இலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் எதிர்வரும் 2020 பொதுத் தேர்தல்களுக்கான இரண்டாவது இணையவழி பிரச்சாரக் கூட்டத்தை கடந்த வாரம் நடத்தின. ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மொத்தம் 43 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது.

இலங்கை சோ.ச.க. இணையவழி கூட்டம்

கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் சர்வதேச அளவில் சுமார் 100 பேர் பங்கேற்றனர். 2,000 இற்கும் மேற்பட்டோர் இந்த ஒளிபரப்பை பார்வையிட்டதோடு பலர் பகிர்ந்தும், வாழ்த்துக்களையும் கருத்துகளையும் கேள்விகளையும் பதிவிட்டனர். இதில் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதற்கு சோ.ச.க. விடுக்கின்ற அழைப்பு மற்றும் சோ.ச.க.வின் எதிர்கால பணிகள் உட்பட பல்வேறு கேள்விகள் உள்ளடங்கியிருந்தன.

கூட்டத்திற்கு கொழும்பு மாவட்ட வேட்பாளரான சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன தலைமை தாங்கினார். சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருப்பொருள் "போர், சமூக பேரழிவு மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டம்" என்று அவர் விளக்கினார்.

ஊதியம், தொழில் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்கான முயற்சியில், இலங்கை ஜனாதிபதி தனது நிர்வாகத்தை விரைவாக இராணுவமயமாக்குகிறார் என்று விஜேசிறிவர்தன விளக்கினார்.

"பெயரளவில் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை நோக்கிய தயாரிப்புகளை சவால் செய்யவில்லை. அவர்களும் தங்கள் சொந்த வர்க்கப் போர் திட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.

கொவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பேரழிவுகரமான சர்வதேச நிலைமையை விஜேசிறிவர்தன மீளாய்வு செய்தார். "கொவிட்-19 தொற்றுநோயை தோற்கடித்ததாக இராஜபக்ஷ அரசாங்கம் பெருமை பேசுவது பொய்யானது," என்று அவர் கூறினார். நாட்டின் பல பகுதிகளிலும் நோய்த்தொற்றுகள் பரவியுள்ளன, இது வைரஸ பரவல் அதிகரித்து வரும் அபாயத்தைக் குறிக்கிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு தலைமை தாங்கும் பரமு திருஞானசம்பந்தர், இலங்கை வாழ் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரான அடக்குமுறை நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிவருகின்ற போதிலும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முக்கிய தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, இராஜபக்ஷவை ஆதரிப்பதற்காக கொடுத்த வாக்குறிதைப் பற்றி சுட்டிக்காட்டினார்.

"கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கலுக்கு தமிழ் தேசியவாதக் கட்சிகள் தொடர்ந்தும் பேரம் பேசி வருகின்ற போதிலும், அவர்களின் முயற்சிகள் எப்போதுமே தோல்வியடைந்துள்ளன... சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும்,” என்று அவர் கூறினார்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. சார்பாக பேசிய தினேஷ் ஹேமால், சர்வதேச அளவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது கொரோனா வைரஸின் பேரழிவு தாக்கத்தை விளக்கினார். குறிப்பாக தெற்காசியாவில் ஏற்கனவே வறுமையில் வாடும் 240 மில்லியன் குழந்தைகளோடு அடுத்த ஆறு மாதங்களில் மேலும் 120 மில்லியன் பிள்ளைகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று யுனிசெப் கணித்துள்ளது.

"உலகெங்கிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துவிட்டனர் அல்லது ஊதிய வெட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு நல்ல தொழிலைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பில்லாத இளைஞர்களாக உள்ளனர். முதலாளித்துவ அமைப்பினுள் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது,” என்று அவர் கூறினார்.

இறுதியாக உரையாற்றிய சோ.ச.க பொதுச் செயலாளர் விஜே டயஸ், ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கங்கள் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை பற்றியும் தொழிலாளர்கள் இப்போது ஆபத்தான பாதுகாப்பற்ற நிலையில் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற அவற்றின் கோரிக்கைகளை பற்றியும் ஆய்வு செய்தார்.

முதலாளித்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகள், அதன் இலாபத்திற்கான தாகத்தால் வழிநடத்தப்படுகின்றன. அது மனிதகுலத்தின் தலைவிதியைப் பற்றி கவலைப்படவில்லை. இது முதலாளித்துவ அமைப்பால் மிலேச்சத்தனத்தை மட்டுமே உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதுடன் தொழிலாள வர்க்கம் அதை சோசலிச சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது.

ஜனவரி 3 அன்று வெளியிடப்பட்ட “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது” என்ற உலக சோசலிச வலைத்தள முன்னோக்கை பேச்சாளர் சுட்டிக்காட்டியதோடு, கொவிட்-19 தொற்றுநோயானது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியையும், சர்வதேச அளவில் வெகுஜன புரட்சிகர போராட்டங்களை உருவாக்கும் புறநிலை நிகழ்வுப்போக்கையும் தீவிரப்படுத்தியுள்ளது என்று விளக்கினார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தங்களது ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற பிரச்சாரம் செய்து வருவதாக டயஸ் கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை சற்று பெயரளவில் கத்தரித்த 19வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்வதற்கும், ஜனாதிபதிக்கு இன்னும் பெரிய ஜனநாயக-விரோத அதிகாரத்தை வழங்குவதற்காக அரசியலமைப்பை மீண்டும் எழுதுவதற்ககவே பெரும்பான்மையை கோருகின்றனர்.

