச.ச.க. சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை காட்டிக் கொடுத்ததுடன், வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கத்தை கலைத்து முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. இலங்கையிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்திய இந்த காட்டிக்கொடுப்பை அப்போது ல.ச.ச.க. உறுப்பினராக இருந்த கருணாரத்ன ஆதரித்தார்.

அடுத்து வந்த ஆண்டுகளில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்கள், தமிழர்-விரோத இனவெறியைத் தூண்டிவிட்டு, நாட்டின் அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்தன. ல.ச.ச.க. செய்த காட்டிக்கொடுப்பை அரசியல் ரீதியாக சுரண்டிக்கொண்டு ஐ.தே.க. 1977இல் ஆட்சிக்கு வந்தது. இது ஒரு எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை நிறுவியது. 1980 இல் ஐ.தே.க. முன்னெடுத்த சிக்கன திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்த 100,000 பொதுத்துறை ஊழியர்களை அது பணிநீக்கம் செய்தது. 1983 இல், ஜனாதிபதி ஜயவர்தனவின் கீழான ஐ.தே.க., தொடர்ச்சியாக இடம்பெற்ற இனவெறி ஆத்திரமூட்டல்களுக்குப் பின்னர், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான கிட்டத்தட்ட 30 ஆண்டுகால யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது.

1985 இல், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஜயவர்த்தன ஆட்சி, ல.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ந.ச.ச.க. ஆகியவற்றுக்கு ஒரு வட்டமேசை மாநாட்டுக்கு அழைத்தது. கருணாரத்ன தான் “தயக்கமின்றி” பங்கேற்றதாகக் கூறும் இந்த கூட்டம், 1987 ஜூலையில் புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு வழி வகுத்தது. விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்குவதற்காக இந்திய இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கில் இறக்குவதற்கும், பதிலீடாக தமிழ் உயரடுக்கிற்கு வரையறுக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதற்குமே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய ராணுவம் கொலைகார தாக்குதல்களை நடத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்களைக் கொன்ற அதே வேளை, நாட்டின் தெற்கில் மக்கள் மீது இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கிராமப்புற அமைதியின்மைக்கு மத்தியில், ஒரு இனவெறி இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்த ஜே.வி.பி., அரசியல் எதிரிகளையும் தொழிலாளர்களையும் தாக்கி கொன்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஆனது, ஐ.தே.க.-ஜே.வி.பி. தாக்குதல்களை எதிர்கொள்ள, தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஐக்கிய முன்னணி ஒன்றை முன்மொழிந்தது. ந.ச.ச.க. தலைமை இந்த முன்மொழிவை நிராகரித்து, அதற்கு பதிலாக ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து ஐ.தே.க. அரசாங்கத்துடன் அணிசேர்ந்தது. பின்னர் பிரேமதாச அரசாங்கம், கிராமப்புற அமைதியின்மையை கொடூரமாக அடக்குவதற்கு ஜே.வி.பி. தாக்குதல்கள் சுரண்டிக்கொண்டது. இந்த அடக்குமுறையில் சுமார் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ந.ச.ச.க. தலைவர் கருணரத்ன, இந்த படுகொலைகளுக்கு ஆதரவளித்து, துணை ராணுவ கருவிகளுடன் செயற்பட்டார்.

2001 செப்டம்பரில் அமெரிக்கா தனது "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அழைத்துக்கொண்டதை முன்னெடுத்த போது, ஐ.தே.க. இலங்கை முதலாளித்துவத்தின் சில பிரிவுகளின் ஆதரவோடு வாஷிங்டனுடன் தன்னை இணைத்துக் கொண்டு, "சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக" புலிகளை அணுகியது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் இந்த நடவடிக்கையை ஆதரித்ததுடன், பிரிவினைவாத அமைப்பும் விருப்பத்துடன் இதில் இணைந்துகொண்டது. ந.ச.ச.க. "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டாலும், அது இலங்கை முதலாளித்துவத்தின் "சமாதான" நடவடிக்கை என்று அழைக்கப்பட்டதில் இணைந்து கொண்டது.

2008 முதல் "கூட்டு நடவடிக்கைக் குழுவில்" ஐ.தே.க. உடன் இணைந்து பணியாற்றியதாக ந.ச.ச.க. தலைவர் கூறுகிறார். இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் நெருக்கடியை சுரண்டிக்கொள்வதற்காக ந.ச.ச.க. மற்றும் இன்னொரு போலி இடது குழுவான ஐக்கிய சோசலிசக் கட்சி உடனும் ஐ.தே.க. அமைத்துக்கொண்ட கூட்டணிகளில் ஒன்றாகும். சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்ட பின்னர், 2009 இன் தொடக்கத்தில் ஐ.தே.க. இந்த குழுக்களுடன் "சுதந்திரத்திற்கான மேடை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டது.

2013 முதல், ந.ச.ச.க. மற்றும் பிற போலி இடது குழுக்கள், இலங்கையில் மனித உரிமை மீறல்களை பாசாங்குத்தனமாகப் பயன்படுத்திக்கொண்டு மஹிந்த இராஜபக்ஷ நிர்வாகத்தை பெய்ஜிங்கிலிருந்து தூர விலக்கிக் கொள்ள நெருக்கிய அமெரிக்காவை, வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கின. ஐரோப்பிய சக்திகளின் ஆதரவுடன் வாஷிங்டன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க அமெரிக்கா ஆதரவளிப்பதாக கருணாரத்ன கூறினார். ராஜபக்ஷ ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்த அமெரிக்காவின் நடவடிக்கைகள், 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையில் உச்சக்கட்டத்தை அடைந்தன.

கடந்த ஆண்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவிலான ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு, இலங்கையில் தனது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியபோது, ஜனாதிபதி சிறிசேன அழைத்த அனைத்து கட்சி மாநாட்டில் ந.ச.ச.க.வும் பங்கேற்றது. அவசரகால சட்டங்களை அமுல்படுத்தவும் நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்துவதற்கும் அந்த மாநாடு ஏகமனதாக ஆதரவளித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக, ராஜபக்ஷவின் இராணுவ ஆதிக்க நடவடிக்கைகளுக்கு ந.ச.ச.க. தலைவர் கருணாரத்ன ஐ.தே.க. உடன் இணைந்துள்ளார். ஏப்ரல் 27 அன்று, ஐ.தே.க. மற்றும் பிற பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், இராஜபக்ஷவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அழைப்பு விடுத்து, தங்கள் ஆதரவை உறுதியளித்தன.

மே 4 அன்று டெய்லிமிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விக்ரமசிங்க, “எங்களைப் பொருத்தவரை, நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம், ஏனெனில் இது விரோத அரசியலை வைத்து விளையாடுவதற்கான நேரம் அல்ல. எனவே பல்வேறு கட்சிகள் அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை நாம் காண வேண்டும்,” எனக் கூறினார்.

ஐ.தே.க. மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் தமக்கிடையே தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், சர்வாதிகார ஆட்சி முறைகள் அவசியம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கம் எழுச்சியடைவதே அவர்களின் பொதுவான கவலை ஆகும். ந.ச.ச.க. மற்றும் ஏனைய போலி-இடது அமைப்புகளின் வலதுசாரி போக்கும் அதே பீதியினாலேயே உந்தப்படுகின்றன.

ந.ச.ச.க. துர்நாற்றம் வீசும் அரசியல் சடலம் ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய அதன் சந்தர்ப்பவாத அரசியல், சோசரலிச சமத்துவக் கட்சி / புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கம் இணைவதை தடுக்கும் நோக்கம் கொண்டதாகும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை கட்டியெழுப்புவதே ஆகும்.

Loading