வோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், அமெரிக்காவின் பொருளாதார உற்பத்தி ஆண்டுக்கு 32.9 சதவீதமாக சுருங்கியது - இது நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டிராத வீழ்ச்சியாகும்.70 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய புள்ளிவிவரங்கள் முதன்முதலில் சேகரிக்கப்பட்டதிலிருந்து உண்மையான மூன்று மாத வீழ்ச்சி 9.5 சதவிகிதம், மிக மோசமான ஒற்றை காலாண்டில் காணப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை பேரழிவிற்குட்படுத்திய பொருளாதார பேரழிவின் அளவை மிகைப்படுத்துவது கடினம். இதுபற்றி CNBC, “கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் பொருளாதார மந்தநிலை அல்லது பெரும் பொருளாதார பின்னடைவு அல்லது மூன்று டசினுக்கும் மேற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள் என எதுவும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இதுபோன்றதொரு கூர்மையான வீழ்ச்சியை ஒருபோதும் ஏற்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டது.

நவீன வரலாற்றில் ஒப்பிடக்கூடிய ஒரே பொருளாதார சீர்குலைவுகள், உலகப் போர் அல்லது சமூக சரிவால் ஏற்பட்டவை மட்டுமே. 2020 ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வீழ்ச்சியை கணக்கிட்டால், அது 14.75 சதவிகிதமாக உள்ளது. இது தோராயமாக, 1993 ல் ரஷ்ய பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் அளவைக் குறிக்கிறது, இது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட மந்தமான ஆண்டுகளின் மோசமானதாகும்.

“V-வடிவ” மீட்பு பற்றிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றுக்கள், சலவைத் தூளை (bleach- பொருட்களை சுத்தம் செய்ய அல்லது பொருட்களிலிருந்து நிறத்தை அகற்ற பயன்படுத்தப்படும் வலுவான இரசாயன சேர்க்கை) உட்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளிக்கலாம் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதியின் கோபத்தைக் காட்டிலும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஜூன் மாதத்தில் கீழ்நோக்கிய வளைவு தளர்த்தப்பட்ட பின்னர், பரவலாக அரசு உத்தரவிட்ட மறு திறப்புகளின் காரணமாக, தொற்றுநோய்களின் தொடர்ச்சியான எழுச்சி மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கான அறிகுறிகளை நாம் காணத் தொடங்குகிறோம்.

வேலையின்மை நலன்களுக்காக 1.43 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தொழில்துறை வியாழக்கிழமை தெரிவித்தது, அதாவது புதிய விண்ணப்பங்கள் ஒரு மில்லியனை தாண்டிய தொடர்ச்சியான 19 வது வாரத்தில் இவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பல மாதங்களாக புதிய விண்ணப்பங்களின் பதிவு குறைந்து வந்தது என்றாலும், கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளன.

தொடர்ச்சியான வேலையின்மை சலுகைகளை நீட்டிக்க கோரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் ஜூலை 18 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16.1 மில்லியனிலிருந்து 17 மில்லியனாக அதிகரித்துள்ளது. கூடுதலாக, மத்திய அரசாங்கத்தின் நோய்தொற்று கால வேலையின்மை உதவி கோரி 830,000 புதிய விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இது சுயதொழில் செய்பவர்கள், பொழுதுபோக்கு தொழில் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய வேலையின்மை நலன்களைப் பெற தகுதியில்லாத ஏனையோரை உள்ளடக்கியது.

இந்த நிலைமைகளின் கீழ், மாநில வேலையின்மை நலன்களுக்கான வாரத்திற்கு 600 டாலர் வழங்கப்படும் மத்திய அரசின் கூடுதல் தொகை, மதிப்பீட்டின் படி தற்போது 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரே இரவில், மில்லியன் கணக்கானவர்கள் தங்களது வருமானம் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்படுவதை காண்பார்கள், அதாவது மே மாதத்தில் அவர்களது சராசரி வார வருமானம் 921 டாலர் என இருந்ததிலிருந்து 321 டாலர் வரை குறையும். சில மாநிலங்களில் வாழ்வாதாரங்களுக்கான இந்த திருட்டு இன்னும் மோசமாக இருக்கும். ஒக்லஹோமாவில், வேலையின்மை உதவித் தொகை 90 சதவிகிதம் குறைக்கப்பட்டு வாரத்திற்கு 44 டாலர் வழங்கப்படவுள்ளது.

