இலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், ஒகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள இலங்கைப் பொதுத் தேர்தலில் ஒரு பலமான தலையீட்டினை மேற்கொள்கின்றன.

சோ.ச.க. மூன்று மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது – தலைநகர் கொழும்பு, மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியா மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணம் ஆகியனவே அவையாகும்.

தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் மக்கள் விடுதலை முன்னிண (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள், சகல தொழிலாளர் வர்க்கத்துக்கும் எதிராக, தங்களின் வர்க்கப் போரை முன்னெடுப்பதற்காக இனவாதத்தினை கிளறிவிடுகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தங்களின் சொந்த தேசியவாத மற்றும் இனவாத வாய்ச்சவடால்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு பதிலிறுக்கின்றன.

சோ.ச.க. “போர், சமூகப் பேரழிவு மற்றும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துக்காகப் போராடு” என்ற அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகளை பரவலாக விநியோகித்ததுடன், தொழிலாளர் வர்க்கத்தின் பிரதான பகுதியினரோடு கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சர்வதேச பிரச்சாரத்தை தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆதரித்ததோடு, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ணவுக்கு எழுதப்பட்ட கண்டனக் கடித்திலும் கையொப்பமிட்டிருந்தனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலானையில் உள்ள பிரதான புகையிரத வேலத்தளத்துக்கு அருகில் உள்ள ரயில் தொழிலாளர் குடியிருப்பில் கடந்தவாரம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பாரிய வேலைத்தளம், முன்னர் தொழிலாளர்களால் சக்திவாய்ந்த போராட்டங்கள் நடத்தப்ப்பட்ட மத்திய இடமாக விளங்கியது.

1970 களில், 5000க்கும் அதிகமான தொழிலாளர்கள் இங்கு வேலை செய்தனர்; தற்போது அது 2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் குடியிருப்புக்களில் தற்போது, சில நூற்றுக்கணக்கான தொழிலாளர்களே வாழ்கின்றார்கள். மாறி மாறி வரும் அரசாங்கங்கள் செலவுகளை வெட்டித் தள்ளியதால், அவை இன்னமும் புனரமைக்கப்படவில்லை.

இரண்டு மாத காலமாக கொவிட்–19 மூடல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு அறிவித்ததன் பின்னர், ரத்மலானை வேலைத் தளம் மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இன்றியமையாத பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள பற்றாக்குறையால் தொழிலாளர்கள் ஆத்திரமும் கவலையும் அடைந்திருக்கும் அதேவேளை, தொழிற்சங்கங்கள் அராசாங்கத்தின் உத்தரவுகைள முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன.

பிரதான பாராளுமன்ற கட்சிகள் மீது அவநம்பிக்கை அடைந்த நிலையில் வேலைத்தள தொழிலாளர்கள், வாக்குகளைக் கறக்க வந்துள்ளதாக நினைத்து, முதலில் சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசுவதற்கு தயக்கம் காட்டினர். சோ.ச.க. பிரச்சாரகர்கள், அவர்களின் தொழில் நிலமைகள் பற்றியும் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாளர் –விவசாயிகள் அரசாங்கத்துக்கான கட்சியின் போராட்டம் பற்றியும் கலந்துரையாட விரும்புகின்றார்கள் என்று உணர்ந்தவுடன், தொழிலாளர்கள் நிலமையை மாற்றிக் கொண்டார்கள்.

ஒரு இளம் தொழிலாளி கூறியதாவது, சகல தொழிலாளர்களும் பாதுகாப்பு நடைமுறையாக வேலைத் தளத்தில் தங்கள் உடல் வெப்ப நிலையை சோதனை செய்கின்றபோதிலும், அங்கே யாரும் சமூக இடைவெளியைப் பேணியபடி வேலையில் ஈடுபட முடியாது. ஒரு ஆள் வைரஸ் தொற்றுக்கு உட்பட்டால், மற்றவரும் கட்டாயம் தொற்றுக்கு ஆளாவர் என்பதே இதன் அர்த்தமாகும்.

“முன்னர், வாரத்துக்கு இரண்டு முக கவசங்கள் எமக்கு வழங்கப்பட்டன, தற்போது ஒன்று மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த வெப்பமான சூழ்நிலையில் இதை நீண்ட நேரம் அணிந்து கொண்டு வேலை செய்வது மிகவும் கடினமானதாகும்.”

முன்னர், எங்களின் குறைந்த ஊதியத்துக்கு மேலதிகமாக, ஒரு தொகை மேலதிக நேரம் வேலை செய்தோம், என ஒரு வேலைத்தள தொழிலாளி கூறினார். “தொற்றுநோக்கு முன்னர், நாங்கள் ஒரு மாதத்துக்கு 240 மணிநேரம் மேலதிக நேர வேலை செய்தோம். தற்போது இது அரைவாசியாக வெட்டப்பட்டுள்ளது. எங்களால் முன்னைய இலக்கினை அடைய முடியவில்லை. அது தற்போது இயலாத காரியமாகும்.”

