ட்ரம்ப் தேர்தலைத் தாமதப்படுத்த முனைகையில், இரண்டு கட்சிகளும் இராணுவத்தை மத்தியஸ்தராக இருக்க அழைப்புவிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மாநிலங்கள் மின்னஞ்சல் வாக்களிப்பை விரிவாக்குவதற்குத் தீர்மானித்திருப்பதால் நவம்பர் மாத தேர்தல் "வரலாற்றிலேயே மிகவும் துல்லியமற்ற & மோசடியான தேர்தலாக இருக்கும்" என்று ட்வீட் செய்து, நேற்று காலை டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் மாத தேர்தல்களின் சட்டப்பூர்வத்தன்மை மீது சந்தேகத்தை எழுப்பினார். இதன்விளைவாக, வாக்கெடுப்பைத் தள்ளிப்போடுவதற்கு அவர் பின்வருமாறு ஆலோசனையளித்தார்: “மக்கள் முறையாக, பாதுகாப்பாக, இடர்பாடின்றி வாக்களிக்க முடியும் வரை, தேர்தலைத் தாமதப்படுத்தலாம்???”

ட்ரம்ப் ட்வீட் செய்து வெறும் ஒருசில மணி நேரத்திற்குள், செனட் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் (R-FL) மற்றும் லிண்டே கிரஹாம் (R-SC) போன்ற குடியரசுக் கட்சி கூட்டாளிகளும் கூட வேகவேகமாக ட்ரம்பின் ஆலோசனைக்கு அவர்களின் எதிர்ப்பை அறிவித்தனர்.

1845 இல் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்திய அரசின்சட்டம், நவம்பரின் முதல் திங்கட்கிழமையை அடுத்து பொது தேர்தல்களைச் செவ்வாய்கிழமை நடத்தக் கோருகிறது.

வாஷிங்டனில், செவ்வாய்கிழமை ஜூலை 30, 2020 வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசியலமைப்பு ஷரத்துக்களை எடுத்துக்காட்டுகிறார் (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Evan Vucci)

“சில நாட்களுக்குப் பின்னர் அல்ல, மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அல்ல, தேர்தல் இரவில் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்" என்று ட்வீட் செய்து, நேற்று மதியத்திற்கு மேல், ட்ரம்ப் அவரின் முந்தைய அறிக்கையை இரட்டிப்பாக்கினார்.

அவர் தோற்கும் எந்தவொரு தேர்தல் முடிவையும் சவால்விடுத்து பல பதவிக்காலங்களுக்கு அதிகாரத்தில் தங்கியிருக்க நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்துள்ள ட்ரம்ப், அவரின் செல்வாக்கு விகிதம் குறைந்துவிட்டதால் மீண்டும் தேர்வுசெய்யப்படும் பிரச்சாரத்தில் அதிகரித்த சிக்கலைக் காண்கிறார். கலிபோர்னியா, புளோரிடா மற்றும் இன்னும் பல சிறிய மாநிலங்கள் இன்று வரையில் அவற்றில் மிக அதிகபட்ச நாளாந்த மரண எண்ணிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இவ்வாரம் அமெரிக்கா கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் 150,000 எண்ணிக்கையைக் கடந்தது. பத்து மில்லியன் கணக்கான வேலைகள் இல்லாமல் போயுள்ளன, அதேவேளையில் காங்கிரஸ் சபை மத்திய அரசின் கூடுதல் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகையை காலாவதியாக விட்டு வைத்தது. வாக்களிப்புக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும், சில சமீபத்திய தேசிய தேர்தல் கருத்துக்கணிப்புகள் ட்ரம்புக்கான ஆதரவை 40 சதவீதத்திற்கும் குறைவாக காட்டுகின்றன.