நிர்வாகத்தில் பிரதான பதவிகளில் ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் உள்ள இராணுவ அதிகாரிகளைச் செருகுவதன் மூலம், ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்திற்கு பிரதான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் உழைக்கும் மக்கள் மீதும் அனைத்து சமூகங்களின் இளைஞர்கள் மீதும் ஒரு கொடூரமான தாக்குதலுக்கான தயாரிப்பாகும். தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், இப்போது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை வெகுஜனங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர், என டயஸ் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய டயஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது எனத் தெரிவித்தார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருந்தால், அவருடைய கட்சி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது” என்று அறிவித்தார்.

"தமிழ் மக்கள்" என்ற சொல், பல தசாப்தங்களாக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை, கூட்டாக நிதி மூலதனத்தின் இரக்கமற்ற சுரண்டலுக்கு உட்படுத்தும் பொருட்டு, கொழும்புடன் ஒரு கொடுக்கல் வாங்கலை விரும்பும் தமிழ் முதலாளித்துவத்தின் உண்மையான அபிலாஷைகளை மூடிமறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஆழமான பொருளாதார நெருக்கடி, கடன் தவனைத் தவறுதல் அதிகரிப்பு, இலங்கையில் வளர்ச்சி விகிதங்கள் வீழ்ச்சியடைதல் ஆகியவை, தற்போது தொற்றுநோயால் மேலும் அதிகரித்து வருகிறது. இதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் பணக்காரர்களுக்கு பெரும் வரி சலுகைகளை வழங்கி, நுகர்வோர் பொருட்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதித்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வானளவு உயர்த்தியுள்ளது, என் பேச்சாளர் கூறினார்.

“சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் பங்கேற்பது, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியின் அனைத்து சமூக எதிர் புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் சீல் குத்தி அங்கீகரிக்கின்ற, முற்றிலும் மதிப்பிழந்த பாராளுமன்ற அமைப்பின் மீதான நப்பாசையால் அல்ல," என டயஸ் விளக்கினார்.

"மாறாக, வேலைத் தளங்களிலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சோ.ச.க. ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புகள் முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் அதில் தொங்கிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளிடம் இருந்தும் தொழிற்சங்கங்களில் இருந்தும் அதன் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் முற்றிலும் சுயாதீனமானதாக செயற்படுவதோடு தொழிலாள விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதை அடிப்படை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய அரசாங்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதோடு, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கும் எரியும் பிரச்சினைகளுக்கும் சாத்தியமான தீர்வுகளை வழங்கும். தொழில் செய்ய விரும்பும் அனைவருக்கும் ஒழுக்கமான ஊதியங்கள் மற்றும் வேலைகள், இலவச சுகாதார சேவைகள் மற்றும் கல்வி, ஏழை விவசாயிகளுக்கு சலுகை விலையில் விவசாய பொருட்கள் வழங்குதல் மற்றும் மொழி, மதம், சாதி அல்லது பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை ஒழித்தலும் இதில் அடங்கும்.”

சே குவேரா வாதம் மற்றும் மாவோவாதத்தினதும் கலவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவக் கட்சியாகத் தொடங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) வலதுசாரி தேர்தல் தலையீட்டை டயஸ் சுட்டிக்காட்டினார். 1971 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில், கொழும்புடனான ஒரு அரசியல் கொடுக்கல் வாங்கலை ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையில், ஜே.வி.பி. பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட ஆயுத சாகசங்களை மேற்கொண்டது. இப்போது, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில், இந்த அமைப்பு சீர்திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தை "தூய்மைப்படுத்துதல்" என்று வாய்ச்சவடாலுடன் செயற்படுகின்றது என டயஸ் தெரிவித்தார்.

ஒரு தேர்தல் அறிக்கையில், ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க, “நாங்கள் பாராளுமன்றத்தில் கண்ணியத்தைக் கொண்டுவருவதற்காக ஒரு குழு வேட்பாளர்களை முன்வைத்துள்ளோம். பாராளுமன்றமானது கொள்ளையர்கள், சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்டவர்கள், மதுக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் குற்றவாளிகளால் நிறைந்திருந்தது. அதை சுத்தப்படுத்த வேண்டும். நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் பாராளுமன்றத்தை நல்ல நபர்களால் நிரப்ப உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது,” என தெரிவித்துள்ளார்.

“முதலாளித்துவம் அதை நிராகரித்து ஒரு இராணுவ-பாசிச சர்வாதிகாரத்திற்கு செல்ல விரும்புகின்ற நிலையில், ஜே.வி.பி. பாராளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு மாற்று வடிவ ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள்,” என இணையவழி கூட்டத்தில் டயஸ் சுட்டிக் காட்டினார்.

"வெவ்வேறு வழிகளில், அனைத்து போலி-இடது குழுக்களும் ஒரே அழுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன-சீரழிந்த முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்கும், அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணி ஆக்குவதற்கும், யுத்தத்தையும் மிலேச்சத்தனத்தையும் மட்டுமே வழங்கக்கூடிய நலிந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசுவதற்காகப் போராட முன்வரும் ஒடுக்கப்பட்ட சமூகத் தட்டினரை, சோசலிச பதாகையின் கீழ் அணிதிரட்டுவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து திசை திரும்புகின்றன.

"நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலகெங்கிலும் உள்ள அதன் பிரிவுகள் மட்டுமே உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சர்வதேச அளவில் சோசலிச புரட்சிக்கு வழிகாட்டும் ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் வழங்குகின்றன" எனக் கூறி டயஸ் உரையை முடித்தார்.

Loading