இது நோய்தொற்றுக்கு முன்னரே அமெரிக்க தொழிலாளர்கள் எதிர்கொண்ட ஸ்திரமற்ற சூழ்நிலையின் காரணமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், அதாவது வாராந்திர கூடுதல் உதவித் தொகையும் மற்றும் ஒரு நபருக்கு ஒருமுறை வழங்கப்படும் 1,200 டாலர் “ஊக்கமளிப்பு” காசோலையும் இரண்டாவது காலாண்டில் ஒருவரது தனிப்பட்ட வருமானத்தில் 45 சதவிகிதம் அதிகரிக்க வழிவகுத்தது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் வேலைக்கு திரும்பியவர்களில் எழுபது சதவிகிதம் பேர் வருமான இழப்பை சந்தித்தனர்.

கடந்த வாரம், மத்திய அரசாங்கம் உத்தரவாதம் அளித்த அடமானத்தில் இருக்கும் கட்டிடங்களில் வசிப்பவர்களின் வெளியேற்றங்களுக்கான சட்ட உரிமை, ஒட்டுமொத்த 44 மில்லியன் அமெரிக்க வாடகை குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக சுமார் 18 மில்லியன் வாடகைதாரர்களுக்கு காலாவதியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் குவிந்த வாடகை செலுத்துச் சீட்டுக்கள் தற்போது நிலுவையில் உள்ளது, லாஸ் ஏஞ்சல்ஸில் மட்டும் அரை மில்லியன் குடியிருப்பாளர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலையில், வெளியேற்றங்களின் “சுனாமி” வரவிருப்பது பற்றி வீட்டுவசதி ஆலோசகர்கள் முன்கணித்துள்ளனர்.

அமெரிக்காவில் மேலும் மில்லியன் கணக்கானவர்கள் பட்டினிக்குள் வீழ்கிறார்கள். அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் (US Census Bureau survey) கணக்கெடுப்பின் படி, உணவு பாதுகாப்பின்மை மே மாதத்திற்குப் பின்னர் கடந்த வாரம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது, ஏறக்குறைய 30 மில்லியன் அமெரிக்கர்கள் ஜூலை 21 ஐ ஒட்டிய ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு கட்டத்தில் சாப்பிடுவதற்கு போதுமான உணவு கிடைக்காத நிலையை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.

மார்ச் மாத இறுதியில், ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்ட CARES சட்டத்தின் இருகட்சி நிறைவேற்றம் மூலம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு ட்ரில்லியன்களை வாரியிறைத்ததன் பின்னர், அமெரிக்க காங்கிரஸ் மில்லியன் கணக்கான மக்களுக்கு மிக அடிப்படையான தேவைகளை வழங்குவதற்கு கூட மறுத்து வருகிறது. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டும் வேண்டுமேன்றே வறுமை, வீடற்ற நிலைமை மற்றும் பட்டினியின் அபாயத்தை, பெருநிறுவன இலாபங்களின் பெருக்கத்தை மீட்டெடுக்க, வேலைக்குத் திரும்ப தயங்கும் தொழிலாளர்களை அபாயகரமான தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் வேலை செய்ய வலியுறுத்துவதற்கான வழிமுறைகளாக பயன்படுத்துகின்றன.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது, மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பசி, வீடற்ற நிலமை மற்றும் தீவிர வறுமையை எதிர்கொள்கின்றனர். ஆனால், அமெரிக்க சமுதாயத்தின் மேல்மட்டத்தினர் முன்நிகழ்ந்திராத வகையில் செல்வத்தில் மிதக்கின்றனர். பெடரல் ரிசர்விலிருந்து பெருமளவில் பணம் செலுத்தப்பட்டதால், Dow Jones Industrial மார்ச் மாத இறுதியில் அதன் குறைந்த அளவிலிருந்து 42 சதவீதமும், நாஸ்டாக் 54 சதவீதமும் உயர்ந்தன. இரண்டாவது காலாண்டில், Dow சற்று சரிந்தது, அதேவேளை Nastaq நன்கு வளர்ச்சி கண்ட நிலையில், அமெரிக்க பொருளாதாரம் 1.8 டிரில்லியன் டாலராக குறைந்தது என்ற செய்தியை வோல் ஸ்ட்ரீட் பெரும்பாலும் புறக்கணித்தது.