நவம்பர் 3 தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டமும், தேர்தலுக்கும் மற்றும் ஜனவரி 20 இல் பதவியேற்புக்கும் இடையிலான 11 வார காலக்கட்டமும் முன்னொருபோதுமில்லாத அரசியல் நெருக்கடியின் காலக்கட்டமாக அச்சுறுத்துகின்றன. பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்படலாம் என்பதற்கான தயாரிப்பில், இராணுவம், பயிற்சி கையேட்டை வெளியிட்டது. அது போராட்டக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும் "விரோதிகளாக" குறிப்பிடுகிறது. இராணுவ கட்டளையின்படி ஆயுதப் படைகளின் ஒவ்வொரு உறுப்பினராலும் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அந்த பயிற்சி கையேடுகள், அரசியல் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கு கூடுதலாக பயன்படுத்தப்படுத்துவதற்கு இராணுவம் தன்னை தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஓர் அறிகுறியாக உள்ளன.

புதன்கிழமை நீதித்துறை விஸ்கான்சினின் மில்வாக்கியிலும், மிச்சிகனின் டெட்ராய்டிலும் மற்றும் ஓஹியோவின் கிளீவ்லாந்திலும் டஜன் கணக்கான கூட்டாட்சி முகவர்களை பயன்படுத்தியது. இது ஒரேகன் போர்ட்லாந்தில் துணைஇராணுவப் படைகளை பயன்படுத்தியதைத் தொடர்ந்து வருகிறது, இவை அந்நகரின் மையப்பகுதிகளில் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதுடன் உரிய காரணமின்றி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து, அடையாளம் குறிக்கப்படாத வாகனங்களுள் தூக்கிவீசி, விசாரணைக்காக என்ற பெயரில் இடந்தெரியாத இடங்களுக்கு அவர்களை அனுப்பி உள்ளது.

ட்ரம்ப் எதை "பயங்கரவாத" நடவடிக்கை என்று குறிப்பிட்டாரோ அதை போர்ட்லாந்தின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ஒடுக்கத் தவறினால், அம்மாநிலத்தில் தேசிய பாதுகாப்பு படையை பயன்படுத்துவதற்கு, நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.

மில்வாக்கி, டெட்ராய்ட் மற்றும் கிளீவ்லாந்தில் நிலைநிறுத்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றால் கடந்த நான்காண்டுகளாக அங்கே வறிய ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மத்தியில் வாக்களிப்புவிகிதம் மிகவும்குறைவாக இருந்தமை விஸ்கான்சின் மற்றும் மிச்சிகனில் ட்ரம்ப் நூலிழையில் வெற்றிபெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. அதேவேளையில் ஓஹியோவின் கருத்துக்கணிப்புகள் அம்மாநிலம் இந்தாண்டு மிக நெருக்கமான போட்டியில் இருக்குமென்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிச்சயமற்றத்தன்மையின் சாத்தியப்பாட்டிற்கு மேலதிகமாக, விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்களையும் கொண்டுள்ளன. அதாவது அம்மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அனேகமாக நீண்ட நீதிமன்ற தாமதங்களையும், இருகட்சிக்காரர்களின் முட்டுக்கட்டைகளையும் முகங்கொடுக்கும் என்பதே இதன் அர்த்தமாகும். முறையே 20 மற்றும் 15 பிரதிநிதிகளின் தேர்வை கொண்ட இரண்டு ஊசலாடும் மாநிலங்களான பென்சில்வேனியா மற்றும் வடக்கு கரோலினா இரண்டிலும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இரண்டு கட்சிகளிடம் பிளவுபட்டு உள்ளது.