கொரணா வைரஸ் பூட்டுதல் காரணமாக, கடன் தவணைக் கட்டணத்தை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், ஒன்றுமே நடக்கவில்லை, என அவர் கூறினார். “நாங்கள் இந்த அரசியல் கட்சிகள் சம்பந்தமாக களைத்துப் போய்விட்டோம்”.

தனது நண்பரைச் சந்திப்பதற்காக வந்திருந்த ஒரு மோட்டார் திருத்துனர், தற்போது பெரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சம்பள மற்றும் வேலை வெட்டுக்கள் சம்பந்தமாக கலந்துரையாடினார். அவர்கள் வேலைகளை வெட்டுவதற்கான முன்தயாரிப்புக்கு கொவிட்–19 வைரஸை பயன்படுத்துகின்றார்கள். சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் மோசமான நிலமைகள் பற்றியும், வேலை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் வேலைத்தளப் பாதுகாப்புக்காகவும் போராடுவதற்கு தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தினைப் பற்றியும் சோ.ச.க. பிரச்சாரகர்கள் கலந்துரையாடினார்கள்.

வடக்கில் சோ.ச.க. அங்கத்தவர்கள் இராணுவ அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருப்பது சம்பந்தமாக விளக்கிய பின்னர், அவர் கட்சியின் மனுவில் கையொப்பமிட்டார். புகையிர விடுதியில் உள்ள 20 வரையான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களும் மனுவில் கையொப்பமிட்டார்கள்.

மத்திய கொழும்பு கிரான்பாஸில் உள்ள துறைமுக தொழிலாளர் குடியிருப்புக்கு சோ.ச.க. பிரச்சாரகர்கள் சென்றிருந்தனர். கொழும்பு துறைமுகத்தின் பிரதான கொள்கலன் முனையங்கள் வெளிநாட்டுக் கம்பனிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. “மனிதவள நிறுவனங்கள்” என அழைக்கப்படும் கம்பனிகளால் கூடுதலான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அல்லது குத்தகை முறையில் அடிப்படைச் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு அடிப்படை உரிமையோ அல்லது ஓய்வூதியமோ கிடையாது.

இந்த குடியிருப்பில் கூடுதலன வீடுகள் 50 வருடங்கள் பழமையானவை, அவை துறைமுக அதிகார சபையினால் புனரமைக்கப்படவில்லை. இந்த பெறுமதி வாய்ந்த நிலங்களை பெரும் பணக்கார்ரகளுக்கு வழங்குவதற்காக, வேறு எங்காவது உள்ள “குறைந்த வருமான” குடியிருப்புக்களுக்கு தங்களை நகர்த்திச் செல்ல நிர்வாகம் திட்டமிடுவதாக தொழிலாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.

சமந்தி என்பவர் ஒரு வலைப்பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை ஆவார். அவர் கொழும்பு துறைமுக விளையாட்டுப் பிரிவில் வேலை செய்கின்றார். தான் முன்னர் பிரதான முதலாளித்துவக் கட்சிகளுக்கு மாற்றீடாக காட்டிக்கொண்ட சில அரசியல் குழுக்களுக்கு வாக்களித்ததாக அவர் கூறினார். இந்த அமைப்புக்கள் “மக்கள் மீது சுமைகளை மட்டுமே சுமத்தின”, இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கப்போவதில்லை என துறைமுக தொழிலாளர்கள் பேசிக்கொண்டிருப்பதாக, அவர் கூறினார்.

“நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, ஜே.வி.பி. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தோம். ஆனால், அண்மைக் காலங்களில் அவர்கள் எவ்வாறு வேலை செய்தார்கள் என்று பார்த்தோம். அதனால் எங்களது நம்பிக்கை மறைந்துவிட்டது. அவர்கள் முதலாளித்துவ அரசாங்கங்களை பாதுகாத்தார்கள்,” என்றார்.

உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் கொரணா வைரஸ் தொற்று நிலமைகளுக்கு எவ்வாறு பதிலிறுக்கின்றன என, சமந்தி பேசினார். “அமெரிக்காவில் ட்ரம் அரசாங்கம் உட்பட சகல அரசாங்கங்களும், முதியவர்களின் மரணம், தங்களின் வசதிக்கானது என கருதுகின்றார்கள். அவர்ளுக்கு தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் தேவை இல்லை. ஏழைகளை மரணிக்க விடுகின்றார்கள். இலங்கையில், அரசாங்கம் கொவிட்–19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சாதாரண மக்களிடம் பணம் கேட்கின்றது. ஆனால் முதலாளிகளிடமிருந்து எதையும் எடுக்கவில்லை,” என்றார்

ஒரு கிரேன் இயக்குநரான கபில, துறைமுகத்தின் கிழக்கு முனையை தனியார் மயப்படுத்துவதற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு பற்றிப் பேசினார். “கிழக்கு முனையத்தினை தனியார் மயப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல் மகிந்த ராஜபக்ஷ (தற்போதைய பிரதமர்) ஜனாதிபதியாக இருந்த போது ஆரம்பிக்கப்பட்டது. முன்னைய யூ.என்.பி. அரசாங்கம், இந்திய–ஜப்பான் கூட்டு முயற்சிக்கு வழங்குவதற்கு ஒரு ஒப்பந்த்தினை செய்திருந்தது.