அமெரிக்காவில் கொரொனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 155,000 ஐ தாண்டினாலும் ஃபுளோரிடா, டெக்சாஸ், கலிஃபோர்னியா மற்றும் பிற மாநிலங்களில் நோய்தொற்று கட்டுப்பாடில்லாமல் பரவி வருகின்ற நிலையில் கூட, ஆளும் வர்க்கம் பேராசையுடன் தன்னை மட்டுமே கவனித்துக் கொள்கிறது. 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80.6 சதவிகித அளவிற்கு தமது செல்வத்தைப் பெருக்கிய அமெரிக்க கோடீஸ்வரர்கள், நோய்தொற்று ஆரம்பித்ததன் பின்னர், மற்றொரு அதிர்ஷ்டத்தைக் காண்பதுடன், குறைந்து 565 பில்லியன் டாலர் அதிகரிப்புடன் மேலும் 20 சதவிகித செல்வ அதிகரிப்பை அடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான, அமசன் தலைமை நிறைவேற்று அதிகாரி, 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து அவரது நிகர மதிப்பு 74 பில்லியன் டாலர் அதிகரித்து, தற்போது அவரது சொத்து மதிப்பு 189.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில், வோல் ஸ்ட்ரீட் உறுதியாக முன்னறிவித்ததன் பின்னர், அமசன் நிறுவனத்தின் கையிருப்பு பங்குகளில் 57 மில்லியன் பங்குகளுக்கு ஒரு பங்கிற்கான மதிப்பு 3,232.49 டாலராக அதிகரித்ததால் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த விகிதத்தின் படி, உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடிய பெசோஸ், தற்போது எக்ஸான் மொபில் கார்ப்பரேஷன் (Exxon Mobil Corp.), நைக் இன்க் (Nike Inc.) மற்றும் மெக்டொனால்ட் கார்ப்பரேஷன் (McDonald’s Corp.) போன்ற இராட்சத நிறுவனங்களின் சந்தை மதிப்பீட்டை காட்டிலும் கூடுதல் மதிப்புள்ள தனிப்பட்ட வகை சொத்தைக் கொண்டிருக்கிறார்.

டெஸ்லா (Tesla) கையிருப்பு பங்குகளின் மதிப்பு, வியாழனன்று வர்த்தக நாளின் முடிவில் ஒரு பங்கு 1,487.49 டாலர் அளவிற்கு விற்கப்பட்டு, அதன் பங்குச் சந்தை மதிப்பு கூடுதலாக 200 பில்லியன் டாலர் அதிகரித்த நிலையில், அவரது சொத்து மதிப்பு 74 பில்லியன் டாலரை கடந்ததால் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பணக்காரரானார். ஜூலை 21 அன்று, மஸ்க் (Musk) 2.1 பில்லியன் டாலர் பங்கு விருப்பத்தேர்வுக்கு தகுதி பெற்றார். இந்த ஆண்டு டெஸ்லாவின் பங்குகளின் மதிப்பு 275 சதவீதம் உயர்ந்துள்ளதால், மே மாதத்திலிருந்து இது அவரது இரண்டாவது ஜாக்பாட் ஆகும்.