ஆட்சேபணை செய்யப்படக்கூடிய ஒரு தேர்தல் முடிவை "சூதாட்டத்தில் வைக்கக்கூடிய நிலைமைகள்" மீது, இரண்டு கட்சிகளையும் சேர்ந்த ஓய்வூபெற்ற இராணுவ-உளவுத்துறை அதிகாரிகளின் குழுக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊடகப் பிரமுகர்களும் செய்துவரும் முயற்சிகளைக் குறித்து அதிக விபரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இடைக்கால ஒருங்கிணைப்பு ஆய்வுத்திட்டத்தின் (Transition Integrity Project) தலைவர் ரோசா புரூக்ஸின் தகவல்படி, நான்கில் மூன்று தேர்தல் முடிவின் அனுமானச் சூழல்கள் முன்பில்லாதளவு அரசியலமைப்பு நெருக்கடியில் விளைந்துள்ளன. இவை நாட்டை உள்நாட்டு போரின் விளிம்பில் நிலைநிறுத்துகின்றன. இத்தகைய சூழல்களில், அரசியலமைப்பின் 12 வது திருத்தத்தின்படி அதிகாரம் வெளியேறும் நிர்வாகத்திடமிருந்து பதவிக்கு வரவிருக்கும் அதிகாரத்திற்கு மாற்றப்பட வேண்டிய ஜனவரி 20 மதியம் 12 மணிக்கு பைடெனும் ட்ரம்பும் இருவருமே தங்களைச் சட்டப்பூர்வ ஜனாதிபதியாக உரிமைகோருகிறார்கள்.

“ட்ரம்ப் சுணங்குவதால், கற்பனைக்கெட்டாத ஒரு கேள்வி எழுகிறது: ஒரு சர்ச்சைக்கிடமான தேர்தலில் ஜனாதிபதி இராணுவத்தின் ஆதரவை கோர முடியுமா?” என்று தலைப்பிட்டு, ஜூலை 28 இல், வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரை வெளியிட்டது.

அக்கட்டுரை பின்வரும் கேள்வி எழுப்புகிறது: “ஒரு சர்ச்சைக்குரிய தேர்தலினுள் இழுக்கப்பட்டால் ஆயுதப் படைகள் எவ்வாறு பிரதிபலிக்கும்?” பல மாநிலங்களில் வாக்குகளை உறுதிப்படுத்துவதன் மீது சட்டபூர்வ சவால்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதன் அர்த்தம் காங்கிரஸ் சபையால் ஜனவரி 20 இல் வெற்றியாளரை உறுதிப்படுத்த முடியாமல் போகலாம் என்பதை அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

போஸ்ட் மேலும் எழுதுகிறது: “பெருஞ்சோதனையாக, போட்டியின் முடிவு ஜனவரி 20 இக்குப் பின்னரும் இழுத்துக் கொண்டிருந்தால் அது தலைமை தளபதி யார் என்பது பற்றி இராணுவமே உள்ளார்ந்து ஒரு முடிவெடுக்க நிர்பந்திக்கப்படலாம். 1947 ஜனாதிபதி வெற்றியாளர் சட்டத்தின்படி, காங்கிரஸ் அவரை வெற்றியாளராக உறுதிப்படுத்தாவிட்டால் ஜனவரி 20 மதியம் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்கி, இராணுவத்தின் தலைமை தளபதியாக அவர் அதிகாரத்தை இடைக்கால ஜனாதிபதிக்கு, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருக்கு ஒப்படைக்க வேண்டியிருக்கும்.

அக்குழுவில் பங்கெடுத்தவர்களால் வகுக்கப்பட்ட ஒரு பயிற்சி விளையாட்டில், “ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக வெள்ளை மாளிகை இராணுவத்தை அழைக்கக்கூடும் அல்லது, 'சட்டம் ஒழுங்கு' என்ற அடித்தளங்களில் சாத்தியமான போராட்டங்களுக்கு விடையிறுக்க அதிக சாத்தியமுள்ளது. இது அனேகமாக அமெரிக்க நகரங்களுக்குள் பணியிலுள்ள துருப்புகளை அனுப்புவதற்கான ஜனாதிபதியின் முந்தைய அச்சுறுத்தல்களைத் தொடர இட்டுச் செல்லலாம் அல்லது அரசு கட்டுப்பாட்டிலான தேசிய பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை எடுக்கலாம்.”

முன்னுக்குப்பின் முரணான உத்தரவுகளை முகங்கொடுத்து, தவறான தலைமைத் தளபதி வெளியிடும் உத்தரவுகளைப் பின்தொடர்ந்து வரும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, “கலகம் அல்லது பிரிவினையைத் தடுக்க தவறியதற்காக" சிறையில் அடைக்கப்படலாம். இதில் மரண தண்டனையும் உள்ளடங்கியுள்ளது என்று போஸ்ட் குறிப்பிடுகிறது.