“தற்போதை அரசாங்கம் உடன்படிக்கையை புதுப்பிப்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கின்றது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், கிழக்கு முனையானது நிச்சயமாக தனியார் மயப்படுத்தப்படும். பல தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.” என அவர் கூறினார்.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தர சீரழிவு மற்றும் துறைமுகம் தனியார் மயப்படுத்துவதற்கான நகர்வுகளும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனேயே நடைபெறுகின்றன, என கபில கூறினார். “அவர்கள் முதலாளித்துவ கட்சிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள்,” என அவர் தெரிவித்தார்.

“தொழிலாளர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும்போது, அரசாங்கம் தொழிற்சங்கங்களுக்கு சில உறுதிமொழிகளை வழங்குகின்றது. அவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதிகாரத்துவத்திற்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.” சோ.ச.க. வேலைத் திட்டம் பற்றிய ஒரு கலந்துரையாடலின் பின்னர், அவர் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்க உடன்பட்டதோடு கட்சியின் பாதுகாப்பு மனுவிலும் கையெழுத்திட்டார்.

கடந்தவாரம், சோ.ச.க. பிரச்சாரகர்கள் ஹட்டன் நகருக்கு அண்மையாக உள்ள என்பீல்ட் மற்றும் டிக்கோயா உட்பட பல தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு சென்றிருந்தார்கள்.

தோட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம், வருமானப் பங்கீடு முறையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதை தொழிலாளர்கள் எதிர்த்தார்கள், என அந்த பிரிவில் வேலை செய்த ராஜசேகர் கூறினார்.

இந்த உயர்ந்த மட்டச் சுரண்டல் முறையின் கீழ், ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் 1,000 தேயிலைக் கன்றுகள் பராமரிப்புக்காக வழங்கப்படும். வழங்கப்பட்ட உள்ளீடுகளுக்கான –உபகரணங்கள், உரம் மற்றைய பொருட்களுக்கான செலவுகள்– தொகையை கழித்த பின்னர், கம்பனி தனது “இலாப வீதத்தினையும்” வெட்டிக்கொண்டு எஞ்சியதைத்தான் உற்பத்தியாளரான தொழிலாளிக்கு “வருமானமாக” வழங்கும்.

“இந்த முறையானது, எங்களது தோட்டத்தில் உள்ள சில பிரிவுகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என அவர கூறினார். “எங்களை இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்வாகம் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. (இதை அமுல்படுத்துவதற்காக) சகல தொழிற்சங்கங்களும் நிர்வாகத்துடன் நெருக்கமாக வேலை செய்கின்றன,” என ராஜசேகர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கு, தொழிலாளர்கள் தொழிற்சங்ங்களில் இருந்து விலகி நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்பதை ராஜசேகர் ஏற்றுக்கொண்டார். ஆகஸ்ட் 5ம் திகதிக்குப் பின்னர், எந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தாலும், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவதில்லை.

டி. கனகராஜ் என்ற இன்னொரு தொழிலாளி, சர்வதேச சோசலிசத்துக்கான சோ.ச.க. வின் போராட்டம் பற்றி அறிந்திருந்தார். அத்தோடு, ஒரு பாதிக்கப்பட்ட தோட்ட தொழிற்சங்க தலைவரான எஸ். பாலசுப்பிரமணியத்தை வேலையில் மீள இணைப்பதற்கான சோ.ச.க.வின் போராட்டத்தைப் பற்றியும் நினைவுபடுத்தினார். எபோட்சிலி தோட்ட நடவடிக்கை குழுவை அமைப்பதற்கு சோ.ச.க. ஆதரவளித்திருந்ததோடு பாலசுப்ரமணியத்திற்கு மீண்டும் வேலை கோரி ஹட்டன் நகரில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட்த்தினையும் நடத்தியிருந்தது.

“பாலசுப்பிரமணியத்தை மீள வேலையில் இணைப்பதற்கான உங்களது போராட்டத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன். 2018 இல் முன்னெடுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பளக் கோரிக்கைப் போராட்டத்தின் காரணமாகவே அவர் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். அவரைப் பாதுகாப்பதற்கு தொழிற்சங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தங்களின் போராட்டத்தின் மூலமே அவர் மீளவும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று தொழிற்சங்கத்தினர் கூறிவருகின்றார்கள்” எனவும் அவர் கூறினார்.

Loading