தங்களது தொழில்துறை வசதிகளில் இறக்கும் மற்றும் நோய்தொற்று ஏற்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் கூட, பெசோஸ் மற்றும் மஸ்க் இருவரும், அடிப்படை பாதுகாப்பு எதுவுமில்லாத தமது பண்டகசாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தில் முன்னணியில் உள்ளனர். இதற்கு அவர்கள் ஒரு மிருகத்தனமான தர்க்கத்தை முன்வைக்கிறார்கள்: பகுத்தறிவற்ற பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட கொடுப்பனவுகளுக்கு பயன்படும் அரசு மற்றும் பெருநிறுவன கடன்களை பெரிதும் அதிகரிக்கும் வகையில் தொகை செலுத்தத் தேவைப்படும் இலாபங்களை பிழிந்தெடுக்க தொழிலாள வர்க்கம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு கோவிட்-19 இறப்பை பதிவு செய்கின்ற நிலையிலும், மேலும் பெரும்பான்மையான மக்கள் முன்நிகழ்ந்திராத வகையிலான சமூக துயரங்களை எதிர்கொள்கின்ற வேளையிலும், பில்லியனர்கள் தங்கள் தனியார் தீவுகள், சொகுசு குடியிருப்புக்கள் மற்றும் படகுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, நியூயோர்க் நகரத்திலிருந்து 100 மைல் தொலைவிலுள்ள, ஹாம்ப்டன்ஸ் (Hamptons) இல் நடந்த விருந்தில் பெரும் செல்வந்தர்கள் பங்கேற்றனர், அங்கு அண்ணளவாக 23,000 பேர் இந்த கொடிய நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். “உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலீட்டு வங்கிகளில் ஒன்றை நடத்துவதற்காக”, Goldman Sachs நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் சொலமன் (David Solomon) பங்கேற்ற இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நபருக்கு 2,500 டாலர் முதல் 25,000 டாலர் வரை செலவிட்டனர். மேலும், CNN, “நியூயோர்க் மற்றும் மியாமியில் உள்ள பதிவுகளை புரட்டிப் பார்த்த போது, அங்கு D-sol என்ற பெயரில் ஒரு பகுதிநேர DJ மின்னணு நடனமும் நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.

நோய்தொற்றால் உருவான சமூக பேரழிவு, நவீன மருத்துவத்தின் தோல்வியல்ல, மாறாக ஒரு சமூக ஒழுங்காக முதலாளித்துவத்தின் தோல்வியாகும். கோவிட்-19 மருத்துவ விஞ்ஞானத்திற்கு அறிமுகமில்லாத ஒரு சவாலை முன்வைக்கவில்லை; மாறாக, இது பல தசாப்தங்களாக கணிக்கப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வுக்குட்படுத்தப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. என்றாலும் நோய்தொற்று வெடிப்பானது, ஒரு மனிதாபிமான மற்றும் பகுத்தறிவுள்ள வழியில் அதற்கு தீர்வுகாண, இலாப நோக்கு அமைப்புமுறை தகுதியற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தையும், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பேரழிவிற்கு இட்டுச் சென்றுள்ளது.

2020 ஆம் ஆண்டின் முதல் பாதிப் பகுதி, நோய்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் திறமையற்ற, அலட்சியம் நிறைந்த மற்றும் குற்றகரமான பதிலிறுப்பை கொண்டிருந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டின் இரண்டாவது பாதிப் பகுதியில் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பு ஆதிக்கம் செலுத்தும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பொறுப்பற்ற அவசரத்தை எதிர்க்கும் ஆசிரியர்கள் உட்பட, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் மற்றும் இரு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிரான நேரடி அரசியல் போருக்குள் நுழைய தயாராகிறார்கள். இந்த போராட்டம், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாக்க பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட செல்வத்தை பறிமுதல் செய்வதற்கான ஒரு புரட்சிகர போராட்டம் தேவை என்ற தெளிவான புரிதலில் ஆயுதமயப்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும், மேலும் பொருளாதார வாழ்வு குறித்த சோசலிச மறுசீரமைப்பை பெரும்பான்மையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஒருசில செல்வந்தர்களின் தேவைகளுக்காக அல்ல.

Loading