இராணுவம் தலையீடு செய்யவும் தேர்தல் முடிவை தனது பலத்தைக் கொண்டு தீர்மானிக்கவும் ட்ரம்ப் மட்டுமே முறையீடு செய்யக்கூடும் என்பதல்ல. இந்தாண்டு ஆரம்பத்தில், இப்போதைய நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடெனும் எச்சரிக்கையில், ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால், இராணுவம் "வெள்ளை மாளிகையிலிருந்து அவரை பாதுகாப்புடன் பிரமாண்டமாக வெளியனுப்பும்" என்றார்.

உண்மையில், இவ்வாறான பயிற்சி விளையாட்டில் பங்கெடுத்த ஒரு நபர் Marquette சட்ட பேராசிரியர் ரிசா புரூக்ஸ் போஸ்டுக்குக் கூறுகையில், “வழக்கமாக நடக்காத விதங்களில் இராணுவம் உள்நாட்டு அரசியலில் அதன் பாத்திரத்தை ஏற்க சிந்தித்து வருவதாக பல வழிகளிலும் தெரிகிறது.”

நிச்சயமற்றத்தன்மையின் சூழலுடன் சேர்ந்து, ஜனாதிபதி பதவியேற்பதற்கு இரண்டு வாரத்திற்கும் அதிக நாட்களுக்கு முன்னரே அதாவது நவம்பரில் தேர்ந்தெடுக்கப்படும் வரவிருக்கும் காங்கிரஸ் சபை ஜனவரி 3 இலேயே அமைக்கப்பட வேண்டுமென்றும் அரசியலமைப்பு கட்டளையிடுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், கீழ்சபையை ஜனநாயகக் கட்சி அதன் கட்டுப்பாட்டில் தொடர்ந்து தக்க வைக்கும் என்றும், ஜனநாயகக் கட்சியின் சபாநாயகரையே, தற்போது நான்சி பெலோசி (D-CA), இடைக்கால ஜனாதிபதியாக சேவையாற்றும் விதத்தில் நிலைநிறுத்துமென்றும் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது என்றால் அல்லது ஜனவரி 20 இல் ஒரு சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான பிரதிநிதிகள் சபையைத் தடுப்பதற்காக சட்டரீதியான சவால்கள் காங்கிரஸில் போதுமான காலியிடங்களை உருவாக்குமேயானால், செனட் சபையின் தலைவர் தற்காலிகமாக இடைக்கால ஜனாதிபதியாக ஆகக்கூடும். அந்த பதவியைத் தற்போது Chuck Grassley (R-IA) வகிக்கிறார், ஆனால் வரவிருக்கும் தேர்தல்களில் செனட் சபையில் அது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்குமா என்பதும் நிச்சயமில்லை. தேர்தல் செனட் சபையில் 50 க்கு 50 என்று சமமானால், செனட் சபையின் சமநிலைக்குத் தலைமையேற்க அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி இருக்கமாட்டார் என்பதால், யார் தற்காலிக ஜனாதிபதியாக (அவ்விதத்தில் இடைக்கால ஜனாதிபதியாக) இருப்பார் என்பதற்கு அரசியலமைப்பில் அங்கே பதிலில்லை.

இன்னும் கூடுதல் குழப்பத்தைச் சேர்க்கும் விதத்தில், தேர்தல் தாமதமானால், செனட்டில் வெறும் 65 செனட்டர்கள் தான் இருப்பார்கள் (இவர்கள் இந்தாண்டு தேர்தலுக்கு உள்ளாகவில்லை), அவர்களில் பெரும்பான்மையினர் ஜனநாயகக் கட்சியினராக இருப்பார்கள். ஜனநாயகக் கட்சியினர் முடிவெடுக்கத்தேவையான எண்ணிக்கையுடன் சபையை நிறுவுவதில் இருந்து தடுப்பதற்காக குடியரசுக் கட்சியினர் வாஷிங்டனுக்குச் செல்லக்கூடும் சாத்தியக்கூறுக்கு மேலாக, 35 இடங்களை நிரப்ப மாநில ஆளுநர்களும் செனட்டர்களை நியமிக்க முடிவெடுக்கலாம். ஆளுநர் பதவிகளில் பெரும்பான்மையை குடியரசு கட்சியினரே கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதால், செனட் சபையின் தற்காலிக தலைவர் பதவியை —அவ்விதத்தில் இடைக்கால ஜனாதிபதி பதவியை— பலவந்தமாக பிடித்து தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றும் சட்டரீதியான சவாலைச் சார்ந்துள்ள நிலையில், ஜனவரி 20 இல் யார் ஜனாதிபதி ஆவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

இத்தகைய அளவிலா அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், இரண்டு பிரதான கட்சிகளும் அரசு அதிகாரத்திற்கு மத்தியஸ்தம் செய்யவதற்காக இராணுவத்திற்கு முறையிட்டு வருகின்றன. வேறு வேறு தளபதிகள் வேறு வேறு தலைமை தளபதிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்படிவார்கள் என்பதும், ஒன்றையொன்று எதிர்கொள்ள, குறிப்பாக அமைப்புரீதியான கட்டுப்பாடு மிகவும் முக்கியமாக உள்ளதும் மற்றும் தேசிய பாதுகாப்புப்படை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருப்பதுமான கொலம்பியா மாவட்டத்தில், அனேகமாக வெவ்வேறு படைப்பிரிவுகள் நிலைநிறுத்தப்படலாம் என்பதைக் குறித்தும், இந்த நிலைமையைப் பயன்படுத்தி உள்ளிருந்து விளையாடி வரும் முதலாளித்துவவாதிகளுக்கு நன்கு தெரியும்.

இந்த உள்ளடக்கத்தில், முன்னாள் செனட்டர் கேரி ஹார்ட் (D-CO) இன் விரைவிலேயே மறக்கப்பட்ட நியூ யோர்க் டைம்ஸின் துணை தலையங்க கட்டுரை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஹார்ட் அவரின் ஜூலை 23 கட்டுரையில் குறிப்பிடுகையில், அவரும் முன்னாள் செனட்டர் வால்டர் மொன்டேலும் (D-MN) “தேசிய அவசரநிலை சமயத்தில் அசாதாரண ஜனாதிபதி அதிகாரங்களை அங்கீகரிப்பதற்காக, அதாவது காங்கிரஸ் சபை அல்லது நீதித்துறையின் குறுக்கீடு இல்லாமல் நடைமுறையளவில் சர்வாதிகார அதிகாரங்களை அங்கீகரிப்பதற்காக, குறைந்தபட்சம் நூற்றுக் கணக்கான ஆவணங்களைச் சமீபத்தில் படிக்க வேண்டியிருந்ததாக" தெரிவித்தார்.

ஹார்ட் எழுதினார்: “ஆட்கொணர்வு மனு, உளவுபார்ப்பு, வீட்டினுள் அத்துமீறல், பாரிய கைது நடவடிக்கைகள் அல்லது அதற்கு மேலானவை இல்லையென்றாலும் நீதிமன்ற உத்தரவாணையின்றி கூட்டான கைது நடவடிக்கை ஆகியவற்றை இரத்துச்செய்தலும் அவற்றில் உள்ளடங்கி இருக்கலாமென நாங்கள் நம்புகிறோம்.”

தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லாமல், ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கன்னை இந்த முன்முயற்சியைக் கைப்பற்றினாலும் அது அரசியல் ஸ்தாபகத்தை இன்னும் கூடுதலாக வலதுக்கு முன்நகர்த்தும், இராணுவத்தைச் சார்ந்திருக்க செய்யும், மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவும் ஆபத்தை ஏற்படுத்தும். பைடென் மற்றும் ட்ரம்புக்கு இடையிலான போட்டியில், அங்கே எந்த முற்போக்கான கன்னையும் இல்லை.

